Published:Updated:

வீகன் உணவுமுறை பாதுகாப்பானதா... ப்ளஸ் மைனஸ் என்ன? #VeganDiet

வீகன் உணவுமுறை பாதுகாப்பானதா... ப்ளஸ் மைனஸ் என்ன? #VeganDiet
News
வீகன் உணவுமுறை பாதுகாப்பானதா... ப்ளஸ் மைனஸ் என்ன? #VeganDiet

உங்கள் உணவுப் பழக்கம் உலகையே காக்குமா? - நனி சைவத்தினர் சொல்வது என்ன?

ணவில் அரசியல் இருக்கிறது; கலாசாரம் இருக்கிறது; பிரிவினை இருக்கிறது; நாகரிகம் இருக்கிறது; அறிவியல் இருக்கிறது; வணிகம்  இருக்கிறது; உடல்நலம் இருக்கிறது... கூடவே மிருக நலமும் இருக்கிறது என்கிறார்கள் சிலர். `வீகனிசம்' என்ற உணவு முறையைக் கடைப்பிடிக்கும் இவர்கள் `வீகன்ஸ்' என்று அழைக்கப்படுகிறார்கள். தமிழில், `நனி சைவத்தினர்' என்று இவர்களைக் குறிப்பிடுகிறார்கள். நவம்பர் மாதத்தை `உலக வீகன் மாதமா'கவும் இவர்கள் கொண்டாடி வருகின்றனர். வழக்கமான சைவ உணவுப் பழக்கத்தோடு சேர்த்து, பால் மற்றும் `டயரி' பொருள்கள் என்று அழைக்கப்படும் பனீர், தயிர், சீஸ், நெய் போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருள்களையும், விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டை, எண்ணெய் போன்ற உணவுகளையும் தவிர்க்கும் உணவுமுறையே இந்த வீகன் உணவுமுறை.

நாகரிக வளர்ச்சிக்கும், வாழ்க்கைத்தரத்துக்கும் ஏற்ப மனிதனின் உணவுப் பழக்கம் மாறிவந்தது. இன்று, நுகர்வு கலாசாரம் ஊடுருவிய 21-ம் நூற்றாண்டில், வியாபார உத்திகளும், லாப நோக்கங்களுமே உணவுப் பழக்கத்தைத் தீர்மானிக்கின்றன. தமிழகத்தின் குக்கிராமங்களில் கூட விற்பனையாகும் காற்றடைத்த சிப்ஸ் பாக்கெட்டுகளே இதற்குச் சாட்சி.

இப்படித் துரித உணவு வகைகள் தொடங்கி, பேலியோ, கீட்டோ டயட்  முறைகள், ஆர்கானிக் உணவுப் பொருள்கள் என்று உணவு விஷயத்தில் புதிய புதிய மாற்றங்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. இவற்றிலிருந்தெல்லாம் முற்றிலும் வேறுபட்ட ஓர் உணவுப் பழக்கமாக உருவெடுத்திருக்கிறது `வீகன்' உணவுமுறை. உணவுச் சந்தையின் பெருவுற்பத்தி பொருள்களை  இவர்கள் புறக்கணிக்கின்றனர். அதற்கு மூன்று முக்கியக் காரணங்களை முன்வைக்கின்றனர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதலாவது, மிருக நலன். பெரும் வர்த்தக நோக்கத்துடன் செயல்பட்டுவரும் பால் பொருள்கள் உற்பத்தி செய்யும் கூடங்களில் லாபநோக்கத்துக்காகக் கால்நடைகள் துன்புறுத்தப்படுகின்றன. மனிதர்களைப் போலவே மிருகங்களுக்கும் வாழ்வுரிமை இருக்கிறது; நரம்பு மண்டலமும், மூளையும் உள்ள அவற்றுக்கு வலி உணர்வு இருக்கிறது.  

இரண்டாவது, உலக நலன். `உலகின் பருவ நிலைக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்கள் வெளியேற்றத்தில் அதிக பங்கு வகிப்பது விலங்குப் பண்ணைகள். உணவுக்காக, அல்லது பிற தேவைகளுக்காக மிருகங்களைப் பயன்படுத்துவதை தடுப்பதன்மூலம் இவற்றைக் குறைக்கலாம். 

மூன்றாவது, தனிநபர் உடல் நலன். `பால் சம்பந்தப்பட்ட பொருள்கள், முட்டை, இறைச்சி ஆகியவற்றைத் தவிர்த்து சைவ உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதால் உடல்நலமும், ஆரோக்கியமும் கூடும். 

இப்படி `வீகன்' உணவுமுறையைக் கடைப்பிடிக்கும் பலரும், அவரவருக்குச் சரியான காரணத்தை முன்னிட்டு அதை மேற்கொள்கின்றனர். உலகில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் `வீகன்' உணவுமுறையைக் கடைப்பிடிப்பவர்கள், எண்ணிக்கை பல நூறு சதவிகிதம் அதிகரித்திருப்பதாகச் சொல்கிறது ஓர் அறிக்கை. இந்நிலையில் மேற்கண்ட மூன்று காரணங்களைப் பற்றி அலசுவதும், ஆராய்ந்து அறிந்து கொள்வதும் அவசியமாகிறது.

மிருக நலம் 

உலகின் உணவுப் பயன்பாட்டில் பிரதானமாக இருப்பது பால் சம்பந்தப்பட்ட பொருள்களும், முட்டையும். அவை உற்பத்தி செய்யும் பண்ணைகளில் இரக்கமற்ற நிலையில் விலங்குகளும், பறவைகளும் நடத்தப்படுகின்றன. பசுக்கள் பால் உற்பத்திசெய்ய கர்ப்பம் தரித்திருத்தல் அவசியம் என்பதால், செயற்கையான முறையில், ஊசி மூலம் அவை கர்ப்பமாக்கப்படுகின்றன. கன்று பிறந்ததும், ஆண் கன்று என்றால் இறைச்சிக்காக விற்கப்படுகிறது. பெண் கன்றாக இருந்தால் பால் கறவைக்காக வளர்க்கப்படுகின்றன. கன்றுகள் தாயிடம் பால் குடிக்க அனுமதிக்கப்படுவதும் இல்லை. பால் சுரப்பதற்கு கன்றின் வாயைக்கட்டி அவை பசுவின் அருகில் விடப்படுகின்றன. 5 லிட்டர் மட்டுமே கொள்ளளவு கொண்ட பசுவின் மடியில், ஊசியால் 20 லிட்டர் வரைப் பால் சுரக்க வைக்கப்படுகிறது. பசுவைத் தெய்வமாக வழிபட்டு, வணங்கி, கன்று அருந்தி மீதம் விட்ட பாலை மட்டும் பயன்பாட்டுக்கு எடுக்கும் பண்டைய பழக்கம் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன. பசுவை நிற்பதற்குக்கூட இடமில்லாமல் அடைத்துவைத்து, மடியின் கணம் தாங்காது தளரவிட்டு, கன்றைப் பால் சுரக்கும் கருவியாக மட்டும் பயன்படுத்தும் பால் பண்ணைகள் மீதுள்ள வெறுப்பு பலரை இந்த `வீகன்' முறைக்கு மாறத் தூண்டுகிறது.

பசுக்களைப் போலவே பெரும்பான்மையான பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வெளிச்சத்தையே பார்ப்பதில்லை. ஓர் அடி  நகரக்கூட இடம் இருப்பதில்லை. இப்படி இயற்கைக்கு மாறாக ஓர் உயிர் வதைக்கப்படுகிறது. அதைத்தடுக்க, அதன் தேவையைக் குறைப்பதே ஒரே வழி என்கின்றனர் `வீகன்' உணவுமுறையைக் கடைப்பிடிப்பவர்கள்.

உலக நலம்

உலக வங்கியின் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் 2015-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், `உலகின் பசுமை வாயு வெளியேற்றத்தில் 51 சதவிகிதம் கால்நடை வளர்ப்பினால்தான் நிகழ்கிறது' என்கின்றனர். `உலகின் மக்கள்தொகை பெருக்கத்துக்கும், அதனால் ஏற்பட்ட உணவுத்தேவை பெருக்கத்துக்கும் ஈடுகொடுக்க, 2050-ம் ஆண்டில் உணவுக்காகப் பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகரிக்கும்' என்று ஐ.நா சபையின் ஆராய்ச்சி அறிக்கை சொல்கிறது.

அதிகமாகும் இந்தக் கால்நடைப் பண்ணைகளால், உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு, காடுகள் அழிப்பு, நோய் பரவுதல், தண்ணீர்ப் பஞ்சம் போன்ற பிரச்னைகள் அதிகரிக்கும் என்கின்றனர் அறிவியலாளர்கள். 

உடல்நலம் 

சைவ உணவு மட்டுமே உட்கொள்வதால், ஒருவரின் உடல் ஆரோக்கியம் கணிசமான அளவு முன்னேறும் என்றும், அவர்களின் சிந்தனை திறன் மேம்படும் என்றும் சொல்கிறார்கள் வீகன் உணவுமுறையினர். உடல் எடை அதிகரிப்பது, இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிகக் கொழுப்பு சேர்வது போன்ற பிரச்னைகள் வராமல் இருக்க இந்த உணவு முறை உதவுகிறது என்பதும் இவர்கள் கருத்து. குறிப்பாக இறைச்சி மற்றும் பால் பொருள்களின் மூலமாகக் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் குறைவதால் அவற்றை சமன்படுத்த மாற்று உணவு உட்கொள்ளவேண்டும் என்ற உந்துதல் ஏற்படும், இதனால் சரிவிகித உணவு உண்ண வேண்டும் என்ற உணர்வு அதிகரிப்பதாகவும் சொல்கின்றனர்.

உண்மையில் இந்த உணவு முறை நன்மை அளிக்குமா, இதைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் என்ன, இது பாதுகாப்பானதுதானா?  ஊட்டச்சத்து நிபுணர், திவ்யா சத்யராஜிடம் பேசினோம்.

``வீகன் உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது என்பது கொலஸ்ட்ரால் (cholestrol) இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. தோல் தொடர்பான பிரச்னைகளைக் குறைப்பதற்கு, பால் சம்பந்தப்பட்ட பொருள்களைத் தவிர்ப்பது நல்லது, மேலும், உடலில் நச்சுத்தன்மையை நீக்கி, சுத்திகரிப்பதற்கும் இந்த உணவுப் பழக்கத்தைப் பின்பற்றலாம். ஆனால், நாம் தவிர்க்கும் உணவுகளான இறைச்சி, பால் சம்பந்தப்பட்ட பொருள்களால் உடலுக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்துகளை வேறு உணவுகளின் மூலம் சமன் செய்ய வேண்டும். குறிப்பாக கால்சியம், பி-12, புரோட்டீன் ஆகிய ஊட்டச்சத்துகளை வேறு உணவுகளை உட்கொண்டு சமன் செய்வது மிகவும் அவசியம். ஆனால் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் இதை நான் பரிந்துரைப்பதில்லை. யார் இந்த உணவு முறையைப் பின்பற்றினாலும் அவர்கள் முறையாக ஓர் ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறவேண்டும். முக்கியமாக, இந்த உணவுப் பழக்கத்தை ஏன் பின்பற்றுகிறோம் என்ற தெளிவு வேண்டும். சமூக வலைதளங்களின் பாதிப்பால் ஈர்க்கப்பட்டு இதைப் பின்பற்றுவது ஆபத்தில் முடியும்" என்றார் அவர்.

கடந்த 3 ஆண்டுகளாக, இந்தியாவிலும் இந்த வீகன் உணவுமுறைகளைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியர்கள் சைவ உணவுக்குப் பழக்கப்பட்டவர்களே என்றாலும், உணவில் பால் சம்பந்தப்பட்ட பொருள்களின் ஆதிக்கம் இருக்கிறது என்பதே உண்மை. நெய் இல்லாத இனிப்பு வகைகளும் தயிர் இல்லாத உணவும் பன்னீர் இல்லாத சைவ விருந்தும் சாத்தியப்படுவதில்லை. இருப்பினும் இதற்கான மாற்றுப் பொருள்கள் நம் வர்த்தக உலகில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. மாட்டுப் பாலுக்கு மாற்றாக சோயா பாலும், மற்ற வீகன் உணவுப்பொருள்களும், உணவகங்களும் பெருநகரங்களில் வரத்தொடங்கிவிட்டன.

வீகன் உணவுமுறை குறித்த மாற்றுக் கருத்துகளும் இல்லாமல் இல்லை. பிராணிகளை வதைப்பது தடுக்கப்படும் என்பதும், உடல் நலத்துக்குச் சிறந்தது என்பதும் ஒருபுறமெனில், சைவ உணவில், பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட, மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் இருப்பது உடல்நலத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அதுமட்டுமன்றி, அசைவ உணவைத் தவிர்ப்பதற்காக விளைவிக்கப்படும் உணவுக்காகக் காடுகள் அழிக்கப்படுவதாகவும் ஒரு சாரர் வருத்தம் தெரிவிக்கின்றனர். `முழுவதுமாக ஓர் உணவைப் புறக்கணிப்பதால் உணவுச் சங்கிலியில் மாற்றம் நிகழும்' என்ற கருத்தும் பதிவு செய்யப்படுகிறது. 

வீகன் உணவுமுறை மட்டுமே உலகைக் காப்பதற்கான ஒற்றைத் தீர்வாக இருக்க முடியாது. உலகின் உணவு உற்பத்தியை, வெறும் வர்த்தக நோக்கத்துடன் மட்டும் கையாளாமல், வாழும் இடத்தின் சூழ்நிலைக்கேற்ப, உள்ளூரில் விளைவித்த உணவை உட்கொள்ளுவது கூட பெருமளவு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்கு வகிக்கும். ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் அவகேடா பழங்களைவிட, பக்கத்துக்குப் பண்ணைகளில் தயாராகும் இறைச்சியை உண்பது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் என்கின்றனர்.  

ஒருபக்கம் வீகன் உணவுமுறையினர், உணவுச் சந்தையின் பொருள்களை புறக்கணிக்கின்றனர், மறுபக்கம், அவர்கள் வாங்குவதற்காக ஏராளமான பொருள்களைச் சந்தையில் அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கின்றன பெரும் நிறுவனங்கள். இதன் தேவை மேலும் அதிகரிக்கும் போது, அந்தத் தேவையை அதிக லாபத்தோடு நிவர்த்தி செய்ய, மீண்டும் உலகைச் சிக்கலில் இந்த நிறுவனங்கள் மாட்டிவிடும் ஆபத்தும் இருக்கிறது. 

வீகன் உணவுமுறை பற்றித் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா... ஒரு கேள்வி..! 

இனி நீங்கள் எந்த உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பீர்கள்?

A. வீகன் நல்லது... அதற்கு மாறுவேன்! 
B. அசைவம் சாப்பிட்டுப் பழகிருச்சு... விட முடியாது! 
C. பிரியாணியை மட்டும் வீகன்ல சேர்த்துக்கங்க... மாறிடுறேன்!

Image Source: vegansociety.com