Published:Updated:

மனிதசமூக சமத்துவத்தை வாழ்நாளெல்லாம் போதித்த நபிகளார் பிறந்தநாள் இன்று!

மனிதசமூக சமத்துவத்தை வாழ்நாளெல்லாம் போதித்த நபிகளார் பிறந்தநாள் இன்று!
மனிதசமூக சமத்துவத்தை வாழ்நாளெல்லாம் போதித்த நபிகளார் பிறந்தநாள் இன்று!

ஸ்லாம் இறைத்தூதர் முகம்மது நபிகளின் சபை எப்படியிருக்கும்..? பொதுவாக அரசர்களின்  அவை, அதிகாரிகளின் சபை, ஆன்மிகத் தளபதியின் மடங்கள் எப்படியிருக்கும் என்பது நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆடம்பரமிக்க, தோரணை நிறைந்த, யாரும் எளிதாக வந்து சந்திக்க முடியாத வண்ணம் இருக்கும். அவர்களை அதிகார வர்க்கத்தினரும், செல்வந்தர்களும் மட்டுமே தொடர்பு கொள்ளும் வகையில் பிரமாண்டமாக இருக்கும். ஆனால், அண்ணல் நபிகளின் சபையோ எளிய மக்களுக்கானது. அதுஅருள் நிறைந்த வார்த்தைகளுக்கான எதிர்பார்ப்பு. சத்தியத் தேடலுக்கான காத்திருப்பு. நபி வாழ்வின் கணிசமான பகுதிகள் அவரின் தோழர்களுடையது. 

யாரும், எப்போதும் வந்து நபிகளுடன் சங்கமிக்கலாம். அங்கு ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் அனுமதி உண்டு.  அங்கு அனைவரின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கப்படும். 

இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் அன்றைய  அரேபியர்களில் மற்ற கடவுள்களை வழிபடும் தோழர்கள்கூட நபிகளைக் காண, ஆலோசனை கேட்க, வழக்குகளைத் தீர்த்து வைக்க வந்து சந்திக்கும் அளவுக்குக் கட்டுக்கோப்புகளோ, விதிமுறைகளோ இல்லாமல் இருந்தது.

நபிகள் எந்நேரமும் மக்களுக்கு  ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்கவில்லை. அவரது உரையின் நீளம் அரை மணி நேரத்தைத் தாண்டாது. அவ்வாறிருக்க, இஸ்லாமிய மார்க்க நெறியை முழுமையாக எப்படி மக்களுக்குப் பரப்புரை செய்தார்? அவர் மக்களுடன் கலந்திருக்கும்போது ஏற்படும் பிரச்னைகள், வழக்குகள்,  உரையாடல்கள் கலந்துரையாடல்கள்  வாயிலாகவே இறை மார்க்கத்தின் சட்ட திட்டங்களை அறிவித்தார். அவரின் போதனைகள் இதுபோன்ற  அவைகளில் இருந்தே நபியின் தோழர்களுக்குக் கிடைத்தன.

நபிகளின் அவை, நபி தோழர்களுக்குள்  ஏற்படும் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறும் பாடசாலையாக,  பிரச்னைகளைத்  தீர்க்கும்  ஆலோசனை மையமாக, மனத் துயரம்  தீர்க்கும் இடமாக, தங்களுக்குள் ஏற்படும் வழக்குகளுக்குத்  தீர்ப்புக் கோரும்  நீதிமன்றமாக, இறைவனை நெருங்கும் வழிமுறைகள் உபதேசிக்கப்படும் ஆன்மிக மன்றமாகத்  திகழ்ந்தது. ஆகவே, நபிகளின் சபை நிகழ்ச்சிகள் நபித் தோழர்களின் வாழ்வில்  ஆர்வமுடன் எதிர்நோக்கும் முக்கிய நிகழ்ச்சிகளாக அமைந்தன. 

பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் நாம் பெருமானாரின் அவைச் செய்திகளை வாசித்தால் நமக்கும், நமது ஆட்சியாளர்களுக்கும், படிப்பினைகளாக உள்ளதை நாம் அறியலாம். நபிகளின் அவையில்  எளிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் பிரச்னைகள் தீர்க்கப்பட்டன. மக்களின்  அன்றாட வாழ்வின் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன. தனிமனித கண்ணியம் பாதுகாக்கப்பட்டது. அங்கு சமூகத் தீமைகள் ஒழிக்கப்பட உறுதி கொள்ளப்பட்டன , சாதியத் தீமைகள் வேரூன்றிய சமூகத்தின் சமத்துவத் தென்றலாகப் பரவி மக்கள் உரிமை மீட்சிப் பிரகடனமாகச் செயல்பட்டன.

மனிதகுலத்தின் நலனுக்காக, நன்மைக்காகப் பாடுபட்ட நபிகளாரின் அவையில் நிகழ்ந்த சம்பவங்கள் சமூகத்துக்கு நிச்சயம் பயனளிக்கும். நபி அவையிலிருந்து ஒரு செய்தியை நாம் தெரிவோம். அங்கே சில மக்கள் குழுமியிருந்தார்கள். மாபெரும் எதிர்பார்ப்பு கலந்த ஆர்வத்துடன் அவர்கள்  நபிகளாரை  எதிர்நோக்கியிருந்தனர். அவர்களில் ஸாபித் இப்னு கைஸ் என்ற நபித்தோழர் மிகவும் ஆர்வமாக இருப்பவர். காது கேட்பதில் கொஞ்சம் குறைபாடு உள்ளவர் என்பதால், சரியாக வார்த்தைகளை உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால், அவர் எப்போதும் நபியின் அருகில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்வார்.

ஒருநாள் ஸாபித் இப்னு கைஸ் அந்த அவைக்குத் தாமதமாக வந்தார். ஏனைய நபித் தோழர்கள் வழக்கம்போல பெருமானாரின் சபையில் அமர்ந்திருந்தார்கள். அவசர அவசரமாக வந்த அவர், நபியின் உதட்டிலிருந்து உதிக்கும் வார்த்தைகளைச் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டுமே என்ற ஆர்வத்தால், 'என் இருப்பிடம் செல்ல எனக்கு வழி விடுங்கள்' என அமர்ந்திருந்தவர்களிடம் வேண்டினார்.

அதற்கு அவர்களோ சபைக்கு இடையூறு வரும் என்பதால், அவரை அங்கேயே அமரச் செய்கின்றார்கள். சபையில் ஓரமாக அமர்ந்திருந்த ஸாபித் இப்னு கைஸ் பெருமானாரின் கூற்றைச் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லையே என்ற இயலாமையால் தவித்தார். அவருக்குள் கோபம் ஊற்றெடுத்தது. அதன் வெளிப்பாடாக அவர் எப்போதும் அமரும் இடத்தில் இருந்தவர்மீது  வார்த்தைகளை அனலாக அள்ளித் தெளித்தார்.  

இஸ்லாத்தில் அவர் இணைவதற்கு முந்தைய அவரின் கோத்திரத்தைச்  சுட்டிக்காட்டி வசைமொழிந்தார். அவரோ பதிலேதும் பேசாமல் வெட்கத்தில் கூனிக் குறுகினார். அறியாமை காலத்தில் அவர்கள் பயன்படுத்திய வார்த்தைளை அவர் ஆதங்கம் காரணமாகச் சொல்லிவிட்டார். அங்கே அமர்ந்திருந்து வசை கேட்டவர் மனச்சங்கடம் அடைந்து வருந்துகிறார்.  சாதிய ஏற்ற தாழ்வுகள், இனத்தால், பிறப்பால் வேற்றுமை காணும் அவலம் துளியும் இல்லாத இஸ்லாத்தில் இதுபோன்ற ஓர் அவல நிகழ்வு நடந்ததுதான் தாமதம். அல்லா தனது நபியின்மீது வசனத்தை இறக்குகின்றான்.

''ஒரு சமூகத்தார் பிரிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் பரிகாசிக்கப்படுவோர், அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; அவ்வாறே எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் இவர்கள் அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், ஒருவரையொருவர் தீய பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் அவ்வாறு தீய பட்டப்பெயர் சூட்டுவது மிகவும் கெட்டதாகும்; எவர் இவற்றிலிருந்து மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்'' எனக் கூறுகிறார்.

இஸ்லாம் சமத்துவ மார்க்கம். இது ஏற்றத் தாழ்வுகளற்றது. 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் இன வேறுபாடுகளை வேரறுத்து யாவரும் ஓர்குல மக்கள் என்ற சமத்துவத்தை உலகுக்கு உணர்த்தியது.