Published:Updated:

`அப்பா இறந்தது தெரியாமல் அதிர்ச்சியில் இருக்கும் அம்மா' - கஜா துயரத்தில் ஆம்புலன்ஸ் பணியாளர்!

`அப்பா இறந்தது தெரியாமல் அதிர்ச்சியில் இருக்கும் அம்மா' - கஜா துயரத்தில் ஆம்புலன்ஸ் பணியாளர்!
`அப்பா இறந்தது தெரியாமல் அதிர்ச்சியில் இருக்கும் அம்மா' - கஜா துயரத்தில் ஆம்புலன்ஸ் பணியாளர்!

ஜா... பெயருக்கேற்ப அது ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை மனதிலிருந்து நீங்கவில்லை. இயற்கையின் வடிவான புயல், கோரத் தாண்டவம் ஆடிவிட்டுச் சென்றிருக்கிறது. புயலுக்குப் பின் அமைதி என்பார்கள். ஆனால், டெல்டா மாவட்டங்களில் புயலுக்குப் பின்பும் வாழ்வாதாரத்தை மீட்பதற்கான கதறல்களும் தொடர்கின்றன. புயல் பாதித்த வேளையில் நேர்ந்த உயிரிழப்புகள் குறித்த செய்திகள் ஒவ்வொன்றும் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்திச் சென்றுவிட்டன. 

தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றுபவர் விஸ்வநாதன். இவர் சென்னையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவசரகால மருத்துவ உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு தாலுகாவில் உள்ள சல்லிக்குளம் கிராமம். கஜா புயல் தாக்கிய தினத்தன்று இவர் சென்னையில் பணியில் இருந்திருக்கிறார். நள்ளிரவில் புயல், மழையால் அவரது வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் அவரின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். பலத்த காயங்களுடன் அவரின் அண்ணன் மட்டும்  உயிர் பிழைத்திருக்கிறார். 

ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த பிறகுதான், விஸ்வநாதன் அந்த வீட்டைக் கட்டத் தொடங்கியிருந்தார். மழைக்கு முன்பாக வீட்டைக் கட்டி எழுப்பிவிட வேண்டும் என்று ஒன்றரை லட்சம் ரூபாய் செலவழித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். வீடு கட்டும் வேலை நடைபெற்றதால் அதுவரை தங்குவதற்காகப் புழக்கடையில் உள்ள சமையலறையில் தகரக் கொட்டகை அமைத்து குடும்பத்தினர் தங்கி இருந்தனர்.

கஜா புயல் தொடங்கிய சிறிது நேரத்தில் கொட்டகையில் இருந்த தகரம் பல மீட்டர் தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டது. அத்துடன் வீட்டைச் சுற்றி நின்ற தென்னை, மா, பலா, முந்திரி உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழத் தொடங்கின. இதைக் கண்டதும் விஸ்வநாதனின் தாயார் ராஜசுலோசனா அதிர்ச்சியில் அப்படியே உறைந்துபோனார். அதற்குமேல் நடந்தது எதுவும் அவருக்குத் தெரியாது. புயலும் மழையும் தீவிரமானதால், வீட்டைவிட்டு வெளியேற நினைத்து, அவர் தந்தையும் அண்ணனும் புழக்கடையைத் தாண்டி, புதிதாகக் கட்டிக் கொண்டிருந்த வீட்டின் வழியாக நுழைந்து முன்பக்கத்துக்கு வந்தனர். அப்போதுதான் ராஜசுலோசனா அதிர்ச்சியில் உறைந்தபடி அங்கேயே நின்றுகொண்டிருப்பதை அறிந்து, அவரை அழைத்துச் செல்ல இருவரும் மீண்டும் பின்பக்கம் சென்றிருக்கின்றனர். ஆனால், அங்கு நிகழ்ந்த சோகத்தை விவரிக்க முடியவில்லை. 

மனம் உடைந்த நிலையில் விஸ்வநாதன் பேசினார். ``வீட்டுக்குப் பின்னாடி போகும்போதே சுவர் விரிசல் விழுந்திருந்ததைப் பார்த்திருக்காங்க. மழை விழுந்துக்கிட்டிருந்ததால அப்பா, அண்ணன்கிட்ட வந்து `சுவரும் விழுந்திரும்போல'னு சொன்னதோட அண்ணனை அங்க இருந்து கையால நகர்த்திவிட்டிருக்கிறார். அடுத்த நிமிஷம்... மொத்தச் சுவரும் ஒருநொடியில `மடார்'னு இடிஞ்சி விழுந்துட்டு. அங்கே இன்னொரு கையைத் தலைக்குமேல வச்சபடி உட்கார்ந்த நிலையில இடிபாடுகளுக்குள்ள சிக்கி இறந்துட்டார் என் அப்பா. அண்ணனை லேசாக நகர்த்திவிட்டதால, அவர் உயிர் பிழைச்சார். ஆனா, அப்பா இடிபாடிகளுக்குள்ள சிக்கிட்டார். இதை எதுவுமே உணராத என் அம்மா புழக்கடையிலேயே அதிர்ச்சியில உறைஞ்சுபோய் இருந்திருக்கிறாங்க. இன்னைக்கு வரைக்கும் என் அம்மா அதில இருந்து மீளாம இருக்காங்க. அப்பா இறந்ததுகூட அவங்களுக்குத் தெரியல..." என்று குரல் உடைந்தார்

இந்தச் சம்பவம் அனைத்தும் நள்ளிரவில் நடைபெற்றுள்ளது. காலை 7 மணி அளவில்தான் விஸ்வநாதனின் அண்ணனின் கூக்குரல் கேட்டு பக்கத்தில் இருந்தவர்கள் போய் பார்த்திருக்கிறார்கள். விஸ்வநாதனின் அப்பா உடலை எடுத்துக்கொண்டு போய் புதைத்துவிட்டனர். காயம்பட்டு அசைய முடியாமல் கிடந்த அவரின் அண்ணனை மீட்டு அருகில் இருந்த உறவினர் வீட்டில் கொண்டுபோய் சேர்த்தனர். ஆனால், அவருக்கு முதலுதவி செய்யவோ, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவோ முடியாத நிலைமை. தொடர்ந்து காயங்களிலிருந்து ரத்தம் வழிந்தபடி இருந்திருக்கிறது. 

காணும் திசையெங்கும் மரங்களும் மின்கம்பங்களும் முறிந்து விழுந்து, மின் கம்பிகள் அறுந்து சாலையில் யாரும் செல்ல முடியாதவாறு  தடைகள் காணப்பட்டன. தொடர்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டதால், இது எதுவுமே விஸ்வநாதனுக்குத் தெரியவில்லை. இந்தச் செய்தியை அறிந்த மலேசியாவில் இருந்த அவரின் உறவினர் ஒருவர் விஸ்வநாதனை அழைத்து, 'உன் தந்தைக்கு உடல்நலம் சரியில்லையாம். உடனே ஊருக்குக் கிளம்பிப் போ' என்று கூறியிருக்கிறார். இரண்டு மாற்று உடைகளை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறார் விஸ்வநாதன்.

``நாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷன்ல இறங்கினதும், என் ஊருக்குப் போறதுக்கு எந்த வழியும் இல்லைங்கிறதை தெரிஞ்சிக்கிட்டேன். ரொம்ப தூரம் நடந்துபோனேன். வழியில ஒரு இடத்துல மோட்டார் சைக்கிள்ல வந்தவங்ககிட்ட லிஃப்ட் கேட்டும் சுமார் 30 கி.மீ தூரத்தை நடந்தும் கடந்து வந்தேன். ஊருக்குள்ள போனதும், என்னைப் பார்த்தவங்க, 'இப்போதான் வர்றியா'னு விசாரிச்சாங்க. எங்க வீடு இருந்த இடத்துக்குப் போனதும், அந்த இடமே நிலைகுலைஞ்சு போய்க் கிடந்திச்சு. கொஞ்சம் நிதானத்துக்கு வந்ததும் முதல்ல உடம்பு சரியில்லாம இருக்குற அப்பாவைப் பார்ப்போம்னு, பக்கத்துல நின்னுட்டிருந்த பெரியப்பாகிட்ட 'அப்பா எங்க'ன்னு கேட்டேன். அவர் 'அவ்வளவுதான்! அவரைப் புதைச்சாச்சு'னு சொன்னார். 

ஒரு நிமிஷம் என் உலகமே இருண்டுபோய்ட்டு. என்னையும் அறியாம கதறி அழுதுட்டேன். நான் அழுறதைப் பார்த்து, எங்க வீட்டுல வளர்க்குற ஆடுகளும் கதறிச்சு. இதையெல்லாம் பார்த்து எங்க அண்ணனும் அழுதுட்டார். ஆனா, என் அம்மா மட்டும் அப்பிடியே உட்கார்ந்திருந்தாங்க. என்னைப் பார்த்ததும் லேசா புன்சிரிப்பு மட்டும் வந்திச்சு அவங்ககிட்ட. இனி அழுது பிரயோஜனமில்லைனு சுதாரிச்சிட்டு, என் அண்ணனையாவது காப்பாத்தலாம்னு நினைச்ச தெரிஞ்சவங்ககிட்ட சைக்கிளை வாங்கிக்கிட்டு மெயின்ரோட்டுல ஆம்புலன்ஸ் ஏதும் நின்னா கூட்டிட்டு வரலாம்னு போனேன். பாதி வழியில மரங்கள் கிடந்ததால சைக்கிளை தலைமேல தூக்கிக்கிட்டே போனேன். கொஞ்சதூரம் போனதும் அங்கே செல்போன் டவர் கெடச்சது. உடனே பக்கத்துல இருந்த ஒருத்தர்கிட்ட செல்போன் வாங்கி 108-க்கு போன் பண்ணினேன். அவங்க வண்டி அனுப்புறதாச் சொன்னாங்க. ஆனா, வழிநெடுக மக்கள் ரோட்டுல உக்காந்து போராட்டம் நடத்துறதால, எந்த வண்டியையும் அனுப்ப முடியலைன்னு சொன்னாங்க. அதனால சைக்கிளை எடுத்துக்கிட்டு 15 கிலோ மீட்டர் தூரம் போனேன். வழியில வந்த ஆம்புலன்ஸை மறிச்சி நான் கூட்டிட்டு வந்தா, வழிநெடுக மக்கள் போராட்டம். அங்கங்கே மரங்கள் விழுந்து கிடந்திச்சு. அதனால அதுக்குமேல ஆம்புலன்ஸ் வர முடியாம பாதியிலயே நின்னுட்டு. அதுக்கு அப்புறமா வேற ஒரு ஆம்புலன்ஸ் அந்த வழியா வந்திச்சு. அதை வழிமறிச்சு, என் நிலைமையைச் சொன்னதோட நானும் ஆம்புலன்ஸ் பணியாளர்தான்னு எடுத்துச் சொல்லி கூட்டிட்டு வந்தேன்'' என்றார் விஸ்வநாதன்.

விஸ்வநாதனின் அண்ணனை மீட்டது எப்படி என்பது குறித்து 108 ஆம்புலன்ஸ் சேவையின் மாவட்ட மேலாளர் ஆர்.பிரசாத் நம்மிடம் பேசினார்.

``ஆம்புலன்ஸ் போற வழியெல்லாம் மரங்கள் விழுந்து கிடந்திச்சு. சில மரங்களை 108 ஊழியர்களே வெட்டி அகற்றினாங்க. குறிப்பிட்ட தூரத்துக்கு மேல வாகனம் போக முடியலை. அதனால ஆம்புலன்ஸ் ஊழியர்களோட அங்க இருந்த டூவீலர்ல விஸ்வநாதன் வீட்டுக்குப் போனோம். அங்க இருந்து  அவரோட அண்ணனை மீட்டோம். ஆனா, அவரை நாங்க வந்த டூ வீலர்ல கொண்டு போக முடியலை. அதனால ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஊர் மக்கள்னு மாறி மாறி அவரைச் சுமந்துக்கிட்டே சில கிலோமீட்டர் தூரம் நடந்தே போனோம். புயல் பகுதியில தொடர்ந்து இருந்ததால நாங்க முந்தினநாளும் சரியா சாப்பிடலை. வெறும் தண்ணியை மட்டும் குடிச்சிட்டு இந்த வேலையை செஞ்சோம்" என்றார். மக்கள் போராட்டத்தால் சில மணி நேரம் கழித்தே நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையை சென்றடைந்திருக்கின்றனர்.

``கஜா புயலால் இறந்தவங்களுக்கு தரக்கூடிய நிவாரணம் எங்களுக்குக் கிடைக்கலை. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இல்லாததாலும், போலீஸ்ல எப்.ஐ.ஆர் போடாததாலும் நிவாரணம் இல்லைனு சொல்லிட்டாங்க. இறந்த என்னோட அப்பாவை  ஊர்மக்களே எடுத்துப் புதைச்சிட்டாங்க. அதனால ரிப்போர்ட் எதுவும் வாங்க முடியலைன்னு சொல்லி என்னோட அப்பாவைப் புதைச்ச போட்டோவை ஆதாரமா துணை கலெக்டர்கிட்ட கொடுத்திருக்கேன்.

என் அண்ணனுக்கு ஒரு கால்ல எலும்பு முறிஞ்சிருக்கு. இன்னொரு கால்ல மூட்டு விலகிப்போய்ட்டு. முதுகுத்தண்டு, கழுத்துப் பகுதியில கடுமையான வலி இருக்கு. இதனால அவர் துடிச்சிட்டிருக்கார். ஒண்ணு ரெண்டு நாள்ல ஆபரேஷன் பண்றேன்னு சொல்லியிருக்காங்க. அதிர்ச்சியில இருந்து எங்க அம்மாவை என்ன செய்றதுன்னு தெரியலை. என் அப்பா வந்திருவார்னு அம்மா சொல்லிக்கிட்டே இருக்காங்க. நான் மட்டும் இப்போ என் அண்ணனோட ஆஸ்பத்திரியில இருக்கேன். அவரை குணப்படுத்திட்டுதான் அடுத்த வேலை" என்கிறார் விஸ்வநாதன் வருத்தம் தோய்ந்த குரலில்.