Published:Updated:

`பிச்சை எடுக்கலை... என் மேல பரிதாபப்படாதீங்க!’ - பர்ஃபி விற்கும் பார்வையற்ற துரை

"அவங்கவங்களுக்குன்னு ஆண்டவன் ஒரு கொஸ்டீன் பேப்பரை குடுத்திருக்கான். அந்த கொஸ்டீனுக்கு பதில் தெரிஞ்சா எழுது, இல்லைன்னா அடுத்த கொஸ்டீனுக்குப் போகவேண்டியதுதான். என் கொஸ்டீன் பேப்பருக்கு இன்னொருத்தர் பதில் சொல்றது சரியா இருக்குமா? ஒருவேளை அந்த கொஸ்டீனுக்கு தப்பான பதில்னு நீங்க உணரும்போது, சரியான பதில் எதுன்னு தேடி தானா ஓடுவீங்க. அதுதான் சார் வாழ்க்கை."

`பிச்சை எடுக்கலை... என் மேல பரிதாபப்படாதீங்க!’ - பர்ஃபி விற்கும் பார்வையற்ற துரை
`பிச்சை எடுக்கலை... என் மேல பரிதாபப்படாதீங்க!’ - பர்ஃபி விற்கும் பார்வையற்ற துரை

``நான் யாரையும் எதிர்பார்க்கிறது இல்லை சார். நான் உண்டு என் வேலை உண்டு. எனக்கான அடிப்படை வாழ்க்கை விதியே `நான் ஜெயிக்கப் பிறந்தவன்'ங்கிறதுதான். நான் அஜித் ரசிகன். `விவேகம்' படத்துல தல சொன்னா மாதிரி `உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழ்நிலைகளும் நீ தோத்துட்டே தோத்துட்டேன்னு உன் முன்னாடி நின்னு அலர்னாலும்... நீயா ஒப்புக்கிறவரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது". அந்த மாதிரி என் சூழ்நிலை எல்லாமே நான் வீழ்ந்துட்டேன்னு வீழ்ந்துட்டேன்னு சொன்னாலும், எனக்குள் தன்னம்பிக்கை எப்போ தழைக்கலையோ அப்பதான் நான் வீழ்ந்துட்டேன்னு அர்த்தம். அதுவரைக்கும் நான் ஜெயிச்சுக்கிட்டே இருப்பேன்'' என்று கூறும் பார்வையற்ற எம்.துரையின் ஒவ்வொரு வார்த்தையிலும் நம்பிக்கைத் துளி தெறிக்கிறது.

சென்னை அடையாறு சத்யபாமா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பேருந்து நிறுத்தத்தில் பர்ஃபி மிட்டாய் விற்பனை செய்யும் இவரின் வாழ்க்கைமுறையில் ஒளிந்துள்ளது நம் ஒவ்வொருவருக்குமான தன்னம்பிக்கைத் தடம்.

``நான் கடந்த மூன்றரை வருஷமா இதோ இதே இடத்துலதான் பர்ஃபி மிட்டாய் விற்பனை செய்றேன். ஒவ்வோரு நாளும் எனக்கான நாளா நான் பார்க்கிறேன். இப்போதைக்கு எனக்கு உறவுன்னு சொல்லிக்க யாரும் இல்லை. எல்லாமே நண்பர்கள்தான். 46 வயசாச்சு. கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணலை. இங்கே பர்ஃபி விற்கிறதுல கிடைக்கிற தொகையை வெச்சு வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருக்கேன். அடையாறு ஆலமரம் பகுதியிலதான் வாடகைக்கு இருக்கேன். தினமும் காலையில 5:30 மணிக்கு எழுந்திருச்சுருவேன். என்னுடைய எல்லாவிதமான உணர்வுகளுக்கும் ஒரு வழித்தடமா இருக்கிறது ரேடியோதான். அது என்னவோ தெரியலை நான் எந்த மூடுல இருக்கேனோ அந்த மூடுக்கு ஏத்த மாதிரியான பாடல்கள் மட்டுமே ஒலிக்கும். எனக்காகவே அந்த ரேடியோ பாடுறா மாதிரித் தோணும்.

அதுல வரக்கூடிய நிகழ்ச்சிகளைக் கேட்டுக்கிட்டே காலையில சமைலை முடிச்சுட்டு, இங்கே வந்து உட்கார்ந்துடுவேன். காலையில சாயந்தரம்னு இல்லை, நண்பர்களைச் சந்திச்ச நேரம் போக மீதி நேரமெல்லாம் நான் இங்கேதான் பர்ஃபி மிட்டாய் விற்பனை செய்துக்கிட்டிருப்பேன்'' என்றபோது அவரின் கண்களில் இருந்து நீர்த்துளி சற்றே எட்டிப்பார்த்தது.

