Published:Updated:

திருமணம் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட நேரமில்லை! - மாலா மணியன்

திருமணம் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட நேரமில்லை! - மாலா மணியன்
பிரீமியம் ஸ்டோரி
News
திருமணம் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட நேரமில்லை! - மாலா மணியன்

எனக்குள் நான்எழுத்து வடிவம்: ஆர்.வைதேகி படங்கள் : ப.பிரியங்கா

`ஊடகத்துறை, பெண்களுக்கு உகந்ததல்ல’ எனச் சொல்லப்பட்ட காலத்தில் அறிமுகமாகி, வெற்றிகரமாக 32 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார் மாலா மணியன். தூர்தர்ஷனின் மெட்ரோ சேனல் நேயர்களுக்குப் பரிச்சய முகம். எந்தப் பின்னணியும் இல்லாமல் இந்தத் துறையில் நுழைந்த மாலா, இன்று எட்டியிருப்பது எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் என்கிற இடத்தை!

பெரிய நட்சத்திரங்களின் படங்களே தோல்வியைத் தழுவுகின்றன, கந்துவட்டிக் கொடுமையால் தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள், வெற்றிப் படங்களைத் தந்த எத்தனையோ தயாரிப்பாளர்கள் இன்று இருக்குமிடம் தெரியவில்லை, எதிர்கால சினிமாத் துறை எப்படியிருக்குமோ? இந்தக் கலக்கத்துக்கும் குழப்பத்துக்கும் தீர்வு வைத்திருப்பதாகச் சொல்கிறார் மாலா மணியன்.

திறமைகளை ஊக்கப்படுத் தும் முயற்சியாக, காணாமல் போன தயாரிப்பாளர்களை மீட்டெடுக்கும் விதத்தில் `க்ரெளடு ஃபண்டிங்’ முறையைக் கையில் எடுத் திருக்கிறார் மாலா. அந்த முயற்சியைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன், மாலா மணியனின் வாழ்க்கைப் பயணத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

திருமணம் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட நேரமில்லை! - மாலா மணியன்

நான் யார்?

``சென்னைப் பெண். ராணி மேரி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முடித்தேன். கல்லூரியில்  நான் பொதுச் செயலாளர். நித்யா தலைவி. நித்யா, மணிரத்னம் சாரின் மெட்ராஸ் டாக்கீஸில் பல வருடங்களாக வேலைபார்க்கிறார். கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாளன்று என் அம்மா தவறிவிட்டார். அக்காவுக்கும் அண்ணனுக்கும் திருமணமாகியிருந்தது. அப்பாவையும் இன்னொரு சகோதரனையும் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது. அக்கா மஸ்கட்டில் இருந்தார். அம்மா தவறி ஒரு வருடம் முடிந்த நிலையில், ஒரு மாறுதலுக்கு மஸ்கட் போனேன். `ஃபேர் டிரேட்' என்றொரு சூப்பர் மார்க்கெட்டின் கார்ப்பரேட் அலுவலகத்தில் வேலைசெய்தேன். அரைநாள்தான் வேலை என்பதால், மீதி நேரத்தில் கோனிகா லேபில் வேலைக்குச் சேர்ந்தேன். க்யூ.எஸ்.எஸ் (குயிக் சர்வீசஸ் அண்டு சொல்யூஷன்ஸ்) லேப் என்கிற பெயரில் ஒரு மணி நேர போட்டோ பிரபலமாக ஆரம்பித்த நேரம் அது.

ஒரு வருடத்துக்குப் பிறகு மீண்டும் சென்னை வந்தேன். அப்போதுதான் சென்னைக்கு க்யூ.எஸ்.எஸ் லேப் அறிமுகமாகியிருந்தது. நித்யா, தன் நண்பர் நாராயணனின் செவன்த் சேனல் நிறுவனத்தின் க்யூ.எஸ்.எஸ் லேபில் எனக்கு வேலை வாங்கித் தந்தார். ரஜினி சார், கமல் சார் எனப் பிரபலங்களின் குடும்ப விசேஷங்களுக்கு வீடியோ எடுக்கும் அளவுக்கு அப்போது செவன்த் சேனல் நிறுவனம் பிரபலம். வேலையில் சேர்ந்த சில மாதங்களிலேயே போட்டோகிராபி பயிற்சிக்காக ஜப்பான் போனேன். அம்மா இல்லாத காரணத்தால் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லும் வற்புறுத்தல்கள் இல்லை. எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் பார்க்காமல், ஆர்வமுள்ள எல்லா வேலைகளையும் செய்து பழகினேன். அந்த ஈடுபாடுதான் சாதாரண அலுவலகப் பொறுப்பில் சேர்ந்த என்னை சி.இ.ஓ அளவுக்கு உயர்த்தியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
திருமணம் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட நேரமில்லை! - மாலா மணியன்

திரைக்கு முன்னும் திரைக்குப் பின்னும்

1985-ல் சென்னை தூர்தர்ஷனில் வண்ண ஒளிபரப்பு ஆரம்பமானபோது, செவன்த் சேனல் தயாரிப்பில் வந்த பல தொடர்களிலும் நிகழ்ச்சிகளிலும் என் உழைப்பு இருந்திருக்கிறது. மெட்ரோ சேனல் வந்ததும் அதில் நான் செய்த பிரபலங்களின் பேட்டிகள் மிகப்பெரிய ஹிட். பாரதிராஜா, ஸ்ரீதர், பி.சி.ஸ்ரீராம், ராஜீவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான், ராதிகா, சுஹாசினி, எஸ்.ஜானகி, சித்ரா என அன்றும் இன்றும் பிரபலமாக இருக்கும் பலரையும் நான் பேட்டி கண்டிருக்கிறேன்.

தேசிய விருதுகள் வழங்கும்போது, விருது வாங்குபவர்களை டெல்லிக்கே சென்று பேட்டி எடுத்திருக்கிறேன். ஷியாம் பெனகல், மோகன்லால், மம்மூட்டி, கமல் என அந்தப் பட்டியலில் பலர் உண்டு.

அப்போதுதான் முதல் டெஸ்ட்டி மோனியல் வகை விளம்பரமாக ஹார்லிக்ஸ் விளம்பரம் வந்தது. மாலா மணியனாகவே நான் அதில் முகம்காட்டியிருந்ததும் ஹிட் ஆனது. விகடன் உள்ளிட்ட பிரபல பத்திரிகைகளில் வந்த சிறுகதைகளை `பெண் மனம்’ என்ற பெயரில் பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற பெரிய இயக்குநர்களை இயக்கவைத்து ஒரு பிராண்டிங்குடன் சீரியலாகக் கொடுத்தோம்.

செவன்த் சேனல், படங்கள் எடுக்க ஆரம்பித்தது. முதல் நான்கு படங்களில் என்னுடைய ஈடுபாடு குறைவுதான். ஐந்தாவது படமான `வேட்டையாடு விளையாடு’ படத்தில்தான் அந்த அனுபவமும் எனக்கு முழுமையாகக் கிடைத்தது.

2010-ம் ஆண்டு, செவன்த் சேனலில் எனக்கு 25 வருடங்கள் நிறைவடைந்திருந்த நிலையில், ஓர் இடைவெளி தேவைப்பட்டது. அங்கிருந்து வெளியே வந்தேன். ராஜ் டி.வி-யில் முக்கியப் பொறுப்பில் மீண்டும் என் மீடியா வாழ்க்கை தொடர்ந்தது. நிறைய நிறைய புதிய நிகழ்ச்சிகளை ராஜ் டி.வி சார்பில் தயாரிக்க ஆரம்பித்தேன். மூன்று வருடங்கள் முடிந்த நிலையில் `கோல்டு காசினோ’ என்கிற கடைசி நிகழ்ச்சியுடன் அங்கிருந்தும் வெளியே வந்தேன். அந்த நிகழ்ச்சியில் கெஸ்ட்டாக வந்தவர் என் நீண்டநாள் தோழி சுஹாசினி மணிரத்னம்.

`ஃபர்ஸ்ட் காபி புரொடக்‌ஷன்ஸ்’ என்று சொந்த கம்பெனி ஆரம்பித்தேன். தந்தி டி.வி-யில் `உங்களில் ஒருத்தி’ என்ற பெயரில் தடைகளைத் தாண்டி ஜெயித்தவர்களைப் பற்றிய நிகழ்ச்சி தயாரித்தேன். மணிரத்னம் சாரைப் பார்ப்பதற்காகத் திடீரென ஒருநாள் சுஹாசினியிடமிருந்து அழைப்பு. `என் அடுத்த படத்துக்கு நீங்கதான் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர்’ என்றார் மணி சார். பதவிகள் என்றுமே எனக்குப் பெரிதல்ல. நான் செய்கிற வேலைதான் முக்கியம். 2015 முதல் 2017 வரை மணிரத்னம் சாருடன் வேலைபார்த்தேன். `ஓகே கண்மணி’ படத்தின் தொடக்கம் முதல் ரிலீஸ் வரையிலும், பிறகு `காற்று வெளியிடை’யின் ப்ரீ-புரொடக்‌ஷன் வரையிலும் அவருடன் இருந்தேன்.

அடுத்து நண்பர் ஆர்.டி.ராஜா கேட்டுக் கொண்டதால் `வேலைக்காரன்’ பட ஷூட்டிங்கின் தயாரிப்பு வேலைகளைக் கொஞ்சம் கவனித்தேன். அதே கம்பெனியின் `சீமராஜா’ படத்திலும் ஆரம்பகட்ட வேலைகளைப் பார்த்துவிட்டு, இப்போது மீண்டும் என் சொந்த நிறுவன வேலைகளுக்குத் திரும்பியிருக்கிறேன். கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தால் இத்தனை வருடங்களில் நான் எப்படி வளர்ந்திருப்பேன் எனச் சொல்லத் தெரியவில்லை.

தனிமனிதருக்கு வேலை பார்த்தே பழகியிருக்கிறேன். அவர்கள் முதலீடு செய்வதைப் பார்த்திருக்கிறேன். அந்த முதலீடு வளரும்போது மகிழ்ச்சியாக இருக்கும். சரியும்போது அது என்னையும் சேர்த்தே பாதிக்கும். அதில் எனக்கும் பங்குண்டு என்றே நினைக்கத் தோன்றும். முதலாளி யார் என்கிற பிம்பமே தெரியாத இடத்தில் என்னால் வேலை செய்ய முடியாது. கார்ப்பரேட் கலாசாரத்துக்குப் பொருந்தாத கேரக்டர் என்னுடையது.

மீடியாவில் பெண்களின் இன்றைய நிலை?

விஸ்காம் படிக்கும் மாணவிகளுக்குக்கூட மீடியாவைப் பற்றி எதுவும் தெரிவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. `24 கிராஃப்ட் என்னென்ன' என்கிற அடிப்படையைக்கூட அறியாமல் இருக்கிறார்கள் அவர்கள். விஸ்காம் படித்தால், டைரக்டராகிவிடலாம் என்றும் நடிகையாகிவிடலாம் என்றும் நினைக்கிறார்கள். மீடியாவில் இருக்க விருப்பமில்லாதவர்கள் எதற்காக விஸ்காம் படிக்கிறார்கள் எனப் புரியவில்லை.

புரட்சி, பெண்ணியம் எல்லாம் பேசுகிறோம். பெண்கள் என்றால் வெறும் அழகுதானா என்கிறோம். ஆனால், காஸ்ட்யூம் டிசைனராக வரும் பெண்கள்தானே அதிகம்? எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் காஸ்ட்யூம் டிசைனராகச் சொல்லி வற்புறுத்தவில்லையே... பெண்களுக்கு இயல்பிலேயே ஓர் அழகுணர்வு இருப்பதால் அதை வேலையில் காட்டுவதில் தவறில்லை. அதை புரொடக்‌ஷனில்கூடக் காட்டலாமே! எடிட்டிங், புரொடக்‌ஷன் என எந்தப் பிரிவிலும் எண்ணிவிடக்கூடிய அளவில்தான் பெண்கள் இருக்கிறார்கள். நான் மீடியாவுக்கு வந்தபோது இருந்த நிலைதான் இன்றும் தொடர்கிறது.

திருமணத்தைத் தவிர்த்தது ஏன்?

திருமணம் செய்துகொண்டதால் மட்டுமே அந்த நபர் காலத்துக்கும் நம்முடன் சேர்ந்து வரப்போகிறார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதனால், அப்படியொரு நபரை நான் என் வாழ்க்கையில் மிஸ்பண்ணியதாக நினைக்கவில்லை. அண்ணன், அக்கா, தம்பி, அவர்களின் குழந்தைகள் என என்னைச் சுற்றி அன்பைப் பொழியும் நெருக்கமான குடும்பம் இருக்கிறது. அதனால், எனக்கென யாருமில்லையோ என்கிற எண்ணம் எட்டிப்பார்த்ததில்லை. திருமணம் தவிர்த்ததைப் பற்றி நினைத்துப்பார்க்கக்கூட நேரமில்லாத அளவுக்கு பிஸியாகவே இருக்கிறேன்.

திருமணமாகாதவள் என்பது சாதக மாக இருந்ததைப்போல, பாதகமாகவும் இருந்திருக்கிறது. உடன் பணிபுரிந்தவர்களுடன் இணைத்துப் பேசியதெல்லாம் நடந்திருக்கிறது. நான் கவலைப்பட்டதில்லை.

திருமணம் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட நேரமில்லை! - மாலா மணியன்

அடுத்து என்ன?

பெரிய படங்கள்தாம் சிறந்தவை என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. இரண்டு கோடி ரூபாய் பட்ஜெட் படங்கள்தாம் இப்போதைக்கு என் திட்டம். ஒரு கோடியில் படம்; இன்னொரு கோடியில் பப்ளிசிட்டி. படங்களை எடுத்துவிட்டு ரிலீஸ் செய்ய முடியாமல் காத்திருப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது? அதனால் எப்படி ரிலீஸ் செய்யப் போகிறோம் என ரிவர்ஸில் யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.  யாரிடம் பேசினாலும் `பெரிய படங்கள் எடுக்கிறோம், எக்ஸிக்யூட் செய்துகொடுங்கள்’ எனக் கேட்கிறார்களே தவிர, சின்னப் படம் எடுக்கச் சொல்லி யாரும் கேட்பதில்லை. அவர்களிடம் `நான் படம் எடுத்துத் தருகிறேன். நீங்கள் செலவே செய்ய வேண்டாம். ரிலீஸ் மட்டும் செய்துகொடுங்கள்’ என்றால் சம்மதிக்கிறார்கள்.

அதனால், `நல்ல கதை... டெக்னிக்கலாகவும் தரமாகவும் இருக்க வேண்டும். சின்ன பட்ஜெட்' எனத் திட்டமிட்டேன்.

20 பேர் ஆளுக்கு 10 லட்சம் ரூபாய் முதலீடு போட்டுப் படம் எடுப்பது என யோசித்தேன். நஷ்டமானாலும் பெரிய அளவில் பாதிக்காது. தயாரிப்பாளர் கவுன்சிலில் கிட்டத்தட்ட ஆயிரம் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே ஆக்டிவாக இருக்கிறார்கள். மீதி ஆட்கள் எங்கே போனார்கள்? பலரும் படம் எடுக்க முடியாத சூழலில் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்வது பெரிய விஷயமாக இருக்காது. இந்த முயற்சி வெற்றிபெற்றால், இதையே ஒரு ஃபேக்டரியாகக் கொண்டுவரும் திட்டமும் இருக்கிறது.

இருபது கோடி ரூபாயில் ஒரு படம் எடுத்து அது தோல்வியடைவதற்குப் பதில், அதே முதலீட்டில் நான் பத்து நல்ல படங்களை எடுத்துத் தரத் தயாராக இருக்கிறேன். பத்தில் இரண்டு படங்கள் வெற்றியடைந்தால்கூட, போட்ட பணம் திரும்ப வந்துவிடும். என்னுடைய இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சில கதைகளைத் தேர்வுசெய்து ப்ரீ-புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. படம் எடுப்பதை, மன அழுத்தம் தரும் வேலையாகப் பார்க்க வேண்டாம். மகிழ்ச்சியாகச் செய்யலாம் என்பது மணி சார் கற்றுக்கொடுத்த பாடம். என்னுடைய இந்த முயற்சியில் அது உண்மையாகும்.’’