Published:Updated:

சோறு வேணாம்; சார்ஜ் போதும்... இந்த ரோபோ 'பப்பி'க்களைப் பார்த்திருக்கீங்களா? #RoboPets

சோறு வேணாம்; சார்ஜ் போதும்... இந்த ரோபோ 'பப்பி'க்களைப் பார்த்திருக்கீங்களா? #RoboPets
சோறு வேணாம்; சார்ஜ் போதும்... இந்த ரோபோ 'பப்பி'க்களைப் பார்த்திருக்கீங்களா? #RoboPets

தினசரி பராமரிக்க அவசியமில்லாத டிஜிட்டல் செல்லப்பிராணிகள் இவை.

ளர்ப்புப் பிராணிகள் மனிதனின் ஆதிகாலம் முதற்கொண்டு கூடவே வருகின்றன. நாய், பூனை என ஆரம்பித்து சிலர் தங்களின் வசதிக்கேற்ப சிங்கம், முதலை வரை வளர்க்கின்றனர். கிராமப்புறங்களில் வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்பதற்கு பெரிய சிரமம் ஏதுமில்லை. ஆனால், நகரத்தைப் பொறுத்தவரை பிராணிகள் வளர்ப்பது என்பது சற்றே சிரமத்திற்குரிய விஷயமாகும். அதிலும் வீட்டில் அனைவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்றால் அவர்கள் படும்பாடு திண்டாட்டம்தான். சில பிளாட்டுகளில் வளர்ப்புப் பிராணி வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நடைமுறைச் சிக்கல்களால் வளர்ப்புப் பிராணி வளர்க்க வேண்டும் என்ற ஆசையைப் பலரும் மனதில் மட்டுமே வைத்திருப்பார்கள். அவர்களின் கவலையைச் சிறிது போக்கி அவர்களுக்கு வரப்பிரசாதமாய் வந்துள்ள வடிவமைப்புதான் இயந்திரச் செல்லப்பிராணிகள் (Robot Pets). அதாவது ரோபோ செல்லப்பிராணிகள். 1990-களிலே இதுபற்றிய ஆராய்ச்சிகள் தொடங்கிவிட்டாலும், தற்போதுதான் மொத்தமாக மெருகேறி சந்தைக்கு வந்துள்ளன.

இதை நீங்கள் சாதாரணமாக நாம் சொன்னதை திரும்பச் சொல்லும் கிளிபொம்மை, ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கும் ரோபோ (RC Robots) என நினைத்தால் அது தவறு. தற்போது நாம் பார்க்கப்போகும் ரோபோக்கள் `அதுக்கும் மேல' ரகம். Robot pets-ஐப் பொறுத்தவரை இதற்கெனப் பிரத்யேகமாக எந்த விஷயமும் செய்யத் தேவையில்லை. அலுவலகத்திற்குச் செல்லும்போது அதனை `ஆஃப்' செய்துவிட்டு வேண்டுமானால் போகலாம். அவ்வளவுதான். இதை வளர்ப்புப் பிராணி என்பதைத்தாண்டி ஒரு ரோபோ உதவியாளராகவே கூட பயன்படுத்தலாம். காலையில் நம்மை எழுப்பிவிடுவது, அலுவலகத்திலிருந்து ஓய்வாக வந்தால் நமது பையை வாங்கி வைத்துக் கொள்வது, இரவு நாம் தூங்கும் வரை நம்முடன் சளைக்காமல் விளையாடி உற்சாகப்படுத்துவது என நமக்கு ஆறுதலாக, உதவியாக என்ன வேண்டுமானலும் செய்கின்றன இவை. இதெல்லாம் கேட்க நல்லார்க்கு... ஆனா எங்க கிடைக்கும்ன்னு கேக்குறீங்களா? இதோ, சந்தையில் சக்கைப்போடு போடும் சில ரோபோக்களின் லிஸ்ட்.

