Published:Updated:

த்ரில் ஐ.டி ரெய்டு: கார்கள் எங்கே? நான்கு கிலோ தங்கம் எங்கே?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
த்ரில் ஐ.டி ரெய்டு: கார்கள் எங்கே? நான்கு கிலோ தங்கம் எங்கே?
த்ரில் ஐ.டி ரெய்டு: கார்கள் எங்கே? நான்கு கிலோ தங்கம் எங்கே?

த்ரில் ஐ.டி ரெய்டு: கார்கள் எங்கே? நான்கு கிலோ தங்கம் எங்கே?

பிரீமியம் ஸ்டோரி

ரசியல் முரண்பாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதில் ஐ.டி ரெய்டுகளுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. ‘ஆபரேஷன் பார்க்கிங்’ என்ற பெயரில் சென்னை, மதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறை ஜூலை 16, 17 தேதிகளில் நடத்திய ரெய்டுகளுக்கும் அரசியல் முரண்பாடுகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. சரி, ரெய்டின்போது என்ன நடந்தது?

ஒரு மாதத்துக்கு முன்பே வருமானவரித் துறையில் குறிப்பிட்ட சில அதிகாரிகள் ரெய்டுக்கான வேலையைத் தொடங்கிவிட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருக்கத்தால் நெடுஞ்சாலை கான்ட்ராக்ட்களை அள்ளிய எஸ்.பி.கே குழுமத்தில் இப்போது பரபரப்பாக வலம்வருபவர் நாகராஜன். அவரைத்தான், முக்கியமாகக் குறிவைத்தது வருமானவரித் துறை. அவர் போகும் இடங்கள், அவருடைய கார்கள், அவர் சந்திக்கும் நபர்கள் என எல்லா விவரங்களும் சேகரிக்கப்பட்டன. நாகராஜனுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பில் இருந்தவர்களும், நாகராஜனின் கார்களும்தான் வருமானவரித் துறைக்குக் கிடைத்த முக்கியத் துருப்புச் சீட்டுக்கள்.

த்ரில் ஐ.டி ரெய்டு: கார்கள் எங்கே? நான்கு கிலோ தங்கம் எங்கே?

காட்டிக் கொடுத்த கார்கள்!

எஸ்.பி.கே குழும இயக்குநர்களில் ஒருவரான நாகராஜனின் வீடு, சென்னை டி.டி.கே சாலையில் உள்ளது. அதிகாலையில் அங்கு சோதனை நடத்தச் சென்ற அதிகாரிகளை கேஷுவலாக வரவேற்றுள்ளார் நாகராஜன். ‘‘எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சோதனை நடத்துங்கள். என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள். நான் முழுமையாக ஒத்துழைக்கிறேன்’’ என்று கூலாகச் சொன்ன நாகராஜன், ‘‘ஆனால், பிசினஸ் நடப்பதை மட்டும் தொந்தரவு செய்யாதீர்கள்’’ என்று கோரிக்கை வைத்துள்ளார். வீடு முழுவதும் தேடியும் ஒன்றும் உருப்படியாகக் கிடைக்கவில்லை. ‘‘உங்களுடைய கார்கள் எல்லாம் எங்கே?’’ என்று அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதைக் கேட்டவுடன், நாகராஜனுக்கு படபடப்பு அதிகரித்துள்ளது. ‘‘வீட்டில் நிற்கும் கார்களைத் தவிர, வேறு கார்கள் இல்லை’’ என்று மழுப்பியுள்ளார்.

ஆனால், நாகராஜனுக்கு எத்தனை கார்கள் உள்ளன என்பதையும், அவற்றின் பதிவு எண் விவரங்களையும் ஒரு மாதத்துக்கு முன்பே ஐ.டி அதிகாரிகள் சேகரித்துவிட்டனர். அந்தப் பட்டியலை அதிகாரிகள் வாசிக்க, ‘‘அவை வெளியே போயுள்ளன’’ என்று சமாளித்திருக்கிறார் நாகராஜன். உடனே, டிரைவர்களிடம் விசாரணை நடத்தி, அந்த கார்கள் இருக்கும் இடத்தை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். போயஸ் கார்டனில் உள்ள தீபக் என்பவரின் வீட்டில் ஒரு கார் நின்றிருந்தது. அந்த காரில் இருந்த ரூ.28 கோடி ரொக்கம் பிடிபட்டது. மற்றொரு கார், தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ரவிச்சந்திரனின் வீட்டில் நின்றிருந்தது. அந்த காரில் இருந்த ரூ. 24 கோடி ரொக்கம் பிடிபட்டது. சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த ஜோன்ஸ் என்பவரின் வீட்டில் நின்றிருந்த ஒரு காரில் ரூ.28 கோடி ரொக்கம் பிடிபட்டது. ‘‘இதற்கெல்லாம் நான் கணக்கு காட்டுகிறேன். இல்லையென்றால், அபராதத்துடன் வரி கட்டுகிறேன்’’ என்று அலட்டிக்கொள்ளாமல் நாகராஜன் சொன்னாராம்.

த்ரில் ஐ.டி ரெய்டு: கார்கள் எங்கே? நான்கு கிலோ தங்கம் எங்கே?

ஜோஸ் வீட்டில் பிடிபட்ட தங்கம்!

ஜோன்ஸ் காலை 5 மணிக்கு ஜிம்முக்குச் செல்வதற்குக் கிளம்பியுள்ளார். ஜன்னல் வழியே பார்த்தபோது, வெளியில் கார்கள் நிறைய நிற்பதை உணர்ந்துள்ளார். அவர் வெளியில் கிளம்பும் முன்பாகவே வருமானவரித் துறை அதிகாரிகள் உள்ளே வந்துவிட்டனர். இங்கு நடந்த சோதனையில், கணிசமான அளவுக்குத் தங்கம் பிடிபட்டது. ‘‘இதை யார் மூலம் வாங்கினீர்கள்? எவ்வளவு வாங்கினீர்கள்? யாருக்காக வாங்கினீர்கள்?’’ என்று துளைத்து விட்டனர். அவர் தங்கம் வாங்கிய இடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகள், அவர் வாங்கிய தங்கத்தின் அளவு என எல்லாவற்றையும் அதிகாரிகள் ஏற்கெனவே விசாரித்து வைத்திருந்தனர். அந்த விவரங்களைக் காட்டியதும், அதுபற்றிய உண்மைகளை ஜோஸ் ஒப்புக்கொண்டுள்ளார். மொத்தம் 81 கிலோவுக்குக் கணக்கு வந்தது. ஆனால், ஜோஸ் வாங்கியது, 85 கிலோ தங்கம். மீதம் நான்கு கிலோ தங்கம் எங்கே என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ‘‘இவ்வளவு தங்கத்தை யாருக்காக வாங்கினீர்கள்’’ என்ற கேள்விக்கு ஜோஸ் பதில் சொல்லவில்லை. உடனே, நாகராஜனுக்கு போன் செய்து, ஸ்பீக்கரில் போட்டுள்ளனர் அதிகாரிகள். ‘‘தம்பி, எனக்காகத் தான் வாங்கியதாக நீங்கள் ஒப்புக்கொள்ளுங்கள். மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று நாகராஜன் சொல்லியிருக்கிறார். ‘யார் மூலமாகத் தங்கம் வாங்கினீர்கள்’ என்ற கேள்விக்கு ஜோஸ் சொன்ன பதில், ‘பாலவாக்கம் சலீம்’.

பாலவாக்கம் சலீம்!

ஜோஸ் சொன்ன தகவலையடுத்து, பாலவாக்கத்துக்குச் சென்ற டீம், சலீம் வீட்டைத் துளைத்தெடுத்தது. ஐ.டி சோதனை நடைபெற்ற வீடுகளில் ஒரு ரூபாய் பணமோ, குண்டுமணித் தங்கமோ கிடைக்காத வீடு இதுதான். இரண்டு நாள்கள் சோதனை நடத்தியும் ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் கூடுதல் இயக்குநர்கள் என்று மூன்று பேர் வந்து விசாரணையைத் தொடர்ந்துள்ளனர். சலீம் மகன் இக்பால், நாகராஜனுக்காக தங்கம் வாங்கிக் கொடுத்ததை ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து ஐ.டி அதிகாரிகள் மீண்டும் நாகராஜன் தயவைத்தான் நாடினார்கள். அவரை செல்போனில் தொடர்புகொண்டு ஸ்பீக்கரில் போட்டதும், “என்ன நடந்ததோ அதை ஒப்புக்கொள்ளுங்கள். ஒன்றும் பிரச்னை இல்லை’’ என நாகராஜன் சொன்ன பிறகே, சலீமும் இக்பாலும் ஒப்புக்கொண்டனர். அதையடுத்து, அவர் வீட்டிலிருந்து ஐ.டி அதிகாரிகள் கிளம்பிவிட்டனர்.

