செப்டம்பர் 2-ம் தேதி கிருஷ்ண ஜயந்தி.
அன்றைய தினம் கிருஷ்ணருக்குப் பிடித்த பதார்த்தங்களைச் செய்து அவரை நம் வீட்டுக்கு அழைத்து வழிபடுவது மரபு.

அவ்வகையில் கண்ணனுக்குப் பிடித்த சுவையான பதார்த்தங்களை எப்படிச் செய்ய லாம் என்று வழிகாட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த சமையல்கலை நிபுணர் தீபா பாலச்சந்தர்.
முன்னதாக சிறு குறிப்பொன்று...
அரிசி மாவைப் பயன்படுத்தி பல பதார்த் தங்களைச் செய்யவுள்ளதால், முதலில் அரிசி மாவை எப்படித் தயாரிக்கலாம் என்பது குறித்த விவரம் உங்களுக்காக.
பச்சரிசியை அரை மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு களைந்து நிழலில் காய வைத்து மெஷினில் கொடுத்து மையாக அரைத்துக்கொள்ளவும். மாவு சற்று ஆறியதும் வெறும் வாணலியில் மாவினைச் சேர்த்து லேசாக வறுத்து பிறகு சலித்துப் பயன்படுத்த வேண்டும். உளுந்து மாவுக்கு... வாணலியில் உளுந்தைச் சேர்த்து நிறம் மாறும் வரை வறுத்து, ஆறியதும் மையாக அரைத்துச் சலித்து பயன்படுத்த வேண்டும்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உப்புச் சீடை
தேவையானவை:
அரிசி மாவு - ஒரு கப்
உளுந்த மாவு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்தமாவு, உப்பு, வெண்ணெய், பெருங்காயத் தூள், தண்ணீர் சேர்த்து சற்று நெகிழ்வாகப் பிசைந்துகொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மாவைச் சிறிய உருண்டை களாக உருட்டி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளைச் சேர்த்து பொன்னிற மாகப் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.

வெல்லச் சீடை
தேவையானவை:
அரிசி மாவு - ஒரு கப், உளுந்த மாவு - ஒரு டீஸ்பூன்
வெல்லத்தூள் - அரை கப்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கறுப்பு எள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வெல்லத் தைச் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைக்கவும். வெல்லம் கரைந்தது அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்த மாவு, ஏலக்காய்த்தூள், வெண்ணெய், எள், வடிகட்டிய வெக்கரைசல், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சற்று நெகிழ்வாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.

வெண்ணெய் முறுக்கு
தேவையானவை:
அரிசி மாவு - 3 கப்
கடலை மாவு - அரை கப்
பொட்டுக்கடலை மாவு - ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: அரிசி மாவுடன் கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், தேவையான அளவு தண்ணீர் விட்டு மாவைச் சற்று நெகிழ்வாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்கு பிடியில் ஸ்டார் வடிவ அச்சின் மீது போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிந்துவிடவும். முறுக்கு நன்கு வெந்து நிறம் மாறும் போது, எடுத்துப் பரிமாறவும்.

கோகனட் ரவா லட்டு
தேவையானவை:
முந்திரி - 10
திராட்சை -10
ரவை - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
நெய் - அரை கப்
செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி உருகியதும் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே நெய்யில் ரவை, தேங்காய்த்துருவலை தனித்தனியாகச் சேர்த்து வறுத்தெடுத்து ஆறவிட வும். ஆறியதும், மிக்ஸியில் ரவை, தேங்காய்த் துருவல், சர்க்கரை சேர்த்து அரைத் தெடுக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த பொருள்களுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து பிசறவும். வாணலியில் நெய் விட்டு சூடாக்கி, அரைத்த கலவையுடன் நெய்யைச் சிறிது சிறிதாக விட்டு கைப்பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்கவும். ரவா லட்டு ரெடி.

தட்டை
தேவையானவை:
அரிசி மாவு - ஒரு கப்
உளுந்த மாவு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
ஊற வைத்த கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய் தவிர்த்து தேவையா னவற்றுக்குக் கொடுத்த எல்லாப் பொருள்களையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சற்று நெகிழ்வாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு வாழை இலையில் சிறிது நெய் தடவி, உருட்டிய ஒரு உருண்டையை எடுத்து இலையில் வைத்து இருபுறமும் தட்டிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், தட்டையை விட்டுப் பொரித்தெடுத்து பொன்னிறமாக வந்ததும் சூடாகப் பரிமாறவும்.

அப்பம்
தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப்
பொடித்த வெல்லம் - ஒரு கப்
தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்
வாழைப்பழம் - ஒன்று (துண்டுகளாக்கியது)
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
நெய் - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மையாக அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைக் கரையவிடவும். வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டவும். இத்துடன் ஏலக்காய்த்தூள், துண்டுகளாக்கிய வாழைப்பழம், சமையல் சோடா, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். அரை மணிநேரம் கழித்து, அடுப்பில் பணியாரக்கல்லை வைத்து குழிகளில் நெய் தடவி சூடாக்கவும். பிறகு, கரைத்து வைத்துள்ள கலவையை கொஞ்சமாக எடுத்து குழிகளில் ஊற்றவும். இருபுறமும் வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

அவல் பாயசம்
தேவையானவை:
அவல் - ஒரு கப்
வெல்லம் - முக்கால் கப்
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரி - 10
திராட்சை - 10
காய்ச்சிய பால் - ஒரு கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை: அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வெல்லத்தைக் கரையவிடவும். கரைந்த வெல்லத்தை வடிகட்டிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி உருகியதும் அவல், முந்திரி, திராட்சை மூன்றையும் தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதே பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அவலைச் சேர்த்து வேகவிடவும். அவல் வெந்ததும் பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு வடிகட்டிய வெல்லக் கரைசலைச் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, முந்திரி, திராட்சை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

திரட்டுப்பால்
தேவையானவை:
காய்ச்சாத பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - கால் கப்
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். பிறகு தீயை மிதமாக்கி பாலை சுண்டக் காய்ச்சவும். ஓரங்களில் படியும் ஏடுகளையும் சேர்த்து கிளறிக் காய்ச்சவும். பால் சற்று கெட்டியானதும், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து அல்வா பதம் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.