Published:Updated:

கஜா புயலால் பாதிப்புக்குள்ளான மக்களை மனரீதியாக மீட்பது எப்படி? #SaveDelta

ஒரே நாளில் புரட்டிப் போடப்பட்ட இந்த வாழ்க்கை அவர்களுக்கு மனரீதியாக ஏராளமான வடுக்களை உண்டாக்கிச் சென்றிருக்கின்றது.

கஜா புயலால் பாதிப்புக்குள்ளான மக்களை மனரீதியாக மீட்பது எப்படி? #SaveDelta
கஜா புயலால் பாதிப்புக்குள்ளான மக்களை மனரீதியாக மீட்பது எப்படி? #SaveDelta

ஜா புயல் காரணமாக யாரும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு வரலாறு காணாத பேரழிவைச் சந்தித்திருக்கிறார்கள் டெல்டா மாவட்ட மக்கள். தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் ஊடுருவிய கஜா புயல், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் கடுமையான உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும் ஏற்படுத்திச் சென்றுள்ளது. இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன. உயிரிழந்த தன் உறவுகளுக்காக வருந்துவதா, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உணவு, உடைமைகளைத் தேடி ஓடுவதா, தான் வாழ்ந்த வீடு, வளர்த்த ஆடு, மாடுகள் அழிந்ததை நினைத்துக் கண்ணீர் வடிப்பதா  எனத் திக்குத் தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

வேருடன் சாய்ந்த தென்னை மரங்கள், நீரில் செத்து மிதக்கும் ஆடுகள், இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்த மாடுகள் எனக் கண்டதும் கண்ணீர் வரவழைக்கும் பல்வேறு அவலங்கள் அரங்கேறியிருக்கின்றன. அதிலும் பட்டுக்கோட்டை, பேராவூரணி போன்ற பகுதிகளில்

வசிக்கும் மக்களுக்கு புயல் அனுபவம் என்பது புதிது. ஊருக்கே இளநீர் தந்த மக்கள், இன்றைக்குக் கண்ணீருடன் ஒரு பாட்டில் தண்ணீருக்காகக் கையேந்தி நிற்கிறார்கள். அவர்களால் இந்த மாற்றத்தை ஜீரணிக்க முடியவில்லை.

``எங்க எதிர்காலமே அவ்வளவுதாங்க. தென்னையை நம்பித்தான் எங்க வட்டாரமே வாழ்ந்திட்டிருந்திச்சி. இனிமே நாங்க எப்படி வாழப்போறோம்னு தெரியல. எங்க அப்பன், ஆத்தா கஷ்டப்பட்டு வளர்த்த தென்னை எல்லாம் வேரோட விழுந்து போச்சு. தலைமுறை தாண்டிய சொத்துங்க அது. இனி நாங்க விதைச்சி, தண்ணி விட்டு வளரணும்னா அது நடக்கிற காரியமே இல்ல. நல்லா தண்ணி இருந்த காலத்துலேயே சீப்பட்டோம். இப்ப இன்னும் கொஞ்சம் சீப்படப் போறோம்.

இங்கிலீஷ் மீடியத்துல படிச்ச எங்க புள்ளைகளை இனி அரசாங்கப் பள்ளிக்கூடத்துலதான் படிக்க வைக்க முடியும். மொய் விருந்து நடத்தித்தான் எங்க வீட்டுப் பிள்ளைக கல்யாணத்த நடத்தினோம். இனி அஞ்சு வருஷத்துக்கு மொய் விருந்தே வைக்க முடியாது. வச்சாலும் செய்றதுக்கு யார்கிட்டயும் பணம் இருக்காது. பண்ணைக்கு ஆள்வச்சு வேலை வாங்கிட்டு இருந்தவங்க இனி கூலி வேலைக்குத்தான் போகணும். ஒரே புயலால எங்க ஒட்டுமொத்த வாழ்க்கையே முடிஞ்சிப் போச்சு`` எனக் கண்ணீர் வடிக்கிறார் பேராவூரணியைச் சேர்ந்த கணநாதன்.

உணவு, தண்ணீர்,மெழுகுவத்தி, அரிசி எனத் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவிகள் பறந்துகொண்டிருக்கின்றன. ஆனாலும், ஒரே நாளில் புரட்டிப் போடப்பட்ட இந்த வாழ்க்கை அவர்களுக்கு மனரீதியாக ஏராளமான வடுக்களை உண்டாக்கிச் சென்றிருக்கின்றது. அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்கள். இழப்புகளிலிருந்து உடனடியாக மீளமுடியாத அவர்களை மீட்டெடுக்கும் வழிமுறைகள் குறித்துப் பேசுகிறார் உளவியல் நிபுணர் பூங்கொடி

``உளவியல் ரீதியாகப் பார்த்தால் இதுபோன்ற இழப்புகளைச் சந்தித்த மக்கள் தூக்கமின்மை, பிறர் மீது அதிகமாகக் கோபப்படுதல், அலறுதல், கத்துதல், உளறுதல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாவார்கள். அவர்களால்  இழப்புகளிலிருந்து உடனடியாக மீள முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மீண்டு வெளியே வருவார்கள். முதலில் தங்களுக்கு நடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைவார்கள், அதை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். அடுத்ததாக  ஏன் இப்படி நடந்தது எனக் கோபப்படுவார்கள். (அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் முற்றுகை என்பதுகூட மனரீதியாக அவர்கள் பாதிக்கப்பட்டதன் (Frustration) வெளிப்பாடுதான்) 

மூன்றாவது நிலையில், தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு வருத்தப்பட ஆரம்பிப்பார்கள். அடுத்ததாக இந்த அழிவுகள் எப்படியாவது மாறிவிட வேண்டும் என இளகிய மனநிலையில் இருப்பார்கள். இறுதியாக மன உளைச்சலுக்கு ஆளாகி அமைதியாகிவிடுவார்கள். அதன் பிறகுதான் அந்த இழப்புகளை ஏற்றுக்கொண்டு இருப்பதை வைத்து வாழ ஆரம்பிப்பார்கள். 

ஒரு சிலருக்கு இரண்டு, மூன்று ஆண்டுகள்கூட மனரீதியாக இந்த பாதிப்புகள் இருக்கும். அவற்றிலிருந்து மீள முடியாமல் தற்கொலைக்குக்கூட முயற்சி செய்வார்கள். அவர்களின் வாழ்க்கையில் இதுபோன்ற நிகழ்வுகளைக் கேள்விப்படும்போதெல்லாம்  மனரீதியாகத் துன்புறுவார்கள். அவர்களுக்கு உணவு, உடை போன்ற உதவிகள் எந்தளவுக்கு உடனடி அவசியமோ, அதேபோன்று உளவியல் ஆலோசனைகள் வழங்கவேண்டியதும் அவசியம். 

அரசாங்கம் மீட்புப் பணிகளை செய்வதுடன், மருத்துவர்கள் குழுவையும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும். அந்தக் குழுவில் உளவியல் நிபுணர்களையும் கண்டிப்பாக இடம்பெறச் செய்ய வேண்டும். அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உளவியல் ஆலோசனைகளை வழங்குவார்கள். அப்போதுதான் அவர்களை இந்த பாதிப்பின் தாக்கத்திலிருந்து மீட்கமுடியும்.

அரசாங்கம் மட்டுமல்ல, நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்லும் தன்னார்வக் குழுக்களும், ஓர் உளவியல் நிபுணரை உடன் அழைத்துச் செல்லலாம். இல்லையென்றால், தாங்களே அந்த மக்களிடம் ஆறுதலாக உரையாடலாம். தூரத்தில் இருப்பவர்கள் தொலைபேசியில் கூடப் பேசலாம். அவர்களிடம் நம்பிக்கை வார்த்தைகளை விதைக்கவேண்டியது இந்த நேரத்தில் மிகவும் அவசியம்.

எதிர்காலத்தில் இதுபோன்ற இயற்கைப் பேரிடர்களில் சிக்கி பாதிக்கப்படுவதைத் தடுக்க, தங்களிடம் இருக்கும் பொருள்கள் அனைத்தையும் இன்சூரன்ஸ் செய்து கொள்ளும் பழக்கத்தை அந்த மக்கள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு அரசாங்கமும் உதவி புரியவேண்டும்`` என்கிறார் பூங்கொடி.

டெல்டா மாவட்ட மக்களின் துயர் துடைக்க தமிழக மக்கள்  அனைவரும் தயாராவோம். முடிந்தால் பொருளுதவியும், முடியாவிட்டால் அன்பான, ஆறுதலான வார்த்தைகளையாவது அவர்களிடம் பகிர்ந்துகொள்வோம். ஆறுதலான வார்த்தைகள்தான் இப்போது அவர்களுக்குத் தேவையான அருமருந்து.