Published:Updated:

``70 வருஷம்... 3 தலைமுறையா குதிரை லகான் தயாரிக்கிறோம்!’’ - சக்திவேல்

``70 வருஷம்... 3 தலைமுறையா குதிரை லகான் தயாரிக்கிறோம்!’’ - சக்திவேல்
``70 வருஷம்... 3 தலைமுறையா குதிரை லகான் தயாரிக்கிறோம்!’’ - சக்திவேல்

குதிரையில் சவாரி செய்வது என்பது சுவாரஸ்யமான அனுபவம்.  கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலாத்தலங்கள் மட்டுமின்றி மெரினாவிலும் குதிரைச் சவாரி செய்ய விரும்புபவர்கள் அதிகம்.  நாலு கால் பாய்ச்சலில் ஓடி வந்து முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கிக் கனைக்கும் பிரம்ம்ம்மாண்டமான குதிரைகளாகட்டும், 'தட தட' குளம்பொலிச் சத்தங்களுடன் மின்னல் வேகத்தில் நடக்கும் ரேக்ளா ரேஸ்களாகட்டும் குதிரைகளில் சவாரி செய்ய லகான், கல்லர் என சில பொருட்கள் முக்கியம். அந்தப்  பொருட்கள் எங்கிருந்து கிடைக்கிறது, அதை யார் தயாரிக்கிறார்கள் என நூல் பிடித்து,  வால் பிடித்து சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்றோம்.

திருச்சி நதர்ஷா பள்ளிவாசலுக்கு அருகே பத்துக்குப் பத்து அறையில் மூன்று மாநிலத்து குதிரைகளுக்கு தேவையான பொருட்களை நான்கு பேர் தயாரித்து கொண்டிருந்தார்கள். கடையை நிர்வகித்து வரும் சக்திவேலிடம் பேச்சுக்கொடுத்தோம். 'பேசிட்டே செய்ற வேலைதான்யா இது. நீங்க என்ன வேணாலும் கேளுங்க. நான் வேலை செஞ்சிக்கிட்டே பதில் சொல்றேன்' என பேசத் தொடங்கினார். 

``இந்தத்  தொழிலை எங்க தாத்தா வெள்ளைக்காரன்கிட்ட இருந்து கத்துக்கிட்டாரு. சின்ன வயசுலயே தாத்தா இறந்துட்டதால, அவருக்கப்புறம் எங்க அப்பா 82 வயசு வரைக்கும் இந்தத் தொழிலை செஞ்சாரு. நான் பத்தாவதுல பெயிலானதுமே இந்தத் தொழில்ல வந்து உட்கார்ந்துட்டேன். என் தலைமுறையோட சேர்த்து 75 வருஷமா, 3-வது  தலைமுறையா இந்தத் தொழிலை செஞ்சிட்டு இருக்கோம்யா" என இன்ட்ரோ கொடுத்தார்.

``தமிழ்நாட்டுலயே நாங்க மட்டும்தான் லகான், கல்லர்னு குதிரைகளுக்கு தேவையான எல்லா பொருளையும் தயார் பண்ணிட்டு வர்றோம். எல்லா பொருளையும் மெஷினோட உதவி இல்லாம கையிலதான் தயாரிக்கிறோம். குதிரை வண்டிகளுக்குத்  தேவையான வண்டிக்கூண்டையும் நாங்க தயார் பண்ணித் தருவோம்.

தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா குதிரைகளும் நாங்க தயாரிக்குற Buggles-தான் போட்டிருக்கும். அதேமாதிரி நாங்க தயாரிக்கிற எல்லா பொருட்களிலும் 'VS'  ங்கற வார்த்தை அச்சு பதிச்சிருப்போம். அது இருந்தாதான் கிராக்கி. எங்களுடைய பொருளை வாங்குவாங்க. தமிழ்நாடுன்னு மட்டும் கிடையாது, நாங்க செய்யுற கல்லர், லெதரதான்  கேரளா, கர்நாடகாவுலயும் பயன்படுத்துறாங்க.முன்னெல்லாம் அந்தியூர், திருப்பூர்ன்னு நிறைய சந்தைக்கு போயிட்டு இருந்தோம். இப்போ சந்தைக்கு போய் வியாபாரம் பண்ண முடியலை. மெஷினில் செஞ்சா நிறைய செய்யலாம், ஆனா, ஒரு பொருளை நாலு நாளா கையில செஞ்சு கிடைக்குற அந்தத் தரம் மெஷின்ல கிடைக்காது. கையால செஞ்சா மட்டும்தான் அந்தத் தரம் கிடைக்குது.

 எங்கத்  தொழிலுக்கு மூலப்பொருள் ஒரு ஊசியும் கத்திதான். இது ரெண்டும் இருந்தா மட்டும் போதும். எங்க உட்கார்ந்து வேணாலும் சம்பாதிக்கலாம். அதே மாதிரி மத்தவங்க வந்து இந்தத் தொழிலை கத்துக்கிறது ரொம்ப சிரமம். இந்தத்  தொழில்ல பொருளைத் தயாரிக்கும்போது வர்ற கணக்குளோட நெளிவு, சுளிவுன்னு அவ்வளவு சுலபமாலாம் இதைக் கத்துக்க முடியாது. முன்னே ஒருதடவை குதிரை ரேஸ், ஜல்லிக்கட்டு இதுக்கெல்லாம் தடை போட்டாங்களே... அப்போதான் தொழில் கொஞ்சம் அடி வாங்கிடுச்சு. தடையெல்லாம் எடுத்ததுக்கு  பிறகுதான் நாங்க பழையபடி தொழில் பண்ண முடிஞ்சது.

அது என்னன்னே தெரியல, எங்க தொழிலுக்கு ஜி.எஸ்.டி கிடையாது. ஆனால், அரசாங்கத்துக்கு ஜி. எஸ். டி கட்டணும்னு எனக்கு ஆசையா இருக்கு. நாங்க இப்போ தொழில் செய்ற  இடம் பள்ளிவாசலுக்கு சொந்தமானது. வாடகை கம்மிதான். எங்க தொழிலை 'ராஜாங்க தொழில்'னு சொல்வாரு எங்கப்பா. அதுக்கேத்த மாதிரி ஆண்டவன் புண்ணியத்துல எந்தக் குறையும் இல்லாம நல்லா ஓடிட்டு இருக்கு தம்பி" என பெருமையாகச் சொன்னார் சக்திவேல்.