Published:Updated:

`குழந்தையைச் சுயமாகச் சிந்திக்க அனுமதிங்க ப்ளீஸ்!' #UniversalChildrensDay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`குழந்தையைச் சுயமாகச் சிந்திக்க அனுமதிங்க ப்ளீஸ்!' #UniversalChildrensDay
`குழந்தையைச் சுயமாகச் சிந்திக்க அனுமதிங்க ப்ளீஸ்!' #UniversalChildrensDay

`குழந்தையைச் சுயமாகச் சிந்திக்க அனுமதிங்க ப்ளீஸ்!' #UniversalChildrensDay

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குழந்தைகள் இலக்கின்றிப் பறந்து, திரியும் பட்டாம்பூச்சிகள். ஆனாலும், அவர்களுக்குச் சுதந்திரமும் உரிமைகளும் உள்ளன. பெற்றோராகவே இருந்தாலும் கண்டிக்கவும் வழிநடத்தவும் மட்டுமே உரிமை உள்ளதேயன்றி, அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் தலையிட எந்த வகையிலும் அனுமதி இல்லை. இன்று சர்வதேச குழந்தைகள் தினம். ஐக்கிய நாடுகள் சார்பாக 20 நவம்பர் 1959 அன்று குழந்தைகளுக்கான உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1992-ல் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் கீழ் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் 2007ம் ஆண்டு மார்ச் முதல் செயல்பட்டு வருகிறது. இதற்கான சட்டங்கள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் ப.முருகேசன் விளக்குகிறார்.

``குழந்தைகள் உரிமை என்பது 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான அடிப்படை சட்டங்கள், உரிமைகள் மற்றும் தேவைகள் சார்ந்தது. அவை வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பு உரிமை, பங்கேற்பதற்கான உரிமை என்று நான்கு பிரிவுகளின்கீழ் வரும். நமது நாட்டின் சட்டப்படி 18 வயது வரையுள்ள அனைவரும் குழந்தைகளே. குழந்தைகளுக்கான உரிமை மீறலில் பாலியல் குற்றங்களே அதிகம். அதன் விளைவாக 2012-ல் கொண்டு வரப்பட்டதே போக்ஸோ (POCSO) சட்டம். இதன்மூலம் குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினால் மரணதண்டனை வரை வழங்கலாம். இப்போது, `ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம்' என்ற மத்திய அரசு திட்டத்தின் மூலம், குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரி என்று மாவட்ட வாரியாக அமைத்து வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தருதல், ஊக்குவித்தல், இழப்பீடு வழங்குதல் என்று செயல்பட்டு வருகின்றனர்.

பாலியல் குற்றங்களுக்கு அடுத்து, பெரிய பிரச்னையாக இருப்பது குழந்தைத் தொழிலாளர் முறையே. நம் நாட்டில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் 1986-ல் கொண்டுவரப்பட்டது. அதன்படி, 14 வயதுக்குக் கீழ் எந்தத் தொழிலாளரும் இருக்கக் கூடாது என்பதே அரசின் நோக்கம். திருப்பூர் மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவர் மன்றத்தில், ஒரு வாரத்துக்கு 15 முதல் 20 வழக்குகள் மில்கள், பனியன் கம்பெனிகள், விசைத்தறி குடோன்கள் போன்றவற்றில் குழந்தைத் தொழிலாளர் அமர்த்தப்படுவதால் தொழிலாளர் நல அலுவலரால் பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது.

முன்பை விட இந்தச் சட்டங்கள் குறித்த விழிப்புஉணர்வு மக்களிடம் அதிகம் உள்ளது. இருப்பினும், தன் குடும்பச் சூழ்நிலைக்காகப் பகுதிநேர வேலை பார்க்கும் சிறுவர்கள் இன்றும் உள்ளனர். ஆனால் அது, அவர்களின் உரிமைகளைப் பறிப்பதாகவே அரசு பார்க்கிறது. கருவில் இருக்கும் குழந்தைக்கு முதற்கொண்டு உரிமைகள் உள்ளன. நீதிமன்ற அனுமதி இல்லாமல் கருக்கலைப்பு செய்வதுகூட தண்டனைக்குரிய குற்றமே!

சிறுவர்கள் தண்டனைக்குரிய தவறுகள் செய்தாலும், அவர்களை நல்வழிப்படுத்த சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்து வைப்பர். அங்கு அவர்களுக்குக் கைவிலங்கு அணிவிக்கக் கூடாது. அவர்களுக்கென உள்ள சிறார் நீதிமன்றத்தில்தான் விசாரிக்க வேண்டும் என்றும் உரிமை உள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளைக் கூட ரகசிய விசாரணையாக நடத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. பாலியல் தாக்குதலுக்கு உள்ளான குழந்தையின் மனதை நோகடிக்காத முறையில் விசாரணை நடக்கும். அப்படியான வழக்குகளுக்கு மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும்.

இப்போதுகூட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புச் சட்டப்படி மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலகு என்று மாவட்ட வாரியாக அமைத்துள்ளனர். அதன்மூலம் குழந்தைகள் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்னை என்றாலும் தெரியப்படுத்தலாம்.
அவர்களே வழக்குப் பதிந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தருவர். இது பெரும்பாலான மக்களுக்குத் தெரிவதில்லை. அதுமட்டுமன்றி குழந்தைகள் நல உதவி எண் 1098 மூலமும்கூட தெரிவிக்கலாம். 

அரசு, இந்தச் சட்டங்கள் பற்றிய விழிப்புஉணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். முன்பை விட குழந்தைகளின் மீது அதிகரிக்கும் பாலியல் குற்றங்களைத் தடுக்க தண்டனைகள் மிகக் கடுமையானதாக மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். இப்படியான சூழலில் வளரும் குழந்தைகளே சுயமாகச் சிந்திக்கப் பழகுவர். அந்தச் சிந்தனைதான் வாழ்நாள் முழுக்க அவர்களை வழிநடத்தும். எனவே, குழந்தைகளைச் சுயமாகச் சிந்திக்கப் பழக்குங்கள்" என்றார் ப.முருகேசன். 

குழந்தைகள் அனைவருக்கும் கல்வி உரிமை கிடைத்தாலே ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும், உடல் பற்றியும் உரிமை பற்றியும் கற்றுக் கொள்வர். பெற்றோரும் ஆசிரியர்களும் சரியான முறையில் அதைத் தெளிவுபடுத்த வேண்டும். யுனெஸ்கோ இந்தத் தினத்தை #goblue என்ற ஹேஷ்டேக் மூலம் கொண்டாடி வருகிறது. அதன்மூலம், ஒவ்வொரு குழந்தையின் உரிமைகளை நிறைவேற்றுவது குறித்த உலகளாவிய மனுவில் கையெழுத்திட உலகத் தலைவர்களை அழைத்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு