Published:Updated:

`இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமே அல்ல!' - 2.0 சொல்லும் மெசேஜ் என்ன? #VikatanInfographics

2.0 திரைப்படத்தில் `இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல' என்னும் அவசியமான செய்தியை மக்களிடம் கொண்டுசேர்க்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

`இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமே அல்ல!' - 2.0 சொல்லும் மெசேஜ் என்ன? #VikatanInfographics
`இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமே அல்ல!' - 2.0 சொல்லும் மெசேஜ் என்ன? #VikatanInfographics

பெரும் எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு, பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி இன்று வெளியாகியிருக்கிறது 2.0 திரைப்படம். ரஜினி மீண்டும் `சிட்டி' ரோபோ அரிதாரம் ஏற்றிருக்கிறார். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் `பக்ஷிராஜனாக' பறவை ஆர்வலராக, பறவை உருவத்தில் சூப்பர் வில்லனாக மிரட்டியிருக்கிறார். செல்போன்கள், செல்போன் டவர்கள் சுற்றுச்சூழலுக்கு விளைவித்திருக்கும் மாற்றத்தைப் பேசியுள்ளது 2.0.

சீனாவுக்கு அடுத்த இடத்தில், அதிக மக்கள் தொகை கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் நிற்கிறது இந்தியா. ஏறத்தாழ ஒவ்வொருவரின் கையிலும் செல்போன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. 2G-யில் தொடங்கி 4G தொழில்நுட்பம் வரை, நவீன இணைய வசதிகள் அனைத்தும் இந்திய மக்களைச் சென்றடைந்துள்ளன. அடிப்படையில் விவசாய நாடான இந்தியா, உலகமயமாக்கலுக்குப் பிறகுதான் செல்போனுக்குத் தயாராகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிபோட்டு, மக்களுக்கு சேவைகளைக் குறைந்த கட்டணத்தில் வழங்கி லாபம் பெறத்தொடங்குகின்றன. இயற்கை வளங்களை அளவில்லாமல் சுரண்டிய கார்ப்பரேட் நிறுவனங்களில், தொலைத்தொடர்பு நிறுவனங்களும் விதிவிலக்கு அல்ல. 

செல்போன் டவர்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு மனித உடலிலும், பிற உயிர்களையும் தாக்குகிறது என உலகம் முழுவதும் புகார்கள் எழுந்தன. எனினும் சிட்டுக்குருவிகள் முதலிய பறவைகளின் அழிவுக்கும், செல்போன் டவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றே கூறப்பட்டது.  உலகின் பல்வேறு நகரங்களில் செய்யப்பட்ட சிறிய ஆய்வுகள் அந்தத் தொடர்பை முதலில் வெளிப்படுத்தின. எனினும் பெரியளவில் அவற்றை இன்னும் நிரூபிக்க முடியவில்லை. 

இந்தியாவில் மத்திய சுற்றுச்சூழல் துறை 2011-ம் ஆண்டு அறிவியலாளர்களை வைத்து ஓர் ஆய்வை மேற்கொண்டது. அதன்படி இந்தியாவில் சில நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகள் நடந்த அந்த ஆய்வுகளின் முடிவுகள், செல்போன் டவர்கள் இருக்கும் இடங்களில் பறவைகளின் எண்ணிக்கை குறைவடைகிறது எனக் கூறின. எனினும் பறவைகளின் எண்ணிக்கை குறைவதற்கும், செல்போன் டவர்களுக்கும் இடையிலுள்ள தொடர்பை அந்த ஆய்வு உறுதிசெய்யவில்லை. மக்களிடையே பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் பூச்சிக்கொல்லிகள், மரங்கள் வெட்டப்படுதல், மற்ற சுற்றுச்சூழல் மாசுப் பிரச்னைகள் முதலியனவும் பறவைகள் அழிவதற்குக் காரணங்களாக அமைவதால் ஆய்வு முடிவுகள் இப்படிப் பொதுவாக அமைந்தன. 

செல்போன் டவர்கள் வெளிப்படுத்தும் கதிர்வீச்சால், பெரிதும் பாதிக்கப்படுபவை சிட்டுக்குருவிகளும், தேனீக்களும்தாம். நாடுகள் கடந்து பறக்கும் பறவைகள் செல்போன் டவர் கதிர்வீச்சால், திசை தெரியாமல் பயணித்து இறக்கின்றன என அமெரிக்காவில் ஆய்வு முடிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. தேனீக்கள் கூட்டமாக வாழும் வழக்கமுடையவை. தேன் சேகரிக்கச் செல்லும் தேனீக்கள், கதிர்வீச்சு பாதிப்பிற்குள்ளாகி, மீண்டும் கூட்டுக்குத் திரும்ப முடியாத சூழல் உருவாகிறது. இது கூட்டமாக வாழும் தேனீக்களின் இயல்பைச் சிதைக்கிறது. இது colony collapse disorder என அழைக்கப்படுகிறது. பறவைகளின் முட்டைகள் கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்டால், கருச்சிதைவுக்கு உள்ளாகின்றன என்பதையும் மத்திய சுற்றுச்சூழல் துரையின் ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தின.      

2.0 திரைப்படம் வெளியாவதற்கு முன், செல்போன்களைத் தவறாகச் சித்திரிப்பதாக செல்போன் இயக்குநர்கள் சங்கத்தினர் தணிக்கைத் துறையிடம் புகார் அளித்தனர். ஆனால் இதில் தென்படும் முரண்பாடு என்னவென்றால், இதே சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கும் ஏர்டெல், வோடஃபோன், ரிலையன்ஸ் முதலான நிறுவனங்கள்தாம் கடந்த 2015-ம் ஆண்டில் மொத்தமாக 10.80 கோடி ரூபாய் பணத்தை அனுமதிக்கப்பட்ட கதிர்வீச்சு அளவை விட அதிகமாக வைத்ததால் அபராதமாக அளித்துள்ளன.  

சமீபகாலத்தின் அவசியமான செய்தியை மக்களிடம் கொண்டுசேர்க்க முயற்சி செய்திருக்கிறது 2.0 குழு. ஆனால், `இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல' என்னும் செய்தியை தனிமனிதர்களிடம் சொன்னால் மட்டும் போதாது. இயற்கையை எந்த வரையறையும் இல்லாமல் சுரண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் கொண்டுசெல்ல வேண்டும்.