Published:Updated:

16 அணிகள், 19 நாள்கள், 32 போட்டிகள்... ஹாக்கி உலகக் கோப்பை ஃபேவரைட் யார்?

முன்களத்தில் பலமாக இருக்கும் இந்திய அணி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினால், 1975-ம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் ஹாக்கி உலகக்கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை புரியலாம்.

16 அணிகள், 19 நாள்கள், 32 போட்டிகள்... ஹாக்கி உலகக் கோப்பை ஃபேவரைட் யார்?
16 அணிகள், 19 நாள்கள், 32 போட்டிகள்... ஹாக்கி உலகக் கோப்பை ஃபேவரைட் யார்?

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி  தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. ஒரிஸா மாநிலம் புவனேஸ்வர் கலிங்கா மைதானத்தில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரை நடைபெறும் இந்தத் தொடரில் 16 அணிகள் பங்கேற்கின்றன. சமீப காலமாக ஹாக்கி அரங்கில், இந்திய அணி மீண்டும் எழுச்சி கண்டிருப்பதாலும், இந்தியாவில் மூன்றாவது முறையாக உலகக் கோப்பை அரங்கேறுவதாலும், இத்தொடர் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிவு A: அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ்  
பிரிவு B: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா 
பிரிவு C: பெல்ஜியம், இந்தியா, கனடா, தென் ஆப்பிரிக்கா 
பிரிவு D: நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான்  

உலகக் கோப்பை ஹாக்கியின் வரலாறு

உலக ஹாக்கி சம்மேளனம் (FIH) சார்பில் 1971-ம் ஆண்டு முதல் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் நடத்தப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகளின் இடைப்பட்ட ஆண்டுகளில் இந்த உலகக் கோப்பை தொடர்கள் நடத்தப்படும். முதல் மூன்று உலகக்கோப்பைகள் 2 ஆண்டுகள் இடைவெளியில்  நடத்தப்பட்டன. 1978-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையே 3 ஆண்டுகள் இடைவெளியில் நடத்தப்பட்ட ஒரே தொடர். அதன்பிறகு நடைபெற்ற அனைத்து உலகக் கோப்பைகளும் 4 ஆண்டு இடைவெளியில் நடத்தப்பட்டன.

1971-ம்  ஆண்டு நடைபெற்ற முதல் உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் கலந்து கொண்டன. 1978 முதல் 12 அணிகளும், 2002-ல் இருந்து 16 அணிகளும் கலந்துகொள்கின்றன. இதுவரை பாகிஸ்தான் நான்கு (1971,1978,1982,1994),  நெதர்லாந்து (1973,1990,1998), ஆஸ்திரேலியா (1986, 2010, 2016)  தலா மூன்றுமுறை உலகக் கோப்பை வென்றுள்ளன. ஜெர்மனி (2002, 2006) இருமுறையும், இந்தியா (1975) ஒருமுறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இதில், நெதர்லாந்து (1973,1998), ஜெர்மனி (1996) சொந்த மண்ணில் வென்றுள்ளன. அமெரிக்கா, ஆப்ரிக்கா கண்டங்கள் இதுவரை உலகக்கோப்பை நடத்தியதில்லை.

2018-ம் ஆண்டு ஹாக்கி உலகக்கோப்பை

முதலில் லீக் ஆட்டங்களாகத் தொடங்கும் உலகக்கோப்பையில் ஒவ்வொரு பிரிவில் உள்ள அணி மற்ற அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். முதல் இடம் பெறும் அணி நேரடியாக காலிறுதிக்கு தகுதிபெறும். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெறும் அணிகள் 'கிராஸ் ஓவர்' எனப்படும் நாக் அவுட் சுற்றில் விளையாடும். இதில் வெற்றி பெறும் 4 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். அரையிறுதிப் போட்டிகள் டிசம்பர் 15-ம் தேதியும், இறுதிப்போட்டி டிசம்பர் 16-ம் தேதியும் நடைபெறும். இன்னும் இரண்டு நாள்களில் கோலாகல கொண்டாட்டத்துடன் தொடங்க இருக்கும் உலகக்கோப்பையில் கலந்து கொள்ளும் முக்கிய அணிகளைப் பற்றிய அப்டேட்.

இந்தியா

தரவரிசையில் 5-ம் இடத்தில் உள்ள இந்திய அணி, தற்போது ஆசிய சாம்பியன் என்ற பெருமையுடன் களமிறங்கவுள்ளது. மன்ப்ரீத் சிங் தலைமையில், இளமையும் அனுபவமும் கலந்து வலுவாக இருக்கிறது இந்திய அணி. கோல்  கீப்பராக ஸ்ரீஜேஷ், பெனால்டி கார்னர் ஸ்பெஷலிஸ்ட்  ஹர்மான்ப்ரீத் சிங், ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் தொடர் நாயகன் ஆகாஷ்தீப் என நட்சத்திர வீரர்கள் அணிவகுக்கிறார்கள். இந்திய அணி தடுப்பாட்டத்தில் கொஞ்சம் அதிகமாகக் கவனம் செலுத்தினால் 1975-ம் ஆண்டுக்குப் பிறகு  மீண்டும் உலகக்கோப்பை வென்று வரலாறு படைக்கலாம். 

ஆஸ்திரேலியா

கடந்த இரண்டுமுறை உலகக் கோப்பையை வென்ற அணியான ஆஸ்திரேலியா, பட்டத்தைத் தக்கவைக்கும் நோக்கில் புவனேஸ்வரில் களமிறங்கியுள்ளது. ஒலிம்பிக்கில் சிறிது தடுமாற்றம் அடைந்தாலும் மற்ற அனைத்துப் போட்டிகளிலும் கோப்பையினை வென்று மிகவும் வலுவாக இருக்கிறது. எட்டி ஆக்கெண்டேன் தலைமையில் பிளேக் கோவர்ஸ், ட்ரென்ட் மிட்டன் போன்ற ஸ்டார் வீரர்கள் இந்த உலகக் கோப்பையில் கலக்கக் காத்திருக்கிறார்கள். உலகக் கோப்பையில் ஹாட்ரிக் அடிப்பதுடன், அதிகமுறை பதக்கம் வென்ற அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை ஆஸி சமன் செய்யும் என்பது நிபுணர்கள் கணிப்பு.

பாகிஸ்தான்

உலகக் கோப்பைகளை அதிகமுறை வென்ற பாகிஸ்தான், 24 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் பெர்ஃபாமன்ஸ் சுமாராகவே இருந்தாலும் முகமது இப்ரான் தலைமையில் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட காத்திருக்கிறது. முகமத் ரிஸ்வான், முகமத் உமர் பட்டா மற்றும் கோல்கீப்பர் அம்ஜத்  அலி போன்ற வீரர்கள் தங்கள் பெஸ்ட்டைக் கொடுக்கும் பட்சத்தில் முன்னணி அணிகளுக்குச் சவால் அளிக்கலாம். 

அர்ஜென்டினா

ஒலிம்பிக் சாம்பியன் என்ற மகுடத்துடன் இந்தியா வந்துள்ளது அர்ஜென்டினா. உலக ஹாக்கி தரவரிசையில் இரண்டாம் இடத்திலிருக்கும் அர்ஜென்டினா, இதுவரை உலகக் கோப்பை வென்றதில்லை. கடந்த முறை மூன்றாவது இடமே கிடைத்தது. இந்த முறை பெரும் வேட்கையோடு களமிறங்குகிறது இந்தத் தென்னமெரிக்க அணி. லூகாஸ் ரே, அகஸ்டின் மஸிலி, ஃபகுண்டோ கலியோனி போன்ற வீரர்கள் அர்ஜென்டினா அணியின் மிகப்பெரிய பலம்.

நெதர்லாந்து

ரியோ ஒலிம்பிக் காலிறுதியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடிய ஆட்டத்தைப் பார்த்தால் நெதர்லாந்து அணியின் முழு பலம் தெரியும். அரையிறுதியில் தங்களைத் தோற்கடித்த பெல்ஜியத்தை, கடந்த ஆண்டு நடந்த 'யூரோ' தொடரின் ஃபைனலில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆம், இப்போது இவர்கள்தான் ஐரோப்பாவின் சாம்பியன்கள். ஆனால், இந்த உலகக் கோப்பையில் இவர்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. தங்கள் பிரிவில் ஜெர்மனி, பாகிஸ்தான், மலேசியா என பலம் வாய்ந்த அணிகளுடன் நெதர்லாந்து மோதவேண்டும். ஒரு மோசமான முடிவு, அவர்களின் உலகக் கோப்பை வாய்ப்பைப் பறித்துவிடும். குரூப் பிரிவில் முதலிடம் பெற்றுவிட்டால், நெதர்லாந்து கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. 

பெல்ஜியம்

கடந்த ஒலிம்பிக் போட்டியில் இரண்டாம் இடம்பெற்ற  பெல்ஜியம், இந்த உலகக் கோப்பையை  வெல்லும் ஃபேவரைட் அணிகளில் ஒன்று. கேப்டன் தாமஸ் பிரியல்ஸ், ஜான்-ஜான் டோமன், கோல்  கீப்பர் வின்சன்ட் வெனேஷ் கவனிக்கப்படவேண்டிய வீரர்கள். சி பிரிவில் இந்திய அணிக்குக் கடும் சவால் கொடுக்கக்கூடிய அணி பெல்ஜியம்தான். ரியோ ஒலிம்பிக் காலிறுதியில் பெல்ஜியம் அணியிடம்தான் இந்தியா தோற்றது. இந்த முறையும் இந்தியாவின் உலகக் கோப்பை வாய்ப்பு, இவர்களை வெல்வதைப் பொறுத்தே அமையும்.