``என்ன சார், என்ன ஆச்சு?'' என்றபடி நான் அவரின் கையை அழுத்தமாகப் பிடித்தபோது, ``வாழ்க்கையில் கடந்துவந்த காயம் இன்னும் ஆறலைங்கிறதை நீங்க பேசும்போதுதான் உணர்றேன் சார். நான் இன்னிக்கு இங்கே யாரும் இல்லாத அநாதையா இருக்கேன்னா அதுக்குக் காரணம், என் உறவுகள்தான். எனக்கு பார்வை இல்லைன்னாலும், நானும் எல்லார் மாதிரி படிச்சு எம்.ஏ வரலாறு முடிச்சேன். நான் படிப்பை முடிக்கிற நேரத்துலதான், காலம் எங்க குடும்பத்தோடு விளையாட்டு ஆரம்பிச்சது. என் பெற்றோருக்கு நான் ஒரே பையன். என் அப்பா ஒரு ஆசிரியர். பசங்க மத்தியில் கத்திக் கத்தி பாடம் எடுத்ததாலும், சாக்பீஸ் தூளை சுவாசிச்சததாலும் அவருக்கு ஆஸ்துமா வந்திருச்சு. அவருக்குதான் ஆஸ்துமானா, அம்மாவுக்கு திடீர்னு ஒரு நாள் உடம்பு முடியாமபோய், ஒரு வாரம் படுத்தப் படுக்கையா இருந்து இறந்துபோனாங்க. அப்புறம் அப்பாதான் எனக்கு நல்வழி சொல்லி, காலேஜுக்கு அனுப்பினார். நான் படிப்பை முடிக்கவும் எங்க அப்பா இறக்கவும் சரியா இருந்தது. அதுக்கு அப்புறம் என்ன செய்றதுன்னு தெரியாம உறவுகாரங்களைப் பார்க்கப் போனேன். யாருமே முகம்கொடுத்துப் பேசலை. எல்லாரும் என்னை அடிச்சு விரட்டாத குறையா பேசினாங்க. அப்பாவுக்கு உடம்பு முடியாதப்போ வந்து பார்க்காத உறவுக்காரங்களா பார்வை இல்லாத என்னைப் பார்த்துக்கப்போறாங்கன்னு தோணுச்சு! இனி நம்ம வாழ்க்கையை நாமலே பார்த்துக்கலாம்னு முடிவெடுத்து, என் வாழ்க்கையை வாழத் தொடங்கினேன்.

நண்பர் ஒருத்தர் மூலம் தமிழகப் பார்வையற்றோர் நல சங்கத்துல வேலை கிடைச்சது. அங்க ரெண்டு வருஷம் வேலைபார்த்து எனக்கான தேவைகளை பூர்த்திசெஞ்சுக்கிட்டேன். அதுவரைக்கும் என்னோட எல்லா தேவைகளுக்கு நான் மத்தவங்களைத்தான் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். அம்சம் பார்த்துப் போனாலும் அதிர்ஷ்டம் வேணும்னு சொல்வாங்கல்ல, அந்த மாதிரி என் கூடவே இருந்து வேலைபார்த்த சிலபேரால நான் ஏமாத்தப்பட்டு, செய்துக்கிட்டிருந்த வேலையை விடவேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு. அங்கே இருந்து வெளியேறி வேற வேலைக்கு ட்ரை பண்ணேன். வேலை கிடைச்ச எல்லா இடங்கள்லயும் எதிர்மறை எண்ணம்கொண்டவங்களால நான் ரொம்பவே சிரமப்பட்டேன். எந்தச் சூழ்நிலையும் எனக்கு சரியா வரலை. ஒருகட்டத்துல வெறுத்துபோய்தான், பொய் சொல்லக் கூடாது திருடக் கூடாது. இதைத் தவிர்த்து நாம நம்ம வயித்தைக் கழுவ ஏதாவது பண்ணணும்னு முடிவுபண்ணி, இங்கே கடந்த மூன்றரை வருஷமா பர்ஃபி மிட்டாய் வித்துக்கிட்டிருக்கேன். தொடக்கத்துல ரயில்ல வித்துக்கிட்டிருந்தேன். பொருளாதாரரீதியாவும் உடல்ரீதியாவும் அது எனக்கு செட்டாகலை. அப்புறம் ஒருவழியா, அடையாறுல இருக்கும் எனக்கு, இந்த சத்யபாமா கல்லூரி பஸ் ஸ்டாண்டுதான் அலுவலக முகவரியா அமைச்சுது'' என்ற துரையின் முகத்தில் லேசான புன்னகை தவழ்ந்தது.

``உங்களுக்கு உதவ யாரும் முன்வரலை...''' எனக் கேள்வியை முடிக்கும் முன்பே ``சார், இது என் வாழ்க்கை. அதை நான்தான் வாழணும். பிறவியிலேயே நமக்குப் பார்வை இல்லைன்னு முடிவாகிடுச்சு. அதுக்கு ஏத்தாமாதிரி நாம நம்ம வாழ்க்கையை வடிவமைச்சுக்கிட்டா, இதெல்லாம் ஒரு குறையாவே தெரியாது. என்மேல யாரும் பரிதாபம்படுறதோ, பாவம் பார்க்கிறதோ, பிச்சை போடுறதோ எனக்குப் பிடிக்காது. சார்... அவங்கவங்களுக்குன்னு ஆண்டவன் ஒரு கொஸ்டீன் பேப்பரை குடுத்திருக்கான். அந்த கொஸ்டீனுக்கு பதில் தெரிஞ்சா எழுது, இல்லைன்னா அடுத்த கொஸ்டீனுக்குப் போகவேண்டியதுதான். என் கொஸ்டீன் பேப்பருக்கு இன்னொருத்தர் பதில் சொல்றது சரியா இருக்குமா? ஒருவேளை அந்த கொஸ்டீனுக்கு தப்பான பதில்னு நீங்க உணரும்போது, சரியான பதில் எதுன்னு தேடி தானா ஓடுவீங்க. அதுதான் சார் வாழ்க்கை. அந்த ஓட்டத்துல நான் இப்ப இங்க நிற்கிறேன். இதுக்காக எந்த வருத்தமும் எனக்கில்லை. என் ஓட்டம் என் வாழ்க்கை. என்னுடைய ஆசைகளையோ, அழுத்தத்தையோ எப்பவுமே மத்தவங்கமேல திணிக்க மாட்டேன்'' என்றவர், பெருமிதத்துடன் நிமிர்ந்து அமர்ந்தபடி தனக்கான தினசரி வேலைகளை விளக்கினார்.

``மதிய சாப்பாடு கட்டுக்கிட்டு, காலையில 7 மணிக்கு வீட்டுல இருந்து கிளம்பி இங்கே வந்து உட்கார்ந்து, சாய்ந்தரம் 6 மணி வரைக்கும் பர்ஃபி விற்பனை செய்வேன். பர்ஃபி தீர்ந்துபோச்சுன்னா, அன்னிக்கு மட்டும் சாயந்தரம் 4 மணிக்கே சென்னை சென்ட்ரலுக்குப் போய் கையில் இருக்கிற காசுக்கும் பர்ஃபி பண்டல் வாங்கியாந்து வெச்சுக்குவேன். மறுநாள் சாப்பாடு கட்டிக்கிட்டு பர்ஃபி விற்க இங்கே வந்துடுவேன். இப்படித்தான் என் ஒவ்வொரு நாளும் கழியுது. உடல் ஆரோக்கியமும் மன அமைதியும்தான் எனக்கான எனர்ஜி. நேர்மையா உழைக்கிறேன், ஏதோ என்னால முடிஞ்ச பணத்தைச் சம்பாதிக்கிறேன்.

என் செலவுக்குப் போக, மீதிப் பணத்தை ஒவ்வொரு மாசமும் எனக்குத் தெரிஞ்ச அநாதை இல்லங்களுக்கு நன்கொடையா கொடுத்துடுவேன். இல்லை யாராவது உதவின்னு கேட்டா குடுத்துடுவேன். என்னை மனநிம்மதியோடு வாழவெச்சுக்கிட்டிருக்கும் அந்த ஆண்டவனுக்கு நான் மனமார நன்றி சொல்லிக்கிறேன். ஏன்னா, நானாவது இங்கே பர்ஃபி விற்பனை செய்றேன். சிலர் என்ன தொழில் செய்றதுன்னே தெரியாம, அதுக்கான வாய்ப்புகளும் அமையாம பிச்சை எடுத்துக்கிட்டு இருக்காங்கா. பலர், பை நிறைய பணம் வெச்சிருந்தும் உடல் உழைப்பும் இல்லாம, மத்தவங்களை ஏமாத்திப் பொழச்சுக்கிட்டிருங்காங்க. அவங்களையெல்லாம் நினைக்கும்போது நாம வாழுற வாழ்க்கையிலயும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்குங்கிறதை உணர்றேன். அதுதான் என்னையும் என் வாழ்நாளையும் வளர்க்குது'' என்றபோது, துரையிடம் எனக்கு எந்தக் குறைபாடும் தெரியவில்லை.