Published:Updated:

`எங்கள கேட்டுகிட்டுத்தான் நிவாரணம் கொடுக்கணும்!' - தன்னார்வலர்களை விரட்டிய கவுன்சிலர்

`எங்கள கேட்டுகிட்டுத்தான் நிவாரணம் கொடுக்கணும்!' - தன்னார்வலர்களை விரட்டிய கவுன்சிலர்
`எங்கள கேட்டுகிட்டுத்தான் நிவாரணம் கொடுக்கணும்!' - தன்னார்வலர்களை விரட்டிய கவுன்சிலர்

அறந்தாங்கி அருகே உள்ள மங்களநாடு கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க வந்த தன்னார்வ இளைஞர்களை அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசின் சார்பில், வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் ஏராளாமான கிராமங்களில் கிடைக்கவில்லை என பொதுமக்கள் தொடர்ந்து, குற்றம்சாட்டி வருகின்றனர். இதையறிந்து, உள்ளூர், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனர். திருமயம் அருகே கீழச்சிவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அறந்தாங்கி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கி வந்தனர்.

மங்களநாடு பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த இளைஞர்கள், அந்தக் கிராமத்தில் குடிசை வீடுகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக சென்று நிவாரண பொருள்களை விநியோகித்தனர். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ரெங்கையன் நிவாரணப் பொருள்களை வழங்கிக் கொண்டிருந்த இளைஞர்களைத் தடுத்து நிறுத்தி, அவர் வீட்டுக்கு அருகே உள்ள குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்க வலியுறுத்தினார். அதற்கு இளைஞர்கள், `நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள், நாங்கள் நேரடியாக வந்து பார்த்து, நிவாரணப் பொருட்களை வழங்குகிறோம்’ என்று கூறியுள்ளர். உடனே, ரெங்கையன் ‘யாரைக் கேட்டு நிவாரணப் பொருள்களைக் கொண்டு வந்தீங்க. எங்களைக் கேட்டுகிட்டுதான் நிவாரணப் பொருள்கள் வழங்கணும். கொடுத்தா எல்லார்க்கும் கொடுக்கணும். நீங்களா பார்த்து கொடுத்துட்டு போயிட்டா, நாங்க எப்படி ஓட்டுவாங்குவது! எங்களைக் கேட்காமல், கொடுக்கக்கூடாது’ என்று கூறி அந்த இளைஞர்களை விரட்டியிருக்கிறார். ஆனாலும், இளைஞர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொருள்களை கொடுத்துவிட்டுத் திரும்பினர்.