Published:Updated:

மொத்தமாக முடங்கியதா கல்பாக்கம் அணு உலைகள்?! - அதிர்ச்சி கொடுத்த அரசு இணையதளம் 

கதிர்வீச்சு கசிவுக்கான காரணத்தைக் கண்டறிய மும்பைக்கு Q9, O9 சேனல் மாதிரிகள் அனுப்பப்பட்டாலும் கதிர்வீச்சு பாதிப்புக்குக் காரணமான விஷயங்கள் எதுவும் அறிக்கையாக வெளிவரவில்லை. அறிக்கையே வராத நிலையில் நவம்பர் மாதம் 18-ம் தேதி அணு உலை செயல்படும் என அதிகாரிகள் சொல்ல வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

மொத்தமாக முடங்கியதா கல்பாக்கம் அணு உலைகள்?! - அதிர்ச்சி கொடுத்த அரசு இணையதளம் 
மொத்தமாக முடங்கியதா கல்பாக்கம் அணு உலைகள்?! - அதிர்ச்சி கொடுத்த அரசு இணையதளம் 

சென்னை அணுமின் நிலையத்தின் இரண்டு அலகுகளும் மூடப்பட்டுவிட்டதாக, அன்றாட நிலவரத்தைத் தெரிவிக்கும் இணையதளம் (SRLDC) அறிவித்துள்ளது. ``500 நாள்களாகத் தொடர்ந்து இயங்கிய நிலையில், இரண்டாவது அணுஉலையும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கான காரணத்தை விளக்குவதற்கு நிர்வாகம் தயாராக இல்லை" என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். 

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 220 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 160 முதல் 170 மெகாவாட் மின்சாரம் வரையில் ஒவ்வோர் அலகிலும் மின் உற்பத்தி தயாரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஜனவரி 8-ம் தேதி அன்று அணுமின் நிலையம்-1-ல் குளிர்விக்கப் பயன்படும் தண்ணீர் குழாயில் கசிவு ஏற்பட்டதாகக் கூறி, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ``வழக்கமாக ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறு போல் அல்லாமல், இந்த முறை அணுக் கதிர் வீச்சின் அளவு அதிகமானதாலேயே அணு உலை நிறுத்தப்பட்டுவிட்டது" எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில், பராமரிப்புக் காரணங்களுக்காக நேற்று அணுமின் நிலையம் இரண்டும் மூடப்பட்டுவிட்டதாக எஸ்.ஆர்.எல்.டி.சி இணையதளம் தெரிவிக்கிறது. அணு உலைகளின் அன்றாட செயல்பாடுகளைத் தெரிவிக்கும் இணையதளம் இது. இந்தத் தகவல், சூழலியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

``சென்னை அணுமின் நிலையம்-1 கடந்த ஜனவரி 8-ம் தேதி அன்று நிறுத்தப்பட்டது. எதிர்பாராத காரணங்களுக்காகவும் கதிர்வீச்சு கசிவின் காரணமாகவும் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்தச் சம்பவம் நடந்து பத்து மாதங்களுக்கு மேல் ஆகியும் கதிர்வீச்சு கசிவுக்கான காரணத்தை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை. `இந்த அணு உலையானது 18.11.2018 அன்று திறக்கப்படும்' என எஸ்.ஆர்.எல்.டி.சி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வந்து மூன்று நாள்களாகிவிட்டன. இந்த நிமிடம் வரையில் அணுஉலைகள் செயல்படவில்லை" என விவரித்த சூழலியல் மருத்துவர்களுக்கான சங்கத்தின் புகழேந்தி, தொடர்ந்து அணுமின் நிலைய நிர்வாகத்தின் குளறுபடிகளைப் பட்டியலிட்டார். 

``கதிர்வீச்சு கசிவுக்கான காரணத்தைக் கண்டறிய மும்பைக்கு Q9, O9 சேனல் மாதிரிகள் அனுப்பப்பட்டாலும் கதிர்வீச்சு பாதிப்புக்குக் காரணமான விஷயங்கள் எதுவும் அறிக்கையாக வெளிவரவில்லை. அறிக்கையே வராத நிலையில், நவம்பர் மாதம் 18-ம் தேதி அணுஉலை செயல்படும் என அதிகாரிகள் சொல்ல வேண்டிய அவசியம் ஏன் வந்தது. சென்னை அணுமின் நிலையம் இரண்டும் நேற்று பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுவிட்டது. 500 நாள்களாகத் தொடர்ந்து இயங்கிய நிலையில், இந்த உலையிலும் கேலண்டரியா பகுதியில் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டதாகத் தகவல் வந்துள்ளது. இதுகுறித்து நிர்வாகம் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. `பல மாதங்களுக்கு மேலாக எதிர்பாராத காரணங்களுக்காக சென்னை அணுமின் நிலையம் 1 நிறுத்தப்பட்டுள்ளது' என்பதை மாற்றி 'திட்டமிட்டே அணுஉலை நிறுத்தப்பட்டதாக' இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர். இப்படி வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், `கல்பாக்கத்தில் புதிதாக அமைய உள்ள PFBR அணுஉலையானது 2019 ஜனவரியில் இயக்கப்படும்' என அணுமின் நிலைய இயக்குநர் பாதுரி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

`இது இப்போதைக்குச் சாத்தியமில்லை' என்பது அதிகாரிகளுக்குத் தெரியும். காரணம், சோதனையின்போது எதிர்பாராத இரண்டு பிரச்னைகளை PFBR அணுஉலை சந்தித்ததுதான். `இதற்கான பரிசோதனைகள் முடியவே பல மாதங்கள் ஆகும்' என்பதை அணுஉலையில் பணியாற்றும் சில விஞ்ஞானிகளே தெரிவிக்கின்றனர். அப்படியிருக்கும்போது, நடைமுறை சாத்தியங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல் அரசிடம் இருந்து நிதி பெறுவதற்காகவே இதுபோன்ற தகவல்களை அதிகாரிகள் தெரிவிப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. பல மாதங்கள் நிறுத்தப்பட்டிருந்த கூடங்குளம் அணுஉலையும் இயக்கப்பட்ட ஓரிரு நாள்களிலேயே தொழில்நுட்ப பிரச்னை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தைச் சொல்லவும் விஞ்ஞானிகள் முன்வரவில்லை. இந்த நிலையில், கல்பாக்கம் அணுஉலையில் கசிந்துள்ள கதிர்வீச்சுகள் சுற்றுப்புற மக்களை வந்தடையும் நிலையில், அரசியல், சாதி, மத வேறுபாடுகளைக் களைந்து மக்கள் பாதுகாப்பு என்ற புள்ளியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் தீர்வை நோக்கிச் செல்ல முடியும்" என்றார் வேதனையுடன்.  

இதுதொடர்பாக அணுமின் நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாமல் நம்மிடம் பேசியவர், ``சென்னை அணுமின் நிலையம் (MAPS) உலக நாடுகளில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு இணையான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. பல வருடங்களாகச் சிறப்பாக இயங்கி வரும் இந்த அணுமின் நிலையம், கடந்த நிதி ஆண்டில் அதிக அளவில் மின்சாரம் தயாரித்து சாதனை படைத்தது. அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எப்பொழுதும் மிகவும் பாதுகாப்புடன் இயங்கும் நிலையமாக இருந்து வருகிறது. ஊழியர்களின் கதிர்வீச்சு அளவு வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு மிகவும் குறைவாகவே உள்ளது. பொதுமக்களுக்குத் தகவல் அளிப்பதில் வெளிப்படைத்தன்மையுடன் இயங்கி வருகிறோம். அணுமின் நிலைய உற்பத்தி நிறுத்தம் எனப் பேசப்படுவதில் உண்மை இல்லை. வழக்கமாக நடைபெறும் பராமரிப்புப் பணிகள்தான் நடந்து வருகின்றன" என்றார் பொறுமையாக.