தமிழ் நவீனச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர், ராஜன்குறை. பின்நவீனத்துவம், தமிழ் சினிமா, திராவிட இயக்கம் ஆகியவை குறித்த முக்கியமான கட்டுரைகளை எழுதியவர். `குளோபல் வார்மிங்’ அபாயத்தை முன்வைத்து, இயற்கைவளங்களைச் சுரண்டும் மூலதனப் பேராசையை விமர்சித்து `முதலீட்டியமும் மானுட அழிவும்: சில குறிப்புகள்’ நூலில் விரிவாக எழுதியவர். டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் சினிமா மற்றும் படைப்பாக்கத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுபவருடன் ஓர் உரையாடல்.

``அதென்ன ராஜன் `குறை’?”

``ராஜன் என்ற பெயர் பலருக்கும் உள்ள சூழலில், என் எழுத்துகள் தனித்து அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்ற தேவையில்தான் `குறை’ என்பதைச் சேர்த்து `ராஜன்குறை’ என வைத்துக்கொண்டேன். மேலும், சிறு வயதிலிருந்து தூய்மை, பூரணத்துவம் போன்றவற்றுடன் இருந்த ஒவ்வாமையும் காரணமாக இருக்கலாம். நேரத்துக்குத் தகுந்தாற்போல விளக்கம் சொல்லிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.”

``பொதுவாக இலக்கியவாதிகள், நவீனச் சிந்தனையாளர்கள் என்றாலே சீரியஸ் சினிமா, கலை சினிமா ஆகியவற்றில்தான் ஆர்வம்காட்டுவார்கள். வெகுஜன சினிமாவை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஆனால், நீங்கள் எப்படி வெகுஜன சினிமாமீது ஆர்வம்காட்டத் தொடங்கினீர்கள்?”

``பள்ளிப்பருவத்தில் நிறைய நாவல்கள் படிக்கும் பழக்கம் உண்டு. அந்தப் பழக்கத்தின் மூலம் சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்த கரிசனமும், சமூக மாற்றம் குறித்த ஆழ்ந்த அக்கறையும் ஏற்பட்டன. கல்லூரியை முடித்த பிறகு, 80-களின் தொடக்கத்தில் சிறுபத்திரிகை இலக்கியம், திரைப்படச் சங்கங்கள், நவீன நாடகம் இவற்றில் ஈடுபாடு வரத் தொடங்கியது. அப்போது, ஏன் சாதாரண மக்களின் ரசனைக்கும், இது மாதிரியான சிந்தனைகளுக்கும் இடைவெளி இருக்கிறது; வெகுஜன ரசனை இவற்றிலிருந்து எப்படி வேறுபடுகிறது போன்ற கேள்விகள் எழுந்தன. அப்போதுதான் ஏராளமான மக்களின் அபிமானத்துக்குரிய தமிழ் சினிமாவை நவீனச் சிந்தனைகளின் மூலம் ஆராயத் தொடங்கினேன். தொடர்ச்சியாக அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம். கலாசாரம் அனைத்தையும் உள்ளடக்கிப் பார்க்கும் மானுடவியல் ஆய்வு நோக்கு, காலப்போக்கில் வடிவம்கொண்டது.”

``திராவிட இயக்கம் குறித்தும் பெரியார் குறித்தும் நீங்கள் தொடர்ந்து எழுதிவருகிறீர்கள். இன்றைய காலகட்டத்துக்குப் பெரியார் எந்த அளவுக்குத் தேவைப்படுகிறார்? அவரைக் குறித்த தமிழ்த் தேசிய, தலித்தியவாதிகளின் விமர்சனங்களைப் பற்றி உங்கள் கருத்து?”

``பிழைப்புவாதம் பெருகி, தத்துவச்சிந்தனை அருகிப்போன இன்றைய காலகட்டத்தில், பெரியாரின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. பெரியாரின் உயரத்தை, அவர் தயக்கமின்றி வெளிப்படுத்திய உள்முரண்களின் வீரியத்தைப் புரிந்துகொள்ள தத்துவப் பயிற்சி அவசியம்.

விமர்சனச் சிந்தனையை வலியுறுத்திய பெரியாரை, பல்வேறு கோணங்களில் விமர்சனபூர்வமாக அணுகுவதும் ஆராய்வதும் முக்கியமானது. ஆனால், அத்தகைய விமர்சனப் பார்வைகள் பலன் அளிக்கவேண்டுமானால், இரண்டு நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும்; அவரை ஆழமாகவும் விரிவாகவும் படிக்க வேண்டும். விரிவான ஆய்வுச்சட்டகத்தில் விமர்சனங்களைக் கட்டமைக்க வேண்டும். விமர்சனம் என்பது நிராகரிப்பல்ல என்ற பாலபாடமும் முக்கியமானது.”

`` `முதலீட்டியம்’ என நீங்கள் பயன்படுத்தும் வார்த்தை, தமிழ்ச் சூழலில் புதிது. எந்த அர்த்தத்தில் அதைப் பயன்படுத்துகிறீர்கள்?”

``கார்ல் மார்க்ஸின் மிக முக்கியமான பங்களிப்பு `டாஸ் கேப்பிட்டல்.’ மூலதனம் என்பது, எப்படி மனிதச் சமூகத்தில் பல மாற்றங்களை உருவாக்கியது என்பதை ஆராய்ந்தது அந்த நூல். மார்க்ஸைப் பொறுத்தவரை, தனிநபர்களைவிட `மூலதனம்’ என்ற கருத்துதான் முக்கியமானது. ஆனால், தமிழில் `கேப்பிட்டலிசம்’ என்பதை `முதலாளித்துவம்’ என மொழிபெயர்த்துவிட்டார்கள். இதனால் மூலதனத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட, தனிநபர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கூடுகிறது. அதனால்தான் நான் `முதலாளித்துவம்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக `முதலீட்டியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்.

தேவைக்கு அதிகமாகவும், தேவையில்லாமலும் கண்டதையும் உற்பத்தி செய்து நுகர்வைப் பெருக்கி அதிகாரக் குவிமையங்களை உருவாக்குவதுதான் `முதலீட்டியம்.’ இது உருவாக்கித் திணிக்கும் பண்டங்களின் நீண்ட பட்டியலில் டீ, காபி, புகையிலை ஆகியவை தொடக்ககால உதாரணங்கள். முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மானுட வாழ்க்கையில் இடம்பெறாத இவையெல்லாம், இன்று இன்றியமையாத பண்டங்களாகிவிட்டன. அதேபோல் இப்போதும் அத்தியாவசியம் இல்லாத பொருள்களை உற்பத்தி செய்து, அதற்கான சந்தையை முதலீட்டியம் உருவாக்குகிறது. விரிவாக விளக்கவேண்டிய விஷயம் இது.”

``இன்றைய அரசியல் சூழலை எப்படி அணுகுகிறீர்கள்?”

``அரசியல் என்பதை இரண்டு பரிமாணங்களில் அணுகுகிறேன். மானுட வரலாற்றைத் தீர்மானிக்கும் அரசியல் என்பது ஒன்று; தேர்தல் மக்களாட்சி அரசியல் என்பது மற்றொன்று.

முதல் வகையான அரசியலில், முதலீட்டியம் நுகர்வுக் கலாசாரத்தை உருவாக்கி, சுற்றுச்சூழலையும் மனித வாழ்வையும் அழிவின் விளிம்புக்குக் கொண்டுவந்துவிட்டது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. எனவே, முதலீட்டியத்தின் கோரப்பிடியிலிருந்து மானுட வாழ்வை மீட்க வேண்டும். ஆனால், இப்போது `வளர்ச்சி அரசியல்’ என்பது மிக வேகமாக எதிர்த்திசையில் செல்வதால், மாற்று அரசியலை முன்னெடுப்பதற்கான சாத்தியங்கள் புலப்படவில்லை.”

`` `சினிமாதான் தமிழர்களைக் கெடுக்கிறது’, `சினிமாக் கவர்ச்சியின் மூலம் அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

``வெகுஜனக் கலாசாரம், வணிகக் கலாசாரம் இரண்டையும் பிரித்தறிய வேண்டும் என்பதுதான் என் ஆய்வின் அடிப்படை. நல்லதங்காள் கதை வெகுஜனக் கலாசாரம்; ரிவால்வர் ரீட்டா வணிகக் கலாசாரம். என்னுடைய ஆய்வில், ‘தமிழர்கள் தங்கள் சுயத்தை உருவாக்கிக்கொள்ள எம்.ஜி.ஆர்-சிவாஜி என்ற கதாநாயக எதிர்வு பயன்பட்டது’ என முன்மொழிகிறேன். `இது, கலைஞரும் தி.மு.க-வும் இல்லாமல் சாத்தியமாகியிருக்காது’ என்றும் கூறியுள்ளேன். தி.மு.க-வால் தமிழ் சினிமா பயனடைந்தது என்றுதான் முதலில் கூறவேண்டும். தான் வளர்த்த பிள்ளைகளால் பெற்றோர் பயனடைவதுபோல, தான் வளர்த்த சினிமாவால் தி.மு.க பின்னாளில் பயனடைந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். அந்தப் பயன்விளைவையும் எம்.ஜி.ஆர் பிரித்துக்கொண்டு சென்றார்.”

``தமிழ் சினிமாவில் நாயகர்களைக் கொண்டாடுவது என்பது குறைந்துவிடும் என்று சொல்லி, `கதாநாயகனின் மரணம்’ என்று ஒரு கோட்பாட்டை முன்வைத்தீர்கள். ஆனால், இன்னமும் கதாநாயக வழிபாடு தொடரத்தானே செய்கிறது?”

``எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்தில் இருந்த நாயக வழிபாடு, ரஜினி-கமல் காலத்தில் குறையத் தொடங்கியது என்றுதான் அனுமானிக்கிறேன். கதாநாயக வழிபாடு, நட்சத்திர வழிபாடாக, வணிக மையம் கொண்டதாக மாறத் தொடங்கிவிட்டது. கதாநாயகன் (Hero), கதாநாயக நட்சத்திரம் (Star) இரண்டும் ஒன்றுபோல இருந்தாலும், இடையில் முக்கியமான பல வேறுபாடுகள் உள்ளன என்பதே என் ஆய்வின் மையப்பொருள். இன்றும் கதாநாயக நடிகர்கள் கொண்டாடப்படுகிறார்களே என்றால், அது இயல்பாக உருவாவதைவிட, வியாபாரத்துக்காக ஊதிப்பெருக்கப்படுகிறது என்பதுதான் காரணம்.

`கதாநாயகனின் மரணம்’ என்ற என் கோட்பாடு உருவாவதற்கான விதை, பாலாஜி சக்திவேலின் `காதல்’ படம்தான். கையறுநிலையில் உள்ள கதாநாயகனை மக்கள் ஏற்றுக்கொண்டபோது, `சாகச நாயகன்’ என்ற பிம்பத்துக்குப் பெரிய அடி விழுகிறது. தொடர்ந்து கையறுநிலை கதாநாயகன், நையாண்டி கதாநாயகன் (இம்சை அரசன்), எதிர்மறை நாயகன் (மங்காத்தா) என்று உருவாகிவரும் தமிழ் சினிமாக்களால், பழைய `சாகச நாயகன்’, `தார்மிக நாயகன்’ போன்ற பிம்பங்கள் அழிகின்றன.”