த்ரில் ஐ.டி ரெய்டு: கார்கள் எங்கே? நான்கு கிலோ தங்கம் எங்கே?

இடிக்கும் தங்கக்கணக்கு!

கணக்கில் வராத பணத்தை, தங்கத்தில் முதலீடு செய்தார் நாகராஜன். அதற்காக பில் இல்லாமல் தங்கம் கொள்முதல் செய்து கொடுத்தவர்கள்தான் ஜோஸ் மற்றும் சலீம். ஆனால், அவர்கள் வாங்கியது 85 கிலோ தங்கம். ஆனால், பிடிபட்டது 81 கிலோ மட்டும்தான். அதனால், இன்னும் நான்கு கிலோவுக்குக் கணக்கு சொல்லியே ஆக வேண்டும் என்று ஐ.டி அதிகாரிகள் பிடிவாதமாக விசாரிக்கிறார்கள். அதை ஜோஸால் சொல்ல முடியவில்லை. அதனால், ஜூலை 16-ம் தேதி இரவு 9 மணிக்கு அவரை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணை இரவு 1.30 மணிவரை நடைபெற்றது. அதில் ஒரு தகவலும் கிடைக்காததால் ஜோஸ், இக்பால், நாகராஜன் என அனைவரையும் 17-ம் தேதி அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். ஒரு கட்டத்தில் நாகராஜன் நொந்துபோய், ‘‘நான்கு கிலோ தங்கம் கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை. நான் அதற்கும் வரி கட்டிவிடுகிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை. ‘‘காணாமல் போனதற்குக் கணக்கோ, காரணமோ தெரியாமல், நாங்கள் வரி வாங்க முடியாது. அதனால், அது எங்கே என்பது தெரியவேண்டும்’’ என விசாரித்துக்கொண்டிருக்கின்றனர்.

கே.என்.நேரு தம்பி ஏன் சிக்கினார்?

ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் ரவிச்சந்திரன், தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சொந்தத் தம்பி. இவர் வீட்டில் ஐ.டி ரெய்டு நடந்ததாக ஆரம்பத்தில் தகவல் பரவியது. ஆனால், பல ஆண்டுகளாக இவரும், எஸ்.பி.கே நாகராஜனும் தொழில் பார்ட்னர்கள். ஐ.டி ரெய்டு வரப்போவதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட நாகராஜன், பல கார்களில் பணத்தை வைத்து நண்பர்கள், தெரிந்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பியுள்ளார். ரவிச்சந்திரன் வீட்டுக்கும் ஒரு காரை அனுப்பிவைத்துள்ளார். அதன்பிறகு, ரவிச்சந்திரனிடம் பேசிய நாகராஜன், ‘‘கார் உங்கள் வீட்டில் நிற்கட்டும். பிறகு வந்து எடுத்துக்கொள்கிறேன். இப்போது அவசர வேலையாக வேறு ஓர் இடத்துக்குச் செல்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார். நட்பின் அடிப்படையில் ரவிச்சந்திரனும் காருக்குள் என்ன இருக்கிறது என்று தெரியாமல் ஒப்புக்கொண்டார். ஐ.டி அதிகாரிகளுக்கு நாகராஜனின் கார்களில் ஒன்று ரவிச்சந்திரன் வீட்டில் நிற்பது தெரியவந்ததும், சோதனையிட்டுப் பணத்தையும் காரையும் எடுத்துக்கொண்டு போனார்கள். ஆனால், ரவிச்சந்திரனின் வீட்டுக்குள் அதிகாரிகள் போகவில்லை.

விசாரிப்பில் இறங்கினால் ஹாலிவுட் படம் பார்த்த மாதிரிதான் இருக்கிறது.

- நமது நிருபர்
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ், வி.ஸ்ரீனிவாசுலு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு