Published:Updated:

ஆக்ச்சுவலி மியூசிக்கலி!

ப.சூரியராஜ் - ஓவியங்கள்: ரமணன்

பிரீமியம் ஸ்டோரி

ரு காலத்தில் கரப்பான் பூச்சியில் ஆரம்பித்து காண்டாமிருகம் வரை கண்ணில் கண்டதையெல்லாம் கேமராவில் க்ளிக்கி, போட்டோவில் இருப்பது காண்டாமிருகமா, காட்டுப்பன்றியா என கன்ஃப்யூஸ் ஆகும் அளவுக்கு வாட்டர் மார்க்கால் பூசி மெழுகி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். பிறகு, ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயமும் மீம் க்ரியேட் செய்யக் கிளம்பியது. ஊருக்குள்  இன்ஜினீயர்களை விட, மீம் க்ரியேட்டர்களின் எண்ணிக்கை அதிகமாக, டேபிள் ஃபேனைப் போல டப்ஸ்மாஷ் பக்கம் தலையைத் திருப்பினார்கள். அதுவும் ஒரு கட்டத்தில் வழக்கொழிந்துபோய்விட, அதை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு இப்போது மியூசிக்கலியை இன்ஸ்டால் செய்திருக்கிறார்கள். நம் மக்கள் மியூசிக்கலி என்ற பெயரில் என்னென்ன காமெடி கதகளி ஆடுகிறார்கள் பார்ப்போம்... ஸ்டார்ட் மீஜிக்!

தான் குடிப்பது மட்டுமல்லாது, உடன் இருப்பவர்கள் வாயிலும் பாயாசத்தை ஊற்றுவதுதான் மியூசிக்கலியன்களின் வேலை.வீட்டில் வெற்றிலை இடித்துக் கொண்டிருக்கும் பாட்டி, சுருளிராஜன் காமெடி பார்த்துக்கொண்டிருக்கும் தாத்தா, நெய் பிஸ்கெட்டைக் கடித்துக்கொண்டி ருக்கும் நாய் எனப் பார பட்சம் பார்க்கா மல் வாயில் பாயாசத்தை ஊற்றி க்கொண்டிரு க்கிறார்கள். `சம்போ சிவ சம்போ’ பாடலுக்கு, தள்ளாத வயதிலிருக்கும் பாட்டியைத் தரதரவென இழுத்துவந்து கட்டை வண்டியில் ஏற்றுவது, செயின், பர்ஸ், சட்டை, உள் பனியன், பேன்ட் என அத்தனையும் கழற்றி விட்டு `போ... போ...’ என ஆக்ரோஷமாவதென இவர்களின் அழும்புக்கு அளவேயில்லையா நாயமாரே...

ஆக்ச்சுவலி மியூசிக்கலி!

மியூசிக்கலியில் இருக்கும் பலர், நெட்டிசன்களின் முன் குறுக்க மறுக்க ஓடிக் கிறுக்குப்பிடிக்க வைக்கிறார்கள் என்றால், இன்னும் சிலர் மியூசிக்கலியில் இருப்பவர்களுக்கே மரண பயத்தைக் காட்டிவிடுகிறார்கள். ‘சித்ரா தேவி’ அக்காவுடன் சேர்ந்து டூயட் பாடுபவர்களோ  என்னும்படி, `மிருதங்க சக்ரவர்த்தி’ சிவாஜியைப்போல் ரத்தம் ரத்தமாய்க் கக்குகிறார்கள் அல்லது `வின்னர்’ வடிவேலுவைப் போல் வேட்டியை அவிழ்த்துவிட்டு குளம், குட்டைக்குள் குதித்துவிடுகிறார்கள். அதிலும் `மாலா அக்கா... ஐ லவ் யு’ என அந்த மீசைக்கார அங்கிள் பாசம் காட்டும் வீடியோவை மிஸ் பண்ணிடாதீக, அப்புறம் வருத்தப்படுவீங்க! `சந்திரமுகி’ ஜோதிகா கெட்டப்பில் வந்து ஆடுவது, `காஞ்சனா’ சரத்குமார் கெட்டப்பில் வந்து ஓடுவது எனக் கதாபாத்திரமாகவே மாறியும் சிலர் கலவரம் பண்ணுவார்கள். ஆமாம் மக்களே, மியூசிக்கலிக்குள் காலடி எடுத்து வைப்பதென்பது கிட்டதட்ட கலவர பூமியில் காற்றுவாங்கக் கிளம்புவதைப் போலத்தான்!

சாத்வீகம், பிரச்சோதகம், பயானகம் என அனைத்துவகை வீடியோக்களும் மியூசிக்கலியில் உண்டு. இந்தச் சாத்வீக வீடியோக்களைப் பார்த்தால் சிற்றெறும்பு சீண்டியது போல் இருக்கும், பெரிதாய் பாதிப்பு இருக்காது. ஆனால் பிரச்சோதக, பயானக வீடியோக்களைப் பார்த்தால் கட்டெறும்பு கடித்ததுபோல் அல்ல காட்டெருமையே அடித்ததுபோல் இருக்கும். பால்குடி மறந்து ஒரு வருடமே ஆன குழந்தைகளின் உடைகளைக் கைமாத்தாய் வாங்கிப்போட்டுக்கொண்டு சிலர் செய்யும் மியூசிக்கலிகளைப் பார்த்தால் தலையே சுற்றிவிடும். குழந்தைகள் உலாவும் இடம், இப்படியா பிஞ்சுகளின் மனதில் நஞ்சினை விதைக்க வேண்டும். ச்சே... அதுவும் அவர்களின் ஆடையையே கடன் வாங்கிப்போட்டுக்கொண்டு. இன்னும் சிலர் ஒருபடி மேலேபோய், பலான பலான பாடல், வசனங்களை எல்லாம் கில்பான்ஸியாக மியூசிக்கலி பண்ணுகிறார்கள். அடல்ட் மேட்டர்களை ஆஃப் பண்ணுங்க மக்களே!

ஆனால், எல்லா இடத்திலும் வகையாய் வகை வகையாய் மொக்கை வாங்கும் சிங்கிள்களின் நிலை, ஏனோ மியூசிக்க லியிலும் அப்படியே தொடர்கிறது. மியூசிக்கலியில் கூட டூயட் ஆட ஆள் கிடைக்காமல், சிங்கிளாய் ஜிம்மி, டாமியோடு ஜாஸ், சல்சா ஆடிக்கொண்டி ருக்கிறார்கள். காலக் கொடுமைடா கதிரவா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு