Published:Updated:

“மியூசிக்கலி பண்றதுக்காக குழந்தைகளை வளர்க்காதீங்க” ஆதங்கப்படும் பேச்சாளர்

``குழந்தைனாலே தெளிவில்லாமப் பேசுறதும் திருதிருன்னு முழிக்கிறதும்தான் அழகு. மேடையில ஏத்திவிட்டா அது சொதப்பணும். கூட்டத்துல இருக்கிற அம்மாவைத் தேடி அழணும். அதை விட்டுட்டு மேடை ஏறினதும் பத்மினி மாதிரி நடனம் ஆடணும் என்றெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது”

“மியூசிக்கலி பண்றதுக்காக குழந்தைகளை வளர்க்காதீங்க” ஆதங்கப்படும் பேச்சாளர்
“மியூசிக்கலி பண்றதுக்காக குழந்தைகளை வளர்க்காதீங்க” ஆதங்கப்படும் பேச்சாளர்

 ``டிக்காம குணமா வாயில சொல்லணும்” ஓரிரு மாதங்களுக்கு முன், திருப்பூரைச் சேர்ந்த சுட்டி ஸ்மித்திகாவின் டயலாக் சமூக ஊடகங்களில் வைரல். அன்றிலிருந்து இப்போதுவரை பல குழந்தைகள் அழுது அடம்பிடிக்கும் காட்சிகளும் பெற்றோரிடம் வயதுக்கு மீறிய குணாதிசயங்களோடு பேசும் வீடியோக்களும்தான் ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் எங்கும் பரவிக்கிடக்கின்றன. போதாத குறைக்கு மியூசிக்கலி ஆப், நம் மக்களைப் பாடாய்ப்படுத்தி எடுக்கிறது. வரைமுறையின்றி குழந்தைகளை வைத்துப் பெற்றோர்கள் எடுக்கும் வீடியோக்கள் பற்றி, வரவேற்கும் கருத்துகளை விடவும் எதிர்மறை விமர்சனங்களே அதிகம் வருகிறது. இதுபற்றிப் பேச்சாளர் ஷியாமளா ரமேஷ் பாபுவிடம் பேசினேன். 

``நானும் கடந்த சில மாதங்களாகவே குழந்தைகளை வைத்துவரும் வீடியோக்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். தொடர்ச்சியாக, சமூக வலைதளங்களில் உலா வரும் இதுபோன்ற வீடியோக்களைப் பார்க்கும்போது என்னையே அறியாமல் கோபம் வந்துவிடுகிறது. பொதுவாகவே, குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். மற்ற குழந்தைகளைப் பார்த்து காப்பியடிக்க மாட்டார்கள். நீங்கள் வேண்டுமானால் நான்கைந்து குழந்தைகளை வரிசையாக நிறுத்தி ரன்னிங் ரேஸ் வைத்துப் பாருங்கள். ஒரு குழந்தை எடுத்த எடுப்பிலேயே வேகமாக ஓடும், இன்னொரு குழந்தை போகிற போக்கில் எதையாவது வேடிக்கை பார்த்துக்கொண்டே மெதுவாகச் செல்லும், மற்றொரு குழந்தையோ அங்கேயே உட்கார்ந்துவிடும். ஆனாலும், அவர்களுக்குள் எந்தவிதமான போட்டி உணர்வோ, நம்மால் முடியவில்லையே என்ற இயலாமையோ இருக்காது. நாம்தான் முந்திச் சென்ற குழந்தையோடு மற்ற குழந்தைகளை ஒப்பிட்டு அவர்கள் மனதில் போட்டி உணர்வைத் திணிக்கிறோம். அதுபோலத்தான், ஒரு குழந்தை ஏதோ ஒன்றைப் பேசி அது வைரலாகிவிட்டால் உங்கள் பிள்ளை மட்டும்தான் பேசுமா? என் பிள்ளையைப் பாருங்கள் என வம்படியாக அவர்களுக்கு எதையாவது சொல்லிக்கொடுத்து பேச வைக்கிறோம். இதனால், அந்தப் பிள்ளையின் குழந்தைத் தன்மை பறிபோய்விடுகிறது. எப்போது மற்ற குழந்தையைப்போல நம் பிள்ளையும் வரவேண்டும் என்று நினைக்கிறோமோ அப்போதே நம் குழந்தையின் மழலைத்தன்மை கேள்விக்குறியாகிவிடுகிறது. 

 குழந்தைகளை, குழந்தைகளாகவே இருக்க விடவேண்டும். அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்தைப் புதிது புதிதாகச் செய்து பழகுவார்கள். அவற்றைத் தடுக்கும் நோக்கில் நாம் சென்று குறுக்கே தலையிட்டு நீ இதைச் செய், அதைச் செய் என்று வற்புறுத்துவது பிள்ளைகளின் கற்பனைத்திறனுக்குப் பெரும் தடைப்போடுவதாகிவிடும். எந்த ஒரு குழந்தைக்கும், இன்னொரு குழந்தையின் குணாதிசயம் வராது. அது பாடுதே, அது ஆடுதே, அது 1330 குறளையும் அழகாச் சொல்லுதே என்று ஆதங்கப்படாமல், உங்கள் குழந்தையின் தனித்திறமை என்ன என்பதைக் கண்டறியுங்கள். பத்து வயதுக்குள் ஒரு குழந்தை 1330 குறளையும் மனப்பாடம் செய்து என்ன ஆகப்போகிறது.

சமீபத்தில்கூட ஒரு திரைப்படத்தில் `ஓங்கிடுவானேமே... சொட்ட சொருகிடுவே'ன்னு காவல்துறை அதிகாரியைப் பார்த்து ஒரு குழந்தை பேசுகிறது. திரைப்படத்தில் பார்க்கும் நாம் நிஜத்தில் இதுபோன்று ஒரு குழந்தை பேசினால் ஏற்றுக் கொள்வோமா? வயதுக்கு மீறிய அணுகுமுறையை அவர்களிடம் திணிப்பதும் மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டுப் பேசுவதும் எதிர்வரும் காலங்களில் பிள்ளைகளை உளவியல் ரீதியாக மிகவும் பாதித்துவிடும். அதுமட்டுமல்ல, குழந்தைனாலே தெளிவில்லாமப் பேசுறதும் திருதிருன்னு முழிக்கிறதும்தான் அழகு. மேடையில ஏத்திவிட்டா அது சொதப்பணும். கூட்டத்துல இருக்கிற அம்மாவைத் தேடி அழணும். அதை விட்டுட்டு மேடை ஏறினதும் பத்மினி மாதிரி நடனம் ஆடணும் என்றெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது.  

எந்த ஒரு குழந்தைக்கும் நல்லதைக் கொடுத்தாலே போதும். எது பெஸ்ட்டா இருக்கோ அதைத்தேடிக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்ல. இந்த டெக்னாலஜி யுகத்துல எல்லாமே ரேட்டிங் ரேட்டிங்னு ஓட ஆரம்பிச்சிட்டோம். பள்ளிக்கூடத்துல ஆரம்பித்து ஹோட்டல் வரையிலும் இது பெஸ்ட்டா இருக்குமான்னு ரேட்டிங் பார்த்து முடிவு பண்றோம். ரேட்டிங் என்பது வியாபாரத்துக்கானது மட்டுமே தவிர குழந்தைகளுக்கானது அல்ல. சொல்லப்போனால் குழந்தைகளை வைத்து செலிபிரிட்டி ட்ரெண்டிங்கை அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் விஜய்சேதுபதி ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டதுதான் நியாபகத்துக்கு வருகிறது. `நம்பர் 1, கோப்பை, நீதான் பெரிய ஆளு என்பதெல்லாம் அடுத்தடுத்து மாறிட்டே இருக்கும்' என்று சொல்லியிருந்தார். உண்மைதானே? `உன்னால முடியும். நீ இதைப் பண்ணு, அதைப் பண்ணு'னு சொல்லி எப்போதும் குழந்தைகளிடம் எதையாவது திணித்துக்கொண்டே இருக்கிறோம். ஒரு கட்டத்தில் குழந்தைத் திணற ஆரம்பித்துவிடும். நம்மகிட்ட இருந்து இவங்க நிறைய எதிர்பார்க்கிறாங்களேன்னு குழம்ப ஆரம்பித்துவிடும். அதனால், குழந்தைகள்கிட்ட இந்த உலகத்துலயே நீதான் பெரிய ஆளுன்னு சொல்லி வளர்க்காம உலகிலுள்ள உயிர்களோடு ஒன்றி வாழும் தன்மையைச் சொல்லிக்கொடுங்க” என்கிறார் ஷியாமளா ரமேஷ் பாபு.