Published:Updated:

விளம்பரத்தில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசானை விஞ்சியது பா.ஜ.க

விளம்பரத்தில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசானை விஞ்சியது பா.ஜ.க
விளம்பரத்தில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசானை விஞ்சியது பா.ஜ.க

இந்தியத் தொலைக்காட்சிகளில் அதிக விளம்பரங்களைக் கொடுத்து நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற மற்ற நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் இருக்கிறது, ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சி. இன்னும் சில நாள்களில் அடுத்தடுத்து மிக முக்கியமான மாநில சட்டசபைத் தேர்தல்களும், அடுத்த வருடம் நாடாளுமன்ற பொதுத்தேர்தலும் நடைபெறவிருக்கும் நிலையில் பா.ஜ.க தனது பிரசார யுக்தியைத் தொலைக்காட்சியில் ஆரம்பித்துள்ளது.

நேற்று ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் (Broadcast Audience Research Council (BARC)) வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், நவம்பர் 10 முதல் நவம்பர் 16 வரையிலான ஒரு வார காலகட்டத்தில், அதிக விளம்பரங்களைக் கொடுத்த நிறுவனங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது பாஜக. மற்றொரு முக்கிய தேசியக் கட்சியான காங்கிரஸ், முதல் 10 இடங்களுக்குள்கூட இடம்பெறவில்லை. மற்ற எந்த அரசியல் கட்சியும் இப்படியான அதிகபட்ச தொலைக்காட்சி விளம்பரங்களைச் செய்யவில்லை. கடந்த வாரம் வரை இரண்டாவது இடத்தில் இருந்த பா.ஜ.க, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ஆகியவற்றை முந்திக்கொண்டு முதல் இடத்துக்கு வந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் (நவம்பர் 10 -16) மட்டும் பாரதிய ஜனதா கட்சியின் விளம்பரங்கள் 22,099 முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளன.  இரண்டாவது இடத்தில் இருக்கும் நிறுவனத்தைவிட இது இரு மடங்கு அதிகமானது.

ஏற்கெனவே நவம்பர் 20-ம் தேதிதான் சட்டீஸ்கர் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், மிசோரம் என நான்கு மாநிலங்களின் தேர்தல்கள் அடுத்தடுத்து நடக்கவிருக்கின்றன. இந்நிலையில், இந்த தொலைக்காட்சி பிரசார விளம்பரம் முக்கியத்துவம்பெறுகிறது. மேலும், நாடாளுமன்ற பொதுத்தேர்தலும் அடுத்த வருடம் வரவிருக்கிறது. இப்போதிருந்தே அதற்கான பிரசார யுக்தியைப் பா.ஜ.க ஆரம்பித்துவிட்டது. கடந்த பொதுத்தேர்தலின்போதே பா.ஜ.க பிரசாரத்திற்காக மிக அதிகமாகச் செலவு செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது..