Published:Updated:

``ண்ணா...இன்னும் நிறைய கத்துக்கணும்!" - மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் கற்றுத்தரும் இளைஞர்

இந்த நகர்வுகளும், இந்த நிகழ்ச்சி உண்டாக்குகின்ற அதிர்வுகளும் குழந்தைகளின் இளம் அறிவினுள் எளிதாய் ஏறி அமர்ந்து கொள்ளும். 

``ண்ணா...இன்னும் நிறைய கத்துக்கணும்!" - மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் கற்றுத்தரும் இளைஞர்
``ண்ணா...இன்னும் நிறைய கத்துக்கணும்!" - மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் கற்றுத்தரும் இளைஞர்

நான்கு கால்களை நீட்டிச் சிலந்தியைப் போல நிற்கிறது, ஒரு மினி ரோபோ. தொட்டுப் பார்க்கச் சொல்லி எழுப்பி விடப்படுகிறாள் ஒரு சிறுமி. ஆச்சர்யம் கலந்த தயக்கத்தோடு அவள் நிற்கிறாள். தொடுவதற்குச் சிறிது பயப்படுகிறாள். பக்கத்தில் உள்ளவர்களின் தூண்டுதலால் லேசாக ரோபோவைத் தொட்டவள், தன் கையை வெடுக்கெனப் பிடுங்கிக்கொண்டு மீண்டும் போய் தன் இடத்தில் அமர்ந்துகொண்டாள். அதன்பின், அந்த ரோபோவையும், அதன் அசைவுகளில் இருந்த இயந்திரத் தன்மையையும் சில நிமிடங்களுக்கு முன்பு ரசித்ததைவிடவும் மிக நெருக்கமாய் ரசிக்கத் தொடங்கினாள். ரோபோ மீதான அவளது பார்வையில் சிநேகம் பூக்கத் தொடங்கியது.

மேற்சொன்னது, உலகின் ஏதோவோர் அதிநவீன ரோபோடிக்ஸ் பள்ளியிலோ, ரோபோ ஆய்வகத்திலோ கண்ட காட்சியல்ல! மதுரை திருமங்கலம் அருகே கரடிக்கல் கிராமத்தின் அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற ரோபோ தொழில்நுட்பம் குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில் காணக்கிடைத்த காட்சி.

கையசைக்கும் ரோபோக்கள், நடக்கும் ரோபோக்கள், வாய்ஸ் ஸ்கேனிங், ஃபேஸ் ரீடிங் ரோபோக்கள் என மனிதனின் உருவாக்கத்தில் பல வகை ரோபோக்கள் உலகையே வியப்பில் ஆழ்த்தியபடி வலம் வருகின்றன. சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்களின் பள்ளிக் குழந்தைகளுக்கு இயந்திரவியல், ரோபோட்டிக்ஸ், புரோகிராமிங் கோடுகள் (Code Programming) போன்ற கல்விப் பாடங்களுக்கான செயலாக்கப் பயிற்சிகளை வழங்குகின்றன. அமெரிக்காவின் அமேசான் நிறுவனம், பள்ளிப்பருவத்திலுள்ள 10 மில்லியன் குழந்தைகளுக்கு ஓராண்டு முழுவதும் கோடிங்குக்கான பயிற்சியை வழங்கத் தீர்மானித்துச் செயலாற்றி வருகிறது. ``ரோபோக்கள் குறித்த கல்வி, இந்தியாவின் பெருநகரங்களை வந்தடைந்து சென்னையையும் தொட்டுத் தொடர்கின்றது. நம் கிராமப்புறப் பள்ளி மாணவர்களிடம் ரோபோட்டிக் கல்வியை ஏனோ யாரும் எடுத்துச்செல்ல முன்வருவதில்லை” என வேதனை தெரிவிக்கிறார், கார்த்திக். 

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பயின்ற இவர், மென்பொருளாக்கத்துறையில் வல்லுநர். பெல்ஜியத்தில் இரண்டாண்டுகள் பணிபுரிந்து பின்னர், தான் சார்ந்திருக்கும் துறை வழியாகச் சமூகத் தொண்டாற்ற வேண்டும் எனும் முனைப்போடு களம் இறங்கியிருக்கிறார். இவரது மனைவி, சூர்யபிரபா. தேனி கலைக்கல்லூரியிலும் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்திலும் நுண்ணுயிரியல் பிரிவில் பயின்று பட்டம் பெற்றவர். இந்தத் தம்பதியர் இணைந்து மென்பொருள் மற்றும் அதன் கோடிங்குகளை உருவாக்குவதற்கும், அவற்றை கற்பனைத் திறன்களுக்கேற்ப உருமாற்றிப் புதுப்பிப்பதற்குமான பயிற்சியை வழங்குகின்ற நிறுவனமொன்றைச் சென்னையில் நடத்தி வருகின்றனர். 

``பொறியியல் கல்வியைநோக்கி உலக நாடுகள் மிக வேகமாக நகர்ந்துவரும் இந்தச் சூழலில், இந்தியாலோ பொறியியல் கல்வியைவிட்டு விலகிக் கொண்டே போகிறது” என ஆதங்கப்படுகிறார், கார்த்திக். பொறியியல் கல்வியால் வேலை வாய்ப்புகள் ஏதும் கிடைப்பதில்லை என யதார்த்த ரீதியில் இங்கு வாதிடப்பட்டாலும் தனித்திறன், படைப்பாற்றல், புதுமையான செயல்திறன் உள்ளிட்டவை வேலை வாய்ப்புக்கான தகுதிகளில் முக்கிய இடங்களைப் பிடித்துக்கொள்வதால், கல்வி மட்டுமே வேலை பெறுவதற்கான முகாந்திரமாக இருப்பதில்லை என்பதும் அதே யதார்த்தம்தான். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI - Artificial Intelligence) பந்தயத்தில் உலக நாடுகள் எல்லாமே போட்டி போட்டுக்கொண்டு முன்னேறிச் சீறுகின்றன. நம் இந்தியாவில் அளவுக்கு அதிகமாய் பொறியியல் பட்டதாரிகள் இருந்தாலும், இவர்களிடம் இந்த AI போட்டிகளில் ஈடுகொடுக்கும் தன்மையற்ற நிலையே நீடிக்கிறது என்பதைக் காண முடிகிறது.

2016-ம் ஆண்டு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டிருந்த செய்தியில் 2013-ம் ஆண்டின் ஒன்றரை இலட்சம் இந்தியப் பொறியியல் பட்டதாரிகளின் திறன்களைக் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இடம்பெற்றிருந்தன. அதில் பல அதிர்ச்சித் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அதாவது, மொத்த இந்தியப் பட்டதாரிகளில் 3 சதவிகிதத்தினர் மட்டுமே பணிகளுக்குத் தகுந்த முழுத்திறன்களைப் பெற்று உள்ளனர், 7 சதவிகிதத்தினர் மட்டுமே தங்கள் துறைகளில் வழங்கப்படுகிற பொறியியல் தொழில்நுட்பப் பணிகளைச் செம்மையாய்ச் செய்துமுடிக்கும் திறன் கொண்டிருக்கின்றனர் என்றது அந்தச் செய்தி. இதற்கான மூலக்காரணிகளுள் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று, பெரும்பாலான பொறியியல் கல்லூரி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறைபாடு பெருகி இருப்பதும்தான்.

பள்ளிக் குழந்தைகளிடம் இந்தப் பொறியியல் ஆர்வத்தைக் கொண்டுசேர்ப்பதே இந்திய அறிவியல் வளர்ச்சியின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான செயல்பாடாய் அமையும். அதுவும், வாய்ப்புக் கிடைக்காத கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இதன்மூலம், தங்கள் எதிர்காலம் குறித்த வேறுபட்ட புதிய பார்வைகள் கிடைக்கும் என்பதும் உறுதி. இவற்றையெல்லாம் குறிக்கோளாய்க் கொண்டுதான் AI ஃபார் கிட்ஸ் (AI4KIDS), கோடிங் ஃபார் கிட்ஸ் (CODING4KIDS) எனும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர் கார்த்திக் - சூரியபிரபா தம்பதியர். மனைவி சூரியபிரபாவின் யோசனைதான் கிராமங்களை நோக்கி கார்த்திக் அவர்களை உந்தியிருக்கிறது. இந்நிறுவனத்தின் கிளையைத் தொடங்குவதற்காக மதுரை பிடிஆர் பொறியியல் கல்லூரி நிர்வாகம் தங்கள் கல்லூரி வளாகத்தில் இடம் ஒதுக்கித் தந்திருக்கிறது. தங்கள் கனவு தற்போது, மதுரையில் நனவாகிடத் தொடங்கியுள்ளதாய்க் கூறுகின்றனர், இருவரும்.

``ஆர்வமும் திறனும் மிகுந்த தொழில்நுட்பப் பட்டதாரிகள் 7 பேர் குழுவாய் இணைந்து இந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை இந்நிறுவனத்தின் மதுரைக் கிளை சார்பில் நடத்திக்கொண்டிருக்கிறோம். நிகழ்ச்சியைப் பார்க்கின்ற அத்தனை பள்ளி மாணவர்களும் மிகுந்த ஆர்வத்தோடு எங்களிடம் பேசுகின்றனர். தொழில்நுட்ப விவரங்களைக் கேட்டு விளங்கிக்கொள்ள முற்படுகின்றனர். நாங்கள் இதை ஆரம்பித்திருக்கும் நோக்கமும் இதுதானே! தொடர்ந்து அரசுப் பள்ளிகளை நோக்கிச் சென்று ஏழை எளிய மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டி, அவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கமும் உதவியும் உறுதுணையும் புரிவோம்” எனப் பெருமிதமாய்ப் பேசுகிறார். 

இந்த நிகழ்ச்சிகளில் மாணவர்களிடம் காட்சிப்படுத்துவதற்காக, வெளிநாடுகளில் விற்பனையாகின்ற ரோபோக்களை ஆன்லைனில் இவர்கள் விலைகொடுத்து வாங்கியுள்ளனர். இந்தக் குழுவினர், பள்ளிச் சிறுவர் சிறுமிகளிடம் அந்த ரோபோக்களைக் காட்சிப்படுத்துவதற்கு ஏற்றவாறு அதனை மீட்டுருவாக்கி அசத்தி வருகின்றனர். அந்த விழிப்பு உணர்வு நிகழ்வொன்றில் நடந்த அழகிய காட்சிதான் கட்டுரையின் தொடக்கப் பத்தி.

மேலும், பல மாணவர்கள் இந்த டெக்னிக்கலில் மனம் லயித்து, `நானும் இதைச் செய்யணும், இன்னும் நிறைய கத்துக்கொடுக்க முடியுமா?’ என்றெல்லாம் ஆசையாய் வேண்டுகோள் விடுக்கின்றனராம். தொடர்பில் இருந்து தன்னை வழிநடத்தக் கோரி, தங்கள் வீட்டாரது தொடர்பு விவரங்களையெல்லாம் குறித்துக்கொடுத்துள்ளார்களாம். எல்லாவற்றையும் சொல்லி மகிழ்ந்தவர், `எங்கள் பொறுப்புகள் இன்னும் அதிகரித்துள்ளதாக உணர்கிறேன்’ என்று சுறுசுறுப்பாகச் சொல்லி, ரோபோக்களை விளக்கத் தொடங்குகிறார். உடனிருந்து ரோபோக்களை இயக்கிக் காண்பிக்கின்றனர், டீம் மேட்ஸ்.

மேகாமோன் (MEKAMON), நான்கு கால்களைத் தூக்கி உடம்பை ஆட்டி அமர்க்களப்படுத்துகிறது. லெகோ பூஸ்ட் (LEGO BOOST), வண்ணங்களை ஸ்கேன் செய்து அறிந்து அதற்கேற்ற கட்டளையின்படி செயல்படும் ரோபோ. நின்டென்டோ லபோ (NINTENDO LABO) வெரைட்டி கிட், ரோபோட் கிட், வெகிக்கிள் கிட், ஏஐஒய் (AIY - Artificial Intelligence Yourself) நிறுவனம் வெளியிட்டுள்ள விஷன் கிட், வாய்ஸ் கிட் போன்றவையும், நடப்பது, ஓடுவது, பறப்பது, வாகனங்கள் ஓட்டுவது என எல்லாவற்றையும் லைவ்வாக உணர வைக்கும் வகையில் தொழில்நுட்பம் சார்ந்த ரோபோட்டிக் விளையாட்டு உபகரணங்கள் இவர்களிடம் இருக்கின்றன. மைக்ரோபிட் (MICROBIT), கனோ (KANO) போன்ற கம்ப்யூட்டர் கோடிங் உபகரணங்கள் இங்குள்ளன. சாப்ட்வேர் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்கள், கோடிங்குகளைக் கற்கத் திணறுவதும் வெறுப்பதும் இதில் நிகழ்வதில்லை. கலர்ஃபுல்லாகக் கிடைக்கும் இந்த வகை கிட்களில், சிரமமான கோடிங்கைக்கூட சூப்பராக ரசிக்கும்படி கற்றுக்கொள்ள ஏதுவாய் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த ரோபோடிக் மற்றும் கோடிங் உபகரணங்களைக் கொண்டுதான் குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும் பணிகளை ஆற்றிவருகின்றது, கார்த்திக் அண்ட் டீம். ``எந்தவிதமான லாபநோக்கமும் இன்றி, நல்ல எண்ணத்துடன் இணைந்திருக்கிறோம். ரோபோ வாங்கும் செலவுகள், உடனிருந்து பணி செய்யும் இந்த டீமின் பட்டதாரிகளுக்கு ஊதியம் என எல்லாமே என் செலவுதான். சில தொண்டு நிறுவனத்தார்களும், நல்ல மனம் படைத்தோர்களும் உடனிருந்து பொருளுதவி புரிகின்றனர்” என்கிறார், கார்த்திக். 

மதுரை திருமங்கலம் பகுதியின் அரசுப் பள்ளிகளில் நடைபெறத் தொடங்கியுள்ள ரோபோடிக் மற்றும் கோடிங்குகளுக்கான இந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் தனிச்சிறப்பு யாதெனில் வெறுமனே, பொழுதுபோக்கானதாக இல்லாமல், இதை நாமும் உருவாக்கலாம், நம் விருப்பப்படி செயலாற்ற வைக்கலாம் எனும்போது குழந்தைகள் மத்தியில் உள்ள ஆர்வம் இன்னும் இரட்டிப்பாகின்றது. படைப்பாக்கம் நோக்கி அவர்களின் சிந்தனைகள் நகர்கின்றன. இந்த நகர்வுகளும், இந்த நிகழ்ச்சி உண்டாக்குகின்ற அதிர்வுகளும் குழந்தைகளின் இளம் அறிவினுள் எளிதாய் ஏறி அமர்ந்து கொள்ளும். அந்தக் கூட்டத்திலிருந்து எதிர்கால விஞ்ஞானிகள் எழப்போவதைக் கட்டாயம் காலம் சொல்லும்!