Published:Updated:

வெனிசுலாவின் ஃபாதர்லேண்ட் கார்டு... அங்கேயும் வலுக்கும் `ஆன்ட்டி இந்தியன்' சர்ச்சை!

வெனிசுலாவின் ஃபாதர்லேண்ட் கார்டு... அங்கேயும் வலுக்கும் `ஆன்ட்டி இந்தியன்' சர்ச்சை!

குடிமகன்களின் நடவடிக்கைகளை ட்ராக் செய்யும் இந்த `ஃபாதர்லேண்ட் கார்டு' போன்ற வசதிகள் மோசமான ஓர் அரசிடம் சிக்கினால் ஒடுக்குமுறையைச் செலுத்தும் கருவி ஆகிவிடும்.

வெனிசுலாவின் ஃபாதர்லேண்ட் கார்டு... அங்கேயும் வலுக்கும் `ஆன்ட்டி இந்தியன்' சர்ச்சை!

குடிமகன்களின் நடவடிக்கைகளை ட்ராக் செய்யும் இந்த `ஃபாதர்லேண்ட் கார்டு' போன்ற வசதிகள் மோசமான ஓர் அரசிடம் சிக்கினால் ஒடுக்குமுறையைச் செலுத்தும் கருவி ஆகிவிடும்.

Published:Updated:
வெனிசுலாவின் ஃபாதர்லேண்ட் கார்டு... அங்கேயும் வலுக்கும் `ஆன்ட்டி இந்தியன்' சர்ச்சை!

க்களின் நடவடிக்கைகளை ட்ராக் செய்யும் `ஃபாதர்லேண்ட் கார்டு' என்ற ஸ்மார்ட் ஐடி கார்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது வெனிசுலா அரசு. பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது இந்தத் திட்டம். எதனால்?

காரணமும், தொடக்க முயற்சிகளும்!

2008-ம் ஆண்டு பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது வெனிசுலா. அப்போது சாதாரண ஆவணங்கள் கூட இல்லாத குடிமக்கள் பலரும் அங்கு இருந்தனர். அவர்களிடம் சலுகை உணவு மற்றும் பொருள்கள் சென்று சேர வேண்டும் என்று விரும்பினார் அன்றைய ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ். அவரின் உத்தரவின் பெயரில் நீதித்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சீனா சென்றனர். அங்கு இருக்கும் தேசிய ஐடி கார்டு முறை எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்த்துவர இந்தக் குழு அனுப்பப்பட்டது. ஆனால் சீனா சென்ற பிரமுகர்கள், ஒரு கார்டு மூலம் ஒரு நபரை அடையாளப்படுத்துவதை தாண்டிப் பல விஷயங்களைச் செய்யமுடியும் என்று அறிந்துகொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அங்கு சீன டெலிகாம் நிறுவனமான ZTE தலைமையகத்தில் சீனா எப்படி ஸ்மார்ட்கார்டுகளை பயன்படுத்தி பீஜிங் நகர மக்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை ட்ராக் செய்ய முயற்சி செய்துவருகிறது என்பதை அறிந்தது வெனிசுலா அரசு. பெரும் டேட்டாபேஸ்கள் கொண்டு, இந்த கார்டுகள் மூலம் கிடைக்கவிருந்த தகவல்கள் அனைத்தும் சேமிக்கப்படவிருந்தன. வெனிசுலா அரசுக்கு அந்தத் திட்டம் பிடித்திருந்தாலும் அதைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

`ஃபாதர்லேண்ட் கார்டு'

சரியாக 10 வருடங்களுக்குப் பிறகு இப்போது தனது `ஃபாதர்லாண்ட் கார்டு' என்னும் ஸ்மார்ட்கார்டை மக்களுக்காகத் தொடங்கியுள்ளது வெனிசுலா அரசு. இந்த ஐடி கார்டு மூலம் தகவல்கள் சேமிக்கப்பட்டு அதை வைத்துத்தான் அத்தியாவசிய தேவைகளையே பூர்த்திசெய்கிறது தற்போதைய ஜனாதிபதியான நிக்கோலஸ் மடுரோவின் அரசு. ஹியூகோ சாவேஸ் மறைவுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கார்டு சில மக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ, குறைந்த அளவில் இருக்கும் வளங்களைத் தனது ஆதரவாளர்களுக்கு மட்டும் கொண்டுசேரும் வகையில் மக்களைப் பிரிப்பதற்கே இம்முயற்சியைக் கையில் எடுத்துள்ளார் என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஏற்கெனவே அந்நாட்டின் நடவடிக்கைகள் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்ந்து வருவதாக பிரான்ஸ், கனடா உட்பட பல நாடுகளும் விமர்சித்துள்ளன. அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது.

இப்போதும் வெனிசுலா பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. உணவுப் பொருள்கள் தொடங்கி மருந்துகள் வரை அனைத்திலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்கள் பலரும் இடம்பெயரவும் தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு மக்களுக்கு உணவுப் பொருள்கள் அனுப்புவதில் இருந்த சிக்கல்களை களையெடுத்து 90% மக்களுக்கு இவை சென்று சேர `ஃபாதர்லேண்ட் கார்டு' போன்ற நடைமுறைதான் உதவி செய்தது என்கிறது அந்த அரசு. முதலில் சொந்த நிறுவனங்களை வைத்து 2016-லேயே ஃபாதர்லேண்ட் கார்டு அறிமுகம் செய்துவிட்டாலும் பல சிக்கல்களைச் சந்தித்து மீண்டும் ZTE நிறுவனத்திடமே வேலையைக் கொடுத்து முடித்துள்ளது வெனிசுலா அரசு.

சீனாவின் தாக்கம்

மேலும் இதைக் கட்டமைத்து தந்த ZTE தனியார் நிறுவனம் என்றாலும் அதன் பெருவாரியான பங்குகள் சீன அரசிடமே உள்ளன. இப்படியான நாடுகளில் தங்களது ஆட்சிமுறைகளை இதைப் போன்ற நாடுகளில் திணிக்கிறது சீனா என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஏற்கெனவே இந்நிறுவனம் மூலம் அமெரிக்கா மக்களின் தகவல்களை சீனா அரசு கண்காணித்து வரலாம் என்ற சர்ச்சைகளும் எழுந்தது. மேலும் அங்கு நடந்த பல விதிமீறல்களுக்காகக் கோடிக்கணக்கில் அபராதமும் காட்டியது இந்நிறுவனம். ஆனால் ZTE, ``இது வணிக நோக்கு மட்டுமே அரசியல் எதுவும் இல்லை" என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் தற்போது `Social Credit System' என்ற நடைமுறையைச் செயல்படுத்திவருகிறது அந்நாட்டு அரசு. இதன்மூலம் ஒவ்வொரு குடிமகனுக்கும் முதலில் ஸ்கோர் ஒன்றைத் தருகிறது சீனா. ஒருவர் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் அது குறைந்துகொண்டே இருக்கும். பொது இடத்தில் புகைபிடிப்பது தொடங்கி  நல்ல ஸ்கோர் உடையவருக்கு அரசு சலுகைகள் போன்றவை எளிதில் கிடைக்கும். டேட்டிங் தளங்களில் கூட நல்ல ஸ்கோர் உடைய நபர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. குறைந்த ஸ்கோர் கொண்டவர்களுக்குக் கல்வி முதல் போக்குவரத்து வரை பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இப்போது சில நகரங்களில் மட்டும் நடைமுறையில் இருக்கும் இது 2020-ம் ஆண்டுக்குள் மொத்த சீனாவிலும் இது நடைமுறைப்படுத்தப்பட்டுவிடுமாம். இதை உதாரணமாக வைத்துத்தான் வெனிசுலா அரசு இதைக் கொண்டுவந்துள்ளது.

எதிர்ப்புகளும், ஆபத்துகளும்!

மடுரோ கடந்த ஆண்டுதான் `புதிய வெனிசுலாவை உருவாக்க உதவிடுங்கள்' (எங்கேயோ கேட்ட குரல்!) என மக்களிடம் இந்த கார்டை வாங்க வலியுறுத்தினார். இப்போது வெனிசுலா நாட்டில் தற்போது பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கார்டுகளை வாங்கிவிட்டனர். மக்கள் பலரையும் சென்றடைய நம் ஊரில் இருக்கும் ஸ்விக்கி, அமேசான் அளவுக்கு இறங்கிவந்து பல சலுகைகளை அறிவித்துள்ளது வெனிசுலா. அன்னையர் தினத்தன்று கூட கார்டு வாங்கிய தாய்மார்களுக்கு ஒரு சிறிய தொகை பரிசாக அளிக்கப்பட்டது.

படம்: நிக்கோலஸ் மடுரோ

இப்படி ஒருபக்கம் மக்களைச் சாதுவாக ஊக்குவித்துக்கொண்டிருந்தாலும், மறுபக்கம் அத்தியாவசிய விஷயங்கள் பெற இந்த கார்டு அவசியம் என்று மக்களை வற்புறுத்தவும் செய்கிறது அந்த அரசு. பென்ஷன் பெறுவதற்குக் கூட இந்த கார்டு வேண்டும் என்ற நிலை அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கார்டு இல்லாத ஒரு சர்க்கரை நோயாளிக்கு இன்சுலின் மறுத்து `நீ வலதுசாரி' என்று முத்திரை குத்தியுள்ளார் ஓர் அரசு மருத்துவர். இதே போன்று நம்மூரில் அரசைக் கேள்வி கேட்பவர்களை `ஆன்ட்டி இந்தியன்' என்று முத்திரை குத்துவது போல் மற்றவர்களையும் `தேசத்துரோகி', `வளர்ச்சியை எதிர்ப்பவன்' எனப் பல முத்திரைகளைக் குத்துகிறது அரசு. தேவைகளைக் காட்டி இந்த முறையை மக்களிடம் திணிக்கிறது அந்த அரசு. அரசு அலுவலர்களின் நிலை இதைவிடவும் மோசமாம். இதிலிருந்து அரசியல் ஆதாயமும் மடுரோ அரசு அடையும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் குடிமகன்களின் நடவடிக்கைகளை ட்ராக் செய்யும் இது போன்ற வசதிகள் ஒரு சரியான ஜனநாயக அரசிடம் இருக்கும்போது கூட பிரச்னை இல்லை, அதுவே மோசமான ஓர் அரசிடம் சிக்கினால் ஒடுக்குமுறையைச் செலுத்தும் கருவி ஆகிவிடும் அது. இதுதான் வெனிசுலாவில் நடக்கிறது என்கின்றனர்.  

இது போன்ற திட்டங்கள் மனிதனின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் மட்டுமல்லாமல் ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்குகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் தகவல்தான் எல்லாம். அது மக்களுக்கெதிரான ஆயுதமாக வெகுகாலம் ஆகாது. எச்சரிக்கையாக இருப்பது நம் கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism