Published:Updated:

சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் கொசுக்களை அழிக்கும் மீன்கள்... வீடுகளில் வளர்க்கலாம்!

சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் கொசுக்களை அழிக்கும் மீன்கள்... வீடுகளில் வளர்க்கலாம்!
சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் கொசுக்களை அழிக்கும் மீன்கள்... வீடுகளில் வளர்க்கலாம்!

லகம் முழுக்க ஆதிக்கத்தைச் செலுத்திவரும் கொசுக்கள், மக்களுக்கு விதவிதமான நோய்களை உருவாக்கி வருகின்றன. உலகம் முழுக்க ஆண்டொன்றுக்குக் கொசுக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 7,25,000 பேர் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

``கொசுக்களைக் கட்டுப்படுத்த அவற்றின் வாழ்விடங்களை அழிப்பது முதன்மையானது. அதற்குக் கொசுக்களின் லார்வாக்களை முக்கிய உணவாகக் கொண்டிருக்கும் கம்பூசியா மற்றும் கப்பி வகை மீன்களை வளர்க்கலாம். அவை கொசுக்கள் உருவாகும் இடங்களின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. சுற்றுச்சூழலையும் காப்பாற்றுகின்றன" என்கிறார்கள் பூச்சியியல் வல்லுநர்கள்.

தமிழகத்திலும் கொசுக்கள் உற்பத்தியைத் தடுக்க கொசுப் புழுக்களை உண்ணும் 'கம்பூசியா' வகை மீன்கள் ஏரிகள், நீர்த்தேக்கங்களில் விடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நன்னீர் குட்டை, குளங்கள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் 'கம்பூசியா' மீன்கள் விடப்படுகின்றன. சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் தனி குழுக்கள் அமைத்து இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
ஓய்வுபெற்ற முதன்மை பூச்சியியல் வல்லுநர் எம்.எஸ்.முகைதீன் அப்துல்காதரிடம் கேட்டோம். 

``கொசுக்களைக் கட்டுப்படுத்த பல்வேறுமுறைகள் உள்ளன. அதில் ரசாயனக் கட்டுப்பாடு முறைகளே பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்படுகின்றன. இத்தகைய முறைகள் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், கொசுக்களிடையே எதிர்ப்புத் திறனையும் (Insecticides Resistance) உருவாக்கிவிடுகின்றன. மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு கொசுக்களை ஒழிப்பதில், மீன்களைப் பயன்படுத்தும் முறை மிகவும் சிறந்த வழிமுறையாகக் கருதப்படுகிறது. எனவே, மீன்களைப் பயன்படுத்தி கொசு உற்பத்தியாகும் இடங்களில் கொசுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

1903-ம் ஆண்டு முதல் இத்தகைய முறை பொது சுகாதாரத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காக, 'கொசு மீன்' என்று அழைக்கப்படும் `கம்பூசியா அஃபினிஸ்' (Gambusia affinis) மற்றும் 'கப்பி மீன்' என்ற 'பொய்சிலியா ரெட்டிகுலேட்டா இன மீன்கள்' பயன்படுத்தப்படுகின்றன. இந்த இரண்டு மீன்களும் `பொய்சிலிடே' (Poecilidae) குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். நீர்நிலைகளில், குறிப்பாகக் கிணறுகள், அலங்காரத் தொட்டிகள், பெரிய சிமென்ட் தொட்டிகள் ஆகியவற்றில் வளர்த்து, தொடர்ச்சியாகக் கொசுப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். இவை ரசாயன முறையைவிட சுற்றுச்சூழலுக்கு உகந்தவை; செலவும் குறைவு.

இந்த மீன்கள், நீர்நிலைகளில் உள்ள கொசுக்களின் முட்டை, லார்வா என்ற இளம்பருவப் புழுக்களை சாப்பிட்டு அழித்துவிடும். குறிப்பாக மலேரியா, சிக்குன்குன்யா, டெங்கு காய்ச்சலைப்  பரப்பும் கொசுக்களை இந்த மீன்கள் உணவாக உட்கொண்டு வாழும். சிறியதாக இருப்பதால் ஆழமற்ற நீர்நிலைகளில் நன்றாக வளரும். பரவலான வெப்பநிலை மற்றும் ஒளி அடர்த்தியையும் தாக்குப்பிடிக்கும். `கம்பூசியா' மீன்கள் இந்தியாவில் 1928-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. ஆண் மீன் 3 - 5 சென்டி மீட்டரும் பெண் மீன் 5- 6 சென்டி மீட்டரும் வளரும். இந்த மீன்கள் சாப்பிட ஏற்றதல்ல. மீன் வளரும் இடத்தில் அபேட், குளோரின் உள்ளிட்ட எந்தக் கிருமி நாசினிப் பவுடரையும் பயன்படுத்தக் கூடாது. குடிநீர்த் தொட்டியைச் சாதாரண முறையில் சுத்தம் செய்தால் போதும். 

தன் வாழ்நாளில் ஒரு பெண் கம்பூசியா மீன் 900 - 1,200 குஞ்சுகளைப் பொரிக்கும். நன்கு வளர்ச்சியடைந்த கம்பூசியா மீன் தினமும் 100 - 200 கொசுப்புழுக்களை உண்கின்றன. கப்பி வகை மீன்கள் இந்தியாவில் 1910-ம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவை தினமும் 100 கொசுப்புழுக்களை உண்கின்றன. கப்பி மீன்கள் கம்பூசியா மீன்களைவிட சிறியவை. கம்பூசியா வகை மீன்கள் சுத்தமான நீரிலும், கப்பி வகை மீன்கள் மிதமான அசுத்த நீரிலும் பல்கிப் பெருகக்கூடியவை. பொதுமக்கள் தாமாகவே இந்த மீன்களை வளர்த்து கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கலாம்.

அதோடு சுற்றுப்புறங்களில் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகளைத் தவிர்த்து, தேவையற்ற இடங்களில் தண்ணீர் தேக்கிவைப்பதைத் தவிர்க்க வேண்டும். அந்த இடங்களில் மணலைக் கொண்டு நிரப்பி, நீர் தேங்காதவாறு சமப்படுத்த வேண்டும். வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அமைத்து, சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வாரத்துக்கும் மேல் பாத்திரங்கள், டின்களில் தண்ணீரைச் சேர்த்துவைப்பதைத் தவிர்க்க வேண்டும். தண்ணீர்த்தொட்டி, செப்டிக் டேங்குகளின் மூடிகளைக் காற்றுப் புகாமல் மூடிவைக்க வேண்டும். இவற்றை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் கொசுக்களின் உற்பத்தியைக் குறைக்கலாம்" என்கிறார்  எம்.எஸ்.முகைதீன் அப்துல்காதர்.