Published:Updated:

அணுஉலையை ஹேக் செய்தால் என்ன நடக்கும்? நடந்த நிஜம்!

அணுஉலையை ஹேக் செய்தால் என்ன நடக்கும்? நடந்த நிஜம்!
News
அணுஉலையை ஹேக் செய்தால் என்ன நடக்கும்? நடந்த நிஜம்!

அணுஉலை சார்ந்த கணினி கட்டமைப்புகள் அல்லது அதுதொடர்பான தகவல்கள் ஹேக்கர்கள் கையில் கிடைத்தால் அவர்களால் என்னவெல்லாம் செய்யமுடியும்?

ஹேக்கர் என்கிற இந்த வார்த்தை முதலில் மென்பொருள் நிறுவனத்திலும், தொழில்நுட்பத் துறையிலுமே அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தையாக இருந்தது. இந்த வார்த்தை, இப்போது பரவலாக அனைவருமே அறிந்திருக்கிறார்கள் என்றால், அதன் காரணம், அது இங்கே நம் ஒவ்வொருவர் மீதும் ஏற்படுத்தும் தாக்கம்தான். கணினி மற்றும் தகவல் சார்ந்த திருட்டைத்தான் ஹேக்கிங் என்பார்கள். இதில் பல வகைகள் உண்டு. நோக்கம் ஒன்றே, இன்னொருவரின் தகவலைக் கைப்பற்றுவது, திருடுவது.

இதுவரைக்கும் உலகில் இவ்வளவு தகவல் திருட்டுகள் நடந்து உள்ளது எனத் தெளிவாக யாராலும் கூற முடியாது என்பதுதான் உண்மை. இந்த ஒவ்வொரு திருட்டும் ஆயிரக்கணக்கான தகவல் முதல் கோடிக்கணக்கான உள்தகவல் திருட்டுகளைக் கொண்டிருக்கலாம். ஆகவே இதன் பாதிப்பை அவ்வளவு சுலபமாக எண்ணிக்கையிலோ, வார்த்தையிலோ, அளவிட முடியாது. இப்போதுள்ள சூழ்நிலையில், நம்மை மிகவும் கவலை கொள்ளச் செய்யும் சில, பெரும் திருட்டுகள் நடந்தேறிக்கொண்டு இருக்கிறது. தனிநபர் வங்கிக்கணக்குகள், மின்னஞ்சல்கள், சமூக வலைதளங்கள் என இணையத்தின் எல்லா இடங்களுக்கும் பரவிக்கொண்டிருக்கிறது இந்த திருட்டு. இப்போது அடுத்த பரிணாமமாக அணுஉலை தகவல் திருட்டில் வந்து நிற்கிறது.

அணு உலைகள் எவ்வளவு ஆபத்தானது என்பதைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். மிகவும் ஆபத்தான அணு உலைகளைக் கட்டுப்படுத்தி, கட்டளைகளைக் கற்பிப்பது பெரும்பாலும் கணினிகளே. ஆம், அணு உலையின் செயல்பாடுகள் நிர்வகிக்கப்படுவது கட்டுப்பாட்டு அறையில் (Control room) இருந்துதான். அந்தக் கட்டுப்பாட்டு அறையில் இருந்துதான், அணு உலை எவ்வாறு செயல்பட வேண்டும், எப்போது நிறுத்த வேண்டும், எப்போது பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும் என்கிற கட்டளைகள் வரும். சுருக்கமாகச் சொன்னால், அந்த அறையின் கணினிகள்தான் அந்த ஒட்டு மொத்த உலையின், மூளை போன்றது. இந்த மூளைதான் ஹேக்கர்களின் குறியாகும். இந்தக் கணினிகளை அவர்கள் கைக்குள் கொண்டு வந்துவிட்டால் ஒட்டு மொத்த உலையையும் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். இதைக் கேட்பதற்கு ஒரு ஆங்கிலப் படக் கதை போலத் தோன்றினாலும், இது நம் கண் முன்னே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கடந்த கால உதாரணங்களும் இருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதன்முதலில் பலரும் அறியும் வகையில் நடந்த ஒரு திருட்டு எனில், 1992-ல் நடந்ததுதான். அப்போது ஒலெக் சவுக்குக் என்பவர் பழைய சோவியத் யூனியன் நாட்டைச் சேர்ந்த ஒரு நாடான லிதுவேனியாவில் உள்ள ஒரு அணு உலையை ஒரு வைரஸ் கொண்டு தாக்கினார். இந்தத் தாக்குதல்களை ஆங்கிலத்தில் சைபர் தாக்குதல் என்கிறார்கள். இந்த நிகழ்வுக்குப் பிறகுதான் அணு உலைகளுக்கு இப்படி ஒரு பெரிய ஆபத்து இருக்கிறது என்பதையே புரிந்து கொண்டன அணு உலை வைத்திருந்த நாடுகள். இதேபோல 2009-ம் ஆண்டு வாக்கில் ஈரான் நடான்ஸ் அணுச் செறிவூட்டல் மையத்தின் மீது, ஸ்டக்ஸ்நெட் என்கிற சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இருந்ததாக விவாதிக்கப்பட்டது. 2015-ம்ம் ஆண்டு உக்ரைனின் மின்சார கட்டமைப்பின் மீதும் இவ்வாறான ஹேக்கிங் நடைபெற்றது. இதற்குப் பின்னணியில் ரஷ்யா இருந்ததாக விவாதிக்கப்பட்டது.

மிகச் சமீபமாக, 2017-ல் அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் மாகாணத்தில் உள்ள வோல்ப் க்ரீக் என்னும் அணு உலை உட்பட மேலும் 12 உலைகளின் மீது ஹேக்கிங் முயற்சி மேற்கொண்டு, அது பரவலாக விவாதிக்கப்பட்டது. அமெரிக்க அரசோ மக்களுக்கு இந்தச் சூழ்நிலையில் ஆபத்து இல்லை என்கிற வாதத்தை மட்டும் முன்வைத்து விட்டு, ஹேக்கிங்கை பற்றி அதிகம் வெளிப்படையாக விவாதிக்காமல் நகர்ந்து சென்றது.

இதுபோன்ற தாக்குதல்கள், குறைந்தபட்சம் இருபது முறைக்கு மேல், கடந்த இருபது ஆண்டுகளில் நடந்துள்ளது என்கிற அச்சமூட்டும் செய்தியைப் பதிவு செய்கிறது, வாஷிங்டனில் இருந்து செயல்படும் Nuclear Threat Initiative என்கிற அமைப்பு. இதில் முக்கிய அம்சம் என்னவெனில், அவமானம் கருதியும், பாதுகாப்பு அம்சம் கருதியும் பல்வேறு ஹேக்கிங் திருட்டுகள் வெளியே செய்தியாக வருவதில்லை. சம்பந்தப்பட்ட நாடுகள் வரவிடுவதும் இல்லை.

இதுவரை நடந்த பெரும்பாலான ஹேக்கிங் திருட்டுகளின் நோக்கம் என்பது, ஒரு நாடோ அல்லது ஒரு தனி மனிதனோ அல்ல; இன்னொரு நாட்டை அடிபணிய வைக்கும் ஆயுதமாக, மிரட்டலுக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது. இப்படி கழுத்தில் வைக்கப்பட்ட கத்தி, உள்ளே சொருகுவதற்கு எவ்வளவு நேரம் தேவைப் படப்போகிறது ?

உதாரணத்திற்கு அணுஉலை பராமரிப்பு பணியின் போது, ஒரு குறிப்பிட்ட சோதனை 100 டிகிரியில் நடத்த வேண்டும் என வைத்துக்கொள்ளுங்கள், அதில் ஒரு பூஜியத்தை எடுத்து விட்டால், 10 டிகிரியில் நடைபெறும் போது, அது நிலைத்தன்மை குலைந்து, மிகப்பெரும் ஆபத்தில் முடியும் வாய்ப்பு உள்ளது. இதை ஒரு ஹேக்கரால் எங்கோ ஒரு இடத்தில இருந்து கொண்டு, மிகச் சுலபமாக செய்ய முடியும். இது போன்ற ஹேக்கிங் பயங்கள் அனைத்து விதமான தொழிற்சாலைக்கும் பொருந்தும் என்றாலும், அணு உலை போன்ற கதிர்வீச்சு அபாயங்கள் கொண்ட நிறுவனங்களுக்கு இது மிகப்பெரும் சவாலாகும். அது மட்டுமின்றி அங்குள்ள அணுக்கழிவுகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும்.

இதைப் போன்ற இன்னல்களைத் தவிர்க்க அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளே தயார் ஆகவில்லை என்கிறபோது, அவர்களின் தொழில்நுட்பத்தை கடன் வாங்கி குறைந்த தரமுள்ள பொருட்களால் அணு உலை கட்டும் நாடுகளின் நிலை என்ன? இந்தியா உள்பட. நம் உடம்பில் இருக்கும் நோயைப் பற்றி வெளியே சொல்வதும் சொல்லாததும், விவாதிப்பதும் தனி மனித விருப்பம் சம்பந்தப்பட்டது. ஆனால் தன் நோயைப் பற்றி வெளியே சொல்லாமலோ, பேசாமலோ அல்லது அந்த நோயைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைச் செய்யாமல் இருந்தால், அந்த நோய் குணமாகிவிடுமா என்ன? மாறாக அது நம்மை அழிக்கத்தானே செய்யும். அதையும் விரைவாக அல்லவா செய்யும்?

அணுஉலை என்பது ஒரு தேசத்தின் நோய். இந்த நோயை நம் பூமிப்பந்தின் ஒரு திசை விடாமல் அனைத்து திசைகளில் இருந்தும் விரட்ட வேண்டும். மாறாக, கூடங்குளத்தில் ஆறு உலைகள், கல்பாக்கத்தில் உலை, மீண்டும் ஆந்திரத்தில் உலை என்று மேலும் மேலும் கட்டி, மனிதர்களுக்கு உலை வைக்கும் இந்த மூடத்தனத்தை கேள்வி கேட்காமல் நாம் கடந்து சென்று கொண்டு இருக்கிறோம். நம் உடலில், ஒரு நோய் நம்மைத் தின்று கொண்டு இருக்கிறது என்பதை விடக் கொடுமையான விடயம், அது நம் கண்முன்னே, நமக்குள்ளே நடக்கிறது என்கிற உண்மையைக் கூட அறியாமல் இருப்பதுதான். இந்த அறியாமையில் இருந்து நிச்சயம் நாம் விடுபட வேண்டும். அப்படியெனில் நமக்கு மின்சாரம் வேண்டாமா? நிச்சயம் வேண்டும். அந்த மின்சாரம் புவிக்கும், மனிதனுக்கும் ஆபத்தில்லாத ஆதவனிடம் இருந்தும், காற்றிடம் இருந்தும் வரட்டும்; ஆபத்தான அணுவில் இருந்து வேண்டாமே!