Published:Updated:

``கஷ்டம்னு வந்தா கணேஷரைத்தான் வணங்குவேன்''- நடிகர் டெல்லி கணேஷ் #WhatSpiritualityMeansToMe

``கஷ்டம்னு வந்தா கணேஷரைத்தான் வணங்குவேன்''- நடிகர் டெல்லி கணேஷ் #WhatSpiritualityMeansToMe
``கஷ்டம்னு வந்தா கணேஷரைத்தான் வணங்குவேன்''- நடிகர் டெல்லி கணேஷ் #WhatSpiritualityMeansToMe

"நான் டிராமா ஸ்டேஜுக்குப் போகும் பொதெல்லாம் விநாயகரே கையைப் பிடிச்சுக் கூட்டிக்கொண்டு போவதாகத்தான் நான் நினைப்பேன். இதுவரைக்கும் 2,000 மேடைகளில் நடிச்சிட்டேன்."

``ணேஷ்னு பேர் வெச்சதாலோ என்னவோ எனக்கு விநாயகர்னா ரொம்பப் பிடிக்கும். என்னோட இஷ்ட தெய்வம் விநாயகர்தான். நான் டிராமா ஸ்டேஜுக்குப் போகும் போதெல்லாம் விநாயகரே கையைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு போவதாகத்தான் நான் நினைக்கிறேன்'' என்று கூறி நெகிழ்ந்து போகிறார் நடிகர் டெல்லி கணேஷ். எனது ஆன்மிகம் பகுதிக்காக அவரைச் சந்தித்தோம்.

``ஆன்மிகமும் தமிழும் என்னோட ரெண்டு கண்கள் மாதிரி. ஏன்னா, ஒரு வீட்டுக்கு நாம போனால்கூட ஒரு குழந்தையைப் பார்த்ததும், பேரைக் கேட்போம், `என்ன படிக்கிறே?'னு கேட்போம். அடுத்து `ஒரு பாட்டுச் சொல்லு'னு சொல்வோம். உடனே அந்தக் குழந்தை, தமிழ் மனப்பாட பாட்டிலிருந்து `வாக்கு உண்டாம், நல்ல மனம் உண்டாம்'னு பாடும். இல்லைனா `ஏறுமயிலாடிவரும் முகம் ஒன்று'னு பாடும். ஆக அந்தக் குழந்தைக்குத் `தமிழ் தெரியுமா'னு நாம தெரிஞ்சிக்கணும்னாலே ஆன்மிகம்தான் மொதல்ல வந்து நிக்குது.

திருவள்ளுவர்கூட அகர முதல எழுத்தெல்லாம்னு இறைவனைத் தொழுதுதான் திருக்குறளைத் தொடங்குகிறார். 
எனக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி பக்கத்துல வல்லநாடு. எங்க ஊர் பிள்ளையார் கோயிலுக்குச் சின்ன வயசுலேர்ந்தே போய் சாமிகும்பிடுவேன். எங்க தாத்தா `விநாயகர் அகவல்' படினு சொல்வார். பத்து வயசாக இருக்கும்போதே `விநாயகர் அகவலை' மனப்பாடமாச் சொல்லுவேன். அந்தப் பழக்கம் இப்பவும் இருக்கு. தினமும் காலையில் பூஜையின்போது அப்படியே சொல்லுவேன்.  

எங்க தாத்தா பிள்ளையார் கோயில் ஒன்றைக் கட்டிக்கொண்டிருந்தார். அப்போது நான் பிறந்ததால் கணேஷ்னு எனக்குப் பேர் வெச்சாங்க. அதனாலோ என்னவோ எனக்கு விநாயகர்னா ரொம்பப் பிடிக்கும். என்னோட இஷ்ட தெய்வம் விநாயகர்தான். இதுக்கு காரணமும் இருக்கு. 

ஒரு முறை எங்க ஊர்ல கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். மழையே ரொம்ப நாளாகப் பெய்யலை. அப்போ பிள்ளையாரை சுத்தி களிமண்ணுல நாலு பக்கமும் சுவர் மாதிரி எழுப்பி, அதில் பிள்ளையார் மூழ்கும் அளவு தண்ணீரை ஊற்றி வழிபாடு செஞ்சாங்க. உடனே அன்றைக்கு ராத்திரியே சரியான மழை. அதிலிருந்து கஷ்டம்னு வந்தா கணேஷரைத்தான் வணங்குவேன். 

அதுக்குப் பிறகு படிச்சு வேலை கிடைச்சதும் டெல்லிக்குப் போயிட்டேன். அங்கே வேலை நேரம் போக, மாலை நேரங்கள்ல நாடகங்கள்ல நடிச்சேன். அப்போதான் சினிமாவில் நடிக்கும்வாய்ப்பும் எனக்குக் கிடைச்சுது. அப்புறம், காத்தாடி ராமமூர்த்தி நாடகக் குழுவில் இடம்பிடித்து பல நாடகங்கள்ல நடிச்சேன்.

நான் டிராமா ஸ்டேஜுக்குப் போகும் பொதெல்லாம் விநாயகரே கையைப் பிடிச்சுக் கூட்டிக்கொண்டு போவதாகத்தான் நான் நினைப்பேன். இதுவரைக்கும் 2,000 மேடைகளில் நடிச்சிட்டேன்.

இப்பவும் எனக்கு யார் பரிசுகொடுத்தாலும், விநாயகர் சிலையைத்தான் பரிசாகக் கொடுப்பாங்க. அதனால நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைங்க பரிசா கிடைக்கும். அதையெல்லாம் அப்பப்போ எனக்குப் பிடிச்ச நண்பர்கள் உறவினர்களுக்குப் பரிசா கொடுத்துடுவேன்.

ரஜினி சார் ராகவேந்திரா படத்துல நடிச்சுக்கிட்டு இருந்த நேரம். கே.பாலசந்தர் சார்தான் தயாரிச்சார். எஸ்.பி முத்துராமன்தான் படத்தை இயக்கினார். வழக்கமா பாலசந்தர் சார் படத்தில ஏதாவது ஒரு கேரக்டரில நடிக்க எனக்கு அழைப்பு வரும். ஆனா, அப்படி வரலை. 

ராகவேந்திரர் பக்தரான எனக்கு அதில் ஏதாவது ஒரு கேரக்டர் கிடைச்சா நல்லா இருக்குமேனு நினைச்சேன். ஆனா, `நாமாகப்போய் கேட்க வேண்டாம்'னு மந்திராலயத்துக்குக் கிளம்பிப்போயிட்டேன். அங்கபோய் அந்த மகானை தரிசனம் செஞ்சிட்டு வீட்டுக்கு வர்றேன். 
எஸ்.பி.முத்துராமன் சாரிடமிருந்து போன். ராகவேந்திரா படத்தில் நடிப்பதற்கான அழைப்பு. அப்படிக் கிடைத்த கேரக்டர்தான் அப்பண்ணசாமி. அந்த கேரக்டர் மக்கள் மனத்தில் நல்ல இடம் பிடிச்சுது. 

ஒருமுறை என் நண்பர் ஒருவர் மந்திராலயம் ராகவேந்திரா மடத்துக்குப் போயிருக்கிறார். அவர் அங்கிருந்த குருக்களிடம் ஒரு சிலையைக் காண்பித்து, `இவர் யார்?' எனக் கேட்டிருக்கிறார். 

`இவர் ராகவேந்திரரின் பிரதம சீடர் அப்பண்ணசாமி. `பூஜ்யாய ராகவேந்திரா' எனத் தொடங்கும் ஸ்லோகத்தை இயற்றியவர்' என்றதுடன், `ராகவேந்திரர்' படத்துல டெல்லி கணேஷ் நடிச்ச கேரக்டர் இவர்தான்' னு சொல்லியிருக்கிறார்.

மந்திராலயத்திலிருந்தே போன் பண்ணி எனக்குச் சொன்னான். அப்படியே சிலிர்த்துப் போனேன். இதைவிட வேற என்ன வேணும்?" என்கிறார் நடிகர் டெல்லி கணேஷ்.

அடுத்த கட்டுரைக்கு