Published:Updated:

`பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் இதுதான்!' - ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினத்தையொட்டி, உலகில் பல நாடுகளில், பெண்களின் சுதந்திரத்தையும் உரிமையையும் வலியுறுத்திப் போராட்டங்களும் அணிவகுப்புகளும் நடந்தன.

`பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் இதுதான்!' - ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
`பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் இதுதான்!' - ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

டந்த வருடம், உலகளவில் பெண்கள் கொல்லப்பட்ட சம்பவங்களில் பாதிக்கு மேல், அவர்களின் துணைவர்களும் குடும்ப உறுப்பினர்களுமே கொலைக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக அவர்களின் வீடுகளே இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளது ஐ.நா சபை.

நவம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. இந்தத்  தினத்தையொட்டி ஐ.நா சபை வெளியிட்ட ஆய்வறிக்கையில், 2017ம் ஆண்டு உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 87,000 பெண்கள்  கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும், இதில் கிட்டத்தட்ட 58%  வழக்குகளில், அவர்களின் குடும்பத்தினரே குற்றவாளிகளாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இதில்  34% வழக்குகளில் அவர்களின் காதலர்களோ அல்லது துணைவர்களோ குற்றவாளியாக இருக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா சபையின் குற்றவியல் அலுவலகத்தின் தலைவர் யுரி ஃபெடோடோவ் (Yury Fedotov) கூறுகையில், ``பாலியல் பாகுபாடு, பாலியல் சமத்துவமின்மை காரணமாகத் தொடர்ந்து பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வீடுகளே அவர்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக இருப்பது, உறவுகள் மற்றும் குடும்ப வட்டத்தில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்படும் சூழல் இன்னும் உருவாகவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது'' என்று தெரிவித்துள்ளார். 

தங்களின் குடும்பத்தினரால் மிகுந்த ஆபத்துக்குள்ளாகும் பெண்கள், ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்க நாடுகளில் அதிகமாக உள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ள நிலையில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினத்தையொட்டி, உலகில் பல நாடுகளில், பெண்களின் சுதந்திரத்தையும் உரிமையையும் வலியுறுத்திப் போராட்டங்களும் அணிவகுப்புகளும் நடந்தன. குறிப்பாக, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில், இந்தப் போராட்டம் மிகவும் தீவிரமாக நடந்தன. `Feminist Tidal Wave (பெண்ணிய அலை)' என்ற முழக்கத்துடன் பல்லாயிரம் பேர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். ஸ்பெயின் நாட்டில், பல்லாயிரம் பேர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு முழக்கமிட்டனர். தற்போது அந்நாடு, பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பாகக் கிட்டத்தட்ட 600 நீதிபதிகளுக்குப் பயிற்றுவித்து வருகிறது. மேலும், பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டத்திருத்தங்கள் குறித்தும் ஆலோசித்து வருகிறது. 

ஐரோப்பிய நாடுகளில், பாலியல் வன்முறை என்பது பெரும் சமூகப் பிரச்னையாக இருந்துவருகின்ற நிலையில், அது தொடர்பான சட்டதிட்டங்கள் வலுவாக இல்லை என்பதே அந்நாட்டுப் பெண்களின் குற்றச்சாட்டு. அங்கு 20 பெண்களில் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்; 10 பெண்களில் ஒருவர் ஏதோ ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார். இந்நிலையில், ஐரோப்பாவில் உள்ள 31 நாடுகளில், வெறும் எட்டு நாடுகள் மட்டுமே, பெண்ணின் சம்மதமில்லாத பாலியல் உறவை வன்முறை என்று ஏற்றுக்கொண்டுள்ளன. மற்ற நாடுகளின் சட்ட அகராதியில், பாலியல் வன்முறை என்பதை வற்புறுத்தி நடக்கும் பாலியல் உறவு, மிரட்டுதல், கட்டாயப்படுத்துதல் அல்லது பாதிக்கப்பட்ட பெண் தன்னைக் காத்துக்கொள்ள இயலாத பட்சத்தில் நடந்த பாலியல் வன்முறை என்கிற வரையறையில் மட்டுமே கருத்தில் கொண்டுள்ளன. 

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தினத்தையொட்டி ஐ.நா #HearMeToo என்ற 16 நாள்கள் விழிப்புஉணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதை இந்தியாவும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது என்பதை அரசு உணரவேண்டும்!