Published:Updated:

‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி

‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி
‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி

'ஒரு எட்டு வந்து பார்த்தால்,  குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கும் எங்கள் நிலைமை அவங்களுக்குத் தெரியும்' எனக் கேள்வி கேட்கிறார் அய்யம்மாள் பாட்டி.

வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை 'கஜா' புயலாக மாறி, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர், தஞ்சை மாவட்டப் பகுதிகளில் கரையைக் கடந்தது. கஜா புயல் கரையைக் கடந்தபோது கனமழை பெய்ததாலும், சூறைக்காற்று பலமாக வீசியதாலும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளன.

இதனால், கஜா புயல் தாக்கிய பகுதிகளான புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, தஞ்சாவூர் மாவட்டம்  பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில தினங்களாகக் குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லாத நிலையில் ஏற்பட்டுள்ளது. இதனால் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களும், புயலில் வீடுகளை இழந்த மக்களும் பெரிதும் பரிதவித்துக்கிடக்கிறார்கள். குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லாத சூழலில், நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்கள் தங்களின் சேதமடைந்த வீடுகளைச் சரிசெய்வதற்காக இன்று காலை முதல் முயன்றுவந்த நிலையில், பேராவூரணி ஆலங்குடி பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்துவருகிறது.

மேலும், பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்காதா என்ற ஏக்கத்தில், லாரிகளில் கொண்டு வரப்படும் குடிதண்ணீருக்காக மணிக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள்.

ஆலங்குடி உள்ளிட்ட சில இடங்களில் ஜெனரேட்டர்களைப் பொருத்தி, மின்மோட்டார் மூலம் குடிநீர்க் குழாய்களில்  பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஆலங்குடியை அடுத்துள்ள கீழாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பேராவூரணி- புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் தண்ணீருக்காக காலி குடங்களுடன் சாலையின் இரு ஓரங்களிலும் காத்துக்கிடந்தார்கள்.

 நம்மிடம் பேசிய அய்யம்மாள் பாட்டி ,"அடித்த புயல்காற்றில் ஊரே அழிஞ்சுபோச்சு. உயிருக்குப் பயந்து, நாங்கெல்லாம்  கல்யாண மண்டபத்தில் தங்கியிருந்தோம். ஒரு நாள் மட்டும் கவர்மென்ட்ல இருந்து சோறு போட்டாங்க. அடுத்தநாள்  அதுவும் இல்லை.

மூணு நாளா உயிரைக் கையில புடிச்சிக்கிட்டு கிடந்தோம். இப்போ, எல்லா பொருளும் நாசமாகி வீதியில நிக்கிறோம். ரோட்ல இருக்கிற மரங்களெல்லாம் அரசாங்கத்துல வெட்டி கொடுப்பாங்களாம். ஆனா, ஒவ்வொரு வீட்லயும் விழுந்து கிடக்கிற மரங்களை அந்தந்த நபர்கள் வெட்டிக்கொள்ளனுமாம். ஏற்கெனவே, பாதிக்கப்பட்டவர்களை எந்த அளவுக்கு இந்தப் புயல் கஷ்டப்படுத்தியதோ, அதைவிட இந்த அதிகாரிகள் கஷ்டப்படுத்துறாங்க. எங்களுக்கான சேதத்தைப் பார்க்கிறதுக்கு ஒரு அதிகாரியும் வரல. இப்ப குடிக்கத் தண்ணி இல்லாமல் நடு ரோட்டுல நிக்கிறோம்.

ஒரு பக்கம் குடிக்கத் தண்ணி இல்ல, இன்னொரு பக்கம் மழை. எங்கள் வாழ்க்கை இப்படி ஆகும்னு கனவுலகூட நினைக்கல. சொத்து சுகம் இருந்து என்ன சாமி ஆகிறது.குடிக்கத் தண்ணி இல்லையே. குழந்தைகள், என்னை மாதிரி வயசானவங்க எல்லாரும் படாதபாடு படுறோம். இந்த அதிகாரிங்க, வெள்ளத்தால பாதிப்பு கம்மிதான்னு சொல்றாங்களாம். ஒரு எட்டு நேர்ல வந்து பார்த்தா அவங்களுக்கு எங்க கஷ்டம்  புரியும்"என்றார்.