Published:Updated:

`வந்தாள்... வாழவைத்தாள்!’

`வந்தாள்... வாழவைத்தாள்!’
பிரீமியம் ஸ்டோரி
`வந்தாள்... வாழவைத்தாள்!’

நமசு - படம்: கே.எம்.பிரசன்னா, சரண்

`வந்தாள்... வாழவைத்தாள்!’

நமசு - படம்: கே.எம்.பிரசன்னா, சரண்

Published:Updated:
`வந்தாள்... வாழவைத்தாள்!’
பிரீமியம் ஸ்டோரி
`வந்தாள்... வாழவைத்தாள்!’

`ஏழைக் குசேலனுக்குத் தோழமை தாள் தந்து வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான்...’ இறையிசைப் பாடகர் சாஸ்தாதாசனின் கம்பீரமான குரலில் கண்ணன் பாடலைக் கேட்டு, கைத்தட்டி ஆர்ப்பரித்தது பக்தர்கள் கூட்டம். அடுத்தடுத்த பாடல்களுக்கும் அப்படியொரு வரவேற்பு கூட்டத்திடமிருந்து!

மேடைக்கச்சேரி நிறைவுற்றதும் நாமும் நம் பங்குக்கு பாராட்டைத் தெரிவித்தோம். நன்றி தெரிவித்தவர், `பக்திப் பாட்டுக் கச்சேரி’ பயணம் குறித்து அவரிடம் கேட்டதும், மனம் சிலிர்க்க பேசத் தொடங்கினார்.

‘‘என்னை எனக்கு அடையாளம் காட்டியது, பிரபல பாடகரும் என் மாமாவுமான வீரமணி சாமிதான். என் அப்பாவுக்கு அவர் அத்தை மகன். சிறு வயதிலேயே வீட்டு விசேஷங்களில் சின்னச் சின்னதாக நான் பாடுவதைக் கேட்டுவிட்டு `அருமையான குரல். பெரிய ஆளா வருவான்’ என்று பாராட்டுவார். அவரது ஆசி என்னை வழிநடத்துகிறது...’’ எனக் கூறும் சாஸ்தா தாசன் இதுவரை 3000-க்கும் மேற்பட்ட மேடைக் கச்சேரிகள் பாடியிருக்கிறார். தமிழகத்தில் மட்டுமல்ல வெளி மாநிலங்களிலும், வெளிநாடு களிலும் களைகட்டுகின்றன இவருடைய மேடைக் கச்சேரிகள். அத்துடன், இவர் பாடிய பக்திப்பாடல்கள் தொகுப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட குறுந்தகடுகளும் வெளிவந்துள்ளன.

`வந்தாள்... வாழவைத்தாள்!’

‘‘எனது  முதல் மேடைக்கச்சேரி அரங்கேறியது வீரமணி சாமி முன்னிலையில்தான். அது நான் செய்த கொடுப்பினை. சிறுவனான என்னை தன் மடிமீது அமர்த்தி கூட்டத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர், என்னைப் பாடச் சொன்னார்; நான் பாடினேன். `மணியே மணியின் ஒளியே’ எனத் தொடங்கும் `ஆதிபராசக்தி’ திரைப்படத்தின் பாடல். என்னால் மறக்க முடியாத அனுபவம் அது’’ என்றவரிடம், `பாட்டுப் பயணம் தொடங் கியதும் தொடர்வதும் அம்பாள் அருளால்தான்’ என்று அடிக்கடி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வீர்களாமே எனக் கேட்க, மெள்ளப் புன்னகைத்தபடி அந்தச் சிலிர்ப்பான அனுபவத் தையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

‘‘வீரமணி சாமி, என்னை எனக்கு அடையாளம் காட்டினார் என்றாலும், பாடுவதையே நான் முழுத் தொழிலாக வைத்துக்கொள்ளவில்லை. தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தேன். அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும்போது கச்சேரிக்குச் செல்வது வழக்கம். பணியா, பாட்டா என்று முடிவெடுக்க முடியாமல் தவித்த காலம் அது. அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது...’’ என்று கூறி சற்று நிதானித்தவர், பிறகு தொடர்ந்தார்...

‘‘சென்னை மாம்பலத்திலுள்ள முத்தாலம்மன் திருக்கோயிலில் கச்சேரி. நல்ல கூட்டம். `கண்டு கொண்டேன் வந்தது யாரென்று கண்டு கொண் டேன்...' இந்தப் பாடலைத்தான் பாடிக் கொண் டிருந்தேன். கச்சேரி மேடைக்கு நேர் எதிரில் கோயிலின் அலுவலகம். உள்ளே, சேரில் அமர்ந் திருந்த சிறுமி ஒருத்தி கன்னத்தில் கைவைத்துக் கொண்டு... அப்படி ரசித்துக்கொண்டிருந்தாள் கச்சேரியை. பாடிக்கொண்டே நான் அவளைக் கவனிக்க... ‘ம்... அருமை’ என்பதுபோல் சைகைக் காட்டினாள். எனக்கோ ஆச்சர்யம்.

அடுத்தடுத்த பாடல்கள் முடிந்து சிறு இடை வெளி கிடைத்தபோது கவனித்தேன்... மேடைக்கு எதிரில் அருகிலேயே நின்றிருந்தாள் அவள். நான் அவளைப் பார்த்ததும் ‘இதுதான் இனி உனக்கு. தொடர்ந்து பாடு. எல்லாம் நான் பார்த்துக்கிறேன்... சரியா’ என்றாள். எனக்கு உள்ளம் சிலிர்த்தது. என் குழப்பத்துக்கு விடைகிடைத்ததாகவே உணர்ந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`வந்தாள்... வாழவைத்தாள்!’

கச்சேரி முடிந்ததும் தேடினால், அந்தப் பெண் கோயிலில் இல்லை. கோயில் நிர்வாகியிடம் அந்தப் பெண்ணைக் குறித்து விசாரித்தேன். அவர் வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டார். ஏனெனில், அவள் என்னிடம் பேசிக்கொண்டி ருந்ததைப் பார்த்துவிட்டு, `அந்தப் பெண் எனக்குப் பரிச்சயமானவளாக இருக்கலாம்’ என்று அவர் எண்ணியிருக்கிறார். அத்துடன் அவர், ‘இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் எனக்கு அறிமுகமானவர்களே. ஆனால் இந்தப் பெண்ணை இதுவரையிலும் நான் பார்த்ததே இல்லை’ என்றார் ஆச்சர்யத்துடன். அதேநேரம் கோயில் பணியாளர்கள் சிலர் வந்து ஒரு விஷயத் தைப் பகிர்ந்துகொண்டார்கள்.

‘ஆலய வாயிலை அடைத்தபடி காலணிகளை இப்படிப் போட்டு வைத்திருந்தால், நான் எப்படி உள்ளே வருவது’ என்று அவர்களை உரிமையோடு கடிந்துகொண்டாளாம் அந்தச் சின்னப் பெண். இவர்களும் உடனடியாக காலணிகளை ஓரமாக நகர்த்தி ஒழுங்குப் படுத்தினார்களாம். எனக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது... வந்தது சாதாரணப் பெண்ணில்லை; சாட்சாத் அந்த பராசக்தியே   வந்திருக்கிறாள். வந்து, எனக்கான பாதையைப் புலப்படுத்தியிருக்கிறாள் என்று. அவளது ஆணைப்படி, பாடுவதே எனது முழு நேரத் தொழில் என்று அப்போதே மனதுக்குள் முடிவெடுத்தேன். எனது அந்த முடிவு மிகச்சரியே என்பதுபோல் ஓங்கி ஒலித்தது ஆலய மணி. ஓடோடிச் சென்றேன் அம்பாள் சந்நிதிக்கு. மகா தீபாராதனை ஒளியில் அருள்புன்னகை காட்டி னாள் அம்பிகை. அந்த தருணத்தில் நான் அடைந்த சிலிர்ப்பு... வார்த்தைகளில் விளக்க முடியாத அனுபவம் அது! இதோ... அன்று அவள் சொன்னபடியே பாடலும் கச்சேரியுமாகவே கழிகிறது எனது வாழ்க்கை. அவள் அருளால் குறையொன்றும் இல்லை’’ என்றவர் தொடர்ந்து, ‘‘சகலமும் சக்தி சமர்ப்பணம்’’ என்றபடியே, கண்கள் பனிக்க தன் நெஞ்சில் கை வைத்து வணங்கினார்.

அவரையுமறியாமல் அவரின் வாய் முணு முணுத்தது... `ஆத்தாளை அபிராமி வல்லியை அண்டமெல்லாம் காத்தாளை...’ அபிராமி அந்தாதிப் பாடலை.

நாமும் வணங்கி விடைபெற்றோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism