Published:Updated:

``பட்டாசு என்று நினைத்தோம்... துப்பாக்கியால் சுட்டார்கள்!’’ - தாஜ் ஹோட்டல் ஊழியர் அனுபு சேத்

``பட்டாசு என்று நினைத்தோம்... துப்பாக்கியால் சுட்டார்கள்!’’ - தாஜ் ஹோட்டல் ஊழியர் அனுபு சேத்
``பட்டாசு என்று நினைத்தோம்... துப்பாக்கியால் சுட்டார்கள்!’’ - தாஜ் ஹோட்டல் ஊழியர் அனுபு சேத்

அதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் கனவு காண்கிறேனா என்றுகூடக் கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். அப்போது அதிகாலை நேரம். சாத்தியமே இல்லாத, நம்பவே முடியாத வகையில் நான் உயிரோடு இருந்தேன். 

மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தாக்குதல் நடந்த இடங்களில் ஒன்றான மும்பை தாஜ் ஓட்டலின் ஊழியர் ஒருவர் அன்று, தான் மரணத்தின் விளிம்புக்குச் சென்று திரும்பிய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். 

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி, பாகிஸ்தானிலிருந்து மும்பைக்குக் கடல் வழியாக ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர், பிரபல தாஜ் ஓட்டல் உள்ளிட்ட மும்பையின் பல்வேறு முக்கிய இடங்களில் தொடர் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் இந்தியர்கள், வெளிநாட்டினர் என 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான். உலகையே உலுக்கிய இந்தத் தாக்குதல் சம்பவத்தின் 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் தப்பிப் பிழைத்த மும்பை தாஜ் ஓட்டலின் உதவி மேனேஜர் அனுபு சேத் என்பவர், தாக்குதலின்போதுதான் எதிர்கொண்ட அந்த திக்...திக் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். 

உணவகத்தில் தொடங்கிய தாக்குதல்

``அன்று இரவு 9.30 மணி இருக்கும். சுமார் 150-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உணவு விடுதியில் இருந்தனர். திடீரென உணவு விடுதிக்குள்ளிருந்து கூச்சலும், குழப்பமுமாகச் சத்தம் வெளிப்பட்டது. நானும் எனது சக ஊழியர்களும் ஏதாவது திருமணமாக இருக்கலாம்...அதனால் பட்டாசு வெடிக்கின்றனர் என்று கருதினோம். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே அந்தச் சத்தம் மிகப் பயங்கரமானதாக இருந்தது. அது துப்பாக்கியால் சுடும் சத்தம் என்பதை உணர்ந்துகொண்டோம். உடனேயே உணவகத்தின் கதவை மூடலாம் என முடிவு செய்தோம். 

சாவியைப் பூட்டின் உள்ளே நுழைத்துத் திருப்பிக் கொண்டிருக்கும்போது தீவிரவாதி ஒருவன் நடந்து வருவதைப் பார்த்தோம். ஆனால், அவன் தீவிரவாதி என அப்போது தெரியவில்லை. கல்லூரி மாணவனைப் போன்ற தோற்றத்துடன் ஆரஞ்ச் கலர் டி சர்ட், கார்கோ பேன்ட் மற்றும் சிவப்பு வண்ண தொப்பியுடன், காலில் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்தபடி அவன் வந்துகொண்டிருந்தான். ஆனால், அவனின் கையில் துப்பாக்கி இருந்தது. திடீரென அவன், துப்பாக்கியால் மேல் நோக்கிச் சுட ஆரம்பித்தான். உடனே நான் அருகிலிருந்த தூண் ஒன்றின் பின்னால் மறைந்துகொண்டேன்.

கதவுக்கு அருகே ஸ்விட்ச் போர்டு இருந்ததால், எங்களால் விளக்குகளை அணைக்க முடியவில்லை. நாங்கள் உடனே, விடுதிக்கு வந்திருந்தவர்களிடம் தரையில் படுத்துக்கொள்ளுமாறும், முடிந்த அளவுக்குச் சத்தம் போடா வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டோம். 

சற்று நேரம் கழித்துத்தான் அது தீவிரவாத தாக்குதல் என்பதே எங்களுக்குத் தெரியவந்தது. விடுதிக்கு வந்திருந்தவர்களை ஓட்டல் அறைகளுக்குள் அழைத்துக் கொண்டு செல்லுமாறு எங்களுக்கு போனில் சொல்லப்பட்டது. ஓட்டலின் அனைத்து வழிகளும் எனக்கு நன்றாகத் தெரியும். வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டபோது அதுகுறித்து எங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அவர்களைச் சமையலறையிலிருந்து எங்களுக்கான பிரத்யேக வழி மூலம் ஓட்டல் அறைகளுக்கு அழைத்துச் சென்றோம். அதுதான் அப்போதைக்குப் பதுங்கிக் கொள்வதற்கேற்ற பாதுகாப்பான இடமாக இருந்தது. 

உயிரை உறைய வைத்த அந்தச் சத்தம்

`பாதுகாப்பு படை வீரர்கள், தீவிரவாதிகளுடன் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் நம்மைக் காப்பாற்றி விடுவார்கள். எனவே பயமில்லாமல் அமைதியாக இருங்கள்' என விருந்தினர்களுக்குத் தைரியமூட்ட முயன்றோம். 27-ம் தேதி, அதிகாலை 3 மணி அளவில், அவர்களை அங்கிருந்து வெளியேறச் சொல்லுமாறு போனில் எங்களுக்குச் சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து விருந்தினர்களை வெளியேற்றத் தொடங்கினோம். அப்போது கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. உடனே மீண்டும் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்கத் தொடங்கியது. மக்கள் அங்கும் இங்கும் ஓடத்தொடங்கினர். தீவிரவாதிகளின் குண்டுகளுக்கு எங்களின் சமையல்காரர்கள் பலரை இழந்தோம். நான் மீண்டும் அறைக்குள் ஓட நினைத்தேன்; ஆனால், முடியவில்லை. தீப்பிடித்தால் வெளியேறும் அவசர வழியைத் தேர்ந்தெடுத்து அதன் வழியாக ஓடி,  இரண்டு மாடிகளுக்கும் இடைப்பட்ட இடத்துக்குள் சென்று பதுங்கிக்கொண்டேன். அது உணவுப்  பொருள்கள் மற்றும் பானகங்களுக்கான அலுவலகம். 

கும்பலிலிருந்து நான் தனியாகப் பிரிந்துவிட்டதை அப்போது உணர்ந்தேன். அப்போது எனக்குக் கடவுள் மட்டுமே துணையாக இருந்தார். மறுபக்கம் ரத்தத்தை உறைய வைக்கும்விதமாக துப்பாக்கிச் சுடும் சத்தமும், கையெறி குண்டுகள் வெடிக்கும் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது. சில நிமிடங்களிலேயே நான் பதுங்கியிருந்த இடத்துக்கு மேல் உள்ள தளத்திலிருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்ட நிலையில், மேல்தளப்பகுதி அதிரத் தொடங்கியது. உடனே அருகில் இருந்த மிகப்பெரிய மேஜைக்குக் கீழ் சென்று பதுங்கிக் கொண்டேன். ஒருவேளை மேல்தளம் விழுந்தாலும், மேஜை நம்மைக் காப்பாற்றும் என்று அப்போது எண்ணிக்கொண்டேன். 

கற்றுக் கொடுத்த பாடம்

இந்த நிலையில், விளக்குகளை அணைப்பது நல்லது என்று எனக்குத் தோன்றியது. ஆனால், `நான் சாவதாக இருந்தால், வெளிச்சத்திலேயே செத்துப்போகிறேன்' என்று எண்ணிக்கொண்டு விளக்குகளை அணைக்கவில்லை. அப்போது, பூட்ஸ் கால்கள் மேலே ஏறி வரும் சத்தத்தை நான் கேட்டேன். மிகவும் கஷ்டப்பட்டு அமைதியாக இருக்க முயற்சி செய்தேன். எனது இதயம் வேகமாகத் துடித்துக்கொண்டிருந்தாலும், அவ்வப்போது மூச்சுவிடுவதை நிறுத்தி அதைக் கட்டுப்படுத்தினேன். நான் பதுங்கி இருந்த மேஜைக்கு அடியின் வழியாக கறுப்பு பேன்ட் அணிந்த ஒரு ஜோடி கால்களைப் பார்த்தேன். `இங்கே யாருமில்லை...' என்ற அந்தக் குரல் சொன்னது. அது பாதுகாப்பு படை வீரரின் குரல் என்று எனது உள்ளுணர்வு சொன்னது. உடனே, மேஜைக்கு அடியிலிருந்து எழுந்து,  'நான் இங்கே இருக்கிறேன்...' என்று எனது கைகளை வெளியே தூக்கியபடியே எழுந்தேன். நான் தீவிரவாதியாக இருக்கலாம் என்று அவர்கள் சந்தேகித்து விடக் கூடாது என்பதற்காக அப்படிச் செய்தேன். 

அதன் பின்னர் நான் வெளியே அழைத்து வரப்பட்டேன். அதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் கனவு காண்கிறேனா என்றுகூடக் கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். அப்போது அதிகாலை நேரம். சாத்தியமே இல்லாத, நம்பவே முடியாத வகையில் நான் உயிரோடு இருந்தேன். 

இந்தச் சம்பவத்துக்கு முன்னர், `நமக்கு வாழ்க்கையில் அனுபவிக்க இன்னும் எவ்வளவோ உள்ளது. நிறைய நாள்கள் வாழப்போகிறோம்...' என்றெல்லாம் நினைத்திருந்தேன். ஆனால், அந்த நினைப்பையெல்லாம் அந்த ஒற்றை இரவு மாற்றிப்போட்டுவிட்டது. எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கும் என்று அந்தச் சம்பவம் எனக்குப் பாடம் கற்றுக்கொடுத்துவிட்டது. இப்போதெல்லாம் நான் எனது குடும்பத்தினருடன் டின்னருக்கு ஓட்டலுக்குச் சென்றால், ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்துச் செலவிடுகிறேன். சிறுவயதில் நான் கோயிலுக்குச் சென்றால், கடவுளிடம் ஏதாவது வேண்டுகோள் வைப்பேன். ஆனால், இப்போதெல்லாம் எதுவுமே கேட்பதில்லை; எனக்கு இன்னொரு வாழ்க்கை கொடுத்த கடவுளுக்கு நன்றி மட்டுமே சொல்கிறேன்!" என்று நெகிழ்வுடன் கூறுகிறார் சேத். 

சேத், தற்போது புனேவில் செட்டிலாகிவிட்டார். 

அடுத்த கட்டுரைக்கு