Published:Updated:

நடுவழியில் நிற்கும் நவீன பஸ்கள்! - அமைச்சருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நடுவழியில் நிற்கும் நவீன பஸ்கள்! - அமைச்சருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்
நடுவழியில் நிற்கும் நவீன பஸ்கள்! - அமைச்சருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்

நடுவழியில் நிற்கும் நவீன பஸ்கள்! - அமைச்சருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்

பிரீமியம் ஸ்டோரி

டுக்கை வசதி, கழிப்பறை வசதி உள்பட பல நவீன வசதிகளுடன் அரசு பஸ்களில் இனி சொகுசாக செல்லலாம் என்றெல்லாம் பில்டப் கொடுத்து சமீபத்தில் விடப்பட்ட தமிழக அரசு பஸ்கள், திடீர் திடீரென பழுதாகி ஆங்காங்கே ஓரங்கட்டப் படுகின்றன.

நவீன வசதிகள் கொண்ட 515 சொகுசு பஸ்களை ஜூலை 3-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். சென்ஸர் தானியங்கி கதவுகள், தானியங்கி படிக்கட்டுகள், தாழ்தளப் படிக்கட்டுகள், பஸ்ஸுக்கு முன்னும் பின்னும் வரும் வாகனங்களைத் துல்லியமாகக் கண்டறிந்துகொள்ள சென்ஸர் கருவி, ஜி.பி.எஸ் கருவி, சி.சி.டி.வி கேமரா போன்ற வசதிகள் இந்த பஸ்களில் இருப்பதாகப் பெருமையுடன் சொன்னார்கள். புதிய பஸ்கள் அனைத்திலும் பென்ஸ் காரின் தொழில்நுட்ப வசதி இருப்பதாகப் பெருமைப்பட்டார், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இந்த பஸ்கள், ஒரே வாரத்தில் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டன.

நடுவழியில் நிற்கும் நவீன பஸ்கள்! - அமைச்சருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்

திருத்துறைப்பூண்டியிலிருந்து சென்னை புறப்பட்ட இந்தப் புதிய பஸ் ஒன்று, திருவாரூர் அருகே பழுதாகி நின்றுவிட்டது. இதுபோல வேறு சில இடங்களிலும் புதிய பஸ்கள் பழுதாகி நின்ற கொடுமை நிகழ்ந்துள்ளது. விபத்தே ஏற்படாதவகையில் தொழில்நுட்பம் உள்ளது என்று சொல்லப்பட்ட பஸ், குன்னூர் அருகே லாரியில் மோதி நின்றது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சி.ஐ.டி.யு) மாநிலப் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், ‘‘கடந்த சில ஆண்டுகளாக தமிழகப் போக்குவரத்துக் கழகங்களுக்குப் புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை. இப்போதுதான், 515 பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றில் பல, ஓடத்தொடங்கிய சில நாள்களிலேயே பழுதடைந்து நிற்பது வேதனையான விஷயம். பஸ் ரெடியாகி இயக்கத்துக்கு விடுவது தாமதமாவது இதற்கு முக்கியக் காரணம். பாடி கட்டி முடிந்தவுடனே அந்த பஸ்ஸை உடனடியாக இயக்கவேண்டும். ஆனால் இங்கு, பஸ்கள் பாடி கட்டப்பட்டு, முதல்வர் துவக்கிவைக்க வேண்டும் என்று சொல்லிக் காலதாமதம் செய்கிறார்கள். அதனால், ரெடியான ஒரு பஸ் மூன்று மாதங்களுக்கு மேல் இயக்கப்படாமல் இருக்கும். இதனால் பேட்டரி வீணாகி, சார்ஜ் இல்லாமல் நின்றுவிடுகிறது. இந்த ஒரு காரணத்தினால் மட்டுமே, 2016-17 நிதியாண்டில் சுமார் 14 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’ என்று சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவழியில் நிற்கும் நவீன பஸ்கள்! - அமைச்சருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்

மேலும், பஸ்களுக்கு பாடி கட்டும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் கொடுத்துவிட்டார்கள். அதனால், தரமற்ற கருவிகளைப் பொருத்தி கமிஷன் அடிக்கிறார்கள். முன்பு, போக்குவரத்துப் பணிமனைகளிலேயே பஸ்களுக்கு பாடிகட்டப்பட்டு, தரமான கருவிகள் பொருத்தப்பட்டன.  இப்போது வந்திருக்கும் புதிய பஸ்களைச் சேர்க்காமல், தமிழகத்தில் 22,533 அரசு பஸ்கள் இயங்குகின்றன. இவற்றில், 14,000 பஸ்கள் (60 சதவிகிதம்) காலாவதியானவை. ஆனாலும் ஓடுகின்றன. இந்த பஸ்கள் 15 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் பணிமனைகளில் ரெடியானவை. அதனால்தான், இத்தனை ஆண்டுகள் அவை தாக்குப்பிடித்து ஓடுகின்றன. தனியார் நிறுவனங்களில் ரெடியாகி வந்த பஸ்களோ, சில தினங்களிலேயே பழுதாகி நிற்பதைப் பார்க்கிறோம்” என்றார் வேதனையுடன்.

தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகம், “புதிய பஸ்கள், விடப்பட்ட சில தினங்களிலேயே ஏன் இப்படி நடுரோட்டில் நிற்கின்றன என்ற ரகசியம் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு மட்டும்தான் தெரியும்” என்றார் பூடகமாக.

நடுவழியில் நிற்கும் நவீன பஸ்கள்! - அமைச்சருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பாஸ்கரிடம் பேசினோம். “புதிய பஸ் ஒன்று பழுதாகி நின்றது உண்மைதான். ஏர் கம்ப்ரஷர் பைப்லைன் பழுதானது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாகப் பழுது நீக்கப்பட்டது. புதிய பஸ்கள் அனைத்திலும் இந்தப் பிரச்னை இருக்கிறதா என்று சோதனை செய்ய உத்தரவிட்டோம். இனி, இதுபோன்ற பிரச்னைகள் நவீன பஸ்களில் ஏற்பட வாய்ப்பில்லை. நமக்கு உடனடியாக பஸ்கள் தேவை என்று சொன்னால், தனியார் நிறுவனங்களில் உடனடியாக பாடி கட்டி ரெடி செய்து கொடுக்கிறார்கள். அரசுப் பணிமனைகளில் இந்த வேகத்தில் செய்யமாட்டார்கள். அதனால்தான், தனியாரிடம் இந்தப் பணி தரப்படுகிறது” என்றார்.

சேலத்திலிருந்து சென்னைக்கு மூன்று மணி நேரத்தில் செல்வதற்காகவே எட்டுவழி பசுமைச் சாலை போடப்போவதாகச் சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, தரமான பஸ்கள் இருந்தால்தான் அதில் மூன்று மணி நேரத்தில் போய்ச்சேர முடியும் என்பது தெரியாதுபோல.

- ஜெ.அன்பரசன்
படங்கள்: தி.விஜய், க.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு