Published:Updated:

125 சி.சி. யமஹா ஃப்ரி கோ (Free Go), இந்தியாவுக்கு வருமா?!

ஸ்மூத் ஆக்ஸிலரேஷனுக்கும் நீடித்த ஆயுளுக்கும் உதவக்கூடிய Smart Motor Generator - Forged பிஸ்டன் - DiASiL Cylinder (Die-cast Aluminium Silicon Cylinder) தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

125 சி.சி. யமஹா ஃப்ரி கோ (Free Go), இந்தியாவுக்கு வருமா?!
125 சி.சி. யமஹா ஃப்ரி கோ (Free Go), இந்தியாவுக்கு வருமா?!

ந்தியாவைப் போலவே, இந்தோனேஷியாவிலும் ஸ்கூட்டர்கள்தான் டூ-வீலர் சந்தையை ஆக்கிரமித்திருக்கின்றன. கடந்த ஆண்டு அங்கு விற்பனையான 5.8 மில்லியன் டூ-வீலர்களில் 83% (4.8 மில்லியன்) ஸ்கூட்டர்கள்தான்! எனவே, அந்நாட்டு டூ-வீலர் சந்தையில், ஃப்ரி கோ (Free Go) எனும் ஃபேமிலி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியிருக்கிறது யமஹா.

PT Yamaha Indonesia Motor Manufacturing (YIMM) நிறுவனம் உற்பத்தி செய்யும் இந்த ஸ்கூட்டர், ஸ்டாண்டர்டு மற்றும் i எனும் 2 வேரியன்ட்களில் கிடைக்கிறது. 3 Matte கலர்கள் (கறுப்பு, சிவப்பு, க்ரே) மற்றும் 3 Metallic கலர்கள் (சிவப்பு, நீலம், வெள்ளை) என மொத்தம் 6 கலர்களில் ஃப்ரி கோ ஸ்கூட்டரை வாங்கலாம்.

டிசைன், வசதிகள்

`காம்பேக்ட் ஃபேமிலி ஸ்கூட்டர்' கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஃப்ரி கோ, ரே சீரிஸ் போன்ற டிசைனில் கவர்கிறது. முன்பக்க Apron-ல் ஹெட்லைட் இருப்பதுடன், அதன் இருபுறமும் இண்டிகேட்டர்கள் உள்ளன. இந்தியாவில் விற்பனையாகும் யமஹா ஸ்கூட்டர்களுடன் (ஃபேஸினோ, ஆல்ஃபா, ரே-சீரிஸ்) ஒப்பிடும்போது, ஹேண்டில்பாருக்குக் கீழே பெட்ரோல் டேங்க் மூடி வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல பெட்ரோல் டேங்க் Floor Board-க்கு அடியே பொசிஷன் செய்யப்பட்டு இருப்பதால், சீட்டுக்கு அடியே Full Face ஹெல்மெட் வைக்குமளவுக்கு 25 லிட்டர் Storage Space கிடைத்திருக்கிறது. இது இந்தோனேஷியாவில் யமஹா விற்பனை செய்யும் N-Max 155 மேக்ஸி ஸ்கூட்டரைவிட அதிகம். இப்படி பிராக்டிக்காலிட்டியில் அசத்தும் இந்த ஸ்கூட்டரில் MID உடனான LCD டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், LED ஹெட்லைட், மொபைல் சார்ஜிங் பாயின்ட், Immobilizer மற்றும் Answer Back உடனான ஸ்மார்ட் கீ சிஸ்டம் என மாடர்ன் அம்சங்களும் உண்டு. 

இன்ஜின், விலை

மைலேஜுக்குப் பெயர்பெற்ற தனது ப்ளூ கோர் (Blue Core) சீரிஸில், புதிதாக ஒரு 125சிசி இன்ஜினைத் தயாரித்திருக்கிறது யமஹா. 4 வால்வ் - SOHC அமைப்பைக் கொண்டிருக்கும் இது, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தைக் கொண்டுள்ளது. 9.4bhp@8,000rpm பவர் மற்றும் 0.95kgm@5,500rpm டார்க்கை வெளிப்படுத்தும் இது, தினசரி தேவைக்கான ஆன்-ரோடு பர்ஃபாமென்ஸை மனதில்வைத்து டியூன் செய்யப்பட்டிருக்கிறது. ஸ்மூத் ஆக்ஸிலரேஷனுக்கும் நீடித்த ஆயுளுக்கும் உதவக்கூடிய Smart Motor Generator - Forged பிஸ்டன் - Diasil Cylinder தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பது இதற்கான உதாரணம். ஆனால், அளவில் சிறிய 4.2 லிட்டர் பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டிருப்பதுதான் நெருடல். ஸ்டாண்டர்டு மாடலுடன் ஒப்பிடும்போது, i வேரியன்ட்டில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம், ஸ்மார்ட்-கீ சிஸ்டம், ஏபிஎஸ் ஆகியவை கூடுதலாக இடம்பெற்றுள்ளன. இந்திய மதிப்பில் ஸ்டாண்டர்டு மாடலின் விலை 89,488 ரூபாய் எனவும், i மாடலின் விலை 1.09 லட்ச ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. முன்பக்கத்தில் டியூப்லெஸ் 100/90-12 இன்ச் டயர் - டிஸ்க் பிரேக் - டெலிஸ்கோபிக் ஃபோர்க் இருந்தால், பின்பக்கத்தில் டியூப்லெஸ் 110/90-12 இன்ச் டயர் - டிரம் பிரேக் - மோனோஷாக் உள்ளது.

இந்தியாவுக்கு ஃப்ரி கோ வருமா?

ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் டாப் 10 டூ-வீலர்களில் இருக்கும் ஸ்கூட்டர்கள், வழக்கமான 110சிசி இன்ஜினைக் கொண்டிருக்கும் ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிட்டர்தான். ஆனால், இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமான ஸ்கூட்டர்கள் அனைத்துமே 125 சிசி செக்மென்ட்டைச் சேர்ந்தவை. ஏப்ரிலியா SR125 - டிவிஎஸ் என்டார்க் 125 - சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 - ஹீரோ டெஸ்ட்டினி 125 என ஸ்போர்ட்டி - பிரிமியம் - ஃபேமிலி என ரகம் வாரியாக 125சிசி ஸ்கூட்டர்கள் வெளிவந்திருப்பதை வைத்துப் பார்க்கும்போது, கம்யூட்டர் பைக்குகளைப் போலவே ஸ்கூட்டர்களிலும் மக்கள் அதிகமாக (டிசைன், வசதிகள், பவர், ஓட்டுதல்) எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பது தெளிவாகிறது.

எனவே, இந்தியாவில் தற்போது வளர்ந்துவரும் 125சிசி ஸ்கூட்டர் செக்மென்ட்டில், யமஹா தனது சார்பாக ஃப்ரி கோ ஸ்கூட்டரைக் களமிறக்குவது நல்ல முடிவாக இருக்கும். என்றாலும், அதற்கு யமஹா நிறுவனமும் காலமும்தான் பதில்சொல்ல வேண்டும். மேலும், அதிரடியான விலையில் வர வேண்டும் என்றால், இந்தோனேஷிய மாடலில் இருக்கும் அனைத்து வசதிகளும் இந்திய மாடலில் இருக்குமா என்பதும் சந்தேகமே!