Published:Updated:

டேனி பெட்ரோஸா - மோட்டோ ஜீபி சாம்பியன் இல்லை... லெஜண்டு!

டேனி பெட்ரோஸா - மோட்டோ ஜீபி சாம்பியன் இல்லை... லெஜண்டு!
டேனி பெட்ரோஸா - மோட்டோ ஜீபி சாம்பியன் இல்லை... லெஜண்டு!

எத்தனை வெற்றிகள், எத்தனை காயங்கள், எத்தனை மனிதர்கள்... மோட்டோ ஜீபி-யில் பைக்குகளோடு புழங்கிய ரேஸர்கள்தாம் அதிகம். மனிதர்களோடு வாழ்ந்த ரேஸர்கள் சொற்பம். அந்த சொற்ப ரேஸர்களில் ஒருவன் டேனி பெட்ரோஸா. தன்னுடைய 12 ஆண்டு மோட்டோ ஜீபி கெரியரில் இதுவரை ஒரு சாம்பியன்ஷிப்கூட வாங்கியதில்லை. ஆனால், எல்லோராலும் கொண்டாடப்படுகிறார். கடந்த ஞாயிற்றுக் கிழமையோடு தன் மோட்டோ ஜீபி கரியரை முடித்துக்கொண்ட இவரை `மோட்டோ ஜீபியின் லெஜண்டு’ என்று அறிவித்திருக்கிறார்கள். ஆச்சர்யமும், அமைதியும் சூழ்ந்திருக்கும் இந்த டேனி பெட்ரோஸா யார்?

மோட்டோ ஜீபி பயணம்!

33 வயதான டேனி பெட்ரோஸா, ஸ்பெயினின் சபடெல் நகரிலிருந்து வந்த பைக் ரேஸர். இவரின் மோட்டோ ஜீபி பயணம் ஆல்பெர்ட்டோ புய்க் எனும் ரேஸரிடமிருந்து ஆரம்பித்தது. ஹோண்டா புதிய ரைடர்களைத் தேடுவதற்காக `மோவிஸ்டார் ஆக்டிவா கப்’ என்ற போட்டியை நடத்தியது. அதில் போட்டியிடவேண்டும் என்று துடிப்பில் வந்து கலந்துகொண்டான் 14 வயது டேனி பெட்ரோஸா. பைக்கில் உட்கார்ந்தால் கால் தரையில் எட்டாத குட்டிப் பையனாக இருக்கிறானே எனக் கலாய் வாங்கிக்கொண்டிருக்க, ஆல்பர்ட்டோ புய்க் அவனை ரேஸில் கலந்துகொள்ள அனுமதித்தார். அந்த சீசனில் 2 போடியம் அடித்து 8-வது இடத்தில் ரேஸை முடித்திருந்தான் அந்தப் பையன். 

பிறகு, அதே ஆல்பர்ட்டோவால் மோவிஸ்டார் ஹோண்டாவின் ஜூனியர் டீமில் 125சிசி ஸ்பேனிஷ் ரேஸ் ஓட்டத் தேர்வு செய்யப்பட்டான். `முதல் மூன்று இடங்களை வென்ற ரைடர்களை விட்டுவிட்டு 8-வது முடித்த டேனி பெட்ரோஸாவை தேர்வு செய்தது ஏன்?’ எனக் கேட்டபோது, மற்ற ரேஸர்களிடம் இல்லாதது ஏதோ ஒரு ஸ்பெஷாலிட்டி பெட்ரோஸாவிடம் இருப்பதாகச் சொன்னார் ஆல்பர்ட்டோ புய்க். ஸ்பேனிஷ் சேம்பியன்ஷிப்பில் 4-வது இடம். பிறகு 2001-ம் ஆண்டு மோட்டோ ஜீபி ஜூனியர் ரேஸில் 15 வயதில் களமிறங்கினான் டேனி பெட்ரோஸா.

வெற்றிப் பயணம்!

2002-ல் நெதர்லாந்து சர்க்யுட்டில் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தான் 15 வயது பெட்ரோஸா. 2002 முதல் 2017 வரை எந்த சீசனுமே வெற்றி இல்லாமல் முடித்தது கிடையாது. 2003-ம் ஆண்டு 125 சிசி கேட்டகரியில் தனது முதல் சாம்பியன்ஷிப் டைட்டில். 2004-ம் ஆண்டு பெட்ரோஸா 250 சிசி கேட்டகரிக்கு நுழைகிறார். போட்டியிட்ட முதல் சீசனிலேயே சாம்பியன்ஷிப் பட்டம். அடுத்த சீசனில் இன்னொரு சாம்பியன்ஷிப். வெற்றிகள் தொடர்ந்து வர 21 வயதில் ப்ரீமியர் கிளாஸுக்குச் செல்கிறார் பெட்ரோஸா.

மோட்டோ ஜீபி

மோட்டோ ஜீபி ப்ரீமியர் கிளாஸின் முதல் சீசனில் ஹோண்டாவில் நிக்கி ஹேடனுக்கு டீம்மேட்டாகக் களமிறங்கினார். முதல் சீசனே மோதல்கள். `அமெரிக்க மோட்டோ ஜீபி ரசிகர்கள் ஹோண்டா நிக்கி ஹேடனுக்கு முக்கியத்துவம் தருவதில்லை’ எனப் புகார் கூறினார்கள். எஸ்டிரால் சர்க்யுட்டில் டேனி பெட்ரோஸா செய்த தவறால் நிக்கி ஹேடன் கீழே விழுந்துவிட, இன்னும் ஒரு ரேஸே இருக்கும் நிலையில் சாம்பியன்ஷிப் பாயின்ட் குறைகிறது. அந்த சீசனில் கடைசிப் போட்டி வெலன்சியாவில்... பல வாய்ப்புகள் கிடைத்தும் நிக்கி ஹேடனை முந்திச் செல்லாமல் பின்வருபவர்களை பெட்ரோஸா டிஃபெண்ட செய்ய, ஹேடன் அந்த சீசனை வென்றார். (இன்று வரை வெலன்சியாவில் அதிக ரேஸ்களை வென்றவர் பெட்ரோஸாதான்.)

அடுத்த ஆண்டு நிக்கி ஹேடனை ஓரம் தள்ளிவிட்டு சாம்பியன்ஷிப்பில் 2-ம் இடம் பிடித்தார். மோட்டோ ஜீபி பைக் 800சிசி-யாக மாறியபோது டுக்காட்டி, யமஹா போல ஹோண்டாவால் வேகமான, நிலையான ஒரு பைக்கை உருவாக்க முடியவில்லை. பவர் குறைவான பைக்கில் தொடர்ந்து யமஹா, டுக்காட்டி ரைடர்களை விரட்டிய ஹோண்டா ரேஸர் டேனி மட்டுமே. தொடர்ந்து இரண்டு சீசன்கள் 3-ம் இடம். 

2010-ம் ஆண்டு லெரன்ஸோவுக்கும், பெட்ரோஸாவுக்கும் இடையே கடும்போட்டி. கடைசியில் லொரன்ஸோதான் சாம்பியின்ஷிப் வென்றார். பெட்ரோஸா இரண்டாம் இடம். பரபரப்பான ரேஸ் சீசன்களில் 2012-ம் ஆண்டும் ஒன்று. `பெட்ரோஸாதான் சாம்பியன்’ என எல்லோருமே நினைக்க, கடைசிக்கு முந்தைய ரவுண்டான மிஸானோ சர்க்யுட்டில் பெட்ரோஸாவின் பைக் பிரச்னையானதால், முதலில் நின்று ரேஸைத் தொடங்கவேண்டியவர் கடைசியிலிருந்து தொடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். முதல் 10 இடங்களுக்குள் முடித்திருந்தால் கூட சாம்பியன்ஷிப் கிடைத்திருக்கும். ஆனால், முதல் லேப்பிலேயே ஹெக்டர் பார்பராவின் பைக் மோதி கீழே விழுந்துவிட்டார். அந்தப் போட்டியில் லொரன்ஸோதான் முதலிடம். அந்த ஆண்டும் லொரன்ஸோதான் சாம்பியன். பெட்ரோஸா மீண்டும் இரண்டாம் இடம். 

காயங்கள்!

முதல் சாம்பியன்ஷிப் ஜெயித்த அடுத்த வாரமே பெரிய கிராஷ். காயங்களுக்கு பெட்ரோஸாவை மிகவும் பிடிக்கும்! இவர் உடலில் காயங்கள் இல்லாத பாகங்களை விரல்விட்டு எண்ணலாம். பெட்ரோஸா விழுந்தால் ஹோண்டா டீமே பரபரப்பாகிவிடும். விரல்கள், தோள்பட்டை, முட்டி, பாதம், மணிக்கட்டு, இடுப்பு, முதுகு என உடம்பில் எல்லா இடங்களிலும் ஒட்டுப்போடப்பட்டுள்ளது. இருந்தும் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் முதல் 5 இடத்தில் முடித்த நிலையான ரேஸர்.

விஸ்வாசமும் பகையும்!

விஸ்வாசம் என்றால் இப்போது அஜித் ஞாபகம் வரலாம். ஆனால், மோட்டோ ஜீபி-யில் விஸ்வாசம் என்றால் பெட்ரோஸாதான். ஒரே டீமில் அதிக ஆண்டுகள் இருந்த ரேஸர் பெட்ரோஸா. தன் கரியரை ஆரம்பித்ததும், முடித்ததும் ஹோண்டாவில்தான். இடையில் எந்த டீமுக்கும் போகவில்லை. பெட்ரோஸாவின் பைக் நம்பர் `26' அவரை அறிமுகப்படுத்திய ஆல்பெர்ட்டோ புய்க் பயன்படுத்தியது. ஆல்பெர்ட்டோ புய்க் ஹோண்டா ரேஸிங் டீமின் தலைவராகப் பொறுப்பேற்றவுடன், பெட்ரோஸாவை டீமிலிருந்து வெளியேற்றும் முயற்சியில்தான் இறங்கினார். பெட்ரோஸா ஓய்வை அறிவிக்கும் முன் யமஹா டீமில் வந்து சேரும்படி அழைப்பு வந்தும், அதை மறுத்துவிட்டு ஹோண்டாவிலேயே கரியரை முடித்துக்கொண்டார்.

டிராக்கிலும், டிராக்கின் வெளியேவும் பெட்ரோஸாவுக்குப் பகையென்றால் அது லொரன்ஸோ மட்டும்தான். ஒன்றாகவே ரேஸ் உலகத்துக்குள் நுழைந்தவர்கள். 125சிசி முதல் 1000சிசி எல்லா போட்டியிலும் பரம எதிரிகள். ``பெட்ரோஸா எனக்குமுன் இருந்தால் எப்படியாவது தாண்டிச் சென்றுவிடத் தோன்றும்" என்றார் லொரன்ஸோ. இருவருமே ஸ்பானிஷ் ரேஸர்கள் என்பதால் 2008-ம் ஆண்டு ஸ்பெய்ன் மன்னர் இருவரையும் சேர்த்துவைக்கும் முயற்சியில் இறங்கினார். அதுவும் பலன் தரவில்லை. எப்படியோ, காலச் சக்கரத்தின் சுழற்சியில் இப்போது இருவரும் டிராக்கில் மட்டுமே பகையாளிகள். வெளியே நண்பர்கள்.

கோப்பை இல்லா சாம்பியன்!

வாலன்டினோ ராஸி, ஜார்ஜ் லொரன்ஸோ, மார்க் மார்க்கஸ், காலின் எட்வர்ட்ஸ், ஆல்வரோ படிஸ்டா, டகாகி நககாமி எனப் பல ரேஸர்கள் பெட்ரோஸாவுக்கு ஒரு சாம்பியன்ஷிப்பாவது கிடைத்திருக்க வேண்டும் என்று அவரது ஃபேர்வெலின்போது தெரிவித்திருந்தார்கள். ராஸியின் 232 போடியமுக்கு அடுத்து அதிக போடியம் (முதல் மூன்று இடங்கள்) வென்றவர் டேனி பெட்ரோஸாதான். மொத்தம் 153 போடியம். பென் ஸ்பைஸ், மேக்ஸ் பியாஜி, வாலன்டினோ ராஸி, நிக்கி ஹேடன், கேஸி ஸ்டோனர், ஜார்ஜ் லொரன்ஸோ எனப் பல தலைமுறை சாம்பியன்களுக்குச் சமமாக இருந்தவர். டேனி பெட்ரோஸா இல்லாமல் இருந்திருந்தால் கடந்த 15 ஆண்டுகள் மோட்டோ ஜீபி நமக்கு நிச்சயம் போரடித்திருக்கும்.