Published:Updated:

350 சிசி, ட்வின் சிலிண்டர்... ஜாவாவுக்கு அடுத்து வருகிறது யெஸ்டி ரோடுகிங்!

ராயல் என்ஃபீல்டு தொடங்கி வைத்த ரெட்ரோ பைக் மார்க்கெட், இப்போது ஜாவாவினால் புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது.

350 சிசி, ட்வின் சிலிண்டர்... ஜாவாவுக்கு அடுத்து வருகிறது யெஸ்டி ரோடுகிங்!
350 சிசி, ட்வின் சிலிண்டர்... ஜாவாவுக்கு அடுத்து வருகிறது யெஸ்டி ரோடுகிங்!

`ஒரு புத்தம்புதிய ஜாவா வேண்டும்' என்பது நவம்பர் 15, 2018 மதியம்வரை சாத்தியமில்லாத ஒன்றாகவே இருந்தது. ஆனால், பைக் ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஜாவா பிராண்ட் இந்தியாவில் மறுஅறிமுகம் ஆகியிருப்பதுடன், அடுத்த ஆண்டில் யாராலுமே புதிய ஜாவா/ஜாவா 42/பேரக் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நிச்சயமாக வாங்கிவிடமுடியும் என்பது பெரிய ப்ளஸ். ஆனால், `வராதுனு சொன்ன ஜாவாவே வந்துடுச்சு, அடுத்து யெஸ்டி வந்தால் எப்படி இருக்கும்?' என்பது இப்போது பலரின் கனவாக மாறியிருக்கிறது. இதற்கு க்ளாஸிக் லெஜன்ட்ஸ் நிறுவனம் பதில் வைத்திருக்கிறது. ஆம், RoadKing & Monarch போன்ற புகழ்பெற்ற யெஸ்டி மாடல்களை மறுஅறிமுகம் செய்யும் முடிவில் இருக்கிறது.

அனுபம் தரேஜாவின் கருத்து என்ன?

இதுகுறித்து க்ளாஸிக் லெஜன்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான அனுபம் தரேஜாவிடம் கேட்டபோது, `இப்போதைக்கு எங்கள் கவனம் முழுவதும் ஜாவா மீதுதான் இருக்கிறது. இது உள்நாட்டுத் தேவைகளை முதலில் பூர்த்தி செய்யும். என்றாலும், ஏற்றுமதி சந்தைகளை மனதில்வைத்து, பின்னாளில் BSA பிராண்ட்டில் புதிய மாடல்களைத் தயாரிக்க உள்ளோம். புதிய யெஸ்டி என்பது, நிச்சயம் ரீ-பேட்ஜிங் செய்யப்பட்ட ஜாவா பைக்காக இருக்காது என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்' என்றார். இதை வைத்துப் பார்க்கும்போது, சில மெக்கானிக்கல் பாகங்கள் ஜாவாவிலிருந்து பெறப்பட்டாலும், டிசைன் மற்றும் ப்ளாட்ஃபார்ம் ரீதியில் முற்றிலும் புதிய தயாரிப்பாகவே யெஸ்டி இருக்கும்.  

யெஸ்டியின் வரலாறு என்ன சொல்கிறது?

மைசூரில் இருந்த ஐடியல் ஜாவா நிறுவனத்தின் செல்லப்பிள்ளையாக யெஸ்டி இருந்தது என்றால் அது மிகையல்ல. ஆம், இந்த நிறுவனத்தைத் தொடங்கிய ஃபரோக் இரானி, தான் ஏற்கெனவே இந்தியாவில் விற்பனைசெய்த ஜாவா பைக்குகளை அடிப்படையாகக் கொண்டே யெஸ்டி பைக்குகளைத் தயாரித்தார். என்றாலும், இரண்டுக்கும் இடையே டிசைன் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் பலத்த வித்தியாசம் இருக்கத்தான் செய்தது. யெஸ்டி பிராண்டிங்கில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Roadking, Monarch, CL-II, 350 Twin ஆகியவை இன்றும் விண்டேஜ் பைக் ஆர்வலர்களிடம் நற்பெயரைப் பெற்றிருக்கின்றன. மேலும், ஜாவாவின் 60சிசி ஸ்டெப்-த்ரூ பைக்குகளான Pionyr & Jet ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, Jet & Colt எனும் இரு மாடல்களைத் தயாரித்தது யெஸ்டி. சிம்பிளாகச் சொல்வதென்றால், ஜாவாக்கள் அழகாக டிசைனில் ஸ்கோர் செய்தால், யெஸ்டிக்கள் கரடுமுரடான டிசைனில் சொல்லியடித்தன. அதனாலேயே அந்தக் காலத்தில் ரோடு ரேஸிங் மற்றும் ராலிக்களில், யெஸ்டி பைக்குகளின் பர்ஃபாமென்ஸ் வேற லெவலில் இருந்ததைப் பார்க்கலாம். 

ரோடுகிங் பைக்கில் என்ன ஸ்பெஷல்?

பல்வேறு மாடல்கள் இருந்தாலும், யெஸ்டியின் வரலாற்றில் செல்வாக்குடன் இருந்தது என்னவோ ரோடுகிங்தான். இதன் ஸ்டைலான டிசைனுடன் - பவர்ஃபுல் 250சிசி இன்ஜின் சேரும்போது, அற்புதமான ஒரு பைக்காக அது விளங்கியது. CZ 250 மோட்டோக்ராஸ் பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இதன் 2 ஸ்ட்ரோக் இன்ஜினில், செமி-ஆட்டோமேட்டிக் கிளட்ச் மற்றும் ட்வின் போர்ட் தொழில்நுட்பம் இருந்தன. இதற்கு பைக் ஆர்வலர்கள் மத்தியில் எமோஷனலான ஆதரவு இருப்பதால், ரோடுகிங்தான் க்ளாஸிக் லெஜன்ட்ஸ் நிறுவனம் மீட்டெடுக்கப்போகும் முதல் யெஸ்டி பைக்காக இருக்கலாம்.

350 ட்வின்... அட, 2 சிலிண்டர் பைக்!

நிகழ்காலத்தில் என்ட்யூரோ ஸ்டைலில் - செமி ஆட்டோமேட்டிக் க்ளட்ச் அமைப்புடன் கூடிய 4 ஸ்ட்ரோக் இன்ஜினுடன் புத்தம்புதிய ரோடுகிங் வெளிவந்தால் எப்படி இருக்கும்? ஜாவா டைப் 634 பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட 350 ட்வின், யெஸ்டி ரசிகர்களுக்கு இடையே தனித்துவமான மதிப்பைக் கொண்டிருக்கிறது. இதன் பெயருக்கு ஏற்றபடி அதில் இருந்தது ட்வின் சிலிண்டர் இன்ஜின்! எனவே நிகழ்காலத்திலும் வரலாறுக்கு ஏற்ப, அந்த செட்-அப்பில் இது மீண்டுவந்தால்தான் நன்றாக இருக்கும். ஆனால், தற்போது 2 சிலிண்டர் இன்ஜினை உற்பத்தி செய்வதற்கு அதிக முதலீடு தேவை என்பதுடன், இந்த இன்ஜின் பொருத்தப்பட்ட பைக்குகளுக்கான சந்தை மதிப்பும் குறைவாகவே இருக்கிறது. எனவே க்ளாஸிக் லெஜன்ட்ஸ் நிறுவனம், 350 ட்வின் விஷயத்தில் மெதுவாகவே செயல்படும் எனத் தோன்றுகிறது.

 க்ளாஸிக் லெஜன்ட்ஸின் முடிவு/திட்டம் என்னவாக இருக்கும்?

உண்மையைச் சொல்வதென்றால், டிசைன் ரீதியிலேயே பழைய ஜாவாவின் சிறப்புகளைப் புதியதில் செலுத்தி, போட்டியில் பாதி வெற்றியை எளிதாகப் பெற்றுவிட்டது க்ளாஸிக் லெஜன்ட்ஸ் நிறுவனம். எனவே, இந்த பைக்குகளை அடுத்த மாதத்தில் ஓட்டிப் பார்க்கும்போது, பைக் ஆர்வலர்களின் கேள்விகளுக்கான முழு விடையும் தெரிந்துவிடும். ஆனால், ஜாவா போல, யெஸ்டியும் அதே ரெட்ரோ - மாடர்ன் பாணியைக் கையில் எடுக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும். அந்தக்கால இளைஞர்களின் கனவு வாகனமாகவும், ரேஸ் பைக்காவும் யெஸ்டி இருந்ததை வைத்துப் பார்க்கும்போது, தொழில்நுட்பரீதியில் இது ஜாவாவை விட எகிறியடிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால், ராயல் என்ஃபீல்டு தொடங்கி வைத்த ரெட்ரோ பைக் மார்க்கெட், இப்போது ஜாவாவினால் புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது. 

எனவே, அந்த ட்ரெண்ட்/டிமாண்டைப் பயன்படுத்தி, பைக் ஆர்வலர்களைத் திருப்திபடுத்தும்படி ஜாவாவின் ரூட்டிலேயே பயணித்து, தனது புதிய தயாரிப்புகளை வெளியிடுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அடுத்த நிதியாண்டில் முதல் காலாண்டுக்குள்ளாக, தற்போது வெளிவந்திருக்கும் 3 ஜாவா மாடல்களின் உற்பத்தி, டீலர் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கை சீர்செய்வதே க்ளாஸிக் லெஜன்ட்ஸின் தலையாய பணியாக இருக்கும். பின்னர் ஏற்றுமதி சந்தைகளுக்கான BSA மோட்டார் சைக்கிள்களின் தயாரிப்பு தொடங்கும். எனவே ஜாவாவின் அட்வென்ச்சர்/ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் வெளிவரப்போகும் அதே 2020-ல்தான், யெஸ்டி பைக்குகளின் அதிகாரபூர்வமான அறிமுகம் நடைபெறும் எனத் தோன்றுகிறது.