Published:Updated:

மலைத்தேன் முதல் மருத்துவ மூலிகை வரை... களைகட்டும் கொல்லிமலைப் பழங்குடியினர் சந்தை!

மலைத்தேன் முதல் மருத்துவ மூலிகை வரை... களைகட்டும் கொல்லிமலைப் பழங்குடியினர் சந்தை!
மலைத்தேன் முதல் மருத்துவ மூலிகை வரை... களைகட்டும் கொல்லிமலைப் பழங்குடியினர் சந்தை!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் செயல்பட்டு வருகிறது பழங்குடி மக்கள் சந்தை. முழுக்க முழுக்க கொல்லி மலையில் மட்டுமே விளையக்கூடிய காய்கனிகளை விற்பனை செய்யும் அந்தச் சந்தைக்குள் நுழைந்தோம்.

சுறுசுறுப்பாக வியாபாரம் செய்து கொண்டிருந்தார் இளைஞர் ஒருவர். அவரிடம் பேசினோம். ``என்னோட பேரு ரஞ்சித்.
இது தினசரி சந்தைங்க. காத்தாலே 9 மணிக்கு ஆரம்பிச்சு ராத்திரி 7 மணிவரைக்கும் இந்தச் சந்தை செயல்படுது. மொத்தம் 16 கடைங்க இருக்கு. மலைத்தேன், கொம்புத்தேன், மா, பலா, கொய்யா, செவ்வாழை, மலைவாழை, அன்னாசி, எலுமிச்சை, மலை ஆரஞ்சு, நெல்லி, இஞ்சி, காட்டுக்கத்தரி, புளி, மிளகாய், வல்லாரை, புதினா, மூலிகைகள்னு மலையில விளையுற பொருள்களை மட்டும்தான் இந்தச் சந்தையில விற்பனை செய்றோம். மலை விவசாயம் முழுக்க மழைய நம்பித்தான் நடக்கு. கிணத்துப்பாசனம் கேணிப்பாசனமெல்லாம் கிடையாது. ரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்து, வீரியரக விதைகளையெல்லாம் நாங்க கண்ணுல கூட பார்த்தது இல்ல.
காலம் காலமாக மலையில நடக்கிற பாரம்பர்ய விவசாயத்தை அப்படியே செஞ்சிட்டிருக்கோம். நவீனப் பண்ணை இயந்திரங்கள், கருவிகளின் பயன்பாடும் அறவே இல்லை. கொல்லிமலையில ஏகப்பட்ட கோயில் இருக்கு; அங்க சாமி கும்பிட நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து போறாங்க. அதேபோல அருவிகள், படகுத்துறை, காட்சிமுனை, பூங்கானு இயற்கை எழில் கொஞ்சும் இடங்களைச் சுத்திப் பார்க்கவும் வெளியூர் மக்கள் கூட்டம் கூட்டமா வந்து போறங்க. அப்படி வர்றவங்க மூலமாத்தான் எங்க பழங்குடி மக்கள் சந்தையில யாவாரம் செழிப்பா நடக்கு. பழங்குடி மக்கள் வாழ்வாதாரமும் சிறப்பா இருக்கு" என்றார்.

தொடர்ந்து பேசிய பெண் விவசாயி வெள்ளையம்மாள் ``சுத்தமான கொல்லிமலைத்தேன், சுவையான கொல்லிமலைப்பலா, தித்திக்கும் கொல்லிமலை செவ்வாழை... இந்த மூணு பொருள்களின் ருசி சொல்லி மாளாது. சுற்றுலா வர்றவங்க மொதல்ல விரும்பிக் கேட்டு வாங்கறது இந்தப் பொருள்களைத்தான். அப்புறம்தான் மத்தது." என்கிறார்.

மூலிகைக்குப் பேர் போன கொல்லிமலை சந்தையில் மூலிகை இல்லேனா எப்படிங்க? பெரியவர் பழனியப்பன் கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டிருந்தது மருத்துவக்குணம் கொண்ட வல்லாரை. அவரிடம் பேசினோம். "கொல்லிமலையில ஏராளமான மூலிகைச்செடிகள் இயற்கையா விளைஞ்சு கிடக்கு. பெயர் தெரியாத அநேக அரியவகை மூலிகைகளும் அதுல அடக்கம். இந்தக் கொல்லிமலைக்காட்டுல நிறைய மலைக்குகைகள் இருக்கு. அடர் வனக்களுக்கு இருக்கும். அந்தக் குகைகளில் சித்தர்கள் பலர் தவவாழ்க்கை வாழ்வதா நம்பப்படுது.

சித்தர்கள் மட்டுமல்ல, சித்தவைத்தியர்களின் நடமாட்டமும் இங்கு அதிகம். அதுக்குக் காரணம் மிகவும் சக்தி வாய்ந்த மூலிகைகள் பல இங்கு இருப்பதுதான். உதாரணமாக, ஜோதிப்புல் என்கிற ஒருவகைப்புல் இங்கு இருக்கு. மெழுவத்தி போல் ஒளிர்ந்து வெளிச்சம் கொடுக்கக்கூடிய புல் அது. அந்தப் புல் ஒன்றைப் பிடுங்கி அதன் நுனியில் நெருப்பைப் பத்த வைத்தால், விடியும் வரை அது வெளிச்சம் தந்து கொண்டே இருக்கும். அதேபோல, ஆளை மறைக்கச்செய்யும் ஆதள மூலிகைச் செடியும் இங்கு இருப்பதாகப் பலரும் சொல்றாங்க.
அதுபோல உருவத்தை மறைத்து நடமாடும் சித்தர்கள் சிலர் இங்கு வசிப்பதாகவும் ஒரு பேச்சு இருக்கு.

ஏதோ ஒரு சிறப்பு கொல்லிமலையில இருப்பதால்தான் வருஷமெல்லாம் கூட்டம் வந்து போகுது. அதனால எங்க பொழப்பும் நல்லா நடக்குது" என்றார். 

மீண்டும் நம்மிடம் பேசிய இளைஞர் ரஞ்சித், ``சார், நீங்க புறப்படுவதுக்கு முன்னால இன்னொரு காரமான ஆச்சர்யத்தைக் காட்றேன் வாங்க"  என்று அவரது கடைக்கு அழைத்துச் சென்றவர், அங்கு குவியலாகக் கொட்டப்படிருந்த சின்னஞ்சிறு மிளகாய் குவியலிலிருந்து மிளகாய் ஒன்றை எடுத்து அதன் நுனியை மட்டும் கடிக்கச் சொன்னார். அவர் சொன்னது போலவே மிள காய் நுனியைக் கடித்தோம். காரம் காவு வாங்கியது. ``இதுதாங்க கொல்லிமலை சீனிமிளகாய். இவ்வளவு சின்ன சைஸ் மிளகாயை வேறெங்கும் நீங்க பாத்திருக்க முடியாது. மானாவாரியில இங்கு மட்டும்தான் இது விளையுது." என அதை அறிமுகம் செய்தார் ரஞ்சித்.

மேலும், நபார்டு வங்கியின் உதவியுடன் கொல்லிமலை வேளாண் பல்லுயிர் வள உற்பத்தியாளர் கம்பெனியின் சார்பில் கொல்லிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஒன்று 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ``முதல் கட்டமாக 500 மலை விவசாயிகள் உறுப்பினராக இணைந்துள்ளார்கள். இதன் மூலம் கொல்லிமலையில் விளையும் அனைத்து விளைபொருள்களும் சந்தைப்படுத்தப்பட்டு, அதில் கிடைக்கும் லாபம் விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். பால் உற்பத்தியை மேம்படுத்தும் விதமாக கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் வங்கிக் கடன் வசதி ஏற்படுத்திக்கொடுத்தல், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக சிறுதானிய உணவகம் நடத்தவும் ஆரம்பகட்ட பணிகள் நடைபெறுகிறது." என்கிறார் கொல்லிமலை வேளாண் பல்லுயிரினப் பாதுகாப்போர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார்.