பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தலைமுறைகள் காக்கும் தடை!

தலைமுறைகள் காக்கும் தடை!
பிரீமியம் ஸ்டோரி
News
தலைமுறைகள் காக்கும் தடை!

தலைமுறைகள் காக்கும் தடை!

ரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையைக் கொண்டுவந்துள்ளது தமிழக அரசு.

‘ஒரு முறை பயன்படுத்திவிட்டுத் தூக்கிவீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு, 2019 ஜனவரி 1 முதல் தமிழகத்தில் தடை செய்யப்படுகிறது என்று சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது, தற்போது அரசாணையாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், தேநீர்/தண்ணீர்க் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல் மற்றும் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்டவற்றைத் தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல், பயன்படுத்துதல் என அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. பால், தயிர், எண்ணெய் மற்றும் மருத்துவப் பொருள்களுக்கான உறைகள் போன்றவற்றுக்கு மட்டும் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

தலைமுறைகள் காக்கும் தடை!


உண்மையிலேயே நாம் அனைவரும் உணர்வுபூர்வமாக வரவேற்க வேண்டிய அரசாணை இது.

இப்போது, பூமிப்பந்தைச் சுற்றியும் நீக்கமற நிறைந்திருப்பது பிளாஸ்டிக் கழிவுகள்தான். கடலுக்குள் நீந்தும் திமிங்கலத்தின் வயிற்றில் பிளாஸ்டிக் பைகள்; காட்டுக்குள் திரியும் யானையின் வயிற்றிலும் பிளாஸ்டிக் பைகள்; ஆற்றங்கரையோரம் மேயும் ஆடுகளையும் விட்டுவைக்கவில்லை பிளாஸ்டிக்; ஆட்களே செல்ல முடியாத அண்டார்ட்டிகாவின் பென்குயின் பறவைகளும் பிளாஸ்டிக்கிடமிருந்து தப்ப முடியவில்லை.

குழந்தைகளுக்கான பால் பொருள்கள், பார்சல் உணவுகள், தண்ணீர் பாட்டில்கள் என, பிறப்பு முதல் இறப்பு வரை விடாமல் பின்தொடர்கிறது, பிளாஸ்டிக். சூடான உணவை பிளாஸ்டிக் தாள்களில் வைத்துத் தொடர்ந்து சாப்பிடுவது; பிளாஸ்டிக் டம்ளர்களில் தேநீர், காபி எனச் சுடச்சுடக் குடிப்பது போன்ற செயல்பாடுகள், உடல் நலத்துக்குப் பெருங்கேடாக முடியும் என்று எச்சரிக்காத மருத்துவர்களே இல்லை. ஆனாலும், இந்த பிளாஸ்டிக் பொருள்களை விட்டு நாம் விலகுவதாகவும் இல்லை.

பயன்படுத்திவிட்டு வீசியெறியும் பிளாஸ்டிக் பொருள்களால், எவ்வளவு பெரிய சுற்றுச்சூழல் சீர்கேடுகள் நிகழ்கின்றன என்பதற்கு, 2015-ல் சென்னையை மூழ்கடித்த பெருமழை வெள்ளம் கொடுத்த பாடம் மறக்கக்கூடியதா! நீர்நிலைகளில் நிறைந்த பிளாஸ்டிக் குப்பைகள், வெள்ளநீர் வடியாமல் தடுத்தது, அன்றைய பெருவெள்ளத்துக்கு முக்கியக் காரணம்.

இப்போதாவது விழித்தெழுவோம். பிளாஸ்டிக் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, இதைவிடச் சிறந்த தருணம் வேறு எதுவும் இருக்கப்போவதில்லை. பெட்ரோலிய மண்டலத்துக்கு எதிர்ப்பு, விளைநிலங்கள் பாதுகாப்பு என்று சுற்றுச்சூழலைக் காப்பதற்காக சமீபகாலத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட்டங்கள் தொடர்கின்றன. இப்போது, அந்த ஆட்சியாளர்களே சுற்றுச்சூழலைக் காக்கும் அறிவிப்பை வெளியிடும்போது, வரவேற்பு காட்டவேண்டியதும் நம் பொறுப்புதானே!

அதே சமயம், ‘பிளாஸ்டிக் ஒழிப்பு’ என்பது வெறும் அறிவிப்பாக மட்டும் நின்றுவிடாமல், முழுமையாக நடைமுறைப்படுத்திட முனைப்பு காட்டப்பட வேண்டும். இப்படிச் சொல்வதற்குக் காரணம் இல்லாமலில்லை.

2002-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பிளாஸ்டிக் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் பயணித்தபோது, பிளாஸ்டிக் குப்பைகளால் மலைகளின் ராணி மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதைப் பார்த்துப் பதைபதைத்துப் போய்தான் இந்தத் தடையைக் கொண்டு வந்ததாக உருகி உருகி அன்று சொல்லி, சட்டசபையில் மசோதாவைக் கொண்டுவந்தார் ஜெயலலிதா. ஆனால், அது வாபஸ் பெறப்பட்டது. இம்முறை, எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பானது, ஆணையாக வெளியாகும் அளவுக்கு அடுத்த கட்டத்தைத் தொட்டிருக்கிறது. ஆனாலும், சட்டமாகாதவரை, இதனால் எந்தப் பலனும் இருக்கப்போவதில்லை. மனித குலத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உயிர்க்கோளத்துக்கே எமனாக மாறி நிற்கும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிரான தடை, வீரியமானதாக இருக்க வேண்டும்.

பிளாஸ்டிக் கேடுகள் பற்றியும், மாற்றுப்பொருள்களைப் பற்றியும் மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தாமல், வெறுமனே சட்டத்தை இயற்றி மட்டும் பயனில்லை. ஆம், மட்கக்கூடிய பிளாஸ்டிக் பைகள் தற்போது, சந்தையில் வர ஆரம்பித்துள்ளன. இவற்றின் விலை, எட்டாத உயரத்தில் இருப்பதுதான், மக்களின் கவனம் திரும்பாமலிருப்பதற்குக் காரணம். இதுபோன்ற பொருள்களின் உற்பத்திக்கு உதவிக்கரம் நீட்ட அரசு முன்வர வேண்டும். அதேபோல, இயற்கையாகவே கிடைக்கக்கூடிய பாக்குமட்டை, தாமரை இலை, வாழைச்சருகு, தையல் இலை, பனை ஓலைப்பெட்டி என்று நம் முன்னோர்கள் பயன்படுத்திய எத்தனை எத்தனையோ பொருள்கள், இன்றைக்குப் காணாமலேயே போய்விட்டன. இவற்றையெல்லாம் தூசுதட்டுவதன் மூலமாக கிராமப்புறப் பொருளாதாரத்தை உயர்த்துவதோடு, பிளாஸ்டிக் அரக்கனுக்கு எதிரான யுத்தத்தையும் வீரியமாக்க முடியும். 

அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தி, பயன்படுத்தி, ‘பிளாஸ்டிக் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்று’ என்று நாம் உருவாக்கி வைத்திருக்கும் மாய மனோபாவத்திலிருந்து முதலில் வெளியே வர வேண்டும்.

பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம் என்று உறுதியான முடிவை நாம் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். இது, தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் தடையை வெற்றிபெறச் செய்வதற்கான முயற்சி அல்ல, நம் தலைமுறைகளுக்குச் செய்யும் உதவி; இந்தப் பூமி, நாம் பிறந்தபோது எப்படி இருந்ததோ, நாம் போகும்போதும் அப்படியே இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்தப் பூமி, நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்த சொத்து அல்ல; எதிர்காலத் தலைமுறைகளிடமிருந்து நாம் வாங்கியிருக்கும் கடன்.

தலைமுறைகள் காக்க, கரங்கள் கோப்போம்!