Published:Updated:

`பணிகளை முடுக்கி விடுங்கள்’ - அதிகாரிகளுக்கு அமைச்சரின் உத்தரவு!

`பணிகளை முடுக்கி விடுங்கள்’ - அதிகாரிகளுக்கு அமைச்சரின் உத்தரவு!
`பணிகளை முடுக்கி விடுங்கள்’ - அதிகாரிகளுக்கு அமைச்சரின் உத்தரவு!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுமாறு நகராட்சி நிர்வாகம், ஊராட்சித்துறை, வருவாய்த்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, மீன்வளத்துறை அலுவலர்களுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.


நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ``இரவு நேரங்களில் மின்சார வசதி இல்லாத நிவாரண முகாம்களுக்கு உடனடியாக ஜென் செட் வாடகைக்கு எடுத்து வழங்க வேண்டும் அல்லது கேஸ் லைட் வேண்டும் என்றும், தெருக்களில் விழுந்துள்ள மரங்களை அகற்றி சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றார். மேலும், புயலால் சேதமடைந்துள்ள கூரைவீடுகள், ஓட்டு வீடுகள் கணக்கெடுப்புகளை விரைந்து எடுக்க வேண்டும். நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி சவுக்கு பயிரிட்டு சேதமடைந்துள்ளவர்களுக்கு விரைவாக நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை வேண்டும்.

சேதமடைந்த குடிசைகள், ஓட்டு வீடுகள் மேற்கூரையில் தார்பாலின் அமைக்க அதை தேவைப்படும் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும் மாற்றுத்துணி – சேலைகள், வேட்டிகள், முகாம்களில் உள்ளவர்களுக்கும் மற்றும் தேவைப்படுபவர்களுக்கும் வழங்க வேண்டும். புயலால் உப்பளங்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்கு இழப்பீட்டுத் தொகைகளை விரைவாக வழங்க வேண்டும். முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு கொசுவத்தி, போர்வை, மெழுகுவத்தி, பாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டு திருவாரூர் மருத்துவமனையில் இறந்த நல்லதங்காட்டைச் சேர்ந்த 9 வயது குழந்தை இஸ்ரவேல், சரோஜா குடும்பத்துக்கு உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை, இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் தான் செலுத்தப்படும். புயலால் சவுக்கு மற்றும் யூக்கலிப்டஸ் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதை தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் உரிய விலை கொடுத்து வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.