Published:Updated:

`ஈடன் கார்டன் 281; தோனியின் சர்ப்ரைஸ் டிரைவிங்!’ - விவிஎஸ் லட்சுமணன் ஷேரிங்க்ஸ் #281andBeyond

`ஈடன் கார்டன் 281; தோனியின் சர்ப்ரைஸ் டிரைவிங்!’ - விவிஎஸ் லட்சுமணன் ஷேரிங்க்ஸ் #281andBeyond
`ஈடன் கார்டன் 281; தோனியின் சர்ப்ரைஸ் டிரைவிங்!’ - விவிஎஸ் லட்சுமணன் ஷேரிங்க்ஸ் #281andBeyond

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ்.லட்சுமண், ‘281 அண்ட் பியாண்ட்’ என்ற தனது சுயசரிதைப் புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் தோனி, ஷேவாக், டிராவிட் எனத் தன்னுடன் விளையாடிய வீரர்கள்குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைக் கொடுத்துள்ளார். கிரிக்கெட்டில், தன் மறக்கமுடியாத தருணத்தையும் அசைபோட்டுள்ளார். புத்தகத்தின் பெயரில் இருந்தே சுவாரஸ்யங்கள் தொடங்குகின்றன. அது,  ‘281 அண்ட் பியாண்ட்’ இந்த 281, - கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய லட்சுமண் குவித்த ஸ்கோர். 

தொடர் தோல்விகளால் சச்சினிடம் இருந்த கேப்டன் பதவி பறிபோனது. கங்குலி கேப்டனாகப் பொறுப்பேற்ற தருணம் அது. போன இடமெல்லாம் வெற்றியை குவித்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி, 2001-ம் ஆண்டு இந்தியா வந்திறங்குகிறது. முதல் போட்டி மும்பையில். 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.  “கொல்கத்தா என் சொந்த மண், இங்கு நிச்சயம் கொடி நாட்டுவோம் என சூளுரைத்தார் கங்குலி.” டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் வாக், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸி, முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியாவின் ஸ்கோர் 171 ரன்களுக்கு ஆல்-அவுட். இந்திய அணி 274 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.

இந்தியாவுக்கு ஃபாலோ ஆன் தந்தது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியா, ஈடன் கார்டனில் வரலாற்று வெற்றியைப் பதிக்கப்போகிறது என்றே அனைவரும் நினைத்திருப்பார்கள். மெக்ராத், கில்லெஸ்பி, மார்க் வாக், வார்னே, ஸ்டீவ் வாக் என ஆஸ்திரேலிய அணி மிரட்டிக்கொண்டிருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத ஒன்று ஈடனில் நடந்தது. இளம்வீரர் லட்சுமண் ஆஸியை மிரட்டிக்கொண்டிருந்தார். சரியான நேரத்தில் டிராவிட்டும் கைக்கோத்தார். நான்காவது நாளில் இணைந்த இந்த ஜோடி அமர்க்களப்படுத்தியது.  விக்கெட் இழப்பின்றி ஒரு நாளில் 334 ரன்களைக் குவித்தனர். இந்தியா 657 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தப் போட்டியில் இந்தியா 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. விவிஎஸ் லட்சுமண் 281 ரன்களை குவித்தார். டைட்டிலுக்கே இவ்வளவு பெரிய கதை இருக்கிறது.

281 ரன்களை எடுத்த சில நாள்களில், விரேந்திர சேவாக், லட்சுமண் ஆகியோர் வெளியில் சென்றுள்ளனர். அப்போது சேவாக், `நீங்கள் 300 ரன்களை அடிக்கத் தவறிவிட்டீர்கள். நான் கண்டிப்பாக அடிப்பேன்' எனத் தெரிவித்துள்ளார். லட்சுமண் அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டார். ஏனெனில் சேவாக் அப்போதுதான் இந்திய அணிக்காக ஒரு சில போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்தார். டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா என்பதுகூட தெரியாது. பிறகு நடந்தது எல்லாம் வரலாறு'' என லட்சுமண் அதில் தெரிவித்துள்ளார்.

தோனி குறித்தும் சில சுவாரஸ்யமான தகவல்களை இதில் குறிப்பிட்டுள்ளார். “தனது 100-வது போட்டியின்போது அணி வீரர்கள் பயணம் செய்த பேருந்தை நாக்பூரில் இருந்து ஹோட்டல் வரை தோனி எனக்காக ஓட்டியது மகிழ்ச்சியாக இருந்தது'' என்று கூறியுள்ளார்.