Published:Updated:

சங்க இலக்கிய உரையாடல் சமூகத்துக்கு எப்படி ஆபத்தாகும் ஹெச்.ராஜா அவர்களே?

சங்க இலக்கிய உரையாடல் சமூகத்துக்கு எப்படி ஆபத்தாகும் ஹெச்.ராஜா அவர்களே?

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அது தேவையானதொரு பண்பு. அந்தத் தெளிவை இப்படியான ஆரோக்கியமான கலந்துரையாடல் நிகழ்வுகள்தான் கொடுக்கும்.

சங்க இலக்கிய உரையாடல் சமூகத்துக்கு எப்படி ஆபத்தாகும் ஹெச்.ராஜா அவர்களே?

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அது தேவையானதொரு பண்பு. அந்தத் தெளிவை இப்படியான ஆரோக்கியமான கலந்துரையாடல் நிகழ்வுகள்தான் கொடுக்கும்.

Published:Updated:
சங்க இலக்கிய உரையாடல் சமூகத்துக்கு எப்படி ஆபத்தாகும் ஹெச்.ராஜா அவர்களே?

முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டா
அ வொல்லெனக் கூவு வேன்கொல் 
அலமர லசைவளி யலைப்பவென் 
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே.

-ஔவையார் 

இது தலைவியின் கூற்றாய் குறுந்தொகையில் இடம்பெற்றிருக்கும் பாடல். அன்புக்குரியவனின் அருகாமையை எதிர்பாராத தருணத்தில் இழந்து அந்தப் பிரிவைத் தாள இயலாமல் வெதும்பும் ஒரு பெண்ணின் மனதை, அற்புதமாய் இந்தப் பாடல் காட்சிப்படுத்தியிருக்கும்.

‘தலையை முட்டிக்கொள்வேனோ! என்னை நானே தாக்கிக்கொள்வேனோ! ஆ என்று அலறவா?
இது எதுவும் தெரியாமல் மெல்லிய காற்று வீச, என் நோயை அறியாமல் உறங்கிக்கொண்டிருக்கும் இந்த ஊரை நான் என்ன செய்ய?’ 

பாரங்கள் தாங்க முடியாமல் கோபத்தில் பிதற்றி அதை வெளியேற்றிவிடத் துடிக்கும் மனதை மிகச் சில வரிகளில் காட்டியிருக்கும் இந்தப் பாடல், எத்தனையோ ஆயிரம் காதல் பாடல்களை இந்தத் தமிழ்ச்சமூகம் கண்டிருந்தாலும் ஒரு பெண்ணின் காதல் உணர்வுகளை, அவள் மௌனங்களை, கோபங்களை, காம ஆசைகளைப் படைப்பாக்கியிருக்கும் இந்தச் சங்க இலக்கிய வரிகளை இங்கு அங்கீகரித்தே ஆக வேண்டும். பிற்போக்குத்தனங்கள் கற்பிக்கப்பட்ட இந்தச் சமூகத்தில் கண்டும் காணாமல் விடப்பட்டிருப்பவை, ‘பேசக்கூடாது’ என்று தடை செய்யப்பட்டிருப்பவை அதிகம். அப்படி மறைக்கப்படுபவையும் மறுக்கப்படுபவையும் காலப்போக்கில் ஆதிக்கத்துக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகும். ஆதிக்கம் செலுத்துவதும், அடங்கிப்போவதும் ‘இயல்பான விஷயங்கள்’, ‘இதுதான் இயற்கை’, ‘இப்படித்தான் படைப்பு’ என்ற அத்தனைக்கும் இந்தச் சமூகம் நியாயம் கற்பித்துக்கொண்டுதான் இருக்கிறது. பெண்கள் பற்றிய புரிதலுக்கான தேவையையும் இந்தச் சமூகம் அப்படித்தான் கடந்துகொண்டிருக்கிறது.

அப்படி இயல்பாக என்று கடந்துசெல்லப்படும் விஷயங்களின் அடிப்படைத் தன்மையைப் புரிந்துகொள்ள, அது இயல்பு இல்லை பிற்போக்குத்தனம் என்று உணர வேண்டும். அதற்கு அடிமனதில் ஊறியிருக்கும் கற்பிக்கப்பட்ட பிற்போக்குத்தனங்கள் களையப்பட வேண்டும். மறைக்கப்பட்ட நமது பிறப்புரிமைகள்தான் மறுக்கப்படுகின்றன. காலம் காலமாக ஏற்றப்பட்ட வேற்றுமைகளைச் சில மணி நேரங்களில் மாற்றிவிட முடியாது. ஆனால், இப்படியான மாற்றங்கள் உருவாக்கும் சக்தியை இலக்கியங்கள் பெற்றிருக்கின்றன. மேலே குறிப்பிட்டிருக்கும் சங்க இலக்கியப் பாடல் அதற்கு ஓர் உதாரணம். 

இங்கு ஒவ்வொருவரும் முழு, தனி மனிதர்கள். யாராலும் மற்றவர்களுடைய வாழ்க்கையை, அவர்களின் பயணத்தை, இன்பங்களை, வலியைப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், இந்தப் புரிதல் மட்டுமே சக மனிதர்கள் முழுக்க முழுக்கத் தன்னைப் போன்றவர்கள்தான், தனக்கிருக்கும் அத்தனை உரிமைகளும் அவர்களுக்கும் உண்டு, தனக்கு வலிப்பது போன்றுதான் அவர்களுக்கும் வலிக்கும் என்ற உண்மையை உணர்த்தும். இந்தப் புரிதலை எட்டாமல் இங்கு பேதங்கள் அழியாது, ஆதிக்க மனோபாவம் போகாது. 

இவற்றைச் செயல்படுத்த நமக்குக் கிடைத்திருக்கும் அற்புத வரங்கள் பேச்சும், எழுத்தும். சில விஷயங்களை நாம் ஏற்றுக்கொள்ள, நம் கூச்சத்தை உடைத்து அவற்றைப் பற்றிப் பேசுவதற்கு விவாதங்கள் பேருதவியாக இருக்கும். நமக்குள் நமக்குத் தெரியாமலேயே பதிந்துபோன கற்பிதங்களை உடைப்பதற்கு உரையாடல் அருமருந்து. கலந்துரையாடல்களின்போதுதான் பலதரப்பட்ட பார்வைகளைக் காண முடியும், நமக்குத் தெரியாதவற்றை அறிந்துகொள்ள முடியும். நாம் அனுபவப்பட்டிருக்காத வாழ்க்கையை வாழும் மனிதர்களைப் புரிந்துகொள்ள முடியும். அதுதான் பேதங்களைக் கண்டறிந்து அறிவும், கற்பிக்கும் மனப்பான்மையையும் வளர்க்கும் வழி. இப்படித்தான் அறச் சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும்.

சங்க இலக்கியத்தையும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெண் உணர்வுகளையும் இங்கே குறிப்பிடக் காரணம் இருக்கிறது. சமீபத்தில், திருச்சி புனித ஜோஸஃப் கல்லூரியில் தமிழாய்வுத் துறையின் சார்பில் ‘தமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண் வன்கொடுமைகள்’ என்ற தலைப்பின்கீழ் நடக்கவிருந்த பன்னாட்டு கலந்துரையாடல் மாற்றுத் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கலந்துரையாடல் குறித்து பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, சிலதினங்களுக்கு முன்பு ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். ``சங்க இலக்கியங்களையும், இந்து இதிகாசங்களையும் கொச்சைப்படுத்துவதாகக் கருத்தரங்கத் தலைப்பு உள்ளது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், ``இந்தக் கருத்தரங்க அறிவிப்பை வெளியிட்டிருக்கும் கிறித்தவக் கல்லூரியின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்" என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.  இதற்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ``பெண்களை மகிமைப்படுத்தும் எண்ணற்ற இலக்கியப் படைப்புகள் தமிழில் நிறைந்து நிற்கையில், தமிழ்ப் பண்பாடு பெண்களைத் தாழ்த்திவைத்தது என்ற நஞ்சுக் கருத்தைப் பதியவிடக் கூடாது" என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், கல்லூரி நிர்வாகமும் ``அறிவிக்கப்பட்ட தேதிகளில் கருத்தரங்கம் நடைபெறாது" என்று தெரிவித்திருக்கிறது.  நிகழ்வு நின்றுபோனதற்கு விளக்கமாக, ``கஜா நிவாரணப் பணிகளில் நிர்வாகம் ஈடுபட்டிருப்பதால் கருத்தரங்கம் தடைப்பட்டது" என்று கல்லூரி நிர்வாகம் கூறியிருந்தது. கருத்தரங்கம் அடுத்து எந்தத் தேதிகளில் நடைபெறும் என்பது பற்றிய அறிவிப்பையும் கல்லூரி வெளியிடவில்லை. இதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ் ஆர்வலர்கள், ``எதையும் எதனுடனும் ஒப்பிட்டுப் பொதுமைப்படுத்தாத அறிவும், எதையும் புனிதப்படுத்தாத தெளிவும்தான் வருங்கால இளைஞர்களுக்குத் தேவை. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அது தேவையானதொரு பண்பு. அந்தத் தெளிவை இப்படியான ஆரோக்கியமான கலந்துரையாடல் நிகழ்வுகள்தான் கொடுக்கும். இலக்கியப் பதிவுகளில் இருந்து கிடைக்கும் பெண் வன்கொடுமைகளுக்கான சான்றுகளைப் படிக்கும் யாரும் பழந்தமிழர் பெண்களைக் கொடுமை செய்தனர் என்று பொத்தாம்பொதுவாகக் கடந்து சென்றுவிடப் போவதில்லை. சங்க இலக்கியம் கூறும் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலான அன்பையும் அந்தப் பாடல்களில் இடம்பெறும் பெண்களின் உணர்வுகளையும் வாசிப்பவர்களுக்கு, கடத்தத் தெரிந்தவர்களுக்கு, சங்க இலக்கியம் கூறும் அறங்களைத் தெளிவுபடுத்தத் தெரிந்தவர்களுக்கு அது கூறும் பெண்கள் மீதான வன்கொடுமைகளின் சாரம் பற்றியும் தெளிவுபடுத்தத் தெரிந்திருக்கும். பொது அறிவு உள்ள யாரும் தமிழ்ச் சங்க இலக்கியப் பாடல்களை இந்து மதத் தத்துவார்த்தங்களுடன் இணைத்துப் புரிந்துகொள்ளவும் போவதில்லை. ஆனாலும், ஹெச்.ராஜா கருத்தரங்கத் தலைப்பையும், அதற்கு ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகத்தையும் இணைத்து மதச்சாயம் பூசிப் பேசியிருப்பது அருவருக்கத்தக்கது. மேலும், சங்க இலக்கியப் பாடல்கள் சார்ந்த அவரது அறியாமையையும் அது வெளிப்படுத்துகிறது.

இப்படியான பழைமைவாதங்கள் பிற்போக்குத்தனங்களைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருப்பதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள இயலாது. அவை நாம் பகுத்தறியவும், சக மனிதர்களை நேசிக்கவும் நிச்சயம் தடையாய் இருக்கப்போவதுமில்லை. ஏனென்றால், அடிப்படைவாதங்களைக் கேள்வி கேட்கும், பேதங்களை அடித்து உடைக்கும் ஆயிரமாயிரம் படைப்புகள் இங்கு உண்டு. அவை கற்பிக்கும் அறநெறிகளைக் கடத்துவதற்கு எந்த ட்வீட்டுகளாலும் தடை விதிக்க முடியாது. தனியொரு மனிதன் அறத்தை உணரும்வரை பொதுமைப்படுத்தாமல், புனிதப்படுத்தாமல் எல்லாவற்றின் இருவேறு முகங்களை ஆராயும் அறிவு அத்தகைய படைப்புகளின் வழியாக இங்கு பகிரப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்" என்கின்றனர், மிகத் தெளிவாக.