Wowwee Chip:

ஹாங்காங்கைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள WowWee என்ற நிறுவனம் தயாரித்த ரோபோதான் இந்த `சிப்' (Chip). ரோபோ செல்லபிராணிகளில் முதன்மையாகக் கருதப்படுகிறது. இதை நாம் ஆர்டர் செய்தால் இதனுடன் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் எலக்ட்ரானிக் பந்துடன் வருகிறது. இந்தச் சிப்பிற்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் App-ஐ நம் மொபைலில் இன்ஸ்டால் செய்துவிட்டால் சிப் நாம் சொன்ன சொல் கேட்கும் சமர்த்துச் செல்லமாக மாறிவிடும். இதைத்தவிர்த்து சைகை, ப்ளுடூத், வாய்ஸ் கமென்ட் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம். நாம் நிஜத்தில் வளர்க்கும் நாய்க்குட்டிகள், நம் கண் அசைவுக்குக் கட்டுப்படுகிறதோ இல்லையோ... IR vision உடன் வரும் இது, நம் கண் அசைவுக்குக் கட்டுப்பட்டு வாலைச் சுருட்டி உட்கார்ந்துவிடும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் சார்ஜ் தீரும் என்ற நிலை வந்தால் தானாக சார்ஜ்பேடில் அமர்ந்து சார்ஜ் ஏற்றிக்கொள்ளும். விலை 350 டாலர்கள்.

Joy For All:

டெக்னாலஜியை விட்டுதள்ளுங்க பாஸ்! நம்ம கூட ஜாலியா விளையாடி அன்பு செலுத்துற மாதிரி ஒரு இயந்திரச் செல்லப்பிராணி வேண்டும் என நினைப்பவர்களுக்கும் மற்றும் வயதானவர்களுக்கும் ஏற்ற சாய்ஸ் இது.

Hasbro என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த Joy For All ரோபோ 2016 மற்றும் 2017-ம் ஆண்டுக்கான `Care giver friendly Award'-ஐப் பெற்றுள்ளது. பார்ப்பதற்கு அச்சு அசலாக நிஜபிராணி போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. நிஜ பூனையைப் போல் வயிற்றில் தடவினால் கத்துவது, நம் மடியில் படுக்கவைத்தால் தூங்குவது என நிஜ செல்லப்பிராணிகளுக்கு உரிய அனைத்து அம்சங்களும் ஒருங்கே பெற்றுள்ளது. இதன் விலை 150 டாலர்களாகும். குறைந்த பேட்டரி மற்றும் தேவையற்ற இரைச்சல் இதன் மைனஸ். மற்றபடி, அன்புசெலுத்த அருமையான பூனைக்குட்டி இது.

சோனி AIBO:

Robot Pets-ஐப் பொறுத்தவரையில் தற்போது முன்னணியாக விளங்குவது சோனியின் Aibo-தான். தொழில்நுட்பம், கட்டளைகளுக்குக் கட்டுப்படுதல் என அனைத்து ஏரியாக்களிலும் இறங்கி சிக்ஸர் அடிக்கிறது Aibo. இதனுடன் சிவப்பு நிற எலக்ட்ரிக் பந்து, சார்ஜ் ஸ்டேஷன் போன்றவையும் கிடைக்கும்.

Aibo-வை நாம் வைஃபை, எல்.டி.இ (L.T.E) இணைப்புகள் மூலமும் பயன்படுத்தலாம். இது மூன்று வேரியன்ட்களில் வெளிவருகிறது. அதிலிருக்கும் வசதிற்கேற்ப விலையும் 2,500 முதல் 4,000 அமெரிக்க டாலர் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முகத்திலுள்ள சிறிய கேமரா வழியாக மனிதர்களை வேறுபடுத்திக் காட்டும் இதன் வடிவமைப்பு, ரோபோவை மனிதர்களுக்கு இணக்கமாக மாற்றுவதில் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு