Published:Updated:

கமல், ரஜினி - திரைக்கு வெளியே நீளும் கைகள் -சுகுணா திவாகர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கமல், ரஜினி - திரைக்கு வெளியே நீளும் கைகள் -சுகுணா திவாகர்
கமல், ரஜினி - திரைக்கு வெளியே நீளும் கைகள் -சுகுணா திவாகர்

கமல், ரஜினி - திரைக்கு வெளியே நீளும் கைகள் -சுகுணா திவாகர்

பிரீமியம் ஸ்டோரி

பெரும்பாலும் சினிமா வணிகத்தில் கமலை ரஜினி முந்துவதுதான் வழக்கம். ஆனால், தேர்தல் அரசியலில் ரஜினியை முந்திவிட்டார் கமல்ஹாசன். ‘போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று ரஜினி சொல்லி வாய்மூடவில்லை. கமல் போரையே தொடங்கினார். நெடுங்காலமாகவே அரசியலுக்கு வருவதாகப் போக்குக் காட்டிக்கொண்டு வந்த ரஜினிக்கு வேறு வழியில்லை. சென்ற ஆண்டின் இறுதிநாளில், ‘தனிக்கட்சி தொடங்குவது உறுதி’ என்று அறிவித்தார். ஆனாலும், அவர் தனிக்கட்சி தொடங்கும் நாள் எதுவென்று இன்றுவரை உறுதியாகத் தெரியாது. கமல்ஹாசன் மற்றும் ரஜினியின் அரசியல் வருகைக்கான பொதுவான ஒற்றுமை, ‘தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது’ என்று அவர்கள் நம்புவதுதான்.

கமல், ரஜினி - திரைக்கு வெளியே நீளும் கைகள் -சுகுணா திவாகர்

ஜெயலலிதாவின் மரணம் மற்றும் கருணாநிதியின் உடல்நிலை இரண்டையும் முன்வைத்து, கமல்-ரஜினி இருவரும் இத்தகைய முடிவுக்கு வந்திருப்பது புரிகிறது. ஆனால், 50 ஆண்டு காலம் மற்ற கட்சிகளுக்கு முதல்வர் நாற்காலியை விட்டுக்கொடுக்காத தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளின் செல்வாக்கு அத்தியாயம் முடிந்துவிட்டதா என்பதை அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல்தான் சொல்ல வேண்டும். ஒருவேளை தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று வைத்துக்
கொண்டாலும், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு இருவருக்கும் வாய்ப்பிருக்கிறதா என்பதைக் கமல்ஹாசன் மற்றும் ரஜினியின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள்தான் தீர்மானிக்கும்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னான அ.தி.மு.க.வின் செயற்பாடுகளைக் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்தபோது, ‘அவர் கட்சி ஆரம்பிக்கப் போகிறார்’ என்று சொல்லப் பட்டது. அதை முதலில் மறுத்த அவர், ‘நான் ஏற்கெனவே அரசியலில்தான் இருக்கிறேன்’ என்று காந்தியையும் பெரியாரையும் மேற்கோள் காட்டிச் சொன்னார். ஆனாலும் ‘அரசியல் என்றால் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதுதான்’ என்ற வழமையான, பொதுப்புத்திப் புரிதலின் அடிப்படையிலேயே கமல் குறித்த விவாதங்கள் அமைந்திருந்தன.

கமல், ரஜினி - திரைக்கு வெளியே நீளும் கைகள் -சுகுணா திவாகர்

காந்தியும் பெரியாரும் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதையோ ஆட்சி அதிகாரத்தில் அமருவதையோ தவிர்த்தவர்கள். அதேநேரத்தில் அரசியல் அதிகாரத்தின் வலிமையை உணர்ந்தவர்கள். ‘அர்ச்சகன் பொறுக்கித் தின்ன கோயில்; அரசியல்வாதி பொறுக்கித்தின்ன அரசியல்’ என்றார் பெரியார். தான் ஆதரித்த காங்கிரஸ், தி.மு.க உட்பட அத்தனை தேர்தல் கட்சிகளையும் ‘ஓட்டுப்பொறுக்கிகள்’ என்று தன் இறுதி உரையில்கூடக் கடுமையாக விமர்சித்தார். ஆனால் தலித்துகள், முஸ்லீம்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் அதிகாரத்தில் பங்குபெறுவது அவசியம் என்றும் கருதினார். அம்பேத்கரின் இரட்டை வாக்குரிமையை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது, ‘காந்தி சாவதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்’ என்று அயல்நாட்டுச் சுற்றுப்பயணத்தில் இருந்தபோதும் அம்பேத்கருக்குத் தந்தி அடித்து, அவரின் அரசியல் கோரிக்கையை அழுத்தமாக ஆதரித்தவர் பெரியார். காந்தியும் அதிகாரத்தின்மீது ஆர்வம்காட்டாவிட்டாலும் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் கைமாறுவதற்காகப் போராடியவர். பெரியார் தேர்தல் அரசியலில் பங்குபெறுவதைத் தவிர்த்தபடியே, தன் அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அரசுகளை ஆதரித்தார்; கட்சிகளுக்காகத் தேர்தல் பிரசாரம் செய்தார். ‘பார்ப்பனரல்லாத மக்கள் உரிமைகளைப் பெற வேண்டும்’ என்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது. ஆனால், அரசியல் என்பது ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறுவதைத் தாண்டிய செயல்பாடும்கூட என்கிற புரிதல் காந்தி, பெரியார் ஆகிய இருவருக்குமே இருந்தது. அம்பேத்கரியவாதிகள், பெரியாரியவாதிகள், மார்க்ஸியவாதிகள், பெண்ணியவாதிகள், தமிழ்த் தேசியவாதிகள் எனப் பலரும் ‘அரசியல்’ என்பதைக் கருத்தியல் சார்ந்ததாகவே பாவிக்கின்றனர். இந்த அடிப்படையிலேயே ‘நான் எப்போதும் அரசியலில் இருக்கிறேன்’ என்ற கமல்ஹாசனின் கூற்றைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், ‘அரசியல்’ என்னும் சொல்லாடலின் விரிவான பரிமாணங்களை மீண்டும் குறுக்கித் தேர்தல் அரசியலுக்கு வந்துள்ளார் கமல். அவர் தேர்தல் அரசியலுக்கு வராவிட்டாலும், மேற்கண்ட கூற்றை அவர் சொல்லாவிட்டாலும்கூட கமலின் அரசியலைப் புரிந்துகொள்வது கடினமானதில்லை.

ஏனெனில், கருத்தியல் சார்ந்த அரசியல் கருத்துகளை அவர் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கிறார். குறிப்பாகத் தன்னைப் பெரியாரியப் பின்பற்றாளராக  அடையாளப்படுத்திக்கொள்ளும் கமல், கறுப்புச்சட்டை அடையாளத்துடன் பல பொதுமேடைகளில் தோன்றியிருக்கிறார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ‘நான் ஒரு நாத்திகன்’ என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, ‘நான் வெட்கப்படுகிறேன்’ என்று கண்டனம் தெரிவித்தவர் கமல்ஹாசன். சினிமாவுக்கு வெளியில் மட்டுமல்ல, சினிமாவுக்குள்ளும் கமல் கருத்தியல் சார்ந்த அரசியலை முன்வைத்திருக்கிறார். அந்த அரசியலையும் சேர்த்து விவாதிக்கும்போதுதான் கமலின் அரசியல் எத்தகையது என்று உரையாட முடியும். ஏனெனில், கமலின் சினிமா வெறுமனே தயாரிப்பாளரின் சினிமாவோ இயக்குநரின் சினிமாவோ மட்டுமல்ல, முதன்மையாக அது கமலின் சினிமா.

கமல், ரஜினி - திரைக்கு வெளியே நீளும் கைகள் -சுகுணா திவாகர்

கமலின் அரசியல் தமிழ் சினிமாக்களில் முக்கியமானது மட்டுமல்ல, இந்திய சினிமாக்களிலும் முக்கியமானது ‘ஹே ராம்’. கலைத்தன்மையும் அரசியலும் இணையும் படமாக அது உருவாகியிருந்தது. ‘காந்தியைப் படுகொலை செய்தது இந்துத்துவ மதவாதம்தான் என்பதை வெளிப்படையாகவே சொன்ன படம் ‘ஹே ராம்’. இந்தியாவின் பல்வேறு மொழிகள், கலாசாரங்களைக் காட்சிப்படுத்தியன் மூலம், ‘இந்தியா என்பது பன்மைத்தன்மையின் மூலம் மட்டுமே நீடிக்கமுடியும்’ என்பதை அழுத்தமாகச் சொன்னதுடன், இந்தப் பன்மைத்தன்மைக்கு இடையிலும் இந்துத்துவம் ஒற்றை மனநிலையுடன் இயங்குவதையும் ‘ஹே ராம்’ சொன்னது. சிண்டும் பூணூலும் காற்றில் பறக்க, காந்தியைக் கொல்வதற்காக சாகேத்ராம் கைத்துப்பாக்கியுடன் ஒத்திகை பார்க்கும் குறியீட்டுக் காட்சி, ஹே ராமின் அரசியலை வெளிப்படையாகவே சொன்னது. ஒரு காட்சியில் ஸ்வஸ்திக் சின்னம் தாமரையாக மாறுவதும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

‘ஹே ராம்’ இந்துத்துவ எதிர்ப்பை மய்யப்படுத்திய படம் என்றால், ‘அன்பே சிவம்’ முதலாளித்துவ எதிர்ப்பை மய்யப்படுத்திய படம். இதில் கமல்ஹாசன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியராகவே நடித்திருப்பார். கம்யூனிஸ்டாகவே இருந்தா
லும் கறுப்புச்சட்டை மீதுள்ள காதலால் பல காட்சிகளில் கறுப்புச் சட்டையுடன் படத்தில் தோன்றியிருப்பார். பெருமுதலாளியாக ஒரு படையாட்சியைக் காட்சிப்படுத்தியிருப்பது, அவர் ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்று சொல்வது போன்ற அபத்தமான காட்சியமைப்புகள் இருந்தாலும்கூட, கமல் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக நடித்து முதலாளித்துவத்துக்கு எதிராகச் சில கருத்துகளைச் சொன்னதால் அது தமிழகக் கம்யூனிஸ்ட்டுகளிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் அடிப்படையாகவும் அவர் நாத்திகத்தை வலியுறுத்தினார்.

இப்படி முழுநீள அரசியல் படங்களாக இல்லாவிட்டாலும் தன் பல படங்களில் நாத்திகம் உள்ளிட்ட தன் அரசியல் சார்பையும் வெளிப்படுத்தியிருப்பார் கமல். ‘நம்மவர்’ படத்தில் கௌதமியுடனான காதல் காட்சியில் பெரியார் புத்தகத்துடன் தோன்றுவார். ‘காதலா காதலா’ படத்தில் போலிச்சாமியார்களையும் மூடநம்பிக்கை களையும் விமர்சித்திருப்பார். ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் ‘கடவுள் இல்லைனு சொல்றவனை நம்பலாம்; இருக்குன்னு சொல்றவனைக்கூட நம்பலாம்; ஆனால், நான்தான் கடவுள்னு சொல்றவனை நம்பாதே’ என்பார். ‘தசாவதாரம்’ படத்தில் நாத்திக விஞ்ஞானியாக வரும் கமலின் அப்பா பெயர் ராமசாமி நாயக்கர். ‘நான் கடவுள் இல்லைனு எங்கேங்க சொன்னேன்; இருந்தா நல்லாயிருக்கும்னு
தான சொன்னேன்’ என்ற அவரின் நாத்திகச் சாயல் வசனம் புகழ்பெற்ற ஒன்று. ‘தேவர்மகன்’ வெற்று சாதியப் பெருமிதத்தின் அடிப்படையிலான வன்முறையை விமர்சித்த படம் என்றால், ‘விருமாண்டி’ மரணதண்டனைக்கு எதிரான படம். விருமாண்டி எனும் தூக்குத்தண்டனைக் கைதியைக் குறித்து ஆவணப்படம் எடுக்க வரும் ரோகிணி, கீழ்வெண்மணியைச் சேர்ந்தவர். குற்றமும் தண்டனைகளும் வெவ்வேறு பார்வைகளையும் வெவ்வேறு சார்பையும் அடிப்படையாகக்கொண்டவை என்பதற்கான குறியீடு இது. கீழ்வெண்மணியில் குழந்தைகள் உள்பட 44 பேரை எரித்துக் கொன்ற கோபாலகிருஷ்ண நாயுடு ‘குற்றவாளியில்லை’ என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்பதை இங்கு நினைவுகூரும்போதுதான் மரண
தண்டனைக்கும் விடுதலைக்குமான சாத்தியங்களின் பின்னுள்ள அரசியலைப் புரிந்துகொள்ள முடியும். ஒருவகையில் மரணதண்டனை எதிர்ப்பு என்பது காந்திய அடிப்படைகொண்டதும்கூட.

கமல் பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும் பார்ப்பனர்களையும் தன் படங்களில் கிண்டலடித்திருப்பார். அவர் பார்ப்பன எதிர்ப்புக்கான வரலாற்று நியாயங்களை உணர்ந்துகொண்டவர்தான் என்று தோன்றுகிறது. அவரை ஒரு பார்ப்பனராக முன்னிறுத்தி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும், அதைக் குற்றச்சாட்டாக அவர் எங்கும் சொன்னதில்லை. ‘அவ்வை சண்முகி’யில் அவரது பாத்திரம், ‘மடிசார் அணிந்த மாமிகளைக் கொச்சைப்
படுத்துகிறது’ என்று குற்றம்சாட்டப்பட்டது. தோல் தொழிற்சாலை நடத்திவரும் பார்ப்பனர், மாட்டுக்கறி சாப்பிடும் முஸ்லீமை வேலைக்கு வைத்ததற்காகக் கோபப்படும் காட்சியில், அதன் போலித்தனத்தை ‘அவ்வை சண்முகி’யில் சுட்டிக்காட்டி
யிருப்பார் கமல். இப்படிக் கருத்தியல் சார்ந்த ஏராளமான அரசியல் வெளிப்பாடுகள் கமல் படங்களில் உண்டு. மற்ற எதையும்விட நாத்திகம் என்பதற்குத்தான் அதிகம் முக்கியத்துவம் தருகிறார் என்ற விமர்சனமும் உண்டு.

எனவே, ‘கமலை காந்தியச் சார்புள்ள, மார்க்ஸிய அனுதாபம்கொண்ட பெரியாரிஸ்ட் என்று புரிந்துகொள்ளலாமா?’ என்றால் ‘அப்படி உறுதியாகச் சொல்ல முடியவில்லை’ என்பதுதான் பதிலாக இருக்கும். 

கமல், ரஜினி - திரைக்கு வெளியே நீளும் கைகள் -சுகுணா திவாகர்

‘அன்பே சிவம்’ படத்தில் கம்யூனிஸ ஆதரவு பேசிய கமல்தான், ‘குருதிப்புனல்’ படத்தில் நக்சல்பாரி போராளிகளை வெறுமனே வன்முறையாளர்களாகவும் போலீஸ் வீட்டுக் குழந்தைகளிடமும் காமுறும் பெண் பித்தர்களாகவும் காட்டியிருப்பார். உலகம் முழுக்க ராணுவமும் போலீஸும் பாலியல் அத்துமீறல்களை நடத்திக்கொண்டிருக்க, நக்சல்பாரிகள் மட்டும் போலீஸ் குடும்பப் பெண்கள் மீது பாலியல்மீறல்களை நிகழ்த்துபவர்களாகக் காட்டுவது என்ன கருத்தியல் நியாயம்?

அதேபோல் ‘தசாவதாரம்’ படத்தின் கருத்தியல் மயக்கம் குறித்தும் விவாதிக்க வேண்டும். ‘தசாவதாரம் ஒரு பகுத்தறிவுப் படம்’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கமல்ஹாசனைப் பாராட்டினார். ஆனால், படத்தின் பல காட்சிகள் பகுத்தறிவுக்கு விரோதமானவை. ‘சைவ மன்னனின் ஆதிக்கத்துக்கு’ எதிராகப் போராடி உயிர்துறந்த வைணவப் பற்றாளர் ரங்கராஜ நம்பியும் அவரது மனைவியும்தான் சமகாலத்தில் விஞ்ஞானி கமல்ஹாசனும் அக்கிரஹாரத்துப் பெண் அசினும். “உனக்கும் எனக்கும் ஸ்நான பிராப்திகூடக் கிடையாது” என்று சொல்லும் அசின், கால் தடுக்கி விழும் இடம், பெருமாள்சிலை மண்ணில் புதைந்த இடம். ‘ஸ்நான பிராப்தி மட்டுமல்ல, பூர்வஜென்ம பிராப்தியே உண்டு’ என்பதைச் சொல்லும் காட்சி அது. கமல்ஹாசன் பாலத்திலிருந்து குதித்துத் தப்பும் லாரி, வைணவப் பெயரை நாமத்துடன் சுமந்திருக்கும். ‘நான் கடவுள் இல்லைனு எங்கேங்க சொன்னேன்; இருந்தா நல்லாயிருக்கும்னுதான சொன்னேன்’ என்று கமல் வசனம் பேசி முடித்ததும், கேமரா பின்னால் நகரும். அங்கே சுனாமியில், நம்பிராஜனோடு சேர்ந்து கடலில் வீசப்பட்ட பெருமாளின் சிலை கரை ஒதுங்கியிருக்கும். பழங்காலப் புராணப் படங்களையும் ராமநாராயணன் படங்களையும் நினைவூட்டும்படி வைணவ அடையாளங்களும் ஆபத்து நேருமிடத்தில் எல்லாம் ஏதேனுமொரு வகையில் பெருமாளின் பிரசன்னமும் தொடரும்.

கமல் தொடர்ச்சியாகப் பேசிவரும் பெரியாரிய மற்றும் காந்தியச் சார்புக்கு முற்றிலும் நேர்மாறானவை அவரது ‘உன்னைப் போல் ஒருவன்’ மற்றும் ‘விஸ்வரூபம்’ திரைப்படங்கள்.

‘விருமாண்டி’யில் மரணதண்டனையை எதிர்த்துக் குரல்கொடுத்த கமல்ஹாசன், ‘உன்னைப் போல் ஒருவ’னில் காமன்மேனாக மாறி, ‘குண்டுவைக்கும் தீவிரவாதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது பலனளிக்காது. தந்திரமாக அவர்களைக் குண்டுவைத்துக் கொல்ல வேண்டும்’ என்று முன்வைத்திருப்பார். படத்தில் ஒரு காட்சி, ‘காமன்மேனின்’ நிபந்தனையின் அடிப்படையில் மூன்று இஸ்லாமியத் ‘தீவிரவாதிகளும்’ ஓர் இந்து ஆயுத வியாபாரியும் வேனில் அழைத்து வரப்படுவார்கள். அதில் ஒரு முஸ்லீம், தான் தீவிரவாதியானதற்கான காரணத்தை விவரிப்பார். அவரது மூன்று மனைவிகளில் ஒருவர் பெஸ்ட் பேக்கரி கொலையில் கொல்லப்பட்டவர். எனவே, அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் கோவையிலே குண்டுவைத்தார் என்பது அவர் முன்வைக்கும் காரணம். இந்தக் காட்சியே அடிப்படையில் தவறானது. பெஸ்ட் பேக்கரி கொலை நடந்தது 2002-ல். கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது 1998-ல். அந்த முஸ்லீம் பாத்திரம், வேதனையுடன் அந்தச் சம்பவத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது, அந்த இந்து ஆயுத வியாபாரிப் பாத்திரம், “மூணு பொண்டாட்டியில ஒண்ணுதானே போச்சு, மிச்சம் ரெண்டு இருக்குல்ல” என்று சொல்லும். முஸ்லீம்கள் பல மனைவிகள் உடையவர்கள், வகைதொகையில்லாமல் குழந்தை பெற்றுக்கொள்பவர்கள் என்ற பொதுப்புத்தி, ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்திலும் ‘தசாவதாரம்’ படத்திலும் பதியப்பட்டிருக்கும்.

அதைத் தொடர்ந்து உருவான கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்துக்கு முஸ்லீம்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போதும்கூட, “இந்தப் படத்தைப் பார்த்தால் ராமகோபாலன்தான் எதிர்ப்பார். முஸ்லீம்களைச் சிறப்பாகச் சித்திரித்திருக்கிறது இந்தப் படம்” என்று நம்பிக்கையுடன் சொன்ன கமல்ஹாசன், முஸ்லீம் இயக்கத் தலைவர்களை அழைத்துப் படத்தைப் போட்டுக்காட்டினார். பிறகு, ‘விஸ்வரூபம்’ படம் வெளியாவதில் சிக்கல் உருவாகி, நீங்கி, படம் ரிலீஸானது. முழுக்க அமெரிக்கப் பார்வையுடன் அல்கொய்தா இயக்கத்தை அணுகிய படம் ‘விஸ்வரூபம்’. அதிலும் இந்திய உளவாளி சம்பந்தமே இல்லாமல் அமெரிக்காவைக் காப்பாற்றுவதற்காக, அல்கொய்தாவில் ஊடுருவி, அவர்களை அழித்தொழிப்பதாகப் படம் சித்திரித்தது.

இதேபோல் தலித் தரப்பிலிருந்து கமல் படங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களையும் பரிசீலிப்போம். ‘தேவர் மகன்’ படத்தை ஒரு தலித் விரோதப் படம் என்று சொல்லிவிட முடியாது. வெற்று சாதியப் பெருமிதத்தின் அடிப்படையில் முக்குலத்தோர் வன்முறையைத் தூக்கிப் பிடிப்பதை விமர்சித்த படம்தான். ஆனால், ‘தேவர் மகன்’ என்ற டைட்டில், மீசை, அரிவாள், ‘போற்றிப் பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே’ என்ற பாடல் ஆகியவை, கமலின் நோக்கத்துக்கு மாறாக ‘சாதியப் பெருமிதத்தைச் சித்திரிக்கும் படமாக’ அது தென்மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது. விழாக்களில் மீண்டும் மீண்டும் ‘போற்றிப் பாடடி பெண்ணே’ பாடல் ஒலிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து சாதிய மோதல்கள் ஏற்பட்டன. ‘சின்னக் கவுண்டர்’, ‘தேவர் மகன்’ படங்களைத் தொடர்ந்து, சாதியப் பெயர்தாங்கி ஏராளமான படங்கள் வரத் தொடங்கின. மீசையும் அரிவாளும் சாதியப் பெருமிதங்களாக முன்வைக்கும் பல படங்கள் சில ஆண்டுகளுக்கு வியாதியைப்போல் பரவின.

கமல், ரஜினி - திரைக்கு வெளியே நீளும் கைகள் -சுகுணா திவாகர்

தன் சொந்தச் சாதியின் மீது விமர்சனம் வைத்த கமல்ஹாசனுக்கு தலித் விரோதத்தோடு மேலெழும்பும் இடைநிலைச் சாதி அதிகாரம் குறித்து என்ன புரிதல் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. பார்ப்பனர் ஆதிக்கம் என்பது சற்றுத் தளர்ந்தும் குறைந்தும் உள்ள சூழலில் இடைநிலைச் சாதி அதிகாரம், இன்று உருவெடுத்துள்ளது. ஆனால், இது குறித்த தன் பார்வைகளை கமல் விரிவாக விளக்கியதில்லை. ‘தசாவதாரம்’ படத்தில் வரும் வின்சென்ட் பூவராகவன் என்ற தலித் தலைவர்கூட ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிராகத்தான் குரல் கொடுப்பாரே தவிர, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அல்ல.

இப்போது சாதி எதிர்ப்புப் படங்களும் தலித் சினிமாக்களும், குறைந்த அளவிலேனும் வரத் தொடங்கியிருக்கின்றன. சாதியப் பெருமித சினிமாக்கள் குறைந்திருக்கின்றன. சாதிப்பெயர் தாங்கி வரும் சினிமாக்களோ முற்றிலுமாக இல்லை. ஆனாலும் கமல்ஹாசன் ‘முத்துராமலிங்கம்’ எனும் படத்தில், அதே இளையராஜா இசையில் ஒரு சாதிப் பெருமிதப் பாடலைப் பாடுகிறார்; ‘சபாஷ் நாயுடு’ என்று தன் படத்துக்குப் பெயர்வைக்கிறார் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? ‘சாதி என்பது இன்னும் ஒழிக்கப்படாத, யதார்த்தமாக இருக்கும்போது, சாதிப்பெயரை டைட்டிலில் வைப்பது என்ன தவறு? அந்தப் படம் சாதியைத் தூக்கிப் பிடித்தால்தானே தவறு?’ என்றுகூடக் கேள்வி எழுப்பப்படலாம். ஆனால், யோசித்துப் பாருங்கள்... சாதி என்பது யதார்த்தம் என்று ஏற்றுக்கொண்டு, ஆதிக்கச் சாதிப் பெயர்களை வைப்பதுபோல், ‘பறையர் மகன்’ என்றோ, ‘அருந்ததியர் மகன்’ என்றோ டைட்டில் வைக்கமுடியுமா? 1928-லேயே ‘பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர்களைப் போடக் கூடாது’ என்று தீர்மானம் போட்ட பெரியாரின் பெயரை முன்மொழிந்துகொண்டே, சாதிப்பெயரில் டைட்டில் வைப்பது நியாயம்தானா?

கமல்ஹாசனின் ஜெயலலிதா மீதான கோபம் வலுத்ததற்குப் பின்னணியில் ‘விஸ்வரூபம்’ தடையும் அதன் பின்னணியில் இருந்த ஜெயலலிதாவும்தான் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. எந்த ஒரு கலைப்படைப்பையும் எந்த ஒன்றின் பேராலும் தடைசெய்வது என்பது நிச்சயமாக விமர்சிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், படைப்புச் சுதந்திரத்தை வலியுறுத்தும் அதேவேளையில் படைப்பாளிகளின் பொறுப்பையும் உணர வேண்டும். காலங்காலமாக சினிமாக்களிலும் இலக்கியங்களிலும் ஊடகங்களிலும் மோசமாகச் சித்திரிக்கப்பட்டவர்களின் கோபத்தில் உள்ள நியாயங்களையும் புரிந்துகொள்வதுதான் கலைமனம். இந்தப் பின்னணியின் அடிப்படையில்தான் கமல் தொகுத்து வழங்கிய முதல் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம், ‘சேரி பிஹேவியர்’ என்று பேசியதற்கு எழுந்த எதிர்ப்புகளையும் புரிந்துகொள்ள முடியும்.

இத்தனைக்கும் கமல் சுயவிமர்சனங்களை விரும்புபவர்தான். ‘பரிசோதனை சினிமாக்கள் வந்த காலகட்டத்தில், தான் நடித்த ‘சகலகலா வல்லவன்’ படம் சினிமாவை வேறுதிசைக்கு மாற்றியது’ குறித்து அவரே பேசியிருக்கிறார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் மனநிலை பிறழ்ந்தவர்களைக் கொச்சையாகச் சித்திரித்ததை விமர்சித்து, மன்னிப்பும் கேட்டவர். ஆனால், தனது ‘தேவர் மகனு’ம் ‘விருமாண்டி’யும் சினிமாவிலும் சினிமாவுக்கு வெளியிலும் உருவாக்கிய சாதிய மனநிலை குறித்து அவர் எங்கும் சுயவிமர்சனம் செய்து கொள்ளவில்லை.

இப்போது கமல் பேசும் தேர்தல் அரசியல் சார்ந்த கருத்துகள் குறித்தும் அதன்மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் பரிசீலிப்போம். ஜெயலலிதாவின் மறைவையொட்டி சசிகலாவின் அரசியல் வருகை, எடப்பாடி முதல்வரானது,
அ.தி.மு.க. அரசின் ஊழல் ஆகியவை குறித்த கமலின் விமர்சனங்கள் நியாயமானவைதான்.

மோடியின் ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தின் தமிழகப் பிரதிநிதியாக அவர் நியமிக்கப்பட்டதைக்கூட, ‘சொர்க்கம் என்பது நமக்கு சுத்தமுள்ள வீடுதான்’ பாடலின் நீட்சியாக, சார்புமனநிலையாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால், தொடர்ந்து காந்தி குறித்துப் பேசிவரும் கமலுக்கு, காந்தியைப் படுகொலை செய்த இந்துத்துவ அரசியல் குறித்துப் படமெடுத்த கமலுக்கு, இன்றைய மோடி அரசு காந்தியின் பிறந்த தினத்தைத் ‘தூய்மை தின’மாக அறிவிப்பதன் பின்னுள்ள அரசியலையும் காந்தி, நேரு ஆகியோருக்கு மாற்றாக வல்லபாய் பட்டேல், சாவர்க்கர், தீனதயாள் உபாத்தியாயா போன்ற இந்துத்துவக் கருத்தியல் தலைவர்களை முன்னிறுத்து வதையும் புரிந்துகொள்ள இயலாதா, என்ன?
ஊழல் என்பது சமூகத்தின் முக்கியமான பிரச்னைதான். ஆனால், மதவாதத்தையும் சாதியவாதத்தையும் மறைப்பதற்காக ஊழல் எதிர்ப்பை முன்னிறுத்துவது அதைவிடவும் முக்கியமான பிரச்னை. ஊழல் என்பது ஆளுங்கட்சியோடு முடிந்துவிடுவதில்லை. அது உலகமயமாக்கல் - தாராளமயமாக்கல் - கார்ப்பரேட் ஆதரவு அரசியலோடு தொடர்புடையது. மோடி அரசின் நடவடிக்கைகள் முழுக்க, கார்ப்பரேட் ஆதரவாக இருக்க, அது குறித்து கமலின் விமர்சனம் அவ்வளவு தீவிரமாக இல்லை என்றே தோன்றுகிறது.

அதேநேரத்தில், கமலை ஓர் இந்துத்துவ ஆதரவாளராக அடையாளப்படுத்தி, அவரது அரசியல் விமர்சனங்களைப் புறக்கணிப்பது நீதியின்பாற்பட்டது அல்ல. ‘பார்ப்பன எதிர்ப்பு’ என்ற பெயரில் சசிகலாவை ஆதரிப்பதும், சசிகலாவை எதிர்ப்பதாலேயே கமல்ஹாசனைப் பார்ப்பனியவாதியாகப் பார்ப்பதும் அடையாள அரசியலின் அபத்தமான, ஆபத்தான கூறுகள்.
 
விமர்சனத்துக்குரியது என்றாலும் திரைப்படங்களில் அரசியல் புரிதலுடன் இயங்கிய கமல்ஹாசன், தேர்தல் அரசியலில் அதைத் தவறவிடுகிறாரோ என்று தோன்றுகிறது. ஒருபுறம் முற்போக்கு அரசியல் விழுமியங்களை ஏற்றுக்கொள்ளும் கமல்ஹாசன், இன்னொருபுறம் தேர்தல் அரசியலுக்கான சமரசங்கள், அப்துல் கலாம் வீட்டிலிருந்து தன் அரசியல் பயணத்தைத் தொடங்குவது போன்ற செயற்பாடுகளின் மூலம் மக்களின் மேலோட்டமான பொது மனநிலையைப் பயன்படுத்திக் கொள்வதையும் செய்கிறார். இவ்விடத்தில் மேதாவித்தன பாவனையுடனான அவரது வார்த்தைகள் எந்தளவு தமிழக மக்களைச் சென்றடையும் என்பது இன்னும் கேள்வியாகவேதான் உள்ளது.

இப்போது ரஜினிக்கு வருவோம். கமல்ஹாசன் படங்களை ஆராய்வதுபோல் ரஜினி படங்களை விரிவாக ஆராய்வது சாத்தியமில்லை. ரஜினியும் தனது படங்களில் வெளிப்படும் கருத்துகளுக்கு முழுமையாகப் பொறுப்பெடுத்துக்கொண்டதில்லை.‘இயக்குநர் சொல்லிக்கொடுத்ததைச் செய்கிறேன், அவ்வளவுதான்’ என்று சொல்லிவிடுபவர். ரஜினி படங்கள், பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்களின் நீட்சியாக ஒற்றைப் பரிமாணம்கொண்டவை. ஆனால்,
எம்.ஜி.ஆர் படங்களைப்போல் திராவிட அரசியல் கருத்துகளையோ பொது அறம் சார்ந்த கருத்துகளையோ கொண்டவை அல்ல. ஏழை, எளிய மக்களின் பக்கம் நிற்கும், அநீதிக்கு எதிராகக் குரல்கொடுக்கும் ‘கோபக்கார இளைஞன்’ என்னும் பிம்பத்தையே ரஜினியின் படங்கள் பிரதிபலித்தன. முக்கியமாக அவரது கறுப்பு நிறம், உழைக்கு மக்கள் தம்மோடு பொருத்திப் பார்ப்பதற்கு முக்கிய காரணமானது. கமல்ஹாசன் படம் அறிவுஜீவி சினிமாவானபோது, ரஜினியின் படம் வெகுசனத்தன்மைகொண்ட சினிமாவானது.

கமலுக்கு இருப்பதைப்போல் ரஜினிக்கும் அரசியல் சார்பு உண்டு. ஆனால், தொடக்க காலப் படங்களில் அவர் அதைப் பிரதிபலித்ததில்லை. ஆணாதிக்கம் மட்டும்தான் ‘தம்பிக்கு எந்த ஊரு’ தொடங்கி ‘படையப்பா’ வரை ரஜினியின் படங்களில் தொடர்கிற விஷயம். கமல் தன் படங்களில் பகுத்தறிவை வலியுறுத்தினார் என்றால், ரஜினி தன் மதநம்பிக்கைச் சார்பைத் தன் படங்களில் சித்திரிக்கத் தொடங்கினார். ரஜினியின் நூறாவது படம் ‘ஸ்ரீ ராகவேந்திரா’. ‘படையப்பா’வில் வேல், ‘அருணாசல’த்தில் ருத்திராட்சம் என்று மெலிதான சித்திரிப்புகளை முன்வைத்த ரஜினி, தன் ‘ஆன்மிகப் புரிதலின்’ அடிப்படையில் எடுத்த படம், ‘பாபா’. ரஜினியின்
‘ஸ்ரீ ராகவேந்திரா’வும் சரி, ‘பாபா’வும் சரி, இரண்டுமே தோல்விப்படங்கள். ‘ஸ்ரீ ராகவேந்திரா’ படமாவது இளையராஜாவின் மயக்கும் இசை, ஜேசுதாஸின் உருகும் குரல், ஓரளவு சுவாரஸ்யமான திரைக்கதை ஆகியவற்றைக் கொண்டது. ஆனால் ‘பாபா’வோ அப்படிக் குறிப்பிடும்படியான படமும் அல்ல.  இத்தனைக்குப் பிறகும் ரஜினி தன் அரசியலாக ‘ஆன்மிக அரசியலை’ முன்வைக்கிறார். திராவிட அரசியலுக்கு மாற்றாகத்தான் அவர் இதை முன்வைக்கிறார் என்பது ரகசியமில்லை. ரஜினி ‘ஆன்மிக அரசியல்’ என்று சொல்வதும் வள்ளலார், குன்றக்குடி அடிகளார் என்று தொடரும் சமத்துவக் கருத்துகளை ஏற்றுக்கொண்ட ஆன்மிக அரசியல் அல்ல. அது சம்ஸ்கிருத மேலாண்மையை ஏற்றுக்கொள்ளும், சாதியத்தின் மீது எந்தக் கேள்வியும் எழுப்பாத ‘ஆன்மிகம்’. ரஜினியின் ‘பாபா’ படமே சம்ஸ்கிருத சுலோகங்களை முன்வைத்த, வடநாட்டு ஆன்மிகத்தை முன்வைத்த படம்தான். ஆனால், ராமநாராயணனின் விளையாட்டுப் போக்கிலான பக்திப் படங்களை ஏற்றுக்கொண்ட தமிழர்கள், ரஜினியின் சம்ஸ்கிருத மேலாண்மையை வலியுறுத்தும் ‘பாபா’வை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, ரஜினி முன்வைக்கும் ‘ஆன்மிக அரசியல்’ எந்த அளவு தமிழர்களிடம் செல்வாக்குப் பெறும் என்பது கேள்விக்குறிதான்.

ரஜினியின் படங்களில் வெளிப்படும் ஆணாதிக்கச் சாய்வுக்கு இன்னொரு பின்புலமும் உண்டு. 1995-ல் இயக்குநர் மணிரத்னம் வீட்டில் குண்டு வீசப்பட்டதை முன்வைத்து, “பாட்ஷா’ திரைப்பட விழாவில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது” என்று பேசினார் ரஜினி. இதனால் கோபமுற்ற, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, தன் இல்லத்துக்கு அருகே வசிக்கும் ரஜினியைச் சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கு சோதனைக் கெடுபிடிகள் என்ற பெயரில் நெருக்கடிகள் கொடுத்தார். இதன் விளைவு, அதற்குப் பிறகு வந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினியை நிலைப்பாடு எடுக்கவைத்தது. “அடுத்த முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்ற அவருடைய பேச்சு, அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. தி.மு.க - த.மா.கா. கூட்டணியை ஆதரித்தார் ரஜினி. அப்போது ஊழலில் ஊறிப்போயிருந்த ஜெயலிதாவுக்கு எதிரான மக்களின் மனநிலையால் தி.மு.க. - த.மா.கா. கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வென்றது. ரஜினியின் ஆதரவும் ஓரளவுக்கு உதவியது.

அதற்குப் பிறகு, வெளியான ‘படையப்பா’வில் ‘நீலாம்பரி’யின் பாத்திரத்தை ஜெயலலிதாவின் பிரதிபிம்பமாகவே ரஜினி ரசிகர்கள் பார்த்தனர். ஜெயலலிதா தன் திரையுலக வாழ்க்கையில் ‘திமிர்  பிடித்த, படித்த பெண்’ வேடங்களை நிறைய ஏற்று நடித்ததும்கூட, ‘நீலாம்பரி - ஜெயலலிதா பிரதிபிம்ப மனச்சாய்வுக்குக் காரணமாக இருக்கலாம். தொடர்ச்சியாகப் பல படங்களில்  “என்னைத் தேவையில்லாம சீண்டாதீங்க” என்று ரஜினி எச்சரித்துக் கொண்டேயிருந்தார். ‘ராஜாதிராஜா’ படத்தில் ‘எனக்குக் கட்சியும் வேணாம்; ஒரு கொடியும் வேணாம்’ என்றவர், ‘முத்து’ படத்தில் ‘கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு?’ என்றதோடு நிறுத்திக்கொள்ளாமல், ‘காலத்தின் கையில் அது இருக்கு’ என்றார். ரஜினியின் ஒவ்வொரு புதுப்பட அறிவிப்பின்போதும், புதுப்பட வெளியீட்டின்போதும் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பரபரப்பாகப் பேசப்படும். ரஜினியும் அவ்வப்போது மறைமுகமாகத் தன் அரசியல் வருகை குறித்துப் பேசியும், “ஆண்டவன் இன்னும் உத்தரவு தரலை” என்று சொல்லியும் அந்தப் பரபரப்பு நெருப்பு அணையாமல் பார்த்துக் கொண்டார். 1995-ல் ரஜினியின் அரசியல் வருகை குறித்துத் தொடங்கிய பேச்சுக்கு 2016-ல்தான் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியது, ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் உடல்நிலை ஆகியவை முதன்மைக் காரணங்கள்.

‘ஹே ராம்’ முதல் ‘விஸ்வரூபம்’ வரை கமல்ஹாசனின் பல படங்கள் நேரடியான அரசியல் படங்கள் என்றால் ரஜினிக்கு ‘கபாலி’, ‘காலா’ ஆகியவைதான் ஓரளவுக்கு நேரடியான அரசியல் படங்கள். என்றபோதும், அவை பா.இரஞ்சித் என்ற தலித் அரசியல் உணர்வுள்ள இயக்குநரின் படங்களாகப் பார்ப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் உள்ளன.

‘கபாலி’யில் “காந்தி சட்டை போடாம இருந்ததுக்கும் அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் பின்னால் அரசியல் இருக்கு”, “அப்படித்தான் கால் மேல் கால் போடுவேண்டா...கெத்தா” போன்ற வசனங்களும் ‘கபாலி’ நடத்தும் பள்ளியில் மாட்டப்பட்டிருக்கும் அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், சே குவேரா ஆகியோரின் படங்களும் அரசியல் தன்மை வாய்ந்தவை. ‘காலா’வோ அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து நேரடியாகவே இந்துத்துவ எதிர்ப்பை முன்வைத்தது. வில்லன் மோடியின் சாயலில் சித்திரிக்கப்பட்டார். இந்துத்துவ வில்லனின் ராம பக்திக்கு எதிரான ராவணனாக ‘காலா’ முன்னிறுத்தப்பட்டார். அம்பேத்கர், ஜோதிபா பூலே, பெரியார் ஆகியோரின் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இறுதிக்காட்சியில் ‘சிங்காரச் சென்னை - ஹெச்.ஜாரா’ வரை தீவிரமான இந்துத்துவ எதிர்ப்புக் குறியீடுகள் முன்வைக்கப்பட்டன.

ரஜினி அரசியல் வருகை உறுதிப்படுத்தப்பட்ட கணத்திலிருந்து, ‘அவர் அரசியல் வருகைக்குப் பின்னால் பாரதிய ஜனதா கட்சிதான் இருக்கிறது’ என்றே பேசப்பட்டது. ரஜினியின் ‘ஆன்மிக அரசியல்’ அறிவிப்பும் அதற்கு வலுசேர்த்தது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி தொடங்கி மோடி அரசின் பல நடவடிக்கைகளை ரஜினி ஆதரித்தார். யாரையும் பெயர் குறிப்பிடாமல் மய்யமாகவே விமர்சித்து வந்த ரஜினி நேரடியாகவோ மறைமுகமாகக்கூட இதுநாள் வரை பா.ஜ.க.வை விமர்சிக்கவில்லை. அவர் ‘சிஸ்டம் சரியில்லை’ என்று சொன்ன சிஸ்டம் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருந்தது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தபோது, பாதிக்கப்பட்டவர்களைப் பார்ப்பதற்காகச் சென்ற ரஜினி, “சென்னையிலிருந்து வருவதற்கு இவ்வளவு நாள் ஆனதா?” என்ற ஓர் இளைஞனின் கேள்வியால் எரிச்சலுற்று , “போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டார்கள்” என்று பேட்டி கொடுத்தார். ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே போய், “போராட்டம், போராட்டம்னு இருந்தா தமிழ்நாடே சுடுகாடா ஆயிடும்” என்றவர், ‘ஏய்’ என்று பத்திரிகையாளர்களை ஒருமையில் விளிக்கவும் தொடங்கினார்.

அது, பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘காலா’ படம் வெளியாகவிருந்த நேரம் என்பதால், எதிர்பார்ப்பு அதிகமானது. ‘கற்பி ஒன்றுசேர்’ என்ற அம்பேத்கரின் வார்த்தைகளை நினைவூட்டும்விதமாக ‘கற்றவை...பற்றவை’ என்ற பாடலுடன் ‘காலா’ படத்தின் டீஸர் வெளியானபோதே, ‘அம்பேத்கரின் வார்த்தைகளை பா.இரஞ்சித் வணிகமாக்குகிறார்’ என்றும் ‘தலித் ஆதரவை ரஜினியின் அரசியலுக்குச் சார்பாகத் திருப்பவே இது உதவும்’ என்றும் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளரும் தலித் சிந்தனையாளருமான ரவிக்குமார் குற்றம்சாட்டினார். ‘காலா’ படம் வருவதையொட்டி ரஜினியின் தூத்துக்குடிப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ‘காலா’ படத்தைப் புறக்கணிப்பதாகச் சில அரசியல் உணர்வாளர்கள் தெரிவித்தனர். எல்லாவற்றையும் மீறி வெளியான ‘காலா’ படமோ ரஜினியின் அரசியல் என்று நம்பப்பட்டவற்றுக்கு எதிராக இருந்தது.

ரஜினி என்னும் ஆளுமையை மக்கள் ஏற்றுக்கொள்வதற்குக் காரணமான ‘அநீதிக்கு எதிரான ஆவேச இளைஞன்’ என்னும் பிம்பத்துக்கு மாறாக, யதார்த்தத்தில் தன்னை ஆளும்வர்க்கத் தரப்பின் பிரதிநிதியாகவே நிறுத்திக்கொள்கிறார் அவர். ஆணாதிக்கத்தை வலியுறுத்தும், சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் கிஞ்சிற்றும் கேள்வி கேட்காத, மதச்சின்னங்களை முன்னிறுத்துகிற, முதலீட்டியத்தை ஆதரிக்கிற அரசியல்தான் ரஜினியின் ‘ஆன்மீக அரசியல்’. இது எந்தளவுக்குப் பிற்போக்கானது என்பதைக் கருத்தியல் உதாரணங்களுடன் விளக்க முடியும் என்றால், இது எந்தளவுக்குத் தோல்விகரமான அரசியல் என்பதையும் நடைமுறை உதாரணங்களுடன் விளக்க முடியும்.

அப்படியானால் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றே இல்லையா, மாற்றே இருக்கக்கூடாதா என்ற கேள்வி எழலாம். கண்டிப்பாக வேண்டும்தான். இப்போதிருக்கும் திராவிடக் கட்சிகள் அதன் தொடக்க கால லட்சியங்களை விட்டுவிட்டு, நீர்த்துப்போன நிலையில்தான் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் ரஜினி வெளிப்படையாக முதலீட்டியத் திட்டங்களை ஆதரிக்கிறார் என்றால், இரு திராவிடக் கட்சிகளும் மறைமுகமாக அவற்றை ஆதரிக்கின்றன. தங்கள் ஆட்சிகளில் நடைமுறைப்படுத்தவும் செய்கின்றன. ஆனால், இந்தத் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ரஜினியும் கமலும் இருக்க முடியுமா, அதற்கான அவர்கள் தகுதிகள் என்ன என்பதுதான் சமகால அரசியல் வினா.

*இன்றைய அரசியல் சீரழிந்ததாகவே இருக்கலாம். ஆனால் இதைச் சரிசெய்வதற்கு ரஜினியும் கமலும்தான் வரவேண்டும் என்பதற்கான அடிப்படை என்ன? நாயக பிம்பம், தனிநபர் வழிபாட்டு மனநிலை ஆகியவற்றின்மீது கட்டப்பட்டவைதானே இருவரின் அரசியல் எதிர்பார்ப்பும்?

*திரைப்படங்களில் கொடூரமான வில்லன்களை எதிர்கொண்டு சவாலான சாகசங்களை நிகழ்த்துவதன் மூலம் தங்கள் நாயகப் பிம்பங்களை உருவாக்கிக்கொண்ட ரஜினியும் கமலும், ‘அரசியலில் வெற்றிடம் இருக்கிறது’ என்று இயலாமையை, ஒரு பலவீனத்தை பயன்படுத்திக்கொள்வது சரிதானா? 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு