Published:Updated:

`பனை மரம்தான் எங்களுக்கு படி அளக்கும் பகவான்!’ - பனம்பழ வியாபாரி அய்யண்ணன்

"இந்தப் பனம்பழத்துல இரும்பு சத்து இருக்கு. குடும்ப விருத்திக்கு நல்லது. இந்த விஷயங்கள் தெரிஞ்சவங்க வாங்குவாங்க. சிலநாள் விற்காமலே போயிடும். அதைத் திருப்பியும் பஸ்ல டிக்கெட் வாங்கி தூக்கிட்டே போகணும்."

`பனை மரம்தான் எங்களுக்கு படி அளக்கும் பகவான்!’ - பனம்பழ வியாபாரி அய்யண்ணன்
`பனை மரம்தான் எங்களுக்கு படி அளக்கும் பகவான்!’ - பனம்பழ வியாபாரி அய்யண்ணன்

சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே, அஸ்தம்பட்டி சாலையில் ஒரு சாக்கை விரித்து, அதில் சுட்ட பனம்பழங்களை அடுக்கி, 'இந்தப் பனம்பழம் உடம்புக்கு நல்லது. பத்து ரூபாதான் வாங்கிக்கோங்க' என்று கூவிக் கூவி விற்கிறார், ஒரு கிராமத்து வியாபாரி. ஆனால், அந்த வழியாகப் செல்பவர்கள் பலருக்கும் அது என்ன பழம் என்றே தெரியவில்லை. கிராமத்தைச் சேர்ந்தவர்களும்கூட பனம்பழத்தையும் அதை விற்பவரையும் விநோதமாகப் பார்த்தபடி கடந்து சென்றனர்.

பள்ளி மாணவர்கள், `கறுப்பா இருக்கே தாத்தா... இது என்ன பழம்' என்கிறார்கள். அவர்களிடம் ஒரு பழத்தைப் பிட்டு, அதன் தோலைக் கொடுத்து `இது பனம்பழம்... உங்க மாதிரி நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது பனங்கொட்டையைச் சூப்பிட்டே பள்ளிக்கூடம் போவோம்' என்று சிலாகித்தார். மாணவர்கள் அதைச் சாப்பிட்டுப் பார்த்தனர். ஒரு மாணவன், `தாத்தா பல்லுல மாட்டிகிச்சு' என்று சொல்ல அவர் மெதுவாகப் பல்லில் இருந்து அந்த நாரை அப்புறப்படுத்தினார். ஆனால், அவர்கள் `ச்சீ... ச்சீ... இந்தப் பழம் பிடிக்கலை தாத்தா’ எனத் தோலைக் கீழே போட்டு பள்ளியை நோக்கி ஓட்டமெடுத்தனர். 

``அந்தக் காலத்துல 30 பனம்பழம், 3 படி கல்லக்காய், 4 ஆப்பை களியைத் திண்ணுட்டு கம்பீரமா இருந்தாங்க. இப்ப பேக்கரியில கண்டதை வாங்கி சாப்பிட்டு உடம்புல சக்கரை வியாதி, உப்பு வந்திருச்சுன்ன சோர்ந்து போறாங்க'' என்று அலுத்துக்கொண்டார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

``என் பேரு அய்யண்ணன். என் மனைவி பேரு வசந்தி. எங்களுக்கு ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. மூணு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். என் குடும்பத்துல யாரும் படிக்கல. கூலி வேலை செஞ்சு சாப்பிடறாங்க. நாங்க யாருக்கும் பாரமா இருக்கக் கூடாதுன்னு நானும் என் பொண்டாட்டியும் ஓமலூர் பக்கத்தில் என் சொந்த கிராமமான முத்தநாயக்கன்பட்டியில் வாழ்ந்துட்டு வர்றோம்.

நான் சின்ன வயசுல இருந்து காட்டுல பார் பிடிக்க, ஏர் ஓட்ட, கவாத்து செய்யப் போவேன். வேலை இல்லாத நேரத்துல வீட்டில் உள்ள ஆடு, மாடு மேய்ப்பேன். வயசான பிறகு அந்த வேலைக்குப் போக முடியல. இருந்தாலும் வீட்டுல படுத்துக் கிடந்தா யாரு கஞ்சி, தண்ணி கொடுப்பாங்க? இந்த அரைசாண் வயித்துக்காக, இந்த வியாபாரத்துக்கு வந்துட்டேன். பன மரத்துல கிடைக்கிற நுங்கு, பனம்பழம், சீம்பு, பனங்கிழங்குனு சீஸனுக்கு ஏத்த மாதிரி விற்பேன். பனமரத்தை நம்பிதான் எங்க வாழ்க்கையே இருக்கு. பனைமரமே எங்களுக்கு படி அளக்கும் பகவான்.

விடியற்காலை கூலி ஆளை கூட்டிட்டு போய் பனைமரம் ஏறி பனம்பழத்தை புட்டுட்டு வருவேன். என் பொண்டாட்டி பனம்பழத்தை சுத்தம் செஞ்சு, சுட்டு கூடையில வச்சு தருவாள். நான் காலையில 8 மணி பஸ்ல ஏறி எனக்கு 15 ரூபாய், என் கூடைக்கு 15 ரூபாய் டிக்கெட் வாங்கிட்டு, சேலம் கலெக்டர் ஆபீஸூக்கு எதிரில சாக்கை விரிச்சு உக்கார்ந்து பொழுதுசாயும் வரை விற்பேன். இந்தப் பனம்பழத்துல இரும்பு சத்து இருக்கு. குடும்ப விருத்திக்கு நல்லது. இந்த விஷயங்கள் தெரிஞ்சவங்க வாங்குவாங்க. சிலநாள் விற்காமலே போயிடும். அதைத் திருப்பியும் பஸ்ல டிக்கெட் வாங்கி தூக்கிட்டே போகணும்.

ஒரு நாளைக்கு 80 ரூபாயில் இருந்து 120 ரூபாய் வரை விற்பேன். மரம் ஏறியவனுக்கு 50 ரூபாய், பஸ்ஸூக்கு 45 ரூபாய் போக ஒரு நாளைக்கு 30 ரூபாயில் இருந்து 40 ரூபாய் கிடைக்கும். நான் வயித்துக்காகத்தான் உழைக்கிறேன். சேர்த்து வைக்க உழைக்கல. அதனால் எனக்கு போதுமானதா இருக்கு. ஆனால், அதுவும் நிலையில்லாமல் இருப்பதுதான் வேதனை. அப்பப்போ மாநகராட்சி அதிகாரிங்க, போக்குவரத்து போலீஸ்காரங்க வந்து துரத்துறாங்க. அவங்களுக்குப் பயந்துட்டு பனம்பழத்தையெல்லாம் தூக்கி கூடையில போட்டுட்டு ஓடிட வேண்டியதா இருக்கு.

இப்படி பயந்து பயந்துதான் இதை, எங்க ஜீவனத்துக்காக விற்க வேண்டியதிருக்கு. என்னைக்கு இந்த மக்கமாருங்க இயற்கையை நாடி வராங்களோ, அன்னைக்குத்தான் நோயில்லாத உலகத்தை உருவாக்க முடியும்'' என்கிறார்.