Published:Updated:

`தண்ணியும் இல்ல சோறும் இல்ல..!’ - புதுக்கோட்டை கிராமங்களின் 7 நாளை விவரிக்கும் சமூக ஆர்வலர்

`தண்ணியும் இல்ல சோறும் இல்ல..!’ - புதுக்கோட்டை கிராமங்களின் 7 நாளை விவரிக்கும் சமூக ஆர்வலர்
`தண்ணியும் இல்ல சோறும் இல்ல..!’ - புதுக்கோட்டை கிராமங்களின் 7 நாளை விவரிக்கும் சமூக ஆர்வலர்

ஏழு நாள்களாக மின்சாரம் இல்லாமல் கைக்குழந்தையுடன் இரவுகளைக் கடக்கும் தாய்... அரிசிகூட கிடைக்காமல் அங்கும் இங்கும் உதவிகேட்கும் வயதான பெண்... நிவாரண முகாமாகச் செயல்பட்டு வந்த பள்ளிக்கூடம் இன்றுமுதல் இயங்கத் தொடங்கிவிட்டதால்  தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் முதியவர்கள்... கஜா புயல் விட்டுச் சென்ற சுவடுகள் இவை.


 

கடந்த 15-ம் தேதி, தமிழகத்தில் வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையைக் கடந்தது. இந்தப் புயல் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. டெல்டா மாவட்டங்களில் தென்னை, வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்வேறு கிராமங்களில் ஓட்டு வீடுகளும் கூரை வீடுகளும் முற்றிலுமாகச் சேதமடைந்தன. புயலால் 63 பேர் பலியானதாகத் தமிழக அரசு அறிவித்தது. 

கஜா புயல் ஏற்படுத்திச் சென்ற பாதிப்புகள் கொஞ்சம்நஞ்சம் அல்ல. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சமூக வலைதளம் வாயிலாக ஒன்றிணைந்த குழுக்களும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழக அரசும் முழுவீச்சில் நிவாரணப் பணிகள் மேற்கொண்டு வருவதாக அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அங்குள்ள மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப குறைந்தபட்சம் ஒரு மாதமாவது தேவைப்படும் என்கின்றனர் களத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் சமூக ஆர்வலர்கள்.


 

புதுக்கோட்டை மாவட்டத்தில் தன் நண்பர்களுடன் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொண்டு வரும் சமூக ஆர்வலர் ஸ்டாலின் சரவணனைத் தொடர்புகொண்டு பேசினோம்... 

`புதுக்கோட்டை மாவட்டமெல்லாம் இயற்கை சீற்றத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றாகத்தான் புயலுக்கு முதல்நாள் வரை எண்ணிக் கொண்டிருந்தேன். இதுதொடர்பாக வந்த மீம்ஸ்களையும் ரசித்தேன். ஆனால், அன்று அடித்த புயலில் ஊரே உருக்குலைந்து நிற்கிறது. தற்போது கறம்பக்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சுற்றியுள்ள கிராமங்களில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இன்னும் செய்து தரப்படவில்லை. பல கிராமங்களில் இன்னும் மின்சாரம் வரவில்லை. இதனால் கைக்குழந்தைகளை வைத்திருக்கும் பெண்கள் இரவு நேரங்களில் விளக்கைக் கொளுத்தி வைத்துக்கொண்டு தூங்காமல் தவிக்கின்றனர். 

ரெகுநாதபுரம் போன்ற உட்புற பகுதிகளில் சாய்ந்து கிடக்கும்  மின் கம்பங்கள் இன்னும் தூக்கி நிறுத்தப்படவில்லை. இன்றுதான் மின்வாரிய ஊழியர்கள் இந்தப் பகுதிகளில் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கினர். ஆனால், இன்று காலை முதல் பெய்து வரும் மழையால் அந்தப் பணிகளிலும் தடங்கல் ஏற்பட்டுவிட்டது. உயிர்வாழ்வதற்கு அடிப்படைத் தேவை உணவு, உடை, இருப்பிடம். இந்த மூன்றுமே இங்குள்ள மக்களுக்குச் சரியாகக் கிடைக்கவில்லை. கிராமங்களில் ஓட்டு வீடுகளும் கூரை வீடுகளும் சேதமடைந்துவிட்டதால் பள்ளிகளில்தான் மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இன்று முதல் பள்ளிகள் தொடங்கிவிட்டதால், முதியவர்களும் பெண்களும் சாலையோரங்களில் பொழுதைக் கழிக்கின்றனர். இன்று காலை முதல் மழை பெய்வதால் எங்கு போவதென்றே தெரியாமல் தவித்தனர். 


 

வெள்ளாளக் கொல்லை கிராமத்தில் ரேஷன் அரிசிகூட கிடைக்காமல் மக்கள் திண்டாடுகின்றனர். இந்த விஷயத்தில் அரசு மீது அவர்களுக்குப்  பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கஜா புயல் குறித்த முன்னறிவிப்பு வந்ததுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேஷன் அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை மக்களுக்காக எடுத்து வைத்திருக்க வேண்டாமா? அப்படி எடுத்து வைத்திருந்தால் மக்கள் உணவுக்குத் திண்டாடும் நிலை உருவாகியிருக்காது.


 

இதே கிராமத்தில் குடிநீருக்கும் மக்கள் அல்லல்படுகின்றனர். தனியார் ஏஜென்சிகள் சில தானாக முன்வந்து தண்ணீர் லாரிகள் மூலம் அவர்களுக்குத் தண்ணீர் வழங்கினர். இந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்து மனம் குமுறுகிறது. இதில் கொடுமை என்னவென்றால் தொண்டு நிறுவனங்கள் தரும் நிவாரணப் பொருள்களும் உட்புற கிராமங்களைச் சென்று சேரவில்லை. எனவே, தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், உதவிக் குழுக்களும் தயவு செய்து கடைக்கோடி கிராமங்களுக்குள் சென்று நிவாரணப் பொருள்களை அளியுங்கள். முக்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மீண்டும் மீண்டும் நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்குப் பதில், உண்மையிலேயே எங்கு தேவையோ அங்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு சேர்க்க வேண்டுகிறோம்’ என்று முடித்தார்.