Published:Updated:

இந்தியாவுக்கு ஐ.சி.சி நன்றி சொல்ல வேண்டும்... மகளிர் கிரிக்கெட் எழுச்சியின் பின்னணி!

இந்தியாவுக்கு ஐ.சி.சி நன்றி சொல்ல வேண்டும்... மகளிர் கிரிக்கெட் எழுச்சியின் பின்னணி!
இந்தியாவுக்கு ஐ.சி.சி நன்றி சொல்ல வேண்டும்... மகளிர் கிரிக்கெட் எழுச்சியின் பின்னணி!

பெண்கள் கிரிக்கெட் இந்த மாபெரும் வரவேற்பைப் பெற மிக முக்கியக் காரணம், கோடிக்கணக்கான ரசிகர்களை (வாடிக்கையாளர்களை) கொண்டிருக்கும் இந்தியா!

``என்னப்பா திடீர்னு வுமன்ஸ் கிரிக்கெட் இவ்ளோ பிரபலமாயிடுச்சு"

கடந்த ஓரிரு வாரங்களாக, சிலபல இடங்களில் இந்த வாக்கியம் காதில் விழுந்துகொண்டே இருந்தது. நியூசிலாந்து அணிக்கெதிராக ஹர்மன்ப்ரீத் கௌர் சதமடித்ததும், ஃபேஸ்புக் டைம்லைன் முழுவதும் அவரே நிறைந்திருந்தார். முதல் இரண்டு போட்டிகளிலும்  ஹேமலதா, பௌலராகக் கலக்க, ``அந்தப் பொண்ணு தமிழ்நாடா..." என்று பல தரப்பிலிருந்தும் விசாரித்தனர். ஆஸ்திரேலியப் பந்துவீச்சை, ஸ்மிரிதி வெளுத்து வாங்க, மீண்டும் உயிர்ப்பு பெற்றது மந்தனா ஆர்மி. இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல், உலக அளவிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த டி-20 உலகக் கோப்பை. ஊடகங்களும் முன்பை விட அதிக அளவில் இந்தத் தொடரை கவர் செய்துகொண்டிருக்கின்றன. இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்த இரண்டு ஆண்டுகளாக மகளிர் கிரிக்கெட் கவனம் பெறுவது ஏன்? என்ன காரணம்?

சமூக வலைதளங்களின் அதீதப் பயன்பாடுதான் இதற்குக் காரணம் என்று எல்லாவற்றுக்கும் சொல்வதையே இதற்கும் காரணமாகச் சொல்லிவிட முடியாது. அதைக் கடந்து யோசிக்கவேண்டும். கடந்த 2017 நவம்பர் முதல் 2018 ஜனவரி வரை 12 நாடுகளில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது ஐ.சி.சி. அந்தக் கருத்துக்கணிப்பின்படி சுமார் 100 கோடி கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் 68 சதவிகிதம் பேர் மகளிர் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள். இத்தனை ரசிகர்களை மகளிர் கிரிக்கெட் ஈர்த்தது எப்படி? இந்த இடத்தில், மொத்தமாக மகளிர் கிரிக்கெட் என்று பார்க்காமல், `இந்திய மகளிர் அணி' என்று நம் பார்வையைச் சுருக்கினாலே பதில் கிடைத்துவிடும். 

கிரிக்கெட் என்ற விளையாட்டு இன்று மாபெரும் சக்தியாக விளங்குவதில் இந்தியாவின் பங்குதான் அதிகம். 20-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ஜக்மோஹன் டால்மியா செய்த `Broadcasting' புரட்சி, கிரிக்கெட்டின் ரீச்சை பலமடங்கு அதிகரித்தது. இந்த விளையாட்டின் அபரிமிதமான வளர்ச்சியின் மிகமுக்கியக் காரணமாக அதைச் சொல்லலாம். இப்போது ஒளிபரப்பு உரிமம் வைத்திருப்பவர்களின் வசதிக்கு, போட்டியின் நேரத்தை மாற்றும் நிலைக்கு வந்திருக்கிறோமே! அப்போதும் சரி, இப்போதும் சரி, இந்தியா எப்போதுமே ஒட்டுமொத்த கிரிக்கெட் பரிணாமத்தின் மையப்புள்ளியாக இருந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கு பி.சி.சி.ஐ அமைப்பின் பொருளாதார பலத்தை மட்டும் காரணமாகச் சொல்லிட முடியாது. இந்தியா கிரிக்கெட்டுக்குக் கொடுப்பது `ரசிகர்கள்' என்ற மாபெரும் வரம்! 

ஐ.சி.சி-யின் அந்தக் கருத்துக்கணிப்பில் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய மிகமுக்கியமான விஷயம் - அந்த 100 கோடி கிரிக்கெட் ரசிகர்களில் 90 சதவிகிதம் பேர் இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்கள்! இந்த டி-20 உலகக் கோப்பையை விளையாடும் நாடுகளை எடுத்துக்கொண்டால்... அதில், இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 135.4 கோடி. மற்ற 9 அணிகளின் கூட்டு மக்கள்தொகை வெறும் 56.7 கோடிதான். கிட்டத்தட்ட இரண்டு மடங்கு! இந்த ரசிகர்கள்தான் கிரிக்கெட் என்ற வியாபாரத்தின் மிகமுக்கிய இலக்கு. பின்னர் எந்த நம்பிக்கையில் 16,000 கோடி ரூபாய்க்கு ஐ.பி.எல் உரிமையை வாங்கியது ஸ்டார் நிறுவனம்? விஷயம் இதுதான் - இந்தியாவில் ஹிட் அடித்தால், அது உலக கிரிக்கெட் அரங்கில் ஹிட் அடித்துவிடும். சரி, மகளிர் கிரிக்கெட் இங்கே, இப்போது ஹிட் அடித்தது எப்படி?

இந்தியாவைப் பொறுத்தவரை, இங்கு வெற்றிகளும், சாதனைகளும் மட்டுமே ஒருவருக்கான அடையாளத்தைப் பெற்றுக்கொடுக்கும். ஒரு வீரரோ, அணியோ, அந்த விளையாட்டோ பிரபலமாக ஒரு மாபெரும் வெற்றி பெற்றிருக்கவேண்டும். இல்லை, சாதனை படைத்திருக்கவேண்டும். ரசிகர்கள் முதல் நிர்வாகிகள் வரை அப்போதுதான் அதற்கு அங்கீகாரம் தருவார்கள். உதாரணமாக, இந்திய விளையாட்டு உலகின் மிகப்பெரிய விருதான `ராஜீவ் காந்தி கேல் ரத்னா’, 4 முதல் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்குபவர்களுக்குக் கொடுக்கப்படும். ஆனால், அந்த விருதை, அறிமுகமான மூன்றாவது ஆண்டே (2007) வென்றார் தோனி. டிராவிட் போன்ற வீரர்களுக்கெல்லாம் அது கொடுக்கப்படவில்லை. காரணம், டிராவிட் டி-20 உலகக் கோப்பை போல் எதையும் வென்று தரவில்லை. ஆம், இங்கு வெற்றிகள் முக்கியம். 

அப்படியான ஒரு வெற்றியை 2017  வரை இந்திய மகளிர் அணி உலக அரங்கில் பெற்றது இல்லை. ஆனால், 2017 உலகக் கோப்பை, அவர்களை அந்த மகத்தான மைல்கல் முன் கொண்டு சென்றது. ஃபைனல் வரை மிகச் சிறப்பாக விளையாடியதாலும், எதிர்பாராத முன்னேற்றம் கண்டதாலும், அனைவரின் கவனத்தையும் பெற்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. கோப்பை வெல்லவில்லைதான். ஆனால், பாகிஸ்தானிடம் சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தோற்க, இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய இறுதிப் போட்டி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சாம்பியன்ஸ் டிராஃபி சோகத்தை மறைக்க அப்போது இந்தியர்களுக்குக் கோப்பை தேவைப்பட்டது. அதனால், அதை வென்றுகொடுக்கக்கூடிய இடத்தில் இருந்த `மித்தாலி அண்ட் கோ'வை கொண்டாடத் தொடங்கினார்கள் இந்தியர்கள். 

லார்ட்ஸ் மைதானத்தில் 25,000 ரசிகர்கள் அந்த இறுதிப் போட்டியை நேரில் பார்த்தனர். அதற்கு முன் அந்த மைதானத்தில், ஒரு மகளிர் கிரிக்கெட் போட்டியின் அதிகபட்ச ரசிகர் வருகை 4,426 தான்! அதுமட்டுமல்லாமல் 5 கோடி ரசிகர்கள் அந்தப் போட்டியை தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்த்தனர். மகளிர் கிரிக்கெட் வரலாற்றின் மிகமுக்கிய தருணம் இதுதான். இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் ஆண்கள் அணியின் வெற்றி, அந்தப் போட்டிக்கான வரவேற்பை இரட்டிப்பாக்கிவிட்டது. இந்திய மகளிர் இங்கிலாந்திடம் தோற்றிருந்தாலும், கடைசிவரை போராடியதால், அவர்களை இந்திய ரசிகர்கள் அரவணைத்துக்கொண்டனர். சிலர் இந்திய அணியின் எதிர்பாராத அந்தச் செயல்பாட்டைக் கொண்டாட, சிலர் ஆண்கள் அணியை மறைமுகமாகத் திட்டுவதற்காகக் கொண்டாடினார்கள். 2016-ம் ஆண்டே மந்தனா, ஹர்மன்ப்ரீத் ஆகியோர் பிக் பேஷ் தொடரில் விளையாடினார்கள். அப்போதெல்லாம் செய்தியில்கூட வராதவர்கள், இப்போது தலைப்புச் செய்தியானார்கள். காரணம் - அந்த உலகக் கோப்பை! எது எப்படியோ, இந்திய மகளிர் அணி கொண்டாடப்பட்டது. மகளிர் கிரிக்கெட்டும் கொண்டாடப்படுகிறது. 

சரி, எப்படி இந்தியாவை மட்டுமே இந்த எழுச்சிக்கான காரணமாகச் சொல்ல முடியும்? இந்தியாவைத் தவிர்த்து, உலக அரங்கில் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நாடுகள் பிரிட்டனும், ஆஸ்திரேலியாவும்தான். வெறும் 9 கோடி மக்கள் தொகையை மட்டும் கொண்டிருக்கும் இந்த நாடுகளில், கிரிக்கெட் மிகப்பெரிய வியாபாரம் கிடையாது. அதை அந்த இரு நாடுகளும் கௌரவம் சார்ந்ததாகவே கருதுகின்றன. உலகக் கோப்பைக்கு நிகராக ஆஷஸ் தொடருக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆஷஸ் பயிற்சிக்காக, கோடிகள் கொட்டும் ஐ.பி.எல் தொடரைப் புறக்கணிக்கின்றனர். அங்கு கிரிக்கெட் கமர்ஷியல் கிடையாது. 

கிரிக்கெட் சங்கங்கள் மட்டுமல்ல, ரசிகர்களும் அதை அப்படித்தான் பார்க்கின்றனர். ஐ.சி.சி நடத்திய அந்த சர்வேயில் `டெஸ்ட் கிரிக்கெட் பிடிக்கும்' என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள். அதில் 86 சதவிகிதம் பேட் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள்! அவர்கள் கிரிக்கெட்டை அணுகுவது டெஸ்ட் கிரிக்கெட் மூலம்தான். அதனால்தான் அங்கு ஐ.பி.எல், சி.பி.எல் போல இன்னும் ஒரு கம்ர்ஷியலான டி-20 தொடர் தொடங்கப்படவில்லை. இந்த ஆண்டு பெண்களுக்கு நடத்திய `கியா சூப்பர் லீக்’ தொடரைக்கூட அமைதியாக நடத்தி முடித்தார்கள். ஆக, இங்கிலாந்து இன்றைய கம்ர்ஷியல் கிரிக்கெட் உலகுக்கு வெகுதூரம் இருக்கிறது. ஆஸ்திரேலியா?

எல்லிஸ் பெர்ரியை உதாரணமாகக் கொண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்துவிடலாம். கிரிக்கெட், கால்பந்து என இரண்டு விளையாட்டுகளிலும் உலகக் கோப்பை விளையாடிய ஒரே வீராங்கனை அவர். இரண்டிலுமே சூப்பர் ஸ்டார்தான். இவர் இந்தியாவில் இருந்திருந்தால் இந்நேரம் லேடி சச்சின், லேடி சுனில் சேத்ரி என வாழ்ந்திருப்பார். பொல்லாத நேரம், ஆஸ்திரேலியாவில் பிறந்து சாதாரண ஸ்டாராக வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஸ்மிரிதி மந்தனா, மித்தாலி ராஜ் போல் அவர் அங்கு பெரிதாகக் கொண்டாடப்படுவதில்லை. `ஒரு பெண் இவ்வளவு சாதிக்கிறார்' என்ற நம் ஊர் மனநிலை அங்கு இல்லை. அனைவரின் சாதனைகளையும் சரிசமமாகப் பார்ப்பவர்கள் அவர்கள். அதனால்தான் இன்னும் இரண்டு வாரத்தில் தொடங்கவிருக்கும் பெண்கள் பிக் பேஷ் தொடரின் நான்காவது சீசனுக்கு எந்தப் பரபரப்பும் இல்லாமல் இருக்கிறது. ஆனால், ஐ.பி.எல் தொடர் நடுவே பெண்களுக்கு நடத்திய ஒரு டி-20 போட்டிக்கு, நாம் எத்தனை விளம்பரங்கள் செய்தோம்?

இதுதான் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளில் பெண்கள் விளையாட்டின் நிலைப்பாடு. ஒரு வெற்றி, அவர்களின் நிலைப்பாட்டை மாற்றிவிடாது. அப்படி இருந்திருந்தால் 2009-ல் டி-20 உலகக் கோப்பை வென்றபோதே மகளிர் கிரிக்கெட் தொடரை நடத்தியிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம். ஆனால், செய்யவில்லை. ஒரு வெற்றிக்குப் பின்னால் நடக்கும் வியாபாரக் கட்டமைப்பு அங்கு இல்லை. அது 70 சதவிகித ரசிகர்களைக் கொண்டிருக்கும் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். ஆக, பெண்கள் கிரிக்கெட் இந்த மாபெரும் வரவேற்பைப் பெற மிக முக்கியக் காரணம், கோடிக்கணக்கான ரசிகர்களை (வாடிக்கையாளர்களை) கொண்டிருக்கும் இந்தியா!

photo courtesy : twitter.com/ICC

அடுத்த கட்டுரைக்கு