Published:Updated:

பேச்சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பேச்சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா?
பேச்சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா?

அச்சத்தில் அலறும் கன்னியாகுமரி

பிரீமியம் ஸ்டோரி

ன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பேச்சிப்பாறை அணையைப் பலப்படுத்துவதாகக் கூறி, அணையின் தடுப்புச்சுவரைத் தாங்கிநிற்கும் அஸ்திவாரப் பாறையை உடைத்து அகற்றுவதாக அச்சத்துடன் பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.61.30 கோடி மதிப்பீட்டில், பேச்சிப்பாறை அணையைப் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், அணையில் கூடுதலாக எட்டு ஷட்டர்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அணையின் வெளிப்பகுதியில் தடுப்புச்சுவரை ஒட்டியவாறு கான்க்ரீட் கலவையால் புதிய சுவர் எழுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 13 மீட்டர் உயரத்தில் எழுப்பப்படும் சுவரின் அடிப்பக்கம் 10 மீட்டர் அகலத்திலும், மேல்பகுதி ஏழு மீட்டர் அகலத்திலும் இருக்கும். இதற்காக, தடுப்புச்சுவரை ஒட்டியுள்ள மண் மேடுகள் அகற்றப்பட்டன. அப்போது, அணையின் அடிப்பகுதியில் மிகப்பெரிய பாறை தென்பட்டது. அந்தப் பாறைமீது கான்க்ரீட் சுவர் எழுப்பும் பணி தொடங்கும் எனப் பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அணையைத் தாங்கிநிற்கும் அந்தப் பாறையை உடைத்து அகற்றும் அபாயகரமான செயல் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு, மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

பேச்சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா?

சித்திரங்கோட்டைச் சேர்ந்த ஜான் கிறிஸ்டோபர், ‘‘திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்கீழ் குமரி மாவட்டம் இருந்தபோது, 1906-ம் ஆண்டு இந்த அணை கட்டி முடிக்கப்பட்டது. மன்னர் காலத்தில் 42 அடி உயரத்துக்குக் கட்டப்பட்ட அணை, காமராஜர் முதல்வராக இருந்தபோது மேலும் ஆறு அடி உயரத்துக்குத் தண்ணீர் தேக்கும் வகையில் உயர்த்திக் கட்டப்பட்டதுடன், ஆறு ஷட்டர்களும் புதிதாக அமைக்கப்பட்டன. அந்தக் காலத்தில், பதநீர், சுண்ணாம்பு, முட்டை ஆகியவை கலந்த கலவையால் இயற்கை முறையில் அணையின் கட்டுமானப் பணி நடந்திருக்கிறது. அதனால்தான், இப்போது அணையைப் பலப்படுத்தும் பணியின்போது, ஒரு சிறு கல்லை அகற்றக்கூட பொறியாளர்கள் மிகுந்த சிரமப்படுவதைப் பார்க்கமுடிகிறது.

அணையின் பெரும்பாலான கட்டுமானப் பகுதிகள் மிகப்பெரிய பாறையின்மீது அமைக்கப்பட்டுள்ளன. உபரி நீர் வெளியேறும்போது மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க, பாறைகள் நிறைந்த பகுதியில் தண்ணீர் வெளியேறும்விதமாக அந்தக் காலத்தில் அமைத்துள்ளனர். விவசாயத் தேவைக்காகத் தண்ணீர் வெளியேற்றப்படும் பகுதியையும் இயற்கையாகவே பாறையைக் குடைந்து அமைத்துள்ளனர். அணையின் தடுப்புச் சுவருக்கு முன்பகுதியில் முக்கால்வாசி பகுதி பாறை வெளியே தெரியும் விதமாகவே அமைந்துள்ளது.

இந்தப் பாறைமீது கான்க்ரீட் கலவையால் சுவர் எழுப்புவதை விட்டுவிட்டு, அணைக்கு அஸ்தி வாரமாக விளங்கும் பாறையை வெட்டி அகற்று கிறார்கள். பாறையை வெட்டியெடுப்பதால், அணை தடுப்புச்சுவரின் பலம் குறைந்துவிடும் என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மழைக் காலத்தில் உயரமான மலைகளிலிருந்து பாய்ந்துவரும் காட்டாற்று வெள்ளம், தடுப்புச் சுவரில் வேகமாக மோதும்போது ஆபத்தை விளைவிக்கலாம் என்பதே எங்கள் அச்சத்துக்குக் காரணம். கான்க்ரீட் கலவைக்கான ஜல்லித் தேவையைப் பூர்த்திசெய்யும் விதமாகப் பாறையை உடைக்கிறார்கள். மிகவும் விலையுயர்ந்த கிரானைட் கல்லாக இருப்பதால், பாறையை வெட்டியெடுத்துக்கொண்டு செல்கிறார்கள். அணையைப் பலப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்துக்குக் கணக்கு காட்ட வேண்டும். அதற்காக, கான்க்ரீட் கலவையின் பரப்பளவை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, பாறையை உடைத்துவிட்டு கான்க்ரீட் போடப்போகிறார்கள். இயற்கையாகவே பலமானதாக அமைந்துள்ள பாறையைவிட, இவர்கள் செயற்கையாக ஏற்படுத்தும் கான்க்ரீட் கலவை பலமாக இருக்குமா என்பதுதான் நாங்கள் எழுப்பும் கேள்வி’’ என்றார்.

பேச்சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா?

இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் அருள்செழியனிடம் பேசினோம். ‘‘அணையின் அடிப்புறத்தில் உள்ள பாறையின் உள்பகுதி, பல அடுக்குகளாக உள்ளது. அதில் பலமான பாறை அடுக்குகளும், பலம் குறைந்த பொடிவுப் பாறை அடுக்குகளும் மாறி மாறி அமைந்துள்ளன. மேற்பரப்பில் ஒரு மீட்டர் இடைவெளியில் உருண்டைப் அளவுக்குப் பாறைகள் இறுக்கமாக இல்லாமல் இருப்பதால், அவற்றின் வழியாக தண்ணீர் கசியும் அபாயம் உண்டு. அதனால்தான், பாறைகளை அகற்றுகிறோம். வெடிவைத்துத் தகர்த்தால் அணை குலுங்கி பலம் இழக்கும். அடித்து உடைத்தாலும் அணைக்குப் பிரச்னை. அதனால்தான், பாறைகளை அறுத்து எடுத்து அங்கு வைத்துள்ளனர்.

இந்தப் பணியைச் செய்யும் நிறுவனம், கடற்கரையில் அலைகளின் சீற்றத்தைத் தடுக்கும் தடுப்புகளை அமைக்கும் பணியையும் செய்துவருவதால், இங்கிருந்து கற்களை வெட்டி எடுத்துச்செல்வதாக மக்கள் தவறாக நினைத்திருக்கலாம். புதிதாக எட்டு ஷட்டர்கள் அமைக்கும் பகுதியிலும் பாறையை வெட்டியெடுக்கிறோம். புதிய ஷட்டர் பகுதியில் போடுவதற்காக, இந்தக் கற்கள் தேவைப்படும். மற்றபடி, இந்தப் பாறைகளை அகற்றுவதால் அணை பலமிழந்துவிடும் என்ற அச்சம் தேவையில்லை. நூற்றாண்டைக் கடந்த இந்த அணையை இன்னும் வலிமையானதாக ஆக்கவே இந்தப் பணிகளைச் செய்கிறோம்’’ என்றார் அவர்.

அணைகளின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்வது விபரீத விளையாட்டு.

- ஆர்.சிந்து
படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு