Published:Updated:

``15 வருடமாக `ஓல்டு பாய்'க்கு ஒரு கேள்வி, 15 வருடங்கள் கழித்தும் அதே கேள்வி!" - #15YearsOfOldBoy

தார்மிக் லீ
``15 வருடமாக `ஓல்டு பாய்'க்கு ஒரு கேள்வி, 15 வருடங்கள் கழித்தும் அதே கேள்வி!" - #15YearsOfOldBoy
``15 வருடமாக `ஓல்டு பாய்'க்கு ஒரு கேள்வி, 15 வருடங்கள் கழித்தும் அதே கேள்வி!" - #15YearsOfOldBoy

`ஓல்டு பாய்' படம் வெளியாகி, 15 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இப்படம் குறித்த சிறப்புக் கட்டுரை இது.

`ஓல்டு பாய்' படத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது எங்கு முடிப்பது எனத் தெரியவில்லை. படத்தின் நீளம் என்னவோ இரண்டு மணி நேரம்தான். ஆனால், படம் கொடுக்கும் தாக்கம் குறைந்தது இரண்டு நாளாவது இருக்கும். உலக சினிமா விரும்பிகள் கட்டாயம் இப்படத்தைக் கடந்துதான் வந்திருப்பார்கள். இப்படியான `கல்ட்' வகை சினிமா வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. இந்தப் படத்தைப் பற்றிய ஒரு சிறப்புப் பகிர்வு. 

நம் வாழ்வில் ஏனென்றே தெரியாமல் நடந்திருக்கும் ஒரு புதிர் சம்பவத்துக்குப் பின்னால் இருக்கும் கதையையும், விடையையும் தேடித் திரிவதில் மனம், இனம்புரியா ஒரு  மோட்ச நிலையை அடையும். அந்தத் தேடுதலில் ஒரு திருப்தியும், திகிலும் இருக்கும். பெயர் தெரியாத நம்பரிலிருந்து `ஹாய்' மெசேஜ் வரும்போது மனம் ஏதோவொரு பரவச நிலையை அடையுமல்லவா... அதிலிருந்து ஆரம்பமாகிறது மனிதனின் ஆவலும், அதற்கான தேடலும். அதேபோல், வன்முறையும், பழிவாங்கலும் மனிதனின் ரத்தத்திலே ஊறிப்போன ஒன்று. என்னதான் அகிம்சை, ஆன்மிகம், அமைதி என `பீஸ்' மோடில் இருந்தாலும், நம் நரம்பில்லா நாக்கில்தான் எத்தனை  பேரை வசைபாடியிருப்போம்; கற்பனையில் எத்தனை உயிரைக் கத்தியால் குத்திக் கிழித்திருப்போம். இந்த இரு உணர்வையும் ஒரே நேர் கோட்டில் சந்திக்க வைத்து அதைப் படமாக நமக்கு வழங்கியிருக்கிறார், இயக்குநர் பார்க் சான்-வூக். படத்தின் கதையெனப் பார்த்தால், சர்வ சாதாரண ஒரு வரிதான். அதைச் சொல்லிய விதத்திலும், படமாக்கிய விதத்திலும்தான் `ஓல்டு பாய்' அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது. இதனால்தான் 15 வருடங்கள் கழித்தும் இப்படத்தைக் கொண்டாடுகிறோம். 

`ஓல்டு பாய்' உளவியல் ரீதியாகவும் பெரிய தாக்கத்தை உண்டாக்கும். அதற்காகப் பல்வேறு காட்சியமைப்புகளைப் புகுத்தியிருக்கிறார், இயக்குநர். படத்தின் வசனங்களையும், அதற்குப் பின்னால் புதைந்திருக்கும் அர்த்தங்களையும் நம் அன்றாட வாழ்வில் பொருத்திப் பார்க்கலாம். `நீ சிரித்தால் இந்த உலகமே உன்னுடன் சேர்ந்து சிரிக்கும்; அழுதால் கடைசி வரை நீ மட்டும்தான் அழவேண்டும்'. இந்த ரகத்தில்தான் படம் நெடுக வசனங்கள் இடம்பெற்றிருக்கும். நம் வாழ்க்கையில் காரணமில்லாமல் ஏதோவொரு சம்பவம் நிகழ்ந்தால், `அது தற்செயலாகத்தான் நடந்தது' என்று தெரிந்துகொள்ளும் வரை மனம் ஏதோவொரு தேடுதலை நோக்கி ஓடும். இது மனித இயல்பு. இதே, தற்செயலாக நிகழ்ந்த ஒரு சாதாரண சம்பவத்துப் பின்னால், அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒரு விஷயம் காரணமாக இருந்தால், அதே மனதின் ஓட்டம் எவ்வளவு வேகமாக இருக்கும்?! `ஓல்டு பாய்' படத்தின் கதாநாயகன் ஓதேசு இவ்வாறுதான் மாட்டுகிறான், விடை தேடி ஓடுகிறான், நம்மையும் ஓட விடுகிறான். அந்த ஓட்டத்தின் பாதையில் குருதியும், குரோதமும் மட்டுமே படர்ந்திருக்கிறது. இதனால்தான், இப்படம் உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. குறிப்பாக, அந்த ஐந்து நிமிடச் சண்டைக் காட்சி. 

இயக்குநர், திரைக்கதையை நேர்த்தியாகப் பின்னியதைப் போல், டெக்னிக்கல் விஷயத்தையும் அவ்வளவு நுட்பமாகக் கையாண்டிருக்கிறார். 15 வருட கால ஓட்டத்தை, ஓதேசு அறையில் இருக்கும் ஒரு தொலைக்காட்சி கடத்திவிட்டுச் செல்கிறது. படத்தின் கதாநாயகனின் நிஜப்பெயர், சோய் மின் சிக். அவரைப் பற்றியே பக்கம் பக்கமாக எழுதலாம். கலைக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் சொற்பக் கலைஞர்களில் ஒருவர். இவரின் சாகசங்கள், உயரமான கட்டங்களிலிருந்து குதிப்பதோ, பைக்கில் வீலிங் செய்வதோ, சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பதோ என்பதெல்லாம் இல்லை. எவரும் தேர்ந்தெடுக்கத் தயங்கும் கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் தங்கி, வாழ்ந்து, நடித்து முடித்துவிட்டுதான் வேறு வேலையையே பார்ப்பார். `ஓல்டு பாய்' படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டுமென்பதற்காக, அதன் தாக்கத்தை நேரடியாக ரசிகர்கள் உணரவேண்டும் என்பதற்காக, உயிருடன் இருக்கும் ஆக்டோபஸை உண்மையாகவே சாப்பிட்டார். இப்படி சைக்கோத்தனமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் இவரை, நேரில் பார்த்தால் நடுங்கி ஓடும் சில கொரியர்களும் உண்டு. சுருங்கச் சொன்னால், இவர் ஒரு நடிப்பு ராட்சசன்.

படம் பார்த்து முடித்த பிறகு, இதில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்ற கேள்விகூட உங்களுக்கு எழலாம். `கறுப்பு - வெள்ளை' கான்செப்டிற்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் இந்தப் படம்தான். எதிர்பார்க்காமல் நடக்கும் திரைக்கதையை முடிச்சுப் போட்டு, மூன்று பரிமாணத்தில் படத்தின் கதை பயணிக்கும். ஏன், எதற்கு என்று தெரியாமலே கொடுமையான தண்டனையை ஒருவன் அனுபவிக்கிறான். 15 வருடங்கள் கழித்து வெளியே வரும் அவன், அதற்கான தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கிறான், 15 வருடங்கள் தனக்குத்தானே கேட்டுக்கொண்ட ஒரே கேள்விக்குப் பதில் தெரிந்ததும் கூனிக் குறுகி நிற்கிறான். இதில், தற்செயலாக அமைந்த விஷயம் இன்றோடு படம் வெளிவந்தும் 15 ஆண்டுகள் ஆகின. 

படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்தும், படத்தைப் பற்றி வர்ணிக்கும்போது படத்தில் எழும் `அந்த' 15 ஆண்டுக்கான கேள்வியின் விடையை முழுமையாகச் சொல்ல மனம் ஒத்துழைக்கவில்லை. ஒரு வரியில் `இதற்காகத்தான்' என்று எழுதிவிட்டுப் போகலாம்தான். அப்படிச் செய்தால், இந்தப் படத்துக்கும், இப்படத்தைப் பார்த்துக் கொண்டாடிய நமது ரசனைக்கும் செய்யும் துரோகமாக இருக்கும். ஏற்கெனவே இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் மீண்டும் பார்த்து, இந்த நாளைக் கொண்டாடுங்கள். இதுவரை பார்க்காதவர்கள் இதிலிருந்து ஆரம்பித்து உங்கள் உலக சினிமா பயணத்தைத் தொடங்குங்கள். 

அடுத்த கட்டுரைக்கு