Published:Updated:

பறை இசைக்கு ஏற்ப பரதம்... கலக்கும் சென்னைப் பெண்!

பறை இசைக்கு ஏற்ப பரதம்... கலக்கும் சென்னைப் பெண்!
பறை இசைக்கு ஏற்ப பரதம்... கலக்கும் சென்னைப் பெண்!

"பறை அடிக்கும்போது அதைக் கேட்கிறவங்களுக்கு நாடி நரம்பெல்லாம் ஆடும். அப்படி ஆடலைன்னா, அந்த உடம்புல உயிர் இல்லைன்னு அர்த்தம். அதனால ஒருவரின் இறப்பை உறுதி செய்வதற்காக அடிக்கப்பட்ட பறை, நாளடைவில் இறப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் கலையாக மாறிப்போனதுதான் சோகம்."

றையாட்டம்  தமிழகத்தின் பாரம்பர்யக் கலையாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட கலை என்று அது மாறிப்போயிருக்கிறது. எனவே, பறையின் பெருமையை தமிழகம் முழுவதும் பரப்ப பறை இசைக் கலைஞர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதில் லேட்டஸ்ட், பறையின் ஓசைக்கு பரதம் ஆடுவது. இந்தப் புது முயற்சியின் மூலம் பறை இசைக்கலையை  மேலும் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் சென்னை லயோலா கல்லூரி மாணவி ரூபா.

``எந்த ஒரு கலையும் இன்னொரு கலையைவிட இழிவு கிடையாது. பரதம் எவ்வளவு புனிதமானதோ, அதே அளவு பறையும் புனிதமானது. இது சாமிக்காக ஆடுறது, இது சாவு வீட்டில் ஆடுறதுன்னு கலைக்கு எந்த வரையறையும் கிடையாது'' எனப் பேசிக்கொண்டே சலங்கையைக்  காலில் கட்டிக்கொண்டு பறை ஓசைக்குத் தயாராகிறார் ரூபா. பறையிசைக் கலைஞர்கள் எழுப்பிய ஒலி  நம் மனதைக் குதூகலமாக்க, மெல்லிய பாவத்தால் நளினங்களை வெளிப்படுத்திக்கொண்டே பேச ஆரம்பிக்கிறார் ரூபா.

``பறை ஒரு சாதியின் அடையாளமாகப் பார்க்கப்படுவதுதான் உண்மை. அதனாலதான் பறையிசைக் கலைஞர்களுக்கு என எந்த அடையாளமும் இல்லாம சாதியின் பெயரைச் சொல்லி அழைக்கும் வழக்கம் இருக்கு. சாதியப் பெயர்களால் மனிதன் வகுத்துக்கொண்ட கலைக்கான இடம், காலம் வரையறைகளை இன்னும் பின்பற்றணும்னு எந்த அவசியமும் இல்லை. பறை, சாதியின் அடையாளம் என்பதை உடைத்து தமிழனுக்கான அடையாளமாக அது ஒலிக்கப்படணும் என்றுதான் என்னைப் போன்ற இளைஞர்கள் ஒன்றாக இணைந்து, பறை சார்ந்த எத்தனையோ புது முயற்சிகள் எடுத்துட்டிருக்கோம்" என தன் நண்பர்களுக்கு தம்ஸ் அப் செய்தவாறே மீண்டும் தொடர்கிறார்.

 ``எனக்குச் சொந்த ஊர் ஈரோடு. 8 வயதில் ஆர்வத்தோடு பரதம் கத்துக்க ஆரம்பிச்சேன். 15 வயதில் அரங்கேற்றம். தினமும் சில மணிநேரம் பயிற்சி, எத்தனையோ பாராட்டுகள், பரிசுகள்னு பரதம் எனக்கு எல்லாமுமாக இருந்தது. என்னுடைய கல்லூரிப் படிப்பு ஆரம்பித்த புதிதில் பறைமேல் ஈர்ப்பு வர, பறை இசைப்பள்ளியான 'நிமிர்வு கலையக'த்தில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். பொம்பளைப் புள்ளைக்கு எதுக்கு பறைன்னும் கேட்பாங்க. இதிலெல்லாம் நான் சோர்ந்துபோயிடக் கூடாதுனு எனக்கு ஊக்கம் கொடுக்க, என் தம்பியும் என்னுடன் சேர்ந்து பறை கத்துக்க ஆரம்பிச்சான்.

அடிப்படை அளவு, அடிகள்னு பறை கத்துக்க ஆரம்பிச்சப்போவே எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. மனசு முழுக்க உற்சாகத்தை ஏற்றக்கூடிய ஒரு கலையும் அந்தக் கலைஞர்களும் அடையாளம் தெரியாமல் நிற்பதை தமிழகத்தின் சாபக்கேடுன்னுதான் சொல்லணும். பறை அடிக்கும்போது அதைக் கேட்கிறவங்களுக்கு நாடி நரம்பெல்லாம் ஆடும். அப்படி ஆடலைன்னா, அந்த உடம்புல உயிர் இல்லைன்னு அர்த்தம். அதனால ஒருவரின் இறப்பை உறுதி செய்வதற்காக அடிக்கப்பட்ட பறை, நாளடைவில் இறப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் கலையாக மாறிப்போனதுதான் சோகம். 

எங்களுடைய பறை இசைப்பள்ளியில் 6 வயதில் இருந்து 60 வயது வரை நிறைய கலைஞர்கள் பயிற்சி எடுத்துக்குறாங்க. ஒவ்வொருவருக்கும் பறையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் கனவுகள் இருக்கு. அதற்காக நிறைய புது முயற்சிகள் எடுத்துட்டே இருக்கோம். அப்படித்தான் நான், பறையுடன் பரத்தை இணைத்து பறை பரதக் கலையை உருவாக்கினேன். நிறைய மேடையில் இதை எனக்கான அடையாளமாக உருவாக்கிக்கிட்டேன். இதுக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தாலும் நான் பாசிட்டிவ்வாகத்தான் பார்க்கிறேன். என்னோட இந்த முயற்சியை பறையிசைக் கலைஞர்கள் கொண்டாடுறாங்க; அவங்களுடைய வெற்றியாகப் பார்க்குறாங்க. அடையாளம், அங்கீகாரம் தேடும் கலைஞர்களின் கண்களில் தெரியும் அந்த நம்பிக்கை எனக்கு இன்னும் ஆர்வத்தையும் உத்வேகத்தையும் கொடுக்குது. 

பறை கத்துக்க நிறைய பயிற்சி வேணும். பொதுவா பறை சத்தத்தைக் கேட்டவுடன் நம் மனதும் உடலும் குதூகலிக்க ஆரம்பிச்சுடும். ஆனா பரதத்துக்கு நளினம் முக்கியம். 100% மனதை ஒருங்கிணைத்தால் மட்டுமே பறை ஓசைக்கு பரதம் ஆட முடியும்" என்ற ரூபா தன்னைப் போன்ற பல பரதக் கலைஞர்களுக்கு பறையின் ஓசைக்கு பரதம் ஆடுவதைக் கற்றுக்கொடுத்து வருகிறார். மேலும் மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் என எல்லா வகை நடனங்களிலும் பறையைக் கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

"பறைக்கான அங்கீகாரத்தை உருவாக்காமல் நாங்க ஓயமாட்டோம். கடந்த வருடம் தஞ்சை பெரிய கோயிலில் 75 பறையிசைக் கலைஞர்கள் ஒன்றாக இணைந்து பறை இசைத்தோம். கோயிலில் பறை ஒலித்ததே எங்களுக்கான வெற்றிதான். மேலும், இப்போ சில பல்கலைக்கழகங்களில் பறையை ஒரு வருடப் பட்டயப் பயிற்சியாக அளிக்க பாடத்திட்டம் வகுத்திருக்காங்க. எங்க முயற்சி இன்னும் தொடரும். பறை தமிழகத்தின் கலையாக உலகம் முழுவதும் நிச்சயம் ஒலிக்கும். பறையிசைக் கலைஞராகப் பெருமை கொள்வோம்!" - பேச்சை முடித்த பின்னர் நடனத்தை ஆரம்பிக்கிறார் ரூபா.

அடுத்த கட்டுரைக்கு