Published:Updated:

ஷாப்பிங் @ அந்தக்காலம்!

ஷாப்பிங் @ அந்தக்காலம்!
பிரீமியம் ஸ்டோரி
ஷாப்பிங் @ அந்தக்காலம்!

ஆர்.சரண் - ஓவியங்கள்: ரமணன்

ஷாப்பிங் @ அந்தக்காலம்!

ஆர்.சரண் - ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
ஷாப்பிங் @ அந்தக்காலம்!
பிரீமியம் ஸ்டோரி
ஷாப்பிங் @ அந்தக்காலம்!

ன்ட்ராய்டு ஆப்ஸ்ல ஷாப்பிங் பண்றேனு ஆப்பு வெச்சுக்குற காலம்... அதுலயும்  குழந்தைங்க ஆன்லைன் ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சா... பெத்தவங்க கிரெடிட் கார்டு ஓட்டை ஆகிடும்... அந்த அளவுக்குத் தேச்சுட்டுதான் ஓயறாங்க... ஆனா, அந்தக்காலத்துல நாம பண்ணின ஷாப்பிங் அப்படி இல்லையே. ஒரு டைம் மிஷின் ட்ராவல் பண்ணலாமா?

ஷாப்பிங் @ அந்தக்காலம்!

துணிக்கடைக்கு டிரெஸ் வாங்கிக் கொடுக்கக் கூட்டிட்டுப்போவாங்க... `உனக்கு என்ன டிரெஸ்டா வேணும்?’னு கேட்குறதெல்லாம் வீட்டுல கேட்குறதோட சரி. அங்கே நம்ம அம்மா ராஜ மாதாவா மாறிடுவாங்க `நான் எடுப்பதே துணி. அதை உடுத்துவதே உன் பணி... அளவு பாக்கணும் குனி’னு ‘கட்டளையே சாசனம்’ இடுவாங்க.  அப்பா பிங்கலத்தேவன் நாசர் கணக்கா எல்லாத்தையும் வாட்ச் பண்ணிட்டிருப்பார். அப்புறமென்ன, பாகுபலி கட்டப்பாவா மாறிக் குனிஞ்சு நிப்போம். மனசாட்சியே இல்லாம, ‘ராமர் கலர்ல சட்டை... அவங்க அப்பாரு கலர்ல பேன்ட்’னெல்லாம் சேல்ஸ் மேன்களை சுத்தல்ல விடுவாங்க. (லைட் புளூ, நேவி புளூவாமாம்!)  இந்த புளூவாச்சும் பரவாயில்லை... `என் மகனுக்கு ‘முதல்வன்’ புளூ கலர்ல சட்டை வேணும்’னு அம்மா ஒரு தீபாவளிக்குக் கேட்டப்போ, கடையில நிக்கிறவய்ங்கள்லாம், ‘இந்த மூஞ்சி அர்ஜுனாக்கும்’னு கேலியா பார்த்ததெலாம் கண்ணு முன்னாடி வந்துபோகுதா இல்லையா? நானாச்சும் பரவாயில்லைங்க. தங்கச்சிங்க ரெண்டு பேரும் ரொம்பவே பாவம். கூட்டிட்டுப்போயி அம்மா 8 சேலை வாங்கிக்குவாங்க. வேற யாருக்கு, அம்மாவுக்குத்தான்!  `வாரம் முழுக்க ஒண்ணொண்ணா கட்டிக்குவேன்’னு காரணம் சொல்லுவாங்க. `வாரத்துக்கு 7 நாள்தானே’னு கேட்டா, `அத்தை கல்யாணத்துக்கு ஜாக்கெட் பிட் எடுத்துக் கொடுத்தாளே. அதுக்கு மேட்சிங் சாரீடி இது’ என, சட்டைத்துணிக்கே மேட்சிங் சேலை எடுத்து அதிர வைப்பாங்க. சரி இவ்வளவும் பண்ணாங்களே தங்கச்சிகளுக்கு என்ன வாங்கிக் கொடுத்தாங்கனு பார்த்தா, ப்ச்ச்... `எனக்கு எடுத்ததெலாம் எனக்குனு மட்டுமா நினைச்சீங்க... எனக்குப் பிறகு நீங்கதான்டி அம்புட்டையும் கட்டிக்கப்போறீங்க’ன்னு சொல்லி நைட்டியா சுடிதாரானு தெரியாத அளவுக்கு சல்லிசா பர்ச்சேஸை முடிச்சுட்டு, புது ஆங்கிள்ல பொங்கல் கிண்டுவாங்க. அதுதான், பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா மொமன்ட்!

ஷாப்பிங் @ அந்தக்காலம்!

அப்பா பேரைச் சொல்லி எனக்கு அப்ப நடந்ததையெல்லாம் இப்ப நினைச்சாலும் ரெய்டு நேரத்து மினிஸ்டர் கணக்கா துக்கம் தொண்டைய அடைக்கும். அப்பாவுக்குத் துணி வாங்குறப்போல்லாம் `எக்ஸ்ட்ரா ஒரு மீட்டர் எடுத்தா நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா போட்டுக்குவீங்கள்ல?’னு அம்மா கேட்க, அப்பாவும், பன்வாரிலால் புரோஹித் மாதிரி  `செம ஐடியாவா இருக்கே!’னு தலையாட்டிச் சிரிப்பார். வெள்ளையில சிமென்ட் கோடுபோட்ட சட்டையும் அதுக்கு அரக்கு கலர் பேன்ட்டுமாய் அப்படியே அப்பாவின் மினியேச்சர் மாதிரியே இருப்பேன். ‘புது டிரெஸ்ல ரெண்டு பேரும் செம. திருஷ்டி சுத்திப் போடணும்’னு அம்மா சொல்வாங்க பாருங்க. உய்யய்யய்யோ... ‘உள்ளே அழுகுறேன் வெளியே சிரிக்கிறேன்’ மொமன்ட்!

 அப்பெல்லாம் ஷாப்பிங்னாலே ஆடிக்கும் ஐப்பசிக்கும்தான். ஆடித்தள்ளுபடி, தீபாவளித் தள்ளுபடினு அப்போதானே கடைக்காரங்க சலுகைகளை அள்ளிப் போடுவாய்ங்க. அப்படி எங்கேயாச்சும் தள்ளுபடினு சொல்லிட்டா போதும். ஒரு வாரத்துக்கு முன்னாடியே பட்ஜெட் போட ஆரம்பிச்சுடுவாங்க அம்மா. பண மதிப்பு நீக்க நடவடிக்கையை  அறிவிக்கிறப்போ  நம்ம பிரதமர் மோடி ஒரு முகம்  வெச்சிருந்தார்ல...  அதேமாதிரி பெருமிதமா மூஞ்சியை வெச்சுக்கிட்டு நம்மளை ஷாப்பிங் கூட்டிட்டுப் போவாங்க. பெருசா எதையோ வாங்கிக் கொடுக்கப் போறமாதிரி பில்டப் கொடுப்பாங்க. `வர்றப்போ நிறைய பர்சேஸ் பண்ணிட்டு வருவோம்டா கண்ணா. அப்ப ஆட்டோல வருவோம். இப்ப நடந்து போவோம்’னு ஏமாத்திக் கூட்டிட்டுப் போவாங்க. ஆமா, அதேதான்... வர்றப்போ லக்கேஜைச் சுமக்க வெச்சுக் கழுதை கணக்கா ஓட்டிட்டு வருவாங்க. `இன்னும் கொஞ்சதூரம்தான்டா... நடக்குறது உடம்புக்கு நல்லது’, ‘எதுக்குக் காசைக் கரியாக்கிக்கிட்டு, விலைவாசி விக்கிற விலையில ஆட்டோல போனா சொத்தெழுதிதான் வைக்கணும்!’ - அட்வைஸ்ல ஆரம்பிச்சு அட்ராசிட்டில முடியும் அழுமூஞ்சி ஷாப்பிங். ‘தந்தையிருந்தும் தாயுமிருந்தும் சொந்தம் எதுவுமில்ல‘ மொமன்ட்...

 டிவி, ஃபேன், ரேடியோ, டேப் ரெக்கார்டர், கிரைண்டர், மிக்ஸி, சேர், டேபிள்னு வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்க, பெரிய டிரேடர்ஸ்க்கு மட்டும் நம்மளைக் கூட்டிட்டுப்போகவே மாட்டாங்க. ராணுவ ரகசியமா மெய்ன்டெய்ன் பண்ணுவாங்க. அந்த கிரைண்டரோ, டிவியோ மீன்பாடி வண்டியில வீட்டுக்கு வந்து இறக்கி வைக்கிறப்பதான் நமக்கே தெரியும்... மாசா மாசம் இன்ஸ்டால்மென்ட் வசூல் செஞ்சுட்டுப் போறப்போ பார்த்தா அந்த ஆளு கையில கொண்டு வந்து நீட்டுற அட்டையில நம்ம பேரு எழுதியிருக்கும். அப்போதான் பெத்தவங்களோட தியாகம் புரியும். ‘உன் பேருல வாங்குன டிவிதான் ஒழுங்கா ஓடுது!’னு சொல்லி குஷிப்படுத்துவாங்க பாருங்க... ஆஸம் பாசம்.  ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ மொமன்ட்!

ஷாப்பிங் @ அந்தக்காலம்!

இப்படி ஷாப்பிங்னு கூட்டிட்டுப்போன போற இடமெல்லாம்  பஞ்சுமிட்டாய்ல தொடங்கி பானிபூரி வரை வித்துத் தீர்ப்பாங்க... நமக்கு என்னமோ மசாலாக்கடலைதான் கிடைக்கும். அதை வாங்கிக் கொடுத்துட்டு அதையும் தின்னக்கூட விடாம,  ‘அப்புறமா வீட்டுக்குப் போயி தின்னுக்க தம்பி’னு ரெண்டு கையிலயும் கட்டைப்பையைக் கொடுத்துத் தூக்கிட்டு வரச் சொல்லுவாங்க. நடந்து வர்றப்போ வயிறு பசிக்கும். போஸ்டர்ல ரம்பா சிரிக்கும். ஆனா, நமக்கு அழுகையா வரும்.  ‘ஏது பந்த பாசம், எல்லாம் வெளி வேஷம்!’

  இப்பெல்லாம் வாட்ஸ்-அப்ல மளிகை லிஸ்ட் அனுப்பி வெச்சு வாங்கச் சொல்றாங்க. ஆனா, அப்போ அம்மாவோட வாட்ஸ் அப் நாமதான்!  அம்மா எழுதிக் கொடுத்த சிட்டைய பறக்க விட்டுட்டு மளிகைக்கடையில போயி குத்துமதிப்பா ஏதாச்சும் வாங்கிட்டு வந்து நிப்போம். சீட்டை மறந்தாலும் தேங்காய் பர்பிய வாங்க, மறக்காம அதை வாய்ல அதக்கிட்டு நின்னா அடி விழும் பாருங்க... ‘வளரும் பிறையே தேம்பாதேய்ய்ய் !’

 தீபாவளிக்கு எடுக்குற டிரெஸ்தான் ஒரு வருஷத்துக்கான புது டிரெஸ். அதுலயும் அரைலோடு மண்ணள்ளிப் போட்டுருவாங்க. ‘வளர்ற பிள்ளை. பெருசாவே தைங்க’னு போன நூற்றாண்டைச் சேர்ந்த `தாத்தா டெய்லர் கடை’யில தைக்கக் கொடுப்பாங்க. அவரும் நல்லா லூஸா தைச்சுக் கொடுப்பார். தொளதொளனு மாவு மில்லுல மாவு விழுற இடத்துல கட்டியிருக்குற துணிபோல மாட்டிக்கிட்டுத் திரிவோம். அதை ‘செமையா தைச்சுக் கொடுத்திருக்கீங்க அப்பு. இது ரெண்டு வருஷம் உழைக்கும்!’ என டெய்லர் தாத்தாவுக்கு சர்டிஃபிகேட் கொடுப்பார் அப்பா. எனக்குத்தான் பத்திக்கிட்டு வரும். சில நேரங்கள்ல ஆர்வக்கோளாறுல நாமளே வான்டடா வண்டியில ஏறிடுவோம். விஜயகாந்த் படம் பார்த்த பாதிப்புல ‘போலீஸ் டிரெஸ்’தான் வேணும்னு அடம்பிடிப்பேன். டெய்லர் தாத்தா அதுக்கும் அசர மாட்டார், அவர் பார்த்த ‘என் கடமை’ எம்.ஜி.ஆர் காலத்து `டவுசர் போலீஸ்’ காஸ்ட்யூமைத் தச்சுக் கொடுப்பாரு. உலகத்துல எந்த போலீஸும் போடாத எட்டு பாக்கெட் வெச்ச சட்டையோட வெளில வந்து பசங்ககிட்ட பல்பு வாங்கியிருக்கேன்.  ‘கைகொட்டிச் சிரிப்பார்கள்ள்ள்... ஊரார் சிரிப்ப்ப்பார்கள்’

ஷாப்பிங் @ அந்தக்காலம்!

பக்கத்து ஏரியால துணிக்கடை இருந்தும் நாலணா பெறாத இத்துப்போன கட்டைப்பைக்காக நாலஞ்சு கிலோமீட்டர் ஆட்டோல கூட்டிட்டுப் போவாங்க. கட்டைப்பை கொடுக்கலைனா கடைக்காரன் செத்தான். ‘என் தம்பி துபாய்ல சிவில் இன்ஜினீயரா இருக்கான். அங்கெல்லாம் பத்து ரூபாய்க்குப் பொருள் வாங்குனாலே கட்டைப்பை கொடுப்பானாம்’லாம் அள்ளி விடுவாங்க. கட்டைப்பை கையில கிடைச்சாலும் போச்சு. எல்லாமே அவங்களோட வாதத்திறமைக்கும், பொறுமைக்கும் கிடைச்ச பரிசா அம்மா நினைச்சுக்குவாங்க. கட்டைப்பைக்காகவே மொக்கைக் கடைக்குப் போய் நிப்பாங்க. ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ மொமன்ட்!

 சரி நமக்குப் பிடிச்ச மாதிரியாச்சும் எடுத்துத் தர்றாங்களானு பார்த்தா... இல்லை. நாம ஒரு சட்டைத்துணியைக் கை காட்டினா, ‘டேய் அது ஸ்கூல் யூனிஃபார்ம் மாதிரி இருக்குடா... வேற கேளு!’னு ஆரம்பத்துலயே எண்டு கார்டு போட்டுருவாங்க. அப்புறமென்ன வழக்கம்போல ராமர் கலர்தான்... தசரதர் கலர்தான். இலவச இணைப்பா அப்பா, மாமாவுக்கு எடுத்தது போக மீதியிருந்த கொஞ்ச துணியில கொஞ்சமா ஒரு பேன்ட் தைச்சுக் கொடுப்பார் அப்பா. `டேய்... முக்காப் பேன்ட்டு’னு காலேஜ் போறவரைக்கும் பட்டப்பெயர் வர அதுவே காரணமாச்சு. ‘சோதனை மேல் சோதனை’ மொமன்ட்!

 ஷாப்பிங்னு அப்போ கூட்டிட்டுப் போறதெலாம் சீலிங் ஃபேன்லகூட எண்ணெய் வழியுற, கறுப்படிச்ச மளிகைக் கடைகளுக்குத்தான். ‘நிறைய சாக்லேட் கிடைக்கும்!’னு ஆசையாப் போவோம். பலசரக்கு சாமான்லாம் வாங்கி முடிச்சிட்டு, `வயித்துல கீரைப்பூச்சி வந்துரும்’னு சொல்லி அழவெச்சே கூட்டிட்டு வந்துருவானுக. அழுது அடம்பிடிச்சா, `அண்ணாச்சி, இந்த சனியனுக்குப் பல்லி மிட்டாய் கொடுங்க’னு செல்லமா ரெண்டு தட்டுதட்டி வாங்கித் தருவாங்க. கண்ணு வேர்க்க அழுதுட்டே வரவேண்டியதுதான். ‘வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா...’