Published:Updated:

டி-20 உலகக்கோப்பை... இந்தியா Vs இங்கிலாந்து... மூன்று முக்கிய `ஒன்-ஆன்-ஒன்’ மோதல்கள்!

டி-20  உலகக்கோப்பை... இந்தியா Vs இங்கிலாந்து... மூன்று முக்கிய `ஒன்-ஆன்-ஒன்’ மோதல்கள்!
டி-20 உலகக்கோப்பை... இந்தியா Vs இங்கிலாந்து... மூன்று முக்கிய `ஒன்-ஆன்-ஒன்’ மோதல்கள்!

ரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் மகளிர் டி-20 உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றை எட்டியுள்ளது. மூன்றாவது முறையாக அரை இறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. 2017 ஐ.சி.சி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணி, 9 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை நழுவவிட்டது. இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு. டி-20 அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா இந்திய அணி?

நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலியா என க்ரூப் சுற்றில் மோதிய நான்கு போட்டிகளிலும் வெற்றி. ஸ்மிரிதி, மித்தாலி, ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமிமா ராட்ரிக்யூஸ் அடங்கிய பேட்டிங் லைன் - அப்,  பூனம் யாதவ், ராதா யாதவ் சுழற்பந்துவீச்சு என எப்போதையும் விட பலமாக இருக்கிறது இந்திய அணி. இங்கிலாந்து அணியோ, ஒரு நாள் உலகக் கோப்பையோடு சேர்த்து டி-20 கோப்பையையும் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் அரை இறுதியை எதிர்கொள்ளும். பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால், எதிர் அணியின் பலம், பலவீனங்களைத் தெரிந்து விளையாடுவது வெற்றியை எளிதாக்கும். 2018 மகளிர் டி-20 அரை இறுதியில் கவனிக்க வேண்டிய மூன்று முக்கிய `ஒன்-ஆன்-ஒன் பேட்டில்'கள்.

ஸ்ம்ரிதி மந்தானா vs ஷ்ரப்ஸோல்

உலகக் கோப்பையின் சரியான நேரத்தில் அதிரடி காட்டிய ஸ்மிரிதி மந்தானா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான க்ரூப் போட்டியில் 55 பந்துகளில் 83 ரன்கள் குவித்து வெளுத்து வாங்கினார். ஸ்மிரிதியின் பங்கு இந்திய அணியின் பேட்டிங்குக்கு மிக முக்கியமானது. பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்த மிகப்பெரிய ஸ்கோர் அவசியம். அதற்கு இவர் நல்ல தொடக்கம் கொடுத்தாகவேண்டும். மடமடவென அடித்து ஆடுவதில் கில்லியான ஸ்மிரிதி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்த்து இன்னிங்ஸ் பில்ட் செய்வது அவசியம். நாக் அவுட் சுற்றுகளில், அதிரடி ஆட்டத்தைவிடவும் இன்னிங்ஸ் பில்ட் செய்வது முக்கியம் என்பதால், ஓப்பனிங்கில் இறங்கும் ஸ்மிரிதியின் ரன்கள் அணிக்கு கூடுதல் ப்ளஸ். 

இங்கிலாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் ஷ்ரப்ஸோலின் பெளலிங் கவனிக்க வைக்கும்படி இருந்தது. வேகப்பந்து வீச்சாளர் கேத்ரின் ப்ரன்ட் அணியில் இடம் பெறாத நிலையில், ஷ்ரப்ஸோல் அணிக்கு பலம் சேர்க்கிறார். குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட்டுகள் கைப்பற்றுபவர் ஷ்ரப்ஸோல். பேட்டிங்கில் சொதப்பும் இங்கிலாந்துக்கு, இந்தியாவின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே வெற்றி வாய்ப்பு அதிகமாகும். டாப் ஆர்டரை காலி செய்து, இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க ஷ்ருப்ஸோல் திட்டமிடுவார். பவர்பிளே ஓவர்களில் ஸ்ரப்ஸோல் பந்துவீச்சை, மந்தனா எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் இந்திய ஸ்கோருக்கான அஸ்திவாரத்தை நிர்ணயிக்கும். 

ராதா யாதவ் vs டானியல் வியாட்

இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அரை சதம், டி 20-யில் ஸ்ட்ரைக் ரேட் 125.70, ஓப்பனிங் பேட்ஸ்வுமன். இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமான டானியல் வியாட் பேட்டிங்கில் மிரட்டினால் மட்டுமே, அணிக்கு ரன்கள் குவியும். டி-20 க்ரூப் போட்டிகளில் டானியல் சோபிக்காதது இங்கிலாந்துக்கு மைனஸ் என்றாலும், நாக் அவுட் சுற்றில் ஃபார்முக்கு வர வேண்டிய கட்டாயம். பயிற்சி ஆட்டத்தில் 5-வது விக்கெட் சரியும் வரை களத்தில் நின்ற டானியல், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்கும் அனுபவம் பெற்றிருப்பது ப்ளஸ். ஒரு புறம் 2018 டி20-யில் இந்தியாவுக்கு அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பூனம் யாதவ் (8) சிறப்பாக விளையாடி வந்தாலும், பவர் ப்ளே ஓவர்களில் எதிரணியின் ரன்களை முடக்குவதோடு, பார்ட்னர்ஷிப் உடைப்பதிலும் சிறப்பாகச் செயல்படுகிறார் ராதா யாதவ். ராதாவின் சுழலை வியாட் எப்படிக் கையாள்கிறார் என்பதுதான் இங்கிலாந்து இன்னிங்ஸை நிர்ணயிக்கும்.

ஹர்மன்ப்ரீத் கவுர் vs ஹீதர் நைட்

வங்கதேசம், தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டியில் 100 ரன்களும் குறைவான இலக்கை சேஸிங் செய்த இங்கிலாந்து அணி, இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த இங்கிலாந்து, போராடி 115 ரன்கள் குவித்தது. அணியின் பேட்டிங் லைன்-அப் இன்னும் முழுமையாகக் `கிளிக்’காகவில்லை. ரன் குவிப்புக்கு நெருக்கடி தரும் இந்தியாவின் சுழற்பந்துவீச்சை சமாளிக்கும் யுக்தியைக் கையாள்வது கேப்டன் ஹீதர் நைட்டுக்கு சவாலாக அமையும். இந்திய ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தும் மிடில் ஓவர்களில், அணியின் ரன்ரேட்டை சீராக்க வேண்டிய மிகமுக்கிய வேலையை மிடில் ஆர்டர் பேட்ஸ்வுமனான நைட் செய்தாக வேண்டும்.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், சீனியர் வீராங்கனை மித்தாலி ராஜை இறக்காமல், பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்தார் ஹர்மன். அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஓப்பனிங் இறங்கி அரைசதம் அடித்திருந்தாலும், மிகவும் மெதுவாக ஆடினார் மித்தாலி. அதனால் நாளைய போட்டியில், அவரது பேட்டிங் பொசிஷன் இந்தியாவின் ரன் குவிப்பில் பெரிய தாக்கம் ஏற்படும். ஹர்மன் மிகவும் தைரியமாக முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. நியூசிலாந்து, அயர்லாந்து போட்டிகளில் ரன் ரேட்டை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்துடனேயே ஹர்மன் களமிறங்கினார். அந்த நெருக்கடியை சமாளிப்பதும் அவசியம். இரு கேப்டன்களின் வியூகமும் முடிவுகளும் நாளைய போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

இந்த மூன்று யுத்தங்கள் மட்டுமே இந்தப் போட்டியை நிர்ணயித்துவிடப் போவதில்லை. இவை இந்தப் போட்டியின் முக்கியமான அம்சங்கள். இவர்கள் இல்லாமல், நடாலி ஷிவர், ஜெமிமா ராட்ரிக்யூஸ், டேமி பௌமன்ட், ஹேமலதா என ஒவ்வொருவரின் செயல்பாடும் இந்த ஆட்டத்தை மாற்றக்கூடும். ஏனெனில், இது டி-20 போட்டி. ஓரிரு ஓவர்கள் ஓர் ஆட்டத்தை மாற்றிவிடும். அந்தத் தருணத்தை யார் சரியாகப் பயன்படுத்துகிறார்களோ, அவர்களே இறுதிப் போட்டிக்குள் நுழைவார்கள்!