பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

கருணாநிதி கும்பிட்ட கடவுள்!

கருணாநிதி கும்பிட்ட கடவுள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கருணாநிதி கும்பிட்ட கடவுள்!

சிவகுமார்

குறிப்பு: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் ஐந்து முறை தமிழக முதல்வருமான திரு மு.கருணாநிதியின்  இறப்பு ஆகஸ்ட் 7-ந் தேதி  அறிவிக்கப்படுவதற்கு முன்னரே ஆனந்த விகடன் இதழ் அச்சுக்கு அனுப்பப்பட்டுவிட்டது.  அந்தச் சூழ்நிலையில் இதழில் இடம்பெற்ற கட்டுரை இது!  

1988, ஜூன் 17-ஆம் தேதி கலைஞர் வசனம் எழுதிய ‘பாசப் பறவைகள்’ படத்தின் 50-வது நாள் வெற்றிவிழா திருவெற்றியூர் எம்.எஸ்.எம் தியேட்டருக்கு வெளியே கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலைஞர் கையால் கேடயம் பெற்றேன்.  நிகழ்ச்சியில் நான் பேசும்போது ‘சிவாஜிக்கு மட்டும் பக்கம் பக்கமாக வசனம் எழுதிய கலைஞருக்கு, எங்கள்மீது ஓரவஞ்சனை. அதனால்தான் எங்களுக்கு மட்டும் திருக்குறள் மாதிரி ஒண்ணே முக்கால் வரியில் வசனம் எழுதிக் கொடுத்திருக்கிறார்’ என்று சொல்லிவிட்டு, அவர் நடிகர் திலகத்திற்காக எழுதிய (5 நிமிடம் தொடர்ந்து பேசக்கூடிய) சேரன் செங்குட்டுவன் வசனத்தைப் பேசினேன்.

கருணாநிதி கும்பிட்ட கடவுள்!

அடுத்து மைக்கைப் பிடித்தார் கலைஞர். புறநானூற்றுத் தாய் பேசும் வசனத்தைத் தனது கரகர குரலால் 5 நிமிடம் கம்பீரமாக ஒரே மூச்சில் பேசிக் காட்டிக் கைதட்டலைப் பெற்றார். அப்போது நான் மேடையில் இருந்து குதித்து இறங்க முற்பட்டேன். என்னைத் தடுத்து நிறுத்தினார் கலைஞர். ‘`1952-ல் திமுக பிரசாரத்துக்காக ‘பரப்பிரம்மம்’ என்று ஒரு நாடகம் போட்டோம். அதில், ஓர் ஓரங்க நாடகம் தேவைப்பட்டது. சிவாஜி கேட்டதற்காக அந்த வசனத்தை நான் எழுதினேன். அப்போது மேடைக்குப் பக்கவாட்டில் இருந்தபடி சிவாஜிக்கு வசனத்தைச் சொல்லிக் கொடுத்து எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது’ என்று சொன்னார். கலைஞரின் ஞாபக சக்தியை நினைத்து நினைத்து வியந்துபோனேன்.

ஒருமுறை சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஓர் இதழுக்கு நான் சிறப்பு ஆசிரியராக இருந்து கலைஞரைப் பேட்டி எடுக்கப் போனேன். ‘அண்ணே, நீங்கள் சாமி கும்பிட்டிருக்கீங்களா? எந்த சாமியை வழிபட்டீர்கள்? எத்தனை வருடம் கும்பிட்டீங்க? எப்போது நாத்திகராக மாறினீர்கள்?’ என்கிற கேள்விகளைக் கேட்டேன்.

கலைஞர் அருகிலிருந்த டி.ஆர்.பாலு என் கேள்வியைப் பார்த்து கோபத்தில் குதிக்க ஆரம்பித்துவிட்டார்.

கலைஞர் அவரை சமாதானப்படுத்திவிட்டு, “பெரியாச்சி என்கிற அம்மனை முதலில் வழிபட்டேன். எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த பெரியாச்சியை அம்மா, அப்பா, நானும் வழிபட்டு வந்தோம். ஒருமுறை என் அக்கா மகன் மாறனுக்குக் காய்ச்சல் அதிகமாகிவிட்டது. அப்போது சாமியை மனமுருகக் கும்பிட்டேன், காய்ச்சலைப் போக்கவில்லை. அதன்பிறகுதான் மருத்துவத்தால் குணமாக வேண்டிய நோய்க்கு எல்லாம் கடவுளிடம் வேண்டுவது மூடத்தனம் என்று முடிவெடுத்து, நாத்திகன் ஆனேன்’’ என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். 

கருணாநிதி கும்பிட்ட கடவுள்!

ஒருமுறை, நான் வரைந்த ஓவியங்களைப் பார்ப்பதற்காகக் கனிமொழியோடு கலைஞர் வந்தார். அனைத்து ஓவியங்களையும் பார்த்துக் கொண்டே வந்தவர், ‘ஏன்யா... பேசாம ஓவியராவே இருந்திருக்கலாமே... அப்புறம் எதுக்கு நடிக்க வந்த?’ என்று கேட்டார். ‘நான் ஓவியனா மட்டும் இருந்திருந்தா, நீங்கள் என் வீட்டுக்கு வந்திருக்கமாட்டீங்க, நடிகனாகி யிருப்பதால்தான் வீடுதேடி வந்திருக்கீங்க!’ என்று நான் நகைச்சுவையாகச் சொல்ல, கலகலவென வெகுநேரம் சிரித்தார் கலைஞர். இறுதியாக, காஞ்சிபுரப் புலிக்குகை ஓவியத்தைப் பார்த்ததும் ஒருமாதிரி நெகிழ்ந்துபோய், “இங்கேதான்யா எம்.ஜி.ஆர் நடிச்ச ‘காஞ்சித்தலைவன்’ படத்துக்காக நானும், எம்.ஜி.சக்ரபாணியும் உட்கார்ந்து வசனம் எழுதினோம்’ என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.
 
நான் எழுதிய ‘ராஜபாட்டை’ கட்டுரைகளை மொத்தமாகத் தொகுத்து, ‘இதற்கு நீங்கள் ஒருவரி அணிந்துரை தரவேண்டும்’ என்று கேட்டேன். இரண்டுநாள் கழித்து எனக்கு போன் செய்து வீட்டுக்கு வரச்சொன்னார்.
‘தம்பி சிவகுமார், இந்த ‘ராஜபாட்டை’ நூலைக் கொடுத்து ஒரு வரி அணிந்துரை எழுதித் தரச் சொன்னார்.

இதிலுள்ள அத்தனை வரிகளும் ஐவரி’ என்று எழுதிக்கொடுத்துவிட்டு, ‘நீ ஒருவரி தானேப்பா கேட்டாய்’ என்று பளிச்செனப் பதில் சொன்னார். அதுதான் கலைஞரின் சிறப்பு!

சந்திப்பு: எம்.குணா