Published:Updated:

"ஒன்பது வயசு அனுபவத்துக்குப் பிறகு கோயிலுக்கே போறதில்லை...!"- அனுஹாசன் #WhatSpiritualityMeansToMe

"ஒன்பது வயசு அனுபவத்துக்குப் பிறகு கோயிலுக்கே போறதில்லை...!"- அனுஹாசன் #WhatSpiritualityMeansToMe
"ஒன்பது வயசு அனுபவத்துக்குப் பிறகு கோயிலுக்கே போறதில்லை...!"- அனுஹாசன் #WhatSpiritualityMeansToMe

வருக்கும் கெடுதல் நினைக்காம எல்லோரிடமும் அன்பா இருக்கிறதுதான் சிறந்த ஆன்மிகம்'' - பளீரெனப் புன்னகைத்துச் சொல்கிறார் அனுஹாசன். சொல்லும் கருத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்லக்கூடியவர். அவரது ஆன்மிகம் பற்றி அவரிடம் பேசினோம். 

``கடவுள் நம்பிக்கைங்கிறது ரொம்பவும் பர்சனலான விஷயம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதத்துல மாறுபடும். என் அம்மா, அப்பா இரண்டு பேருக்குமே கடவுள் நம்பிக்கை அதிகம். அடிக்கடி கோயிலுக்குப் போயிட்டு வருவாங்க. வீட்டுலயும் பூஜையறை இருக்கு. தினமும் பூஜை, தூப தீப ஆராதனைகளும் நடக்கும். ஆனா, நான் அதுல பெரிய அளவுல கலந்துக்க மாட்டேன். 

எனக்கு ஒன்பது வயசு இருக்கும். எங்க குடும்பத்துல உள்ளவங்களோட கோயிலுக்குப் போயிருந்தேன். கூட்ட நெரிசல்ல அப்போ ஒருத்தன் என்கிட்ட `மிஸ்பிகேவ்' பண்ணிட்டான்.

`ச்சே... இந்த இடம் கடவுள் இருக்கிற இடம். எவ்வளவு புனிதமான இடம். இங்கே கூட இந்த மாதிரி எண்ணங்களோட வர்றாங்களே'னு அப்போதிருந்தே நான் கோயிலுக்குப் போறதில்லனு முடிவு பண்ணிட்டேன். 

 இதுல என்ன ஆச்சர்யமான விஷயம்னா அம்மா, அப்பா ரெண்டு பேருமே `நான் கோயிலுக்கு வரலை'னு சொன்னதையும் `வந்தாலும் சாமி கும்பிட மாட்டேன்னு' சொன்னதையும் அவங்க பெருசா எடுத்துக்கலை. 

`உன்னோட நம்பிக்கையில நாங்க தலையிட மாட்டோம்'னு சொல்லிட்டாங்க. அவங்ககூட கோயிலுக்குப் போனால்கூட காரிலேயே இருந்துடுவேன். 

எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கா, இல்லையாங்கிற கேள்வி வந்ததே இல்ல. என்ன காரணம்னா எனக்கு என்ன பிரச்னை வந்தாலும், அதை நான்தான் தீர்க்கமுடியும். நான்தான் தீர்க்கணும். அதுக்காக அதைப்போய் கடவுள் கிட்ட கொடுத்தோ இல்ல, இதுக்கு அடுத்தவங்க உதவி பண்ணுவாங்கன்னோ இருக்கமாட்டேன்.

சிலபேர் வருஷம் பூரா அவங்க இஷ்டத்துக்கு இருந்துட்டு பிரச்னைனு வரும்போது, `ஐயோ அம்மா, கடவுளே நீதான் தீர்த்துவைக்கணும்'னு சொல்வாங்க அதுல எனக்கு நம்பிக்கை இல்ல. அதனால `நீ நாத்திகவாதியா'னு கேட்டா, அதுக்கும் நான் நிச்சயம் `இல்லே'னு சொல்வேன். இந்தப் பிரபஞ்சம் முழுவதுள்ள சக்தியில் நாம் ஒரு சிறு பொறி. நம்மக்குள்ளயும் அந்த அபாரமான சக்தி இருக்கு. அந்த சக்தி உங்கக்கிட்டயும் இருக்கு. அதனால, நானும் கடவுள், நீங்களும் கடவுள்... அதுதான் உண்மை... அப்படித்தான் நான் பார்க்கிறேன்.

எல்லா மதங்களுமே, `நல்லதே நினை, நல்லதே செய், நல்லதே நடக்கும்'கிறதைத்தான் சொல்லுது. அதைத்தான் நான் கெட்டியா பிடிச்சிக்கிட்டு ஃபாலோ பண்றேன். அப்படியே அன்பா எல்லோர்கிட்டயும் இருந்துக்கிட்டு நம்மால முடிஞ்ச அளவு அடுத்தவங்களுக்கு உதவி பண்ணினா நமக்கும் நல்லது நிச்சயம் நடக்கும். 

அப்படி நடக்காம கெட்டது நடந்ததுனா, நமக்கொரு பாடத்தை, நமக்கு ஒரு அனுபவத்தைக் கொடுக்கத்தான் அப்படி நடந்துச்சுனு நினைச்சுக்குவேன்.

கடவுள் நம்பிக்கை இல்லாததால எனக்கு எந்தத் தொந்தரவும் வந்ததில்ல. `கடவுள் நம்பிக்கை உள்ளவன் தன் பிரச்னைகளை கடவுள்கிட்ட கொடுத்துட்டு நிம்மதியாத் தூங்குவான். ஆனா, கடவுள் நம்பிக்கையில்லாமல் இருப்பவன் வாழ்க்கையின் பிரச்னைகளை தானே சுமந்துகொண்டு தூக்கமில்லாம கஷ்டப்படுவான்'னு சொல்வார் எங்க அப்பா.    

ஆனா, எனக்கு அந்த மாதிரி எந்தப் பிரச்னையும் வந்ததில்ல. வந்தாலும், அதை நானே தீர்க்க முடியும்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. அதாவது, `தட்டுங்கள் திறக்கப்படும்'னு கிறிஸ்துவத்துல சொல்வாங்க இல்லையா? 

நாம எந்த ஒரு வார்த்தையைச் சொன்னாலும் மேலே இருக்கும் வானவர்கள், `ததாஸ்து'னு சொல்லுவாங்கனு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. `ததாஸ்து'னா `அப்படியே நடக்கட்டும்'னு பொருள். அந்தத் தத்துவம் எனக்கு ரொம்பவும் பிடிச்சது. `இந்தப் பிரபஞ்சம் மிகவும் இரக்கமுள்ளது'னு சொல்லுவாங்க. அதை நான் முழுமையா நம்புறேன்.

அதுக்காக கோயிலுக்குப்போறது, விரதம் இருக்கிறதெல்லாம் தப்புனு சொல்லமாட்டேன். அதுக்காக, `நாத்திகவாதம்தான் சரி'னு சொல்றதையும் நான் ஏத்துக்கமாட்டேன். அவரவர் வாழ்க்கையை அவரவர் வழியில் பயணிக்க, எல்லாருக்கும் இங்கு உரிமை வழங்கப்பட்டிருக்கு. 

இன்னும் சொல்லப்போனால் ஆன்மிகம்கிறது முழுக்க முழுக்க ஒருவருடைய பர்சனலான விஷயம். நம்முடைய செயல் இங்கு என்னவா இருக்குன்னா எல்லோர்கிட்டேயும் அன்பா இருங்கிறதுதான். எவருக்கும் கெடுதல் நினைக்காம எல்லோரிடமும் அன்பா இருக்கிறதைத்தான் சிறந்த ஆன்மிகம்னு நினைக்கிறேன்''எனக் கூறுகிறார் அனுஹாசன்.