Published:Updated:

கட்டணம் செலுத்தாததால் சிறுமிகளுக்கு டி.சி. கொடுத்த தனியார் பள்ளி! திருப்பூர் அதிர்ச்சி

``ஒருவாரம் அவகாசம் கொடுங்க..கண்டிப்பா பிள்ளைங்களோட பீஸ்ஸை நாங்க கட்டிடுறோம்னு கெஞ்சினோம். ஆனால், அந்தப் பள்ளி நிர்வாகம் அதற்கும்கூட மனம் இறங்கி வரலை. என் 2 மகள்களுக்கும் டி.சியைக் கொடுத்து அனுப்பிட்டாங்க. கலெக்டர்தான் எங்களுக்கு உதவி செய்யணும்" - இப்படியொரு கோரிக்கை மனுவோடு, தங்களின் 2 பெண் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள் ஒரு தம்பதியர்.

கட்டணம் செலுத்தாததால் சிறுமிகளுக்கு டி.சி. கொடுத்த தனியார் பள்ளி! திருப்பூர் அதிர்ச்சி
கட்டணம் செலுத்தாததால் சிறுமிகளுக்கு டி.சி. கொடுத்த தனியார் பள்ளி! திருப்பூர் அதிர்ச்சி

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் வசித்துவரும் சுரேஷ் - நிர்மலா தம்பதியரின் மகள்களான ஷர்மிதா, யாஷிகா ஆகிய இருவரும் வித்யாலயம் பகுதியில் இயங்கிவரும் ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்துள்ளனர். இவர்களில் ஷர்மிதா 6-ம் வகுப்பும், யாஷிகா 3-ம் வகுப்பும் படித்து வந்தநிலையில், அவர்களுக்கான கல்விக் கட்டணத்தைப் பெற்றோர் முழுமையாகச் செலுத்த முடியவில்லை. இதைக் காரணம்காட்டி, பள்ளி நிர்வாகம் அந்த மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழ்களைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளது. இதுகுறித்து அந்த மாணவிகளின் பெற்றோர், திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். 

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மாணவிகளின் தாயார் நிர்மலா, ``இரண்டு மகள்களுக்கும் சேர்த்து 45,000 ரூபாயை கல்விக் கட்டணமாகப் பள்ளி நிர்வாகம் நிர்ணயித்தது. இதில், ஏற்கெனவே சுமார் 32,000 ரூபாய்வரை கட்டணம் செலுத்தி விட்டோம். மீதமுள்ள 13 ஆயிரத்தில், இந்தப் பருவத்துக்கான தொகை 7 ஆயிரம் ரூபாய் மட்டும் கட்டவேண்டியிருந்தது. என் வீட்டுக்காரருக்கு சமீபகாலமாக சரியான வருமானம் இல்லாததால், எஞ்சியக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான பணத்தைத் திரட்டுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில் பணம் கட்டாததைக் காரணமாகக்காட்டி, என் மகள்களுக்கு மட்டும் புத்தகங்களை கொடுக்காமல் இருந்திருக்கிறார்கள். தகவல் தெரிந்து பள்ளி நிர்வாகத்திடம் போய்க் கேட்டோம். ஆனால், `கட்டணத்தை முழுமையாகக் கட்டினால்தான் புத்தகங்களைக் கொடுப்போம்' என்று பதில் சொன்னார்கள்.

ஒருவாரம் அவகாசம் கொடுங்கள், மொத்தப் பணத்தையும் கட்டிடுறேன். அதற்காக புள்ளைங்க படிப்பைக் கெடுக்க வேண்டாம். எம் புள்ளைங்களுக்கும் புத்தகங்களைக் கொடுத்திருங்கன்னு சொன்னேன். ஆனால், பள்ளி நிர்வாகம் அதையெல்லாம் கேட்காமல் கொஞ்சம்கூட யோசிக்காமல், நவம்பர் 13-ம் தேதி, என் மகள்களின் டி.சியைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. இப்போது என் இரண்டு மகள்களும் `எப்போம்மா, மறுபடியும் ஸ்கூலுக்குப் போகப்போறோம்'னு ஏக்கத்தோடு கேக்குதுங்க. ஸ்கூல் ஃபீஸ் முழுமையாக் கட்டமாட்டோம்னு நாங்க சொல்லலையே. மிச்சம் இருக்கிற பணத்தை ஒருவாரத்துல கட்டிடுறோம்னுதானே சொன்னோம். பணத்துக்காக, இப்படி எம் பொண்ணுங்க படிப்போட விளையாடுகிறார்கள். `அரசாங்கம்தான் எங்களுக்கு ஒரு தீர்வைத் தரவேண்டும்' என்று சோகத்துடன் பேசினார் நிர்மலா. 

இந்தப் புகார் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் ருக்மணியைத் தொடர்புகொண்டு பேசினோம். ``பள்ளி நிர்வாகத்தில் எல்லாருக்கும் ஒரே ரூல்ஸ்தான் வெச்சிருக்கிறோம். கட்டணம் செலுத்தாத பல மாணவர்கள் இன்னும் எங்கள் பள்ளியில் படிச்சிட்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இந்தப் பிரச்னையில் நடப்பதே வேறு. பள்ளி நிர்வாகத்திடம் தகராறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அவர்கள் நடந்துகொள்கிறார்கள். குறிப்பாக, மாணவிகளின் பெற்றோர் தரப்பில் `இருவருக்கும் மாற்றுச் சான்றிதழ்களை தந்துவிடுங்கள்' என்று கேட்டதால் மட்டுமே நாங்கள் கொடுத்தோம். கட்டாயப்படுத்தி டி.சி. வழங்கவில்லை" என்று முடித்துக்கொண்டார்.

தனியார் பள்ளியில் இதுபோன்ற ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் படிக்கும் நிலையில், பெற்றோர்களின் நிலையை அறிந்து பள்ளி நிர்வாகங்கள் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதேநேரத்தில், பெற்றோரும் தங்களின் குழந்தைகள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, உரிய காலக்கெடுவுக்குள் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முன்வர வேண்டும். ஏதாவது சில காரணங்களினால், உரிய காலக்கெடுவுக்குள் கட்டணத்தைச் செலுத்த இயலாத சூழ்நிலையில், பள்ளி நிர்வாகத்திடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும். எப்போது கட்டணத்தைச் செலுத்த முடியும் என்று எடுத்துக்கூறி, அந்த தேதிவரை அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் வீணாவதைத் தடுக்க முடியும்.

திருப்பூரில் பள்ளி மாணவிகளுக்கு டி.சி. வழங்கப்பட்டது தொடர்பான பிரச்னையில் மாவட்டக் கல்வித்துறை தலையிட்டு உரிய விசாரணை நடத்துவதே தீர்வாக இருக்கும்.