சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஃபெலிஸீடாசியோன் பிரான்ஸ்... ச்சப்போ எம்பாப்பே!

ஃபெலிஸீடாசியோன் பிரான்ஸ்... ச்சப்போ எம்பாப்பே!
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபெலிஸீடாசியோன் பிரான்ஸ்... ச்சப்போ எம்பாப்பே!

மு.பிரதீப் கிருஷ்ணா

பிரான்ஸ், கால்பந்து உலகக் கோப்பையை வென்றுவிட்டது. நெப்போலியன் வீழ்ந்த ரஷ்ய மண்ணில் பிரான்ஸின் இளம் படை, சரித்திரம் படைத்துவிட்டது.

லுஸ்னிகி மைதானத்தில் குரோஷியாவை பிரான்ஸ் பந்தாடிக்கொண்டி ருந்தபோது, கேமராக்கள் ஒரு ரசிகனை ஃபோகஸ் செய்தன. மகிழ்ச்சியில் திளைத்த அந்த பிரான்ஸ் ரசிகனின் கையில் ஒரு செய்தித்தாள். பேப்பரின் வெண்மை பழுப்பாகி, கொஞ்சம் கசங்கி, ஓரங்கள் கிழிந்திருந்த செய்தித்தாள். 1998 உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியின் படத்தோடு 20 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட செய்தித்தாள்.

ஃபெலிஸீடாசியோன் பிரான்ஸ்... ச்சப்போ எம்பாப்பே!

அந்தச் செய்தித்தாள்... அந்த ரசிகனின் 20 ஆண்டு கால நினைவு. அன்று எடுத்து வைத்திருந்த அந்தப் பக்கத்தை எத்தனை முறை பார்த்துப் பார்த்து பெருமூச்சு விட்டிருப்பான்... எத்தனை முறை அந்தக் கசங்கலைச் சரிசெய்து மடித்திருப்பான்... அந்த நினைவுகளை இந்த வெற்றியின் மூலம் அசை போட்டுக்கொண்டிரு ந்தான். அவன் அருகில்... தன்  தந்தையின் தோள்களில் அமர்ந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறான் ஒரு சிறுவன். லுஸ்னிகி அரங்கம், அந்தச் சிறுவனுக்கான செய்தித்தாளை, அவனுக்கான தலையங்கத்தைத் தயார் செய்துகொடுத்தது. பிரான்ஸ் அணி அவனுக்கான வாழ்நாள் நினைவுகளைப் பரிசளித்தது.  இது பிரான்ஸின் இளம் தலைமுறைக்கான நினைவு. ஃபிரான்ஸின் இளம் தலைமுறை கொடுத்த நினைவு!

ஃபெலிஸீடாசியோன் பிரான்ஸ்... ச்சப்போ எம்பாப்பே!

திறமையும் அனுபவமும் சேர்ந்தால் மட்டுமே சாதிக்கக் கூடிய உலகக் கோப்பை அரங்கினுள், இரண்டாவது விஷயம் இல்லாமலேயே நுழைந்தது பிரான்ஸ். ரஷ்யாவுக்குக் கிளம்பிய 23 பிரான்ஸ் வீரர்களின் சராசரி வயது 26 தான். ஐந்தே வீரர்கள்தான் 30 வயதைத் தாண்டியவர்கள். 17 வீரர்களுக்கு இதுவே முதல் உலகக் கோப்பை. இப்படியொரு அணி, அனுபவம் வாய்ந்த அணிகளையெல்லாம் தாண்டி வெற்றி பெறும் என்று யாருமே கணித்திருக்கவில்லை. அதுவும் குரூப் பிரிவு போட்டிகளில் அவர்கள் ஆடியதைப் பார்த்தபோது, நிச்சயம் அவர்கள் கோப்பையை வெல்ல மாட்டார்கள் என்றுதான் தோன்றியது. ஆனால், அந்த இளம் படை அதன்பிறகு காட்டியது யாரும் பார்த்திடாத முகம்!

இந்த வெற்றி, வீரர்களின் வெற்றி; இளம் தலைமுறையின் வெற்றி. ஆனால், அதை சாத்தியப்படுத்தியவர் அந்த அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ். 1998 உலகக் கோப்பையை வீரராக வென்றவர், இப்போது பயிற்சியாளராகவும் வென்று சரித்திரம் படைத்துள்ளார். இந்த பிரான்ஸ் அணியை அவர் வழிநடத்திய விதம் அட்டகாசம்! சொல்லப்போனால் இந்த அணியில் அனுபவம் மட்டுமே பிரச்னையாக இருக்கவில்லை. அவர்கள் இந்த உலகுக்கு நிரூபிக்கவேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருந்தன.

ஃபெலிஸீடாசியோன் பிரான்ஸ்... ச்சப்போ எம்பாப்பே!

இரண்டு ஆண்டுகள் முன்பு சொந்த ஊரில் நடந்த யூரோ கோப்பையை யாரும் எதிர்பாராத போர்ச்சுகலிடம் இழந்தது பிரான்ஸ். அணியின் சீனியர் வீரர்களுக்கிடையே இருந்த சிக்கல்கள் முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டிருந்தன. போக்பா, லோரிஸ் போன்ற ஸ்டார்களின் செயல்பாடுகள் சில சீசன்களாகவே கேள்விக் குறியாக்கப்பட்டன. வீரர்கள் தேர்வில் இருந்து, ஃபைனலுக்கான வியூகம் வகுத்ததுவரை டெஸ்சாம்ப்ஸ் முன் குழப்பங்களும் சிக்கல்களும் கொட்டிக் கிடந்தன. ஆனால், அதையெல்லாம் ஜஸ்ட் லைக் தட் டீல் செய்து, இந்த இளம் படையையும் கர்ஜிக்க வைத்துள்ளார் அவர்.

ஃபெலிஸீடாசியோன் பிரான்ஸ்... ச்சப்போ எம்பாப்பே!

19 வயது ஸ்ட்ரைக்கர் எம்பாப்பே டிஃபன்ஸுக்கு சப்போர்ட் செய்ய, அனைவரும் விமர்சித்த போக்பா இரண்டு பாக்சுகளுக்கும் இடையே ஆட்டம் காட்டியபோதுமே, இந்த அணிக்கு டெஸ்சாம்ப்ஸ் எவ்வளவு அனுபவம் ஊட்டியுள்ளார் என்பது தெளிவாகப் புரிந்தது. ஒவ்வொரு எதிரணிக்கும் ஒரு திட்டம், ஒவ்வொரு வீரருக்கும் ஒரு திட்டம் என தெளிவாக ஸ்கெட்ச் போட்டுக் கோப்பையை வென்றுள்ளது பிரான்ஸ். சொல்லப்போனால், இனி வரும் ஆண்டுகளில் கால்பந்து அரங்கில் அவர்களின் ஆதிக்கத்துக்கான தொடக்கம் இது.

ஃபெலிஸீடாசியோன் (வாழ்த்துகள்)  பிரான்ஸ்...

ச்சப்போ (ஹாட்ஸ் ஆஃப்) எம்பாப்பே!

ஃபெலிஸீடாசியோன் பிரான்ஸ்... ச்சப்போ எம்பாப்பே!

இனி கால்பந்தின் ராஜா இவன்தான்!

மெஸ்ஸி, ரொனால்டோ போன்றவர்களெல்லாம் கிளப் அளவில் சாதித்துவிட்டு, உலக அரங்குக்குள் நுழைந்தவர்கள். நாட்டுக்காக விளையாடும்போது வெற்றி பெற முடியாமல் தடுமாறியவர்கள். எத்தனை காலம் எடுத்தாலும் அவர்கள் கால்பந்தின் ஜாம்பவான்களாகப் பேசப்படுவார்கள். ஆனால், வெறும் ஜாம்பவான்களாக மட்டும்தான்.

இன்னும் எத்தனை காலம் எடுத்தாலும் கால்பந்தின் கடவுள் பீலேதான்! காரணம், அவர் உலகக் கோப்பை அரங்கில் தன் தடத்தைப் பதித்துப் பயணத்தைத் தொடங்கியவர்.

தன் முதல் உலகக் கோப்பையில் பீலே என்னவெல்லாம் செய்தாரோ, என்ன சாதனைகள் படைத்தாரோ, அதையெல்லாம் எம்பாப்பேவும் தன் முதல் உலகக் கோப்பையில் நிகழ்த்தியுள்ளார். சாதனைகள் மட்டுமல்ல... அவரைப் போலவே கோப்பையையும் வென்றுள்ளார்.

பீலேவின் உலகக் கோப்பைப் பயணம் சோவியத் யூனியனுக்கு எதிராகத் தொடங்கியது. இந்த இளம் சிங்கத்தின் பயணம் ரஷ்ய மண்ணில் தொடங்கியுள்ளது. உலக கால்பந்தைக் கலக்கப் போகும் இந்த இளம் சிங்கம் பயணிக்கப் போவது மெஸ்ஸி, ரொனால்டோவின் பயணம் முடியும் இடத்திலிருந்து அல்ல... கால்பந்தின் கடவுள் தொடங்கிய இடத்திலிருந